1. அருளாளர் இரண்டாம் ஜான்பால் அவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சிற்றாலயத்தை போலந்து நாட்டில் அர்ச்சித்தார் திருப்பீடச் செயலர்
2. அமெரிக்க ஐக்கிய நாட்டின் பெண் துறவியர் கூட்டமைப்பின் தலைவர்கள் விசுவாசக் கோட்பாட்டுப் பேராயத் தலைவர்களுடன் சந்திப்பு
3. பிளவுபட்டிருக்கும் திருஅவை இளையோரைத் திருஅவையிலிருந்து விலகிச்செல்ல வழிவகுக்கும் - டப்ளின் பேராயர் Martin
4. திருப்பீடத்திற்கும் இஸ்ரேல் நாட்டுக்கும் இடையே உயர்மட்டக் கூட்டம்
5. சிரியா நாட்டுச் சமுதாயம் ஒவ்வொரு நாளும் நரகத்தில் வாழ்ந்து வருகிறது - திருப்பீடத்தாதர் பேராயர் Zenari
6. மருத்துவத் துறையை இன்னும் அதிகமாக மனிதமயமாக்க வேண்டும் - திருப்பீட அதிகாரி
7. பாகிஸ்தான் விமானப் படை உயர் அதிகாரி Cecil Chaudhry அவரது மரணத்தின் இரண்டாம் மாத நினைவு
8. டீசல் புகையைச் சுவாசிப்பதால், நுரையீரல் புற்றுநோய் உண்டாகும் - WHO
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. அருளாளர் இரண்டாம் ஜான்பால் அவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சிற்றாலயத்தை போலந்து நாட்டில் அர்ச்சித்தார் திருப்பீடச் செயலர்
ஜூன்,13,2012. அருளாளர்
திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் செபம் நிறைந்ததோர் வாழ்வை மேற்கொண்ட மேலான
மனிதர் என்று திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சிசியோ பெர்தோனே கூறினார்.
போலந்து நாட்டில் தனது ஆறுநாள் பயணத்தை இப்புதனன்று நிறைவு செய்த கர்தினால் பெர்தோனே, Gdańsk-Zaspa எனுமிடத்தில் அருளாளர் இரண்டாம் ஜான்பால் அவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சிற்றாலயத்தை அர்ச்சித்து, திறந்து வைத்தபோது இவ்வாறு கூறினார்.
திருநற்கருணை ஒவ்வொருவரது வாழ்விலும் பெறவேண்டிய மையமான இடத்தை, தன் சுற்றுமடல்களிலும், மறையுரைகளிலும் அருளாளர் இரண்டாம் ஜான்பால் கூறிவந்தார் என்பதை சுட்டிக்காட்டிய கர்தினால் பெர்தோனே, திருநற்கருணையையும், நம் வாழ்வையும் இணைக்கும் ஒரு பாலமாக ஆராதனை விளங்குகிறது என்று கூறினார்.
போலந்து நாட்டில் பிறந்த அருளாளர் இரண்டாம் ஜான்பால் அவர்கள் பெயரால் அர்ப்பணிக்கப்பட்ட இந்தப்
புனித இடத்திற்கு வரும் அனைவரும் இறையாசீரை நிறைவாகப் பெற்றுத்
திரும்பவேண்டும் என்ற தன் ஆவலையும் கர்தினால் பெர்தோனே வெளியிட்டார்.
2. அமெரிக்க ஐக்கிய நாட்டின் பெண் துறவியர் கூட்டமைப்பின் தலைவர்கள் விசுவாசக் கோட்பாட்டுப் பேராயத் தலைவர்களுடன் சந்திப்பு
ஜூன்,13,2012.
அமெரிக்க ஐக்கிய நாட்டில் பணிபுரியும் அருள் சகோதரிகளின் அர்ப்பண வாழ்வும்
பணியும் அந்நாட்டின் கத்தோலிக்கத் திருஅவைக்கு பெரும் சாட்சியாக
விளங்குகிறது என்று திருப்பீடத்தின் விசுவாசக் கோட்பாட்டுப் பேராயம்
இச்செவ்வாயன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறியுள்ளது.
அமெரிக்க ஐக்கிய நாட்டின் பெண் துறவியர் கூட்டமைப்பின் தலைவர் அருள்சகோதரி Pat Farrell அவர்களும், செயல்பாட்டு இயக்குனர் அருள்சகோதரி Janet Mock அவர்களும் இச்செவ்வாயன்று திருப்பீட விசுவாசக் கோட்பாட்டுப் பேராயத்தின் தலைவர் கர்தினால் William Levada அவர்களைச் சந்தித்தபின் இவ்வறிக்கை வெளியிடப்பட்டது.
திருப்பீடத்தின் சார்பில், அமெரிக்காவில் பணிபுரியும் பெண் துறவியர் வாழ்வை ஆய்வைச் செய்து மாற்றங்களை பரிந்துரைத்துள்ள பேராயர் Peter Sartain அவர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றார்.
பெண் துறவியர் வாழ்விலும், கருத்தியலிலும் உள்ள ஒரு சில குறைபாடுகளை விசுவாசக் கோட்பாட்டுப் பேராயம் சுட்டிக்காட்டியுள்ளது என்று இவ்வறிக்கை மேலும் கூறுகிறது.
திருப்பீடத்துடன் நடைபெற்ற இந்த சந்திப்பு திறந்த மனதுடன் நடைபெற்றது என்று கூறிய அருள்சகோதரி Farrell, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து பெண் துறவியர் கூட்டமைப்பின் அடுத்த கூட்டத்தில் ஆய்வு செய்யப்படும் என்று கூறினார்.
3. பிளவுபட்டிருக்கும் திருஅவை இளையோரைத் திருஅவையிலிருந்து விலகிச்செல்ல வழிவகுக்கும் - டப்ளின் பேராயர் Martin
ஜூன்,13,2012. கருத்து வேறுபாடுகளால் பிளவுபட்டிருக்கும் திருஅவை இளையோரை தன்னிடம் ஈர்ப்பதற்குப் பதில், அவர்களைத் திருஅவையிலிருந்து விலகிச்செல்ல வழிவகுக்கும் ஆபத்து உண்டு என்று டப்ளின் பேராயர் Diarmuid Martin கூறினார்.
அயர்லாந்தின்
டப்ளின் நகரில் ஜூன் 10ம் தேதி ஞாயிறு முதல் வருகிற ஞாயிறு வரை
நடைபெற்றுவரும் அனைத்துலகத் திருநற்கருணை மாநாட்டில் உரையாற்றிய டப்ளின்
பேராயர் Martin, ஒருங்கிணைந்த திருஅவை விவிலிய விழுமியங்களைத் துணிவுடன் எடுத்துரைக்கவேண்டும் என்று கூறினார்.
புதிய வழிகளில் நற்செய்தியைப் பரப்புவதற்கு மறைந்த திருத்தந்தை அருளாளர் இரண்டாம் ஜான்பால் அவர்களும், தற்போதைய திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களும் விடுத்துவந்துள்ள அழைப்பை சுட்டிக்காட்டிய பேராயர் Martin, அயர்லாந்திலும் ஐரோப்பாவிலும் நற்செய்தியைப் புதிய வழிகளில் எடுத்துரைப்பது அனைவரின் கடமை என்று கூறினார்.
அனைத்துலக
திருநற்கருணை மாநாடு அயர்லாந்தில் உள்ள திருஅவையை இன்னும் சக்திவாய்ந்த
முறையில் ஒருங்கிணைக்கும் என்ற தன் நம்பிக்கையை பேராயர் Martin தன் உரையில் வலியுறுத்திக் கூறினார்.
4. திருப்பீடத்திற்கும் இஸ்ரேல் நாட்டுக்கும் இடையே உயர்மட்டக் கூட்டம்
ஜூன்,13,2012.
திருப்பீடத்திற்கும் இஸ்ரேல் நாட்டுக்கும் இடையே ஆக்கப்பூர்வமான
செயல்பாடுகள் தொடரும்வண்ணம் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன என்று திருப்பீட
பத்திரிக்கை அலுவலகம் அறிவித்தது.
இவ்விரு
நாடுகளுக்கும் இடையே இருதரப்பு உறவுகள் குறித்து வத்திக்கான்
அப்போஸ்தலிக்க இல்லத்தில் இச்செவ்வாயன்று நடைபெற்ற கூட்டத்தின் இறுதியில்
இவ்வறிக்கை வெளியிடப்பட்டது.
நாடுகளுடனான திருப்பீட உறவுகளின் நேரடிச் செயலர் பேரருள்திரு Ettore Balestrero, திருப்பீடத்தின் சார்பிலும், இஸ்ரேல் நாட்டின் வெளியுறவுத்துறையின் இணை அமைச்சர் Danny Ayalon இஸ்ரேல் நாட்டின் சார்பிலும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இஸ்ரேல் நாட்டில் கத்தோலிக்கத் திருஅவை மேற்கொள்ளும் பணிகள், திருஅவையின்
நிறுவனங்களும் அவற்றிற்கு விதிக்கப்படும் வரிகள் ஆகிய அம்சங்கள் பற்றி
இக்கூட்டத்தில் பேசப்பட்டது என்று பேரருள்தந்தை Balestrero வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியொன்றில் கூறினார்.
இவ்விரு நாடுகளின் உறவுகளை வளர்க்க இதுவரை உழைத்து ஒய்வு பெறும் பேராயர் Antonio Franco, இஸ்ரேல் நாட்டின் தூதர் Mordechay Lewy ஆகியோரின் சேவை இக்கூட்டத்தில் பாராட்டப்பட்டது.
இவ்விரு நாடுகளின் அடுத்தக் கூட்டம் வருகிற டிசம்பர் மாதம் 6ம் தேதி நிகழும் என்ற முடிவுடன் கூட்டம் நிறைவடைந்தது.
5. சிரியா நாட்டுச் சமுதாயம் ஒவ்வொரு நாளும் நரகத்தில் வாழ்ந்து வருகிறது - திருப்பீடத்தாதர் பேராயர் Zenari
ஜூன்,13,2012. சிரியாவில் ஒவ்வொரு நாளும் கொல்லப்படும் மனித உடல்களை கணக்கிட்டுவிடலாம், ஆனால், அங்கு சிதறுண்டு போகும் மனங்களையும், சீரழியும் மனசாட்சிகளையும் கணக்கிடமுடியாது என்று சிரியாவின் திருப்பீடத்தாதர் பேராயர் Mario Zenari ஆழ்ந்த வருத்தத்துடன் கூறினார்.
மனித உயிர்களும், அதன் விளைவாக குடும்பங்களும் அழிந்து வருவதால், சிரியாவின் சமுதாயம் ஒவ்வொரு நாளும் நரகத்தில் வாழ்ந்து வருகிறது என்று கூறிய பேராயர் Zenari, இச்சமுதாயத்தில் புரையோடிப் போயிருக்கும் வேதனையையும், வெறுப்பையும் தீர்க்க பல ஆண்டுகள் ஆகும் என்று எடுத்துரைத்தார்.
தொடரும் இந்த வன்முறைகளால் மிக அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் அங்குள்ள சிறுவர், சிறுமியரே என்பதைக் கூறிய பேராயர் Zenari, அனைத்துத்
தரப்பினரும் தங்கள் சுய நலன்களுக்காக சிறுவர் சிறுமியரைப் பயன்படுத்துவதை
உடனடியாக நிறுத்தவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
குழந்தைகளை Bashar al-Assad தரப்பினர் மனிதக்கேடயங்களாகப் பயன்படுத்துகின்றனர் என்று ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் தன் அண்மைய அறிக்கையில் கூறியுள்ளார்.
நாட்டில் நடக்கும் உள்நாட்டுப் போர் மட்டுமல்லாமல், ஊடகங்களும் தகவல்கள வெளியிடுவதில் போர்புரிந்து வருவதால், ஊடகங்கள் வெளியிடும் செய்திகளை நம்புவது நாளுக்கு நாள் கடினமாகி வருகிறது என்று பேராயர் Zenari ஆசிய செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியொன்றில் கூறினார்.
6. மருத்துவத் துறையை இன்னும் அதிகமாக மனிதமயமாக்க வேண்டும் - திருப்பீட அதிகாரி
ஜூன்,13,2012. மருத்துவத் துறையை இன்னும் அதிகமாக மனிதமயமாக்க வேண்டும் என்று திருப்பீட அதிகாரி ஒருவர் கூறினார்.
"புற்றுநோயைக்
கட்டுப்படுத்தும் புதிய முறைகளும் வாய்ப்புக்களும்" என்று தலைப்பில்
இத்திங்களன்று உரோம் நகரில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் நலத்துறையில்
ஆன்மீகப் பணிகளுக்கென உருவாக்கப்பட்டுள்ள திருப்பீட அவையின் செயலர் பேராயர்
Jean-Marie Mupendawatu, இவ்வாறு கூறினார்.
நோயுற்றோருக்குத் தகுந்த பராமரிப்பு தேவை என்பதை உணர்ந்த திருத்தந்தை அருளாளர் இரண்டாம் ஜான் பால், இத்திருப்பீட அவையை உருவாக்கினார் என்பதை பேராயர் Mupendawatu, எடுத்துரைத்தார்.
உலகில் தற்போது கடைபிடிக்கப்பட்டு வரும் மருத்துவ முறைகள் நோயைக் கட்டுப்படுத்துவதிலும், நோயைக் குணமாக்குவதிலும் அதிக கவனம் செலுத்து வருகிறது என்பதைச் சுட்டிக்காட்டிய பேராயர் Mupendawatu, நோயைக் காட்டிலும் நோயுற்றோர் மீது இன்னும் அதிகக் கவனம் செலுத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்.
7. பாகிஸ்தான் விமானப் படை உயர் அதிகாரி Cecil Chaudhry அவரது மரணத்தின் இரண்டாம் மாத நினைவு
ஜூன்,13,2012. ஏப்ரல் மாதம் 13ம் தேதி இறையடி சேர்ந்த பாகிஸ்தான் விமானப் படையின் உயர் அதிகாரி Cecil Chaudhry அவரது மரணத்தின் இரண்டாம் மாத நினைவு லாகூரில் கடைபிடிக்கப்பட்டது.
கராச்சி பேராயர் Joseph Coutts தலைமையில் நடைபெற்ற ஒரு கூட்டுத் திருப்பலியில் ஆயர்கள், குருக்கள், துறவியர், பொதுநிலையினர் பலரும் கலந்து கொண்டனர்.
'ஒரே நாடு, ஒரே மக்கள்' என்ற கருத்துடன் கிறிஸ்துவர்களையும் இஸ்லாமியரையும் இணைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருந்த கத்தோலிக்க இராணுவ வீரர் Chaudhry, பாகிஸ்தான் மக்கள் அனைவருக்கும் ஒரு எடுத்துக்காட்டாக இருந்தார் என்று கரித்தாஸ் அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான அருள்தந்தை Bonnie Mendes கூறினார்.
பாகிஸ்தானில் அடிப்படைவாத இஸ்லாமியக் குழுவினரால் கொல்லப்பட்ட அமைச்சர் Shahbaz Bhatti உருவாக்கிய அனைத்து பாகிஸ்தான் சிறுபான்மையினர் இயக்கம் என்ற அமைப்பில் அமைச்சருடன் இணைந்து பணி புரிந்த Cecil Chaudhry, மாற்றுத் திறனுடைய குழந்தைகளுக்காகவும் பணிகள் பல புரிந்தார் என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
8. டீசல் புகையைச் சுவாசிப்பதால், நுரையீரல் புற்றுநோய் உண்டாகும் - WHO
ஜூன்,13,2012. டீசல் இயந்திரங்களும் வாகனங்களும் வெளிவிடும் புகையைச் சுவாசிப்பதால், நுரையீரல் புற்றுநோய் உண்டாகும் என்று WHO உலக நலவாழ்வு நிறுவனம் கூறியுள்ளது.
சுரங்கத் தொழிலாளிகள், இரயில் துறைப் பணியாளர்கள், வாகன ஓட்டுனர்கள் மத்தியில் மேற்கொண்ட ஓர் ஆய்வின் முடிவில் WHO இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
டீசல் புகையில் உள்ள carcinogens என்ற வேதிப்பொருள் புற்று நோயை உண்டாக்கும் சக்திபெற்றது என்று இந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.
உலகெங்கும் டீசல் புகைக்கு, மக்கள் பெரும்பாலான நேரங்கள் உள்ளாக்கப்படுவதால், இந்த ஆபத்தைத் தவிர்ப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று இந்த ஆய்வுக் குழுவின் தலைவராகப் பணி புரிந்த Christopher Portier கூறினார்.
உலக
நலவாழ்வு நிறுவனத்தின் இந்த ஆய்வறிக்கையை கவனத்தில் கொண்டு உரிய
நடவடிக்கைகள் எடுக்கப்போவதாக பிரித்தானிய நலத்துறை அறிவித்துள்ளது.
டீசல் புகையால் நுரையீரல் புற்று நோய் உருவாகும் ஆபத்து உள்ளது என்றாலும், புகை பிடிப்பதால் நுரையீரல் புற்று நோய் உருவாகும் ஆபத்து இன்னும் பல மடங்கு அதிகம் என்று புற்றுநோய் மருத்துவர் Lesley Walker எச்சரிக்கை விடுத்தார்.
No comments:
Post a Comment