1. உண்மையைப் புறக்கணிக்கும் கலாச்சாரத்தை ஒதுக்கி நடக்குமாறு திருத்தந்தை அழைப்பு
2. திருப்பீட பல்சமய உரையாடல் அவையின் புதிய நேரடிச் செயலர் அருட்பணியாளர் Kankanamalage
3. கர்தினால் ஃபிலோனி அஜெர்பைஜான் நாட்டில் சுற்றுப்பயணம்
4. நைஜீரியப் பேராயர் : சமய ஒழிப்பு நடவடிக்கையோடு அல்ல, மாறாக குற்றவாளிகளோடு போராடிக் கொண்டிருக்கிறோம்
5. பிலிப்பீன்ஸில் அமெரிக்க ஐக்கிய நாட்டுப் படைவீரர்கள் அதிகரிக்கக்கூடும், கிறிஸ்தவத் தலைவர்கள் கவலை
6. அனைத்துலக திருநற்கருணை மாநாட்டில் புனித பூமிப் பிரதிநிதிகள்
7. உலகில் சுமார் 21 கோடியே 50 இலட்சம் சிறார் தொழிலாளர் உள்ளனர்
8. எய்ட்ஸ் நோயை ஒழிப்பதற்கான முயற்சிகளை இரட்டிப்பாக்க வேண்டும் - ஐ.நா.உயர் அதிகாரிகள் வலியுறுத்தல்
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. உண்மையைப் புறக்கணிக்கும் கலாச்சாரத்தை ஒதுக்கி நடக்குமாறு திருத்தந்தை அழைப்பு
ஜூன்12,2012. இக்காலத்தில் சாத்தானின் மாயக்கவர்ச்சிகளைப் புறந்தள்ளுவது என்பது, உண்மைக்கு முக்கியத்துவம் கொடுக்காத ஒரு கலாச்சாரத்தைப் புறக்கணிக்கப்பதாகும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
“திருஅவையில் திருமுழுக்குத் திருவருட்சாதனம்” என்ற தலைப்பில் உரோம் மறைமாவட்டம் தொடங்கியுள்ள ஆண்டுக் கூட்டத்தில் இத்திங்கள் மாலை உரையாற்றிய திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
“தந்தை, மகன், தூயஆவியின் பெயரால்” என்ற திருமுழுக்குத் திருவருட்சாதனச் சடங்குமுறைகள் பற்றிய சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்ட திருத்தந்தை, திருமுழுக்கினால் நாம் மூவொரு கடவுளின் வாழ்வில் இருக்கின்றோம், கடவுளுக்கேயுரிய புதிய வாழ்வோடு அவரோடு தனிப்பட்டவிதத்தில் ஒன்றித்திருக்கிறோம், கடவுளில் ஐக்கியமாகி இருக்கின்றோம் என்றும் தெரிவித்தார்.
இதனால் கடவுள் நமக்கு எட்டாத தூரத்தில் இல்லை, ஆனால் நாம் கடவுளில் இருக்கின்றோம், கடவுள் நம்மில் இருக்கின்றார் என்றும் உரையாற்றிய திருத்தந்தை, இந்த உறவு கடவுளோடு தொடங்குகிறது என்றும் கூறினார்.
திருமுழுக்கு
திருவருட்சாதனம் நம் வாழ்வு முழுவதும் என்றும் இருந்து நம் வாழ்வில்
தீமையையும் விலக்குகின்றது என்றும் குறிப்பிட்டுப் பேசிய திருத்தந்தை, கிறிஸ்தவராக இருப்பது என்பது வெறுமனே “வேண்டாம்” என்று சொல்வதல்ல, மாறாக, விசுவாசப்பிரமாணத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ள கிறிஸ்து பற்றிய உண்மைகளுக்கு ஆகட்டும் என்று சொல்வதாகும் என்றும் கூறினார்.
2. திருப்பீட பல்சமய உரையாடல் அவையின் புதிய நேரடிச் செயலர் அருட்பணியாளர் Kankanamalage
ஜூன்12,2012. திருப்பீட பல்சமய உரையாடல் அவையின் நேரடிச் செயலராக இலங்கை அருட்பணியாளர் Indunil Janakaratne Kodithuwakku Kankanamalage என்பவரை இச்செவ்வாயன்று நியமித்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இலங்கையின் Badulla மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருட்பணியாளர் Kankanamalage உரோம் உர்பான் பாப்பிறை பல்கலைக்கழகத்தில் நற்செய்திப்பணியியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
3. கர்தினால் ஃபிலோனி அஜெர்பைஜான் நாட்டில் சுற்றுப்பயணம்
ஜூன்12,2012. அருளாளர் 2ம் ஜான் பால், அஜெர்பைஜான் நாட்டுக்குத் திருப்பயணம் மேற்கொண்டதன் பத்தாம் ஆண்டைச் சிறப்பிக்கும்விதமாக, திருப்பீட விசுவாசப்பரப்புப் பேராயத் தலைவர் கர்தினால் Fernando Filoni அந்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
முஸ்லீம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட இந்நாட்டுத் தலைநகர் Baku வில் இஞ்ஞாயிறன்று திருப்பலி நிகழ்த்திய கர்தினால் ஃபிலோனி, அருளாளர் 2ம் ஜான் பால் இந்நாட்டின்மீது கொண்டிருந்த அன்பை விளக்கினார்.
இந்நாட்டில் முன்னர் இருந்துவந்த கடும் அடக்குமுறைகள், 70 ஆண்டுகளாகக் குருக்களுக்கு அனுமதி மறுப்பு, மீட்பின் நற்செய்தியை அறிவிக்கத் தடை, திருஅவைக் கட்டிடங்கள் அழிக்கப்பட்டது, கிறிஸ்தவர்கள் மாண்பிழந்தது மட்டுமல்ல, திருப்பலி
நிகழ்த்தத் தடை போன்ற கடும் நடவடிக்கைகளுக்கு மத்தியிலும் அஜெர்பைஜான்
கத்தோலிக்கர் தங்களது கத்தோலிக்க விசுவாசத்தில் உறுதியாய் இருந்த்தைப்
பாராட்டவே அருளாளர் 2ம் ஜான் பால் திருப்பயணம் மேற்கொண்டார் என்றார்
கர்தினால்.
இந்நாட்டில் வாழும் சுமார் 94 இலட்சம் மக்களில் 450 பேர் கத்தோலிக்கர்.
முன்னாள் சோவியத் யுனியனைச் சேர்ந்த அஜெர்பைஜான் 1991ம் ஆண்டில் சுதந்திரம் அடைந்தது.
2005ம்
ஆண்டு ஏப்ரல் 2ம் தேதி இறைபதம் அடைந்த அருளாளர் 2ம் ஜான் பால்
திருப்பயணம் 2002ம் ஆண்டு மே மாதத்தில் அஜெர்பைஜானுக்குத் திருப்பயணம்
மேற்கொண்டார்.
4. நைஜீரியப் பேராயர் : சமய ஒழிப்பு நடவடிக்கையோடு அல்ல, மாறாக குற்றவாளிகளோடு போராடிக் கொண்டிருக்கிறோம்
ஜூன்12,2012.
நைஜீரியாவில் அண்மையில் நடத்தப்பட்டுள்ள கிறிஸ்தவர்க்கு எதிரானத்
தாக்குதல்களுக்கு மத விரோதப்போக்கு காரணம் என்பதில் தனக்கு நம்பிக்கையில்லை
என்று அந்நாட்டு ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் Ignatius Ayau Kaigama கூறினார்.
மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் இஞ்ஞாயிறன்று இடம்பெற்ற குண்டுவைப்புத் தாக்குதல்கள் குறித்துப் பேசிய பேராயர் Kaigama, திருஅவையை மேற்கத்திய கலாச்சாரத்தின் உருவகமாக நோக்கி, அதனைத் தங்களது எதிரியாக நோக்கும் குற்றக்கும்பல்களோடு தாங்கள் போராடிக்கொண்டிருப்பதாகக் கூறினார்.
ஆயினும் இந்தக் கண்ணோட்டமானது, நைஜீரியாவில் பெரும்பான்மையான முஸ்லீம்களின் கண்ணோட்டமாகத் தான் கருதவில்லை என்றும் ஜோஸ் பேராயர் Kaigama கூறினார்.
தங்களது இலக்கை இழந்துவிட்ட குற்றக்கும்பல்களே கிறிஸ்தவ வழிபாட்டுத்தலங்களைத் தாக்குகின்றன எனவும், இந்த வன்முறைச் செயல்கள் மூலம் அவர்கள் அடைய விரும்புவது என்ன என்று யாருக்குமே தெரியவில்லை எனவும் பேராயர் கூறினார்.
5. பிலிப்பீன்ஸில் அமெரிக்க ஐக்கிய நாட்டுப் படைவீரர்கள் அதிகரிக்கக்கூடும், கிறிஸ்தவத் தலைவர்கள் கவலை
ஜூன்12,2012. பிலிப்பீன்ஸ்க்கும் அமெரிக்க ஐக்கிய நாட்டுக்கும் இடையே இராணுவ ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கு, பிலிப்பீன்ஸ் அரசுத்தலைவர் Benigno Aquinoவும் அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர் Barack Obamaவும் ஒத்திணங்கியதைத் தொடர்ந்து, பிலிப்பீன்ஸில்
அமெரிக்க ஐக்கிய நாட்டுப் படைகளின் இருப்பு அதிகரிக்கக்கூடும் என
பிலிப்பீன்ஸ் கிறிஸ்தவத் தலைவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இத்திங்களன்று இடம்பெற்ற இவ்வொப்பந்தம், பிலிப்பீன்சின் சுதந்திரம் மற்றும் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று அந்நாட்டின் கிறிஸ்தவ ஒன்றிப்பு அவை கூறியது.
பிலிப்பீன்ஸிக்கு
அமெரிக்க ஐக்கிய நாட்டுப் படைகள் மீண்டும் வருவது பிலிப்பீன்ஸ் மக்களின்
இறையாண்மையைப் பாதிக்கும் என்று அவ்வவை வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.
கடந்த
ஏப்ரலில் சுமார் ஆறாயிரம் அமெரிக்க ஐக்கிய நாட்டுப் படைகள் பிலிப்பீன்ஸ்
படைகளுடன் சேர்ந்து பயிற்சி செய்தன என்று ஊடகங்கள் கூறுகின்றன.
6. அனைத்துலக திருநற்கருணை மாநாட்டில் புனித பூமிப் பிரதிநிதிகள்
ஜூன்12,2012. அயர்லாந்தில் தங்களது கத்தோலிக்க விசுவாசத்தை நடைமுறைப்படுத்துவோரின் எண்ணிக்கை அண்மைக் காலமாகக் குறைந்து வரும்வேளை, அந்நாட்டுத்
திருஅவையோடு தங்களது ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவிப்பதற்காகப் புனித
பூமியிலிருந்து அயர்லாந்துக்குத் திருப்பயணிகளாகத் தாங்கள் வந்திருப்பதாக
எருசலேம் துணை ஆயர் வில்லியம் ஷோமாலி கூறினார்.
அயர்லாந்து தலைநகர் டப்ளினில் இஞ்ஞாயிறன்று தொடங்கியுள்ள 50வது அனைத்துலக திருநற்கருணை மாநாட்டில் கலந்து கொள்ளும் ஆயர் ஷோமாலி, ஜோர்டன், பாலஸ்தீனம், இஸ்ரேல், இன்னும் அமெரிக்க ஐக்கிய நாட்டிலுள்ள புனிதபூமிக் கிறிஸ்தவப் பிரதிநிதிகள் இம்மாநாட்டில் பங்கு கொள்வதாகக் கூறினார்.
பல்வேறு திருவழிபாட்டுரீதிகளைச் சேர்ந்த இப்பிரதிநிதிகள் திருநற்கருணையில் தாங்கள் கொண்டுள்ள விசுவாசத்தை ஆழப்படுத்தவும், அன்றாட
வாழ்வில் திருநற்கருணையை எவ்வாறு வாழ்வது என்பது குறித்து மேலும் கற்றுக்
கொள்ளவும் அயர்லாந்து வந்துள்ளதாகவும் ஆயர் ஷோமாலி கூறினார்.
மேலும், இந்த
50வது அனைத்துலக திருநற்கருணை மாநாட்டில் இடம்பெற்று வரும்
கருத்தரங்குகளும் செபங்களும் கிறிஸ்தவ ஒன்றிப்பையும் புதிய
நற்செய்திப்பணியையும் வலியுறுத்துகின்றன என்று எமது வத்திக்கான் வானொலி
நிருபர்கள் கூறுகின்றனர்.
7. உலகில் சுமார் 21 கோடியே 50 இலட்சம் சிறார் தொழிலாளர் உள்ளனர்
ஜூன்12,2012. உலகில் சுமார் 21 கோடியே 50 இலட்சம் சிறார் தொழிலாளர் உள்ளனர், இவர்களில்
11 கோடியே 50 இலட்சம் பேர் எவ்விதப் பாதுகாப்புமற்ற ஆபத்தான வேலைகளில்
உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று அனைத்துலக தொழில் நிறுவனம் சமர்ப்பித்துள்ள
அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சிறார் தொழிலாளருக்கு எதிரான அனைத்துலக நாள் இச்செவ்வாயன்று கடைப்பிடிக்கப்பட்டதையொட்டி அறிக்கை வெளியிட்ட இந்த ஐ.நா. நிறுவனம், சிறார் தொழிலாளர் ஆசியா, பசிபிக் பகுதி மற்றும் ஆப்ரிக்காவில் அதிகம் உள்ளனர் என்று கூறியது.
ஆசியா மற்றும் பசிபிக் பகுதியில் 11 கோடியே 30 இலட்சம், ஆப்ரிக்காவில் சுமார் 6 கோடியே 50 இலட்சம் என சிறார் தொழிலாளர் உள்ளனர் எனவும் அந்நிறுவனம் கூறியது.
இத்தாலியில்
வறுமையால் 5 இலட்சம் சிறார் கட்டாயமாக வேலை செய்கின்றனர் எனவும் இலத்தீன்
அமெரிக்காவில் 50 இலட்சம் முதல் 1 கோடியே 40 இலட்சம் சிறார்வரை வேலை
செய்கின்றனர் எனவும் அவ்வறிக்கை கூறுகின்றது.
சிறார் தொழிலாளருக்கு எதிரான அனைத்துலக நாள், 2002ம்
ஆண்டிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் ஜூன்12ம் தேதி கடைப்பிடிக்கப்படுகின்றது.
சுமார் 60 நாடுகள் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் இத்தினத்தைச்
சிறப்பிக்கின்றது.
8. எய்ட்ஸ் நோயை ஒழிப்பதற்கான முயற்சிகளை இரட்டிப்பாக்க வேண்டும் - ஐ.நா.உயர் அதிகாரிகள் வலியுறுத்தல்
ஜூன்12,2012. எய்ட்ஸ் நோயையும் அந்நோய்க்குக் காரணமாகும் HIV நோய்க் கிருமிகளையும் ஒழிப்பதில் மிகப்பெரும் முன்னேற்றத்தை அடைந்துள்ளபோதிலும், இந்நோயை ஒழிப்பதற்கான முயற்சிகளை இரட்டிப்பாக்க வேண்டும் என்று ஐ.நா.உயர் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
எய்ட்ஸ் நோய்த் தாக்குதல்,
இந்நோயால் இறப்பு போன்றவற்றைப் பூஜ்ஜியத்துக்குக் கொண்டுவருவதற்கான இலக்கை
அடைவதற்கு அதற்கானத் தற்போதைய தடுப்பு நடவடிக்கைகளை இரண்டு மடங்காக்க
வேண்டுமென Nassir Abdulaziz Al-Nasser கூறினார்.
எய்ட்ஸ்
நோய்க் குறித்து கடந்த ஆண்டில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தைத் தொடர்ந்து
உலகில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து பரிசீலிப்பதற்காக
இத்திங்களன்று நடைபெற்ற பொதுஅவையின் தலைவர் Al-Nasser இவ்வாறு கூறினார்.
2015ம்
ஆண்டுக்குள் இந்நோய்க் கிருமிகளால் புதிதாகத் தாக்கப்படுபவரின்
எண்ணிக்கையை 10 இலட்சமாகக் குறைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு
வருகின்றன.
No comments:
Post a Comment