Friday, 1 June 2012

Catholic News in Tamil - 28/05/12

1. ஒன்றிப்பு என்பது இறைவனின் கொடையாகவே இருக்க முடியும் என்கிறார் திருத்தந்தை

2. திருத்தந்தையின் அல்லேலூயா வாழ்த்தொலி உரை

3. மன்னார் ஆயருக்கு ஆதரவாக மக்கள் பேரணி

4. ஆயுதங்களைக் களைவது அனைத்துத் தரப்பினரின் தார்மீகக் கடமை - சிரியாவின் திருப்பீடத் தூதர் பேராயர் மாரியோ செனாரி

5. திருவனந்தபுரம் அன்னைமரியாவின் பேராலயத்தில் அவசர கால மருத்துவ உதவிகள் செய்வோருக்குப் பாராட்டு விழா

6. திருமண வாழ்வில் பல ஆண்டுகள் இணைந்து வாழும் 530 தம்பதியருக்கு வெஸ்ட் மின்ஸ்டர் பேராயலயத்தில் பாராட்டு விழா

7. சூரிய ஒளி சக்தி மூலம் மின்சாரம் தயாரித்து ஜெர்மன் உலகச் சாதனை

------------------------------------------------------------------------------------------------------

1. ஒன்றிப்பு என்பது இறைவனின் கொடையாகவே இருக்க முடியும் என்கிறார் திருத்தந்தை

மே,28,2012. புதிய நாவையும் புதிய  இதயத்தையும், தகவல் தொடர்புக்கான ஆற்றலையும் கொடுக்கும் இறைவனின் கொடையாகவே ஒன்றிப்பு என்பது நிலைத்திருக்க முடியும் என்றார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
பெந்தகோஸ்தே திருவிழாவையொட்டி உரோம் நகர் தூய பேதுரு பேராலய வளாகத்தில் ஞாயிறு காலை நிறைவேற்றிய திருப்பலியில் மறையுரை வழங்கிய திருத்தந்தை, பெந்தகோஸ்தே என்பது மனித குல ஒன்றிப்பு, புரிந்துகொள்ளுதல் மற்றும் பகிர்வின் விழா என்றார்.
தகவல் தொடர்புத் துறையின் வளர்ச்சியினால் நாம் ஒருவருக்கொருவர் மிக நெருக்கமாக வந்துள்ளபோதிலும், மக்களிடையேயான புரிந்து கொள்ளுதலும் பகிர்தலும் ஆழம் குறைந்ததாகவும், சிரமமானதாகவும் மாறியுள்ளது குறித்த கவலையையும் வெளியிட்டார் பாப்பிறை.
இன்றைய உலகில் மக்கள் தங்கள் சுயநலனுக்காகவே உழைத்து தங்கள் உலகத்திலேயே முடங்கி விடுவதைக் காணமுடிகிறது என்ற பாப்பிறை,  பழைய ஏற்பாட்டு நூலில் காணப்படும் பாபேல் நிகழ்வையும் சுட்டிக்காட்டி, கடவுளுக்கு எதிராகச் செல்ல விரும்பி செயல்பட்ட மக்கள், அடிப்படை மனிதக்கூறுகளை இழந்துதங்களுக்குள்ளேயே ஒருவர் மற்றவருக்கு எதிராகச் சென்றதை பின்னர் உணர்ந்தனர் என்றார்.
இன்றைய நவீன தொழில்நுட்பங்களின், குறிப்பாக, தகவ‌ல் தொடர்புத்துறையின் வளர்ச்சி, மக்களிடையே விளங்க வேண்டிய புரிந்துகொள்ளும் தன்மையை அதிகரித்துள்ளதா என்ற கேள்வியையும் முன்வைத்தார் பாப்பிறை 16ம் பெனடிக்ட்.
பாபேல் நகர் நிகழ்வின்போது புரிந்துகோள்ளமுடியாத மொழியில் பேசி குழப்பம் விளைந்ததையும், பெந்தகோஸ்தே நாளில் மக்கள் தங்கள் தங்கள் மொழிகளில் புரிந்துகொண்டதையும் எடுத்துக்கூறி இரு நிகழ்வுகளுக்கும் இடையே இருந்த வேற்றுமைகளை விளக்கிக் கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

2. திருத்தந்தையின் அல்லேலூயா வாழ்த்தொலி உரை. 

மே,28,2012. இறைவாக்கினர்கள் வழியாகப் பேசிய தூய ஆவி, இன்றும் உண்மைக்கானப் பாதையில் செயல்படுவோருக்கு, புரிந்துகொள்ளுதல் மற்றும் அறிவின் உண்மையானப் பாதையை காட்டுபவராகச் செயல்படுகிறார் என இஞ்ஞாயிறு அல்லேலூயா வாழ்த்தொலி உரையில் கூறினார் திருத்ததை 16ம் பெனடிக்ட்.
வரும் அக்டோபர் மாதம் ஏழாம் தேதி உலக ஆயர் பேரவையின்  கூட்டத்துவக்கத்தின்போது, புனிதர்கள் அவிலாவின் ஜான் மற்றும் Bingenன் Hildegard ஆகியோரை திருஅவையின் மறைவல்லுனர்களாக அறிவிக்க உள்ளதாகவும் தெரிவித்தார் திருத்தந்தை.
வெவ்வேறு காலக்கட்டத்திலும் வெவ்வேறு கலாச்சாரப் பின்னணியிலும் வாழ்ந்த இப்புனிதர்கள், விசுவாசத்தின் மிக உன்னத சாட்சிகளாக விளங்கினார்கள் என்ற பாப்பிறை, இறைவெளிப்பாடுகளைப் புரிந்துகொண்டு இவ்வுலகோடு அறிவுப்பூர்வ உரையாடலை நிகழ்த்தியவர்கள் இவர்கள் எனவும் எடுத்துரைத்தார்.
விசுவாச ஆண்டு துவக்கப்பட உள்ளதற்கு முந்தைய நாள் இடம்பெறும் இந்த உலக ஆயர் மன்றக் கூட்டம், புதிய நற்செய்தி அறிவிப்புத் திட்டங்கள் குறித்து விவாதிக்க உள்ள வேளையில், புனிதர்கள் அவிலாவின் ஜான் மற்றும் Bingenன் Hildegard ஆகியோரை திருஅவையின் மறைவல்லுனர்களாக அறிவிக்க உள்ளது முக்கியத்துவம் நிறைந்த ஒன்றே எனவும் ஞாயிறு அல்லேலூயா வாழ்த்தொலி உரையின்போது எடுத்துரைத்தார் திருத்தந்தை.

3. மன்னார் ஆயருக்கு ஆதரவாக மக்கள் பேரணி

மே,28,2012. தமிழ் மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருவதால் இலங்கை அரசு அதிகாரிகளின் கண்டனங்களுக்கு உள்ளாகி வரும் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு குழுக்கள் அமைதி செப வழிபாடு ஒன்றை இஞ்ஞாயிறன்று நடத்தின.  
மன்னார் மாவட்ட மக்கள் மத பேதங்களை மறந்து ஒன்றுபட்டு தமது எதிர்ப்புக் குரலை தெரிவித்துள்ளதுடன், பல்வேறு சமுக அமைப்புக்களும், ஆயருக்கு எதிரான அரசின் செயல்பாடுகளைக் கடுமையாக கண்டித்துள்ளன.
ஞாயிறு காலை மன்னாரில் அரசு அதிகாரிகளுக்கு எதிராக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில், கிறிஸ்தவ, இந்து மதங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு அரசு செயல்பாட்டிற்கு எதிரான வாசக அட்டைகளை ஏந்தியவாறு கண்டன ஆர்ப்பாட்டத்தில் இடம்பெற்றிருந்தனர்.
காலை 10 மணிக்கு புனித செபஸ்திரியார் தேவாலயத்தில் ஆரம்பமாகி பிற்பகல் 1 மணிவரையும் நடைபெற்ற இந்த அமைதி செப வழிபாடு மற்றும் ஊர்வலத்தின்போது, சமுக அமைப்புகளும் கிறிஸ்தவ மதத்தலைவர்களும், தமிழ் மக்களின் உரிமைக்குரலை நசுக்க விடமாட்டோம் எனவும் அறிவித்தனர்.

4. ஆயுதங்களைக் களைவது அனைத்துத் தரப்பினரின் தார்மீகக் கடமை - சிரியாவின் திருப்பீடத் தூதர் பேராயர் மாரியோ செனாரி

மே,28,2012. கிறிஸ்தவ, இஸ்லாமிய மத நம்பிக்கை உள்ள அனைவரும் செபங்கள் வழியாகவும், உண்ணாநோன்புகள் வழியாகவும் சிரியா நாட்டின் அமைதிக்காக வேண்டுதல்களை எழுப்பும்படி அந்நாட்டின் திருப்பீடத் தூதர் பேராயர் மாரியோ செனாரி (Mario Zenari) கூறினார்.
சிரியாவின் இராணுவம் அண்மையில் மேற்கொண்ட தாக்குதல்களில் குழந்தைகள், அப்பாவி மக்கள் உட்பட 88 பேர் கொல்லப்பட்ட செய்தியைக் கேட்ட பேராயர் செனாரி ஆயுத வன்முறைகளைக் களையும்படி வேண்டுகோள் விடுத்தார்.
அரசு தரப்பிலும், வன்முறை கும்பல்கள் தரப்பிலும் பல்வேறு ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவதால், இந்த வன்முறைகளில் இறப்பது சாதாரண பொதுமக்களே என்று பேராயர் செனாரி பிதேஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் குறிப்பிட்டு, ஆயுதங்களைக் களைவது அனைத்துத் தரப்பினரின் தார்மீகக் கடமை என்பதை வலியுறுத்தினார்.
படுகொலைகள் குறித்து ஒவ்வொரு நாளும் வெளியாகும் செய்திகளைக் கேட்டு, மக்கள் நம்பிக்கையற்ற நிலையில், குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர் என்று தமாஸ்கு நகர் புனித பவுல் திருத்தலத்தின் நிர்வாகியான அருள்தந்தை Romualdo Fernandez கூறினார்.

5. திருவனந்தபுரம் அன்னைமரியாவின் பேராலயத்தில் அவசர கால மருத்துவ உதவிகள் செய்வோருக்குப் பாராட்டு விழா

மே,28,2012. அவசரகால மருத்துவ உதவிகளில் ஈடுபடுவோர், மனித உயிர்கள் மீது நாம் அனைவரும் கொண்டிருக்க வேண்டிய மதிப்பை நமக்குச் சொல்லித் தருகின்றனர் என்று கத்தோலிக்க சீரோ மலங்கராத் திருஅவையின் தலைமைப் பேராயர் Baselios Cleemis கூறினார்.
திருவனந்தபுரத்தில் அமைதியின் அரசியான அன்னைமரியாவின் பேராலயத்தில் அவசர கால மருத்துவ உதவிகள் செய்வோரைப் பாராட்டும் விழா இச்சனிக்கிழமையன்று நடத்தப்பட்டது. அவ்விழாவில் உரையாற்றிய பேராயர் Baselios Cleemis, இப்பணியில் ஈடுபடுவோர், மத வேறுபாடுகள் ஏதுமின்றி உழைத்தாலும், மக்கள் இன்னும் இப்பணியாளர்களைச் சரிவர புரிந்து கொள்ளவில்லை என்று எடுத்துரைத்தார்.
ஈராண்டுகளுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட இந்தச் சேவையின் மூலம் இதுவரை 42,000க்கும் அதிகமான நேரங்களில் மக்களுக்கு மருத்துவ உதவிகள் கிடைத்துள்ளன என்று UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
அன்னை மரியா பேராலயம் இந்தப் பணியாளர்களை பாராட்டும் விழாவை ஏற்பாடு செய்திருப்பது, கத்தோலிக்கத் திருஅவை உயிர்கள் மீது கொண்டுள்ள மதிப்பைச் சுட்டிக்காட்டுகிறது என்று இவ்விழாவில் கலந்து கொண்ட சட்டமன்ற உறுப்பினர் முரளீதரன் கூறினார்.

6. திருமண வாழ்வில் பல ஆண்டுகள் தொடர்ந்து இணைந்து வாழும் 530 தம்பதியருக்கு வெஸ்ட் மின்ஸ்டர் பேராயலயத்தில் பாராட்டு விழா

மே,28,2012. திருமண வாழ்வைக் குறித்து நீங்கள் அளிக்கும் சாட்சி இன்றைய உலகிற்கு மிகவும் தேவையான ஒரு பாடம், இருந்தாலும் இவ்வுலகம் இதனைப் புறந்தள்ளி வருகிறது என்று இங்கிலாந்தின் வெஸ்ட்மின்ஸ்டர் பேராயர் வின்சென்ட் நிக்கோல்ஸ் கூறினார்.
திருமண வாழ்வில் பத்தாண்டுகள் முதல் அறுபது ஆண்டுகள் வரை தொடர்ந்து இணைந்து வாழும் 530 தம்பதியருக்கு வெஸ்ட் மின்ஸ்டர் பேராயலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாராட்டு விழாத் திருப்பலியை நிறைவேற்றிய பேராயர் நிக்கோல்ஸ், தன் மறையுரையில் இவ்வாறு கூறினார்.
நமது அன்பு உறவுகள் வளர்வதற்கு நீண்ட காலம் தேவை என்பதற்கும், இறைவனின் அன்பு நமது வாழ்வில் நிலையானது என்பதற்கும் நீங்கள் கொண்டுள்ள நீடித்த உறவு சான்று பகர்கிறது என்று பேராயர் நிக்கோல்ஸ் குழுமியிருந்த தம்பதியரைப் பாராட்டிப் பேசினார்.
இஞ்ஞாயிறன்று நாம் கொண்டாடும் தூய ஆவியானவரின் திருநாள் உலகில் அன்பை மீண்டும் வளர்த்து உலகின் முகத்தைப் புதுப்பிக்க வேண்டும் என்ற செபத்துடன் தன் மறையுரையை நிறைவு செய்தார் பேராயர் நிக்கோல்ஸ்.

7. சூரிய ஒளி சக்தி மூலம் மின்சாரம் தயாரித்து ஜெர்மன் உலகச் சாதனை

மே,28,2012. சூரிய ஒளி சக்தி மூலம் மணிக்கு 22 ஜிகா வாட் மின் உற்பத்தி செய்து ஜெர்மன் நாடு உலகச் சாதனை படைத்துள்ளது. இது 20 அணு மின் நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கு ஈடு ஆகும்.
ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம், சுனாமி போன்ற பேரழிவிற்கு பின், தனது அணு மின் திட்டத்தைக் கைவிட்டு,  சூரிய ஒளி மின் சக்தி தொழிலில் ஈடுபட்டுள்ளதன் மூலம் மின் தேவையினை பூர்த்தி செய்கிறது ஜெர்மனி.
இந்த ஆண்டு ஜெர்மனி, முதல்கட்டமாக 7.5 ஜிகாவாட் மின் உற்பத்தி செய்யும் சூரிய ஒளி மின் உற்பத்தி மையத்தினை நிறுவி, அதில் குறிப்பிட்ட அளவு முன்னேற்றம் ஏற்படவே, ஒரு மணிக்கு 22 ஜிகாவாட் மின் உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது.
இது 20 அணு மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின் உற்பத்திக்கு சமம் என கணக்‌கிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தற்போது நாட்டின் 50 விழுக்காடு மின்தேவையினை சூரிய ஒளி சக்தி மூலம் நிறைவு செய்து ‌ஜெர்மனி சாதனை படைத்துள்ளது.
 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...