Sunday, 3 June 2012

Catholic News in Tamil - 02/06/12


1.திருத்தந்தை : குருக்கள், இருபால் துறவியரின் அன்றாட வாழ்க்கையில் செபம் முக்கியம்

2.திருத்தந்தை : குடும்பம் மனித சமுதாயத்தின் உண்மையான மூலதனம்

3.சிரியாவில் அதிகரித்துவரும் வன்முறைச் செயல்களுக்குத் திருப்பீட அதிகாரி கண்டனம்

4. பாதுகாப்பாக வாகனங்களை ஓட்டுமாறு அயர்லாந்து ஆயர் பரிந்துரை, செபம்

5. போரினால் பாதிக்கப்படும் சிறாருக்கென செபம்

6.ஏறக்குறைய 2 கோடியே 10 இலட்சம் பேர் கட்டாய வேலைக்குப் பலியாகியுள்ளனர்- ஐ.நா.அறிக்கை

7.புறக்கணிக்கப்பட்ட பாரம்பரிய உணவுப்பொருள்கள் உலகின் பசியைப் போக்குவதற்கு முக்கியமான சாதனங்கள் ஐ.நா.

8. அறுபது நாளில் திருமணப் பதிவு
-------------------------------------------------------------------------------------------

1.திருத்தந்தை : குருக்கள், இருபால் துறவியரின் அன்றாட வாழ்க்கையில் செபம் முக்கியம்

ஜூன்02,2012. அருட்பணியாளர்கள் மற்றும் இருபால் துறவிகளின் அன்றாட வாழ்க்கையில் செபத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
ஏழாவது குடும்ப மாநாட்டை சிறப்பிப்பதற்காக இத்தாலியின் மிலான் நகரத்திற்குச் சென்றுள்ள திருத்தந்தை, அருட்பணியாளர்கள் மற்றும் இருபால் துறவிகளை மிலான் பேராலயத்தில் இச்சனிக்கிழமை காலை சந்தித்து உரையாற்றிய போது இவ்வாறு கூறினார்.
கிறிஸ்துவின்மீது அன்பு கொண்டு வாழ்வது அனைத்துக் கிறிஸ்தவர்களுக்கும் முக்கியம் என்றாலும், கன்னிமை வாழ்வை ஏற்றுள்ள குருக்களுக்கும் துறவிகளுக்கும் இது தனிப்பட்ட விதத்தில் இன்றியமையாதது என்று கூறினார் திருத்தந்தை.
இச்சந்திப்புக்குப் பின்னர், உறுதிபூசுதல் திருவருட்சாதனத்தை அண்மையில் பெற்ற மற்றும் பெறவிருக்கும் இளம்வளர் பருவத்தினரைச் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, இயேசுவின் நற்செய்திக்கு ஆகட்டும் என்று சொல்லி அதனை ஏற்றுக் கொண்டவர்கள் வாழ்க்கையில் தூயஆவியின் வியத்தகு வல்லமை எவ்வாறு செயல்படுகின்றது என்பது குறித்து எடுத்துச் சொன்னார்.
ஞானம், அறிவு, ஆலோசனை, உறுதி, விமரிசை, பக்தி, தெய்வபயம் ஆகிய தூயஆவியின் ஏழு கொடைகள் பற்றியும் விளக்கிய திருத்தந்தை, குருத்துவ மற்றும் அர்ப்பணிக்கப்பட்ட துறவு வாழ்வுக்குக் கிறிஸ்து அழைக்கும் போது அதற்குத் திறந்த மனத்துடன் பதில் சொல்லி அவரைப் பின்செல்லுங்கள் என்றும் இந்த இளம்வளர் பருவத்தினரைக் கேட்டுக் கொண்டார்

2.திருத்தந்தை : குடும்பம் மனித சமுதாயத்தின் உண்மையான மூலதனம்

ஜூன்02,2012. அமைதி, மகிழ்ச்சி மற்றும் ஒருமைப்பாட்டை மக்கள் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் கொண்டுவருவதற்கு கிறிஸ்தவக் குடும்பங்கள் தங்களது கிறிஸ்தவ விழுமியங்கள் மற்றும் சக்தியினால் உதவுமாறு கேட்டுக்கொண்டார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
மனிதர் தனக்குத்தானே வாழாமல் பிறரோடு உறவுகொண்டு வாழ்வதற்காகப் படைக்கப்பட்டிருக்கிறார் என்பதை ஒருவர் குடும்பத்தில் முதலில் அனுபவிக்கிறார் என்றும் கூறிய திருத்தந்தை, அண்மையில் வட இத்தாலியில் இரண்டு நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவுமாறும் அழைப்பு விடுத்தார்.
இவ்வெள்ளி மாலை மிலான் சென்றடைந்த திருத்தந்தை, அந்நகர்ப் பேராலய வளாகத்தில் பல்லாயிரக்கணக்கான மக்களைச் சந்தித்து உரையாற்றியபோது இவ்வாறு கூறினார்.
கிறிஸ்தவக் குடும்பத்தின் மீது வருங்காலத்தை உருவாக்குமாறும் பரிந்துரைத்த அவர், நமக்காக இறந்து உயிர்த்து நம் மத்தியில் வாழ்ந்துவரும் இயேசு கிறிஸ்துவில் வைக்கும் நம்பிக்கை, மக்களின் வாழ்க்கை முழுவதையும் வழிநடத்த வேண்டும் என்றும் கூறினார்.
4ம் நூற்றாண்டு முதல் 16ம் நூற்றாண்டு வரையிலான மிலான் நகரப் புனிதர்களையும் குறிப்பிட்டுப் பேசிய திருத்தந்தை, குடும்பம் மனித சமுதாயத்தின் உண்மையான சொத்து எனவும், அது, மனிதருக்கு ஆதரவாக இருக்கும் உண்மையான அடையாளம் மற்றும் நிலையான கலாச்சாரம் என்றும் கூறினார்.
மிலானில் இப்புதன் முதல் நடைபெற்று வரும் ஏழாவது குடும்ப மாநாட்டில் 150க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து இலட்சக்கணக்கான பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். குடும்பம் : வேலையும், கொண்டாட்டமும் என்ற தலைப்பில் இந்த 5 நாள் மாநாடு நடைபெற்று வருகிறது.    

3.சிரியாவில் அதிகரித்துவரும் வன்முறைச் செயல்களுக்குத் திருப்பீட அதிகாரி கண்டனம்

ஜூன்02,2012. சிரியாவில் அதிகரித்துவரும் வன்முறைச் செயல்களுக்கு, குறிப்பாக El-Houlehவில் அண்மையில் இடம்பெற்ற கொலைகளுக்குத் திருப்பீட பிரதிநிதிகள் குழு வன்மையான கண்டனம் தெரிவிக்கின்றது என்று பேராயர் சில்வானோ தொமாசி கூறினார்.
சிரியா அரபு குடியரசில் சீரழிந்துவரும் மனித உரிமைகள் மற்றும் El-Houleh ல் அண்மையில் இடம்பெற்ற கொலைகள் குறித்த ஐ.நா. சிறப்பு அமர்வில் பேசிய, ஜெனீவாவிலுள்ள ஐ.நா.அலுவலங்களுக்கானத் திருப்பீடத்தின் நிரந்தரப் பிரதிநிதி பேராயர் தொமாசி, எண்ணற்ற சிறார் உட்பட அப்பாவி பொது மக்கள் கொல்லப்படுவது, திருத்தந்தையையும் உலகளாவிய கத்தோலிக்க சமூகத்தையும் பெருந்துன்பத்துக்கு உள்ளாக்கியிருக்கின்றது என்று கூறினார்.
சிரியாவில் வன்முறையும் இரத்தம் சிந்துதலும் நிறுத்தப்பட்டு, ஒருவரையொருவர் மதித்தல், உரையாடல் மற்றும் ஒப்புரவுக்கானப் பாதையில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு திருத்தந்தை தொடர்ந்து அழைப்பு விடுப்பதை இந்நாளில் தானும் புதுப்பிக்க விரும்புவதாகத் தெரிவித்தார் பேராயர் தொமாசி.

4. பாதுகாப்பாக வாகனங்களை ஓட்டுமாறு அயர்லாந்து ஆயர் பரிந்துரை, செபம்

ஜூன்02,2012. சமுதாயத்தில், ஒருவர் மற்றவர் மீது அக்கறை காட்டுவது எல்லா மதத்திலும் வலியுறுத்தப்படும் அடிப்படை மனித மதிப்பீடு என்று அயர்லாந்து ஆயர் ஒருவர் கூறினார்.
அரையாண்டு வங்கி விடுமுறையையொட்டி வாகன ஓட்டுனர்களுக்காகச் செபம் ஒன்றையும் வெளியிட்டுள்ள ஆயர் Liam MacDaid, ஒருவர் மற்றவர் மீது அக்கறை காட்டுவது, நாம் சாலைகளைப் பயன்படுத்தும் விதத்திலும் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்று கூறினார்.
ஒருவர் மற்றவர் மீது அக்கறை காட்டுவது ஒவ்வொருவரின் கடமை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ள ஆயர், சாலை விபத்துக்கள் மற்றும் வாகன விபத்துக்களில் மனித வாழ்வு பறிக்கப்படும்போது அது எல்லாருக்குமே வேதனையைத் தருகின்றது என்று தெரிவித்தார்.

5. போரினால் பாதிக்கப்படும் சிறாருக்கென செபம்

ஜூன்02,2012. போரினால் பாதிக்கப்படும் சிறாருக்கான அனைத்துலக நாள் ஜூன் 4ம் தேதி கடைப்பிடிக்கப்படும்வேளை, இஞ்ஞாயிறன்று இச்சிறாருக்காகச் சிறப்பாகச் செபம் செய்வதற்கு திட்டமிட்டுள்ளது ஒரு பிரிட்டன் அமைப்பு.
இச்சிறாருக்கென செபிப்பதற்குச் செயலில் இறங்கியுள்ள CAAT என்ற ஆயுத வியாபாரத்துக்கு எதிரான கிறிஸ்தவ அமைப்பு,  உலகெங்கும் இடம்பெறும் அழிவை ஏற்படுத்தும் ஆயுத வியாபாரத்தால் போர்கள் நிரந்தரமாக்கப்படுகின்றன என்று குறை கூறியது. 
உலகில் ஆயுதங்களை அதிகமாக ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஒன்றான பிரிட்டன், உலகளாவிய ஆயுத வியாபாரத்துக்குப் பெரிய அளவில் ஆதரவு வழங்குவதாகவும், Bahrain, சவுதி அரேபியா, லிபியா உட்பட இவ்வாண்டில் கடும் வன்முறை அடக்குமுறைகள் இடம்பெற்ற நாடுகளுக்கு ஆயுத வியாபாரம் செய்து, அவ்வியாபாரத்தை ஊக்குவித்தது என்றும் CAAT அமைப்பு கூறியது. 
இதற்கிடையே, அமைதியான உலகை உருவாக்கவும், ஆயுத வியாபாரத்தை நிறுத்தவும் விண்ணப்பித்து பிரிட்டன் கிறிஸ்தவ சபைகள் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

6.ஏறக்குறைய 2 கோடியே 10 இலட்சம் பேர் கட்டாய வேலைக்குப் பலியாகியுள்ளனர்- ஐ.நா.அறிக்கை

ஜூன்02,2012. உலக அளவில் ஏறக்குறைய 2 கோடியே 10 இலட்சம் பேர், வேலைகளில் வலுக்கட்டாயமாகத் தடுத்து வைக்கப்பட்டு அல்லது ஏமாற்றப்பட்ட நிலையில் வேலை செய்து வருகின்றனர் என்று ILO என்ற உலக தொழில் நிறுவனம் இவ்வெள்ளியன்று வெளியிட்ட புதிய அறிக்கை கூறுகிறது.
உலகஅளவில் கட்டாய வேலைக்குப் பலியாகியிருப்போரில் 2 கோடியே 9 இலட்சம் பேர் ஆசிய-பசிபிக் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், அதற்கு அடுத்த நிலையில் ஆப்ரிக்காவும் இலத்தீன் அமெரிக்காவும் உள்ளன எனவும் அவ்வறிக்கை மேலும் கூறுகிறது.
கொத்தடிமை, மனித வியாபாரம் மற்றும் நவீன அடிமைத்தனங்கள் இந்தக் கட்டாய வேலையில் உள்ளடங்கும் எனக்கூறும் அவ்வறிக்கை, நலிவடைந்த பெண்களும் சிறுமிகளும் பாலியல் தொழிலுக்குக் கட்டாயப்படுத்தப்படல், கொத்தடிமைத்தனத்தில் சிக்குண்டுள்ள குடியேற்றதாரர்கள், பண்ணைகளில் வேலை செய்வோர் போன்றோரும் இதில் உள்ளடங்குவர் எனவும் குறிப்பிட்டுள்ளது.

7.புறக்கணிக்கப்பட்ட பாரம்பரிய உணவுப்பொருள்கள் உலகின் பசியைப் போக்குவதற்கு முக்கியமான சாதனங்கள் ஐ.நா.

ஜூன்02,2012. உணவு உற்பத்தி தொழிற்சாலைகள் மற்றும் நகர்ப்புற மக்களால் புறக்கணிக்கப்படும் பாரம்பரிய உணவுப்பொருள்கள், உலகில் பசியையும் ஊட்டச்சத்தின்மைக் குறையையும் அகற்றுவதற்குப் போதுமானவை என்று ஐ.நா.அதிகாரி ஒருவர் கூறினார்.
ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம் தாய்லாந்தில் நடத்திய இரண்டுநாள் கருத்தரங்கில் பேசிய, அந்நிறுவனத்தின் ஆசிய-பசிபிக் பகுதிக்கானப் பிரதிநிதி Hiroyuki Konuma, 2050ம் ஆண்டில் உலக மக்கள்தொகை 900 கோடியை எட்டவுள்ளவேளை, உலகம், அனைவருக்கும் போதுமான உணவைத் தயாரிக்க இயலாமல் போகக்கூடும் என்று எச்சரித்தார்.
உணவுக்கும் மற்றும்பிற தேவைகளுக்கும் பயன்படுத்தப்படும் தாவர இனங்கள், உலகத் தாராளமயமாக்கலினால் சுமார் ஒரு இலட்சத்திலிருந்து 30 ஆகக் குறைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கவலை தெரிவித்தார்.
ஏழையின் உணவு என ஒதுக்கப்பட்டு குறைத்து மதிப்பிடப்படும் பழங்குடியினத்தவர் மற்றும் பாரம்பரிய உணவுப்பொருள்கள், உலகில் பசியாலும் ஊட்டச்சத்துக் குறைவாலும் துன்புறும் 92 கோடியே 50 இலட்சம் மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்று ஐ.நா.அதிகாரி கூறினார்.
இவ்வெண்ணிக்கையில் 60 விழுக்காட்டினர் ஆசிய-பசிபிக் பகுதியில் உள்ளனர்.
இந்தக் கருத்தரங்கில் 38 நாடுகளிலிருந்து அறிவியலாளரும் வல்லுனர்களும் கலந்து கொண்டனர். 12 விதமான உணவு அருங்காடசியகங்களும் வைக்கப்பட்டிருந்தன.     

8. அறுபது நாளில் திருமணப் பதிவு

ஜூன்02,2012. திருமணம் முடிந்த 60 நாளில் அதைப் பதிவு செய்வதைக் கட்டாயமாக்கும் மசோதா புதுடெல்லி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
திருமணத்தை 2 மாதத்தில் பதிவு செய்யத் தவறினால், அந்தத் தம்பதியருக்கு 10,000 ரூபாய் அபராதம் விதிக்க மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
திருமணப்பதிவுகளை எளிதாக்க வேண்டும் என்று டெல்லி மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து திருமணப் பதிவுக்கான புதிய சட்டத் திருத்த மசோதாவை அரசு தயாரித்துள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்த ஆலோசனைகளின்பேரில் திருமணப் பதிவுகள், இந்த மசோதா மூலம் மிக எளிதாகப்பட்டுள்ளது.
புதிய மசோதாவின்படி, டெல்லியில் நடக்கும் அனைத்துத் திருமணங்களும், டெல்லியைச் சேர்ந்தவர்களின் திருமணங்களும் பதிவு செய்யப்படுவது கட்டாயமாகிறது.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...