Friday, 29 June 2012

Catholic News in Tamil - 27/06/12

1. 'புறவினத்தார் முற்றம்' என்ற அமைப்பு நடத்திவரும் கூட்டத்தில் கர்தினால் Jean-Louis Tauran

2. திருப்பீடக் கலாச்சார அவையும், உயிரைப் பேணும் தண்டுவட ஆய்வு அறக்கட்டளையும் இணைந்து உருவாக்கியுள்ள முக்கிய நூல்

3. நைஜீரிய ஆயர்கள் - மக்களின் உயிருக்கும், உடமைகளுக்கும் பாதுகாப்பு அளிப்பதே அரசின் தலையாயக் கடமை

4. உண்மையையும், அன்பையும் வளர்க்கும் எந்த முயற்சியும் வரவேற்கப்படவேண்டும் - மலேசிய ஆயர் பேரவையின் தலைவர்

5. போதைப்பொருள்களுக்கு அடிமையாவது குணப்படுத்தக்கூடிய ஒரு நோய் - உலக நலவாழ்வு நிறுவனத்தின் உயர் அதிகாரி

6. கடத்தலுக்கு ஆளானவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்: ஐ.நா. உயர் அதிகாரி

7. உடல்நலத்திற்கு ஆப்பிளை விட வாழைப்பழம் சிறந்தது

------------------------------------------------------------------------------------------------------

1. 'புறவினத்தார் முற்றம்' என்ற அமைப்பு நடத்திவரும் கூட்டத்தில் கர்தினால் Jean-Louis Tauran

ஜூன்,27,2012. Diplomacy என்று சொல்லப்படும் பக்குவமான, பத்திரமான நடத்தையும், உண்மையும் இணைந்து போவது கடினம் என்று இவ்வுலகம் கருதும் வேளையில், இவ்விரு எண்ணங்களையும் இணைத்து நாம் சிந்திப்பது பொருத்தமானது என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
மற்ற மதங்களுடன் உரையாடலை மேற்கொள்ளும் முயற்சிகளில் ஒன்றாக, 'புறவினத்தார் முற்றம்' என்ற அமைப்பு திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது.
ஒவ்வோர் ஆண்டும் பல்வேறு கருத்துக்களில் கூட்டங்கள் நடத்திவரும் இவ்வமைப்பு, தற்போது உரோம் நகரில் 'பக்குவமான நடத்தையும் உண்மையும்' ("Diplomacy and truth") என்ற தலைப்பில் நடத்திவரும் கூட்டத்தில் பேசிய மதங்களுக்கிடையேயான உரையாடல்கள் திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Jean-Louis Tauran, பக்குவமான நடத்தையும், உண்மையும் ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல என்று எடுத்துரைத்தார்.
அதிகார அமைப்புக்களின் தரப்பில் செயலாற்றும் பலரை நாம் Diplomat என்று அழைக்கிறோம். இவர்கள் பாதுகாப்பான, பக்குவமான செயல்பாடுகளில் ஈடுபட வேண்டியிருப்பதால், இவர்களால் உண்மையாக நடந்து கொள்ள முடியாது என்பது உலகில் பரவியுள்ள எண்ணம் என்று விளக்கிய கர்தினால் Tauran, இந்தப் பொறுப்பில் இருப்பவர்களும் உண்மையை உரைக்கவேண்டும் என்ற எச்சரிக்கை இரண்டாம் உலகப் போரின்போது நமக்கு வழங்கப்பட்டது என்று எடுத்துரைத்தார்.
பக்குவமான நடத்தை உண்மைக்கும், மனசாட்சிக்கும் எதிராக நடப்பது என்ற தவறான கருத்தைக் களைந்து உண்மையின் பக்கம் சார்ந்திருப்பதே அதிகார அமைப்புக்களைக் காக்கும் என்று கர்தினால் Tauran தன் உரையில் வலியுறுத்தினார்.


2. திருப்பீடக் கலாச்சார அவையும், உயிரைப் பேணும் தண்டுவட ஆய்வு அறக்கட்டளையும் இணைந்து உருவாக்கியுள்ள முக்கிய நூல்

ஜூன்,27,2012. திருப்பீடக் கலாச்சார அவையும், உயிரைப் பேணும் தண்டுவட ஆய்வு அறக்கட்டளையும் (The Stem for Life Foundation) இணைந்து உருவாக்கியுள்ள ஒரு முக்கிய நூல் இப்புதனன்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களிடம் வழங்கப்பட்டது.
மனிதத் தண்டுவடத்திலிருந்து உயிரணுக்களை எடுத்து அவைகளைக் கொண்டு எவ்விதம் உயிர்களைக் காக்கமுடியும் என்ற ஆய்வில் திருப்பீடம் ஆர்வம் காட்டி வந்துள்ளது.
உயிரைப் பேணும் இந்த ஆய்வுகளை உற்சாகப்படுத்தும் நோக்கில் கடந்த ஆண்டு வத்திக்கானில் நடத்தப்பட்ட அனைத்துலகக் கருத்தரங்கில் விவாதிக்கப்பட்ட எண்ணங்கள் இந்நூலில் பதியப்பட்டுள்ளன.
மனித உடலைப் படிப்படியாகச் செயலிழக்கச் செய்யும் புற்றுநோய், Alzheimer’s எனப்படும் மூளை தொடர்பான நோய், Lou Gehrig எனப்படும் நோய், முடக்குவாதம் போன்ற நோய்களைக் கட்டுப்படுத்தும் முறைகள் தண்டுவட உயிரணு ஆய்வுகளில் தெரிய வரும் என்று இந்நூல் தெளிவாக்குகின்றது.
திருப்பீடக் கலாச்சார அவையின் முக்கிய அதிகாரிகளில் ஒருவரான பேரருள்தந்தை Tomasz Trafny, அறிவியலும் மதமும் பொருளுள்ள உரையாடலில் ஈடுபட முடியும் என்பதற்கு இந்நூல் ஓர் எடுத்துக்காட்டு என்று கூறினார்.
பேரருள்தந்தை Trafnyம், உயிரைப் பேணும் தண்டுவட ஆய்வு அறக்கட்டளையின் இயக்குனர் Max Gomezம், NeoStem எனப்படும் நிறுவனத்தின் இயக்குனர் முனைவர் Robin Smithம் இப்புதனன்று திருத்தந்தையைச் சந்தித்து இந்நூலை அவரிடம் அளித்தனர்.
இந்நூல் இவ்வாண்டின் இறுதிக்குள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


3. நைஜீரிய ஆயர்கள் - மக்களின் உயிருக்கும், உடமைகளுக்கும் பாதுகாப்பு அளிப்பதே அரசின் தலையாயக் கடமை

ஜூன்,27,2012. மக்களின் உயிருக்கும், உடமைகளுக்கும் பாதுகாப்பு அளிப்பதே அரசின் தலையாயக் கடமை என்று நைஜீரிய ஆயர்கள் கூறியுள்ளனர்.
Boko Haram என்ற அடிப்படைவாதக் கும்பலால் நைஜீரியாவில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறைகளால் அப்பாவி பொதுமக்கள் ஒவ்வொரு நாளும் பலியாவதை அரசும், இராணுவமும் உடனடியாக நிறுத்த தீவிர முயற்சிகள் எடுக்கவேண்டும் என்று நைஜீரிய  ஆயர்கள் பேரவை அறிக்கை ஒன்றை அரசுக்கு சமர்ப்பித்துள்ளது.
குண்டு வெடிப்புகளாலும், ஏனையத் தாக்குதல்களாலும் எப்பாவமும் அறியாத கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் அனைவரும் கொல்லப்படுகின்றனர் என்று கூறும் இவ்வறிக்கை, இவ்வாறு கொல்லப்படுவதில், பெரும்பாலானோர் பெண்களும், குழந்தைகளும் என்று சுட்டிக்காட்டுகிறது.
சீரிய சிந்தனையுள்ள இஸ்லாமியத் தலைவர்களும் இந்தத் தாக்குதல்களை எதிர்த்து குரல் கொடுத்திருப்பது தங்களுக்கு உறுதியளிக்கிறது என்று கூறும் ஆயர்கள், வெறும் பேச்சளவில் நம் எதிர்ப்புக்களைத் தெரிவிப்பதால் மட்டும் இந்தப் பிரச்சனைத் தீராது என்பதையும் எடுத்துரைத்துள்ளனர்.
ஒப்புரவையும், அமைதியையும் தாங்கள் இந்நாட்டில் தொடர்ந்து தங்கள் மறையுரைகளில் கூறி வருகிறோம் என்றாலும், இவற்றை உறுதி செய்யும் செயல்பாடுகளை அரசு எடுக்காதபோது, நாங்கள் பேசுவது எல்லாம் பொருளற்றதாகிவிடுகிறது என்று ஆயர்கள் தங்கள் வருத்தத்தை இவ்வறிக்கையில் வெளியிட்டுள்ளனர்.


4. உண்மையையும், அன்பையும் வளர்க்கும் எந்த முயற்சியும் வரவேற்கப்படவேண்டும் - மலேசிய ஆயர் பேரவையின் தலைவர்

ஜூன்,27,2012. மலேசியாவில் நிலவும் ஊழலையும், பாகுபாடுகள் நிறைந்த செயல்பாடுகளையும் கண்காணிக்க, அரசு உருவாக்கியுள்ள 'உண்மை, ஒப்புரவு கண்காணிப்புக் குழு'வை தலத் திருஅவை வரவேற்றுள்ளது.
உண்மையும், அன்பும் மனிதர்களின் அடிப்படை குணங்கள். அவைகளை வளர்க்கும் எந்த முயற்சியும் வரவேற்கப்படவேண்டும் என்று மலேசியா, சிங்கப்பூர், புருனே ஆகிய நாடுகள் ஒருங்கிணைந்த ஆயர் பேரவையின் தலைவரான ஆயர் Paul Tan Chee Ing, கூறினார்.
அரசின் நடவடிக்கைகளில் ஒளிவு  மறைவற்ற வழிமுறைகள் அமைய, மலேசிய மக்கள் அரசை வற்புறுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் சென்ற ஆண்டு 'Berish' என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.
இவ்வமைப்பினரின் தொடர்ந்த போராட்டங்களின் விளைவாக 'உண்மை, ஒப்புரவு கண்காணிப்புக் குழு'வை அரசு உருவாக்கியுள்ளது என்று Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
Berish மேற்கொண்ட முயற்சிகள் தகுந்த பலனை அளித்துள்ளது என்று இயேசு சபையைச் சேர்ந்த ஆயர் Paul Tan, Fides நிறுவனத்திடம் கூறினார்.


5. போதைப்பொருள்களுக்கு அடிமையாவது குணப்படுத்தக்கூடிய ஒரு நோய் - உலக நலவாழ்வு நிறுவனத்தின் உயர் அதிகாரி

ஜூன்,27,2012. போதைப்பொருள்களுக்கு அடிமையாவது, குணப்படுத்தக்கூடிய ஒரு நோய் என்றாலும், இந்த நோயைக் குணப்படுத்தும்  வழிமுறைகள் பல நாடுகளில் பயன்படுத்தப் படுவதில்லை என்று WHO என்ற உலக நலவாழ்வு நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஜூன் 26 , இச்செவ்வாயன்று போதைப்பொருள் மற்றும் சட்ட விரோதக் கடத்தல் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டதையொட்டி பேசிய WHO அதிகாரி Shekhar Saxena, 147 நாடுகளில் எடுக்கப்பட்ட ஆய்வறிக்கையைச் செய்தியாளர்களிடம் சமர்ப்பித்தார்.
2010ம் ஆண்டு எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பின்படி, உலக மக்கள் தொகையில் 5 விழுக்காட்டினர், அதாவது 23 கோடி மக்கள், தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை ஒரு முறையாகிலும் பயன்படுத்தியுள்ளனர் என்றும், இவர்களில் 2 கோடியே 70 இலட்சம் பேர் போதைப்பொருள் பயன்பாட்டில் சிக்கியுள்ளனர் என்றும் தெரிகிறது.
போதைப்பொருள் பயன்பாட்டை பல நாடுகள் ஒரு சமுதாய அவலமாகக் கருதுவதோடு நின்றுவிடுகின்றன என்றும், அந்த பழக்கத்தை ஒரு நோயாகக் கருதி, மாற்று வழிகளைத் தருவதில்லை என்றும் இவ்வறிக்கை எடுத்துரைக்கிறது.


6. கடத்தலுக்கு ஆளானவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்: ஐ.நா. உயர் அதிகாரி

ஜூன்,27,2012. சட்டவிரோதமாக ஆட்கள் வெளிநாடுகளுக்குக் கொண்டுசெல்லப்படுவது தொடர்பாக அரசுகள் கிரிமினல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது, அப்படிக் கொண்டுசெல்லப்படுவோரின் உரிமைகளுக்கு மதிப்பளிக்கக்கூடிய சட்டங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என ஐ.நா.வின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு கொண்டுசெல்லப்படும் ஆட்களின் உரிமைகள் - அதிலும் குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைகள் - பாதுகாக்கப்படும் வகையில் அரசுகள் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியம் என மனிதக்கடத்தல் தொடர்பான ஐ.நா.வின் சிறப்புத் தூதர் Joy Ngozi Ezeilo, (the UN Special Rapporteur on Trafficking in Persons, especially Women and Children) Warsawவில் நடைபெற்ற கூட்டமொன்றில் எடுத்துரைத்தார்.
வெளிநாடுகளுக்கு ஆட்கள் முறைதவறி கடத்திச்செல்லப்படும் விடயத்தை கிரிமினல் குற்றமாக்குதல் குறித்து, தெளிவான மற்றும் முழுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என்றும், அவை ஒழுங்காக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் ஐநா மனித உரிமைகள் அவையில் சமர்ப்பித்த தன் ஆண்டறிக்கையில் Ezeilo கேட்டுக்கொண்டார்.
மனிதக் கடத்தலில் ஈடுபடுபவர்களைத் தண்டிக்க பல நாடுகளில் சட்டங்கள் வந்துவிட்டன என்றாலும், கடத்தப்படுகின்ற ஆட்களின் உரிமைகள் மதிக்கப்படுவது தொடர்பில் உரிய பாதுகாப்பு அம்சங்கள் தற்போதைய சட்டங்களில் இல்லை என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.
மனிதக் கடத்தலைச் செய்பவர்களையும், மனிதக் கடத்தலுக்கு ஆளாக நேர்ந்தவர்களையும் சரியாக இனம் கண்டு, அவர்களை வெவ்வேறு விதமாக நடத்துவதற்குரிய வழிவகைகளை அரசுகள் உருவாக்கவேண்டும் என ஐ.நா.வின் சிறப்புத் தூதர் தெரிவித்துள்ளார்.
மனிதக் கடத்தலுக்கு ஆளாக நேருபவர்கள் விரும்பியோ, வற்புறுத்தலின் பேரிலோ, ஏமாற்றப்பட்டோ, சில குற்றங்களைப் புரியநேரிடுகிறது என்றாலும், அவர்களும் ஒரு வகையில் குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள், எனவே அவர்களது உரிமைகள் பாதுகாக்கப்படுவதும், அவர்களது துன்பங்களுக்கு நிவாரணம் கிடைப்பதும் அவசியம் என ஐ.நா. மனித உரிமைக் குழு வெளியிட்டுள்ள அறிக்கை குறிப்பிடுகிறது.
மனிதக் கடத்தலில் ஈடுபடுபவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்படும் சொத்துக்களைக் கொண்டு மனிதக் கடத்தலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமும் நஷ்டஈடும் வழங்கும் வகையில் சட்ட வழிமுறைகளை அரசுகள் உருவாக்கவேண்டும் என ஐ.நா.வின் சிறப்புத் தூதர் Joy Ngozi Ezeilo தெரிவித்துள்ளார்.


7. உடல்நலத்திற்கு ஆப்பிளை விட வாழைப்பழம் சிறந்தது

ஜூன்,27,2012. எல்லா காலங்களிலும் எல்லா இடத்திலும் அனைத்துத் தரப்பினரும் வாங்கக்கூடிய விலையில் கிடைக்கும் வாழைப்பழத்தில் உடலுக்குத் தேவையான சத்துக்கள் மலிந்து கிடக்கின்றன.
ஆப்பிளைவிட பலமடங்கு சிறந்தது வாழைப்பழம். ஆப்பிளில் உள்ளதைவிட இரண்டு மடங்கு அதிகமாக வாழைப்பழத்தில் கார்போஹைட்ரேட் உள்ளது.
பாஸ்பரஸ் மூன்று மடங்கும் புரோட்டீன் அளவு இன்னும் அதிகமாக நான்கு மடங்கும் உள்ளது. வைட்டமின் ஏ மற்றும் இரும்புச்சத்தின் அளவு ஆப்பிளில் உள்ளதைவிட ஐந்து மடங்கு இதில் அதிகமாக இருக்கிறது.
பொட்டாசியம் சத்தும் வாழைப்பழத்தில் செறிவாக உள்ளது. ஒரு சராசரி வாழைப்பழத்தில் 23 கிராம் கார்போஹைட்ரேட், 12 கிராம் சர்க்கரை, 2.6 கிராம் நார்சத்து ஒரு கிராம் கொழுப்பு மற்றும் 9 மில்லி கராம் வைட்டமின் சி உள்ளது. அதாவது, உடலுக்கு ஊட்டமளிக்கும் 90 கலோரிகள் இதில் உள்ளன.
இத்துடன் எளிதில் ஜீரணத்தன்மை ஏற்படுத்தும் நார்ச்சத்தும் உள்ளதால் உடலுக்கு உடனடியாக புத்துணர்ச்சி கொடுக்கும் ஆற்றல் வாழைப்பழத்திற்கு உள்ளது. உலகின் தலைசிறந்த தடகள வீரர்கள் வாழைப்பழம் உண்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
பயிற்சியின் போது தங்களுக்கு ஏற்படும் சோர்வை வாழைப்பழம் நீக்கும் தன்மை கொண்டது. வாழைப்பழத்தில் வைட்டமின் பி நிரம்ப உள்ளது, இது நரம்பு மண்டலத்திற்கு வலு சேர்க்கிறது.
இதில் உள்ள இரும்புச்சத்துகள் ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. இதனால் வாழைப்பழம் தொடர்ந்து உட்கொள்பவர்களுக்கு ரத்தசோகை ஏற்படாது.
புகைபிடிக்கும் பழக்கம் உடைய சிலர் அப்பழக்கத்தை திடீர் என விட்டு விடும்போது, அவர்கள் உடலில் ஏற்கனவே சேர்ந்திருக்கும் நிக்கோடின் என்ற நச்சுபொருளை வாழைப்பழத்தில் உள்ள பி6, பி12 வைட்டமின், பொட்டாசியம் மெக்னீசியம் ஆகிய சத்துப்பொருட்கள் சிறிது, சிறிதாக உடலில் இருந்து அகற்றி விடும்.
 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...