1. மிலான் நகரில் நடைபெறும் குடும்பங்களின் அகில உலக மாநாட்டைப் பற்றிய தகவல்கள்
2. திருத்தூதர்கள் துன்பங்களைத் தாங்கியதைப் போல் ஈராக் திருஅவை தற்போது துன்பங்களைத் தாங்கி வருகிறது - கிர்குக் பேராயர்
3. கிறிஸ்துவின் போதனைகளால் கோடான கோடி மக்களின் வாழ்வு நிறைவடைந்துள்ளது - தலாய் லாமா
4. ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 29ம் தேதி ஐ.நா. அமைதி காப்பாளர்களின் உலக நாள்
5. 24 ஆண்டுகள் காவலில் வைக்கப்பட்டிருந்த மியான்மாரின் எதிர்கட்சித் தலைவர் தாய்லாந்தில் பயணம்
6. தமிழ் கைதிகளின் விடுதலை கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்
7. இயேசு சபை அருள்தந்தை Ceyrac Pierre இறையடி சேர்ந்தார்
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. மிலான் நகரில் நடைபெறும் குடும்பங்களின் அகில உலக மாநாட்டைப் பற்றிய தகவல்கள்
மே,30,2012. திருமண உறவில் நீடித்து, குழந்தைகளைப் பெற்று வளர்க்கும் குடும்பங்களே உறுதியான, நிலையான மகிழ்வுக்கு வழிவகுக்கும் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
மே 30, இப்புதன்
முதல் வருகிற ஞாயிறு வரை இத்தாலியின் மிலான் நகரில் நடைபெறும்
குடும்பங்களின் அகில உலக மாநாட்டைப் பற்றி செய்தியாளர்களிடம் பேசிய
திருப்பீட குடும்ப அவையின் தலைவர் கர்தினால் Ennio Antonelli இவ்வாறு கூறினார்.
குடும்பம்
என்ற எளியதோர் உண்மையை உலகறியச் செய்யும் இச்சிறப்பான நிகழ்வுக்கு கடந்த
மூன்று ஆண்டுகள் ஏற்பாடுகள் நிகழ்ந்தன என்று மிலான் பேராயர் கர்தினால் Angelo Scola எடுத்துரைத்தார்.
இம்மாநாட்டின் சிறப்பு அம்சங்களைச் செய்தியாளர்களிடம் விளக்கிய கர்தினால் Scola, உலகின்
பல்வேறு நாடுகளில் இருந்து வந்திருக்கும் 7000க்கும் அதிகமான
உறுப்பினர்களுக்கு உதவிகள் செய்வதற்கு மிலான் நகரைச் சுற்றியுள்ள பல்வேறு
பங்கு தளங்களிலிருந்து 4500க்கும் அதிகமான விருப்பப் பணியாளர்கள் முன்
வந்துள்ளனர் என்று கூறினார்.
சுயநலத்தில் ஊறி, தன்னை மட்டுமே காணும் மனிதர்களின் உள்நோக்கியப் பார்வைக்கு ஒரு மாற்றாக, பிறரைக்
காணும் வெளிநோக்கியப் பார்வையை மனிதர்களில் வளர்க்க இந்த மாநாடு பெரிதும்
உதவும் என்று தான் நம்புவதாகவும் இவ்வுலக மாநாட்டினை முன்னின்று நடத்தும்
மிலான் பேராயர் கர்தினால் Scola செய்தியாளர்கள் கூட்டத்தில் எடுத்துரைத்தார்.
குழந்தைகளுக்கும், இளையோருக்கும்
தனிப்பட்ட வகையில் முதல் முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஒரு பொதுக்
கூட்டம் இந்த மாநாட்டின் ஒரு சிறப்பு அம்சமாக இருக்கும் என்றும், வாழ்வைப்
பேணிக் காக்க வேண்டும் என்ற மையக்கருத்துடன் அமையும் இந்தக் கூட்டம்
மிலான் நகரின் ஒரு பெரும் பூங்காவில் நடத்தப்படும் என்றும் ஆசிய செய்தி
நிறுவனம் கூறியுள்ளது.
2. திருத்தூதர்கள் துன்பங்களைத் தாங்கியதைப் போல் ஈராக் திருஅவை தற்போது துன்பங்களைத் தாங்கி வருகிறது - கிர்குக் பேராயர்
மே,30,2012. ஈராக் திருஅவை, திருத்தூதர்களால் உருவாக்கப்பட்டது மட்டுமல்லாமல், அவர்கள்
துன்பங்களைத் தாங்கியதைப் போல் இத்திருஅவையும் தற்போது துன்பங்களைத்
தாங்கி வருகிறது என்று கிர்குக் பேராயர் லூயிஸ் சாக்கோ கூறினார்.
கிறிஸ்தவ விசுவாசத்தின் காரணமாக, துன்பங்களைத் தாங்கி வரும் ஈராக், சீனா, பாகிஸ்தான்
ஆகிய நாடுகளுக்காக அண்மையில் பிரான்ஸ் நாட்டு பாரிஸ் நகரில் நடத்தப்பட்ட
ஒரு திருவிழிப்பு செப வழிபாட்டில் உரையாற்றிய பேராயர் சாக்கோ, துன்புறும் கிறிஸ்தவர்களின் இரத்தம் வீணாகாது என்று கூறினார்.
பாகிஸ்தானில் கொலையுண்ட அமைச்சர் Shahbaz Bhattiயின் தம்பி Paul Bhatti, பாகிஸ்தான் சார்பிலும், சீனாவின் சார்பில் ஹாங்காங் முன்னாள் பேராயர் கர்தினால் Joseph Zenம் இச்சிறப்புத் திருவிழிப்புச் சடங்கில் கலந்து கொண்டு உரையாற்றினர்.
Aid to the Church in Need என்ற
பிறரன்பு அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இக்கூட்டத்தின் ஆரம்பத்தில்
கர்தினால்களும் ஆயர்களும் கலந்து கொண்ட திருப்பலியை பிரான்ஸ் நாட்டுத்
திருப்பீடத் தூதர் பேராயர் Luigi Ventura நிறைவேற்றினார்.
3. கிறிஸ்துவின் போதனைகளால் கோடான கோடி மக்களின் வாழ்வு நிறைவடைந்துள்ளது - தலாய் லாமா
மே,30,2012. இயேசு கிறிஸ்துவின் போதனைகள் மனித குலத்திற்குக் கிடைத்துள்ள ஓர் அரிய கருவூலம், கிறிஸ்துவின் போதனைகளால் கோடான கோடி மக்களின் வாழ்வு நிறைவடைந்துள்ளது என்று புத்த மதத் தலைவரான தலாய் லாமா கூறினார்.
ஐரோப்பாவின் பல நாடுகளில் அரசியல் மற்றும் மத நல்லிணக்கக் கூட்டங்களில் கடந்த சில வாரங்களாகப் பங்கேற்று வரும் தலாய் லாமா, அண்மையில் வியன்னா நகரில் உள்ள புனித ஸ்தேவான் பேராலயத்திற்குச் சென்றிருந்தபோது இவ்வாறு கூறினார்.
ஆஸ்திரியா நாட்டில் கடந்த சில நாட்களாகப் பயணங்கள் செய்துவந்த தலாய் லாமா அவர்கள், தன் பணங்களின் ஒரு முத்தாய்ப்பாக, வியன்னா பேராயர் கர்தினால் Christoph Schönborn உடன் புனித ஸ்தேவான் பேராலயத்தைப் பார்வையிட்ட பின்னர், கர்தினாலுடன் தனிப்பட்ட வகையிலும் பேச்சுவார்த்தைகள் மேற்கொண்டார்.
உலகில் மத நல்லிணக்கம் உருவாக 1975ம் ஆண்டிலிருந்து முயற்சிகள் மேற்கொண்டு வரும் தலாய் லாமா அவர்கள், லூர்து நகர், பாத்திமா
நகர் ஆகிய இடங்களில் உள்ள திருத்தலங்களைத் தான் பார்வையிட்டது தனக்குள்
மேலான எண்ணங்களை உருவாக்கியுள்ளது என்று எடுத்துரைத்தார்.
4. ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 29ம் தேதி ஐ.நா. அமைதி காப்பாளர்களின் உலக நாள்
மே,30,2012.
2011ம் ஆண்டு ஐ.நா.வின் அமைதி காக்கும் முயற்சிகளின் விளைவாகத் தங்கள்
உயிரைத் தியாகம் செய்துள்ள வீர நாயகர்களை நான் வணங்குகிறேன் என்று ஐ.நா.
பொதுச் செயலர் பான் கி மூன் கூறினார்.
பிரச்சனைகளால்
சூழப்பட்டுள்ள உலகில் அமைதியை நிலைநாட்ட ஐ.நா. அமைதிப் படையினர் மேற்கொண்ட
முயற்சிகளில் 2011ம் ஆண்டு 112 பேர் உயிர் இழந்துள்ளனர். இவர்களுக்கு
மரியாதை செலுத்தும் வண்ணம் இச்செவ்வாயன்று நியூயார்க்கில் உள்ள ஐ.நா.
தலைமையகத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் பேசிய பான் கி மூன் இவ்வாறு
கூறினார்.
ஐ.நா. அமைதி காப்பாளர்களின் உலக நாள் ஒவ்வோர் ஆண்டும் ஜூன் மாதம் 29ம் தேதி கொண்டாடப்படுவதையொட்டி, நியூயார்க்கில்
நடைபெற்ற விழாவில் அமைதி காக்கும் முயற்சியில் உயிரிழந்த ஐ.நா. வீரகளுக்கு
மலர் வளையங்கள் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
உலகெங்கும் போர்ச்சூழல் அதிகமாக உள்ள நாடுகளில் 1,20,000க்கும்
அதிகமான வீரர்கள் ஐ.நா. அமைதி காப்பாளர்களாகப் பணியாற்றுகின்றனர்.
இவர்களில் 112 பேர் 2011ம் ஆண்டு உயிரிழந்துள்ளனர். நடப்பு ஆண்டில் இதுவரை
31 பேர் அமைதி காக்கும் முயற்சிகளில் உயிரிழந்துள்ளனர் என்று ஐ.நா.
செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
மனிதர்கள்
அனைவருமே அமைதி முயற்சிகளுக்கு மீண்டும் தங்களையே அர்ப்பணிப்பது ஒன்றே
உயிர் நீத்த இந்த வீரர்களுக்கு நாம் செலுத்தும் மரியாதை என்று ஐ.நா. உயர்
அதிகாரி Hervé Ladsous கூறினார்.
5. 24 ஆண்டுகள் காவலில் வைக்கப்பட்டிருந்த மியான்மாரின் எதிர்கட்சித் தலைவர் தாய்லாந்தில் பயணம்
மே,30,2012. கடந்த 24 ஆண்டுகள் மியான்மாரின் இராணுவ ஆட்சியால் காவலில் வைக்கப்பட்டிருந்த எதிர்கட்சித் தலைவர் Aung San Suu Kyi, முதன்முறையாக தன் நாட்டை விட்டு அண்மைய நாடான தாய்லாந்தில் பயணம் மேற்கொண்டுள்ளார்.
தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் நடைபெறும் உலக பொருளாதாரக் கருத்தரங்கில் ஜூன் 1 ம் தேதி உரையாற்ற உள்ள Suu Kyi, அந்நாட்டிற்குச் சென்றதும், மியான்மாரில் இருந்து அந்நாட்டிற்குப் புலம்பெயர்ந்தோரை இப்புதனன்று சந்தித்தார்.
உலக அமைதிக்கான நொபெல் விருதைப் பெற்றுள்ள Suu Kyi, ASEAN நாடுகளில்
வாழும் பெண்கள் எவ்வழிகளில் தங்களையே சக்திவாய்ந்தவர்களாக மாற்ற முடியும்
என்ற கருத்தில் உலகப் பொருளாதாரக் கருத்தரங்கில் உரையாற்ற உள்ளார் என்று
ஆசிய செய்தி நிறுவனம் கூறுகிறது.
தாய்லாந்தும் மியான்மாரும் வர்த்தகங்களில் கூட்டுறவு முயற்சிகளை மேற்கொள்ளும் ஒப்பந்தங்கள் அண்மையில் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, Suu Kyiயின் பயணம் இவ்விரு நாடுகளுக்கிடையே உள்ள உறவை வலுப்படுத்தும் என்ற நம்பிக்கையை ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
6. தமிழ் கைதிகளின் விடுதலை கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்
மே,30,2012.
சிறைகளில் விசாரணைகளின்றி நீண்ட காலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்
அரசியல் கைதிகளை விடுதலை செய்யவேண்டும் எனக்கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்
நடத்தப்பட்டுள்ளது.
கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்னால் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் மற்றும் காணாமல் போயுள்ளவர்களின் உறவினர்களும் கலந்து கொண்டனர்.
அரசியல் கைதிகளாக இருந்த சிங்கள இளையோர், முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோரைப் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்துள்ள இலங்கை அரசு, தமிழ் அரசியல் கைதிகளுக்கு மட்டும் பொது மன்னிப்பு வழங்க முன்வராமலிருப்பது ஏன் எனக் கேள்வி எழுப்பப்பட்டது.
காவலில்
வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளாகிய தமிழ் இளைஞர்களைப் பயங்கரவாதிகள் எனக்
குறிப்பிடாமல் அவர்களைத் தமிழ் அரசியல் கைதிகளாகவே குறிப்பிடவேண்டும்
என்றும் அவ்வாறே அவர்களை நடத்தவேண்டும் என்றும் இந்த ஆர்ப்பாட்டத்தின்போது
கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
7. இயேசு சபை அருள்தந்தை Ceyrac Pierre இறையடி சேர்ந்தார்
மே,30,2012. இந்தியாவிலும், கம்போடியா உட்பட்ட ஆசியாவின் பிற நாடுகளிலும் கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரிந்த இயேசு சபை அருள்தந்தை Ceyrac Pierre தனது 98வது வயதில், இப்புதன் அதிகாலை இறையடி சேர்ந்தார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
1914ம் ஆண்டு பிப்ரவரி 4ம் தேதி பிரான்ஸ் நாட்டில் பிறந்த அருள்தந்தை சிராக், தனது 17வது வயதில் இயேசு சபையில் சேர்ந்து, 22வது வயதில் இந்திய மண்ணில் பணிபுரிய வந்தார்.
தமிழில் கல்லூரிப் படைப்பை மேற்கொண்ட அருள்தந்தை சிராக், தனது 31வது வயதில் குருவாகத் திருநிலைபடுத்தப்பட்டு, கல்லூரி மாணவரிடையே தன் பணிகளைத் துவங்கினார்.
பல்கலைக் கழக மாணவர்களை சமுதாயச் சிந்தனைகளில் வளர்க்கும் ஒரு முயற்சியாக விளங்கும் AICUF என்ற மாணவ அமைப்பை உருவாக்கிய அருள்தந்தை சிராக், அவ்வமைப்பை 15 ஆண்டுகளுக்கும் மேலாக வழிநடத்தினார்.
போர்களால் சீர்குலைந்திருந்த கம்போடியாவில் புலம்பெயர்ந்தோரிடையே பல ஆண்டுகள் உழைத்த அருள்தந்தை சிராக், மீண்டும் இந்தியா திரும்பி, தமிழ் நாட்டில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கிணறுகள் தோண்டுதல், வேளாண்மை வாய்ப்புக்களை உருவாக்குதல் ஆகிய பணிகளில் ஈடுபட்டார்.
தன் வாழ்வின் இறுதி பல ஆண்டுகள் தமிழ் நாட்டில் உள்ள ஆயிரக்கணக்கான ஏழை குழந்தைகளுக்குத் தன் பணியை அர்ப்பணித்த அருள்தந்தை, குழைந்தைகள் காப்பகம், சமுதாயக் கல்லூரி (Community College) இவற்றை உருவாக்குவதில் ஆர்வம் காட்டினார்.
‘எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல், வேறொன்று அறியேன் பராபரமே..’ என்ற
தாயுமானவரின் வார்த்தைகளைத் தன் விருதுவாக்காகக் கொண்டு வாழ்ந்த
அருள்தந்தை சிராக் அவர்களின் சமுதாயப் பணிகளைப் பாராட்டி பிரான்ஸ் நாட்டின்
மிக உயரிய அரசு விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டன.
No comments:
Post a Comment