Friday 29 June 2012

Catholic News in Tamil - 29/06/12

1. புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா திருப்பலியில் திருத்தந்தை வழங்கிய மறையுரை

2. இரு இந்தியர்கள் உட்பட 44 பேராயர்களுக்குத் திருத்தந்தை Pallium வழங்கினார்

3. புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழாவன்று திருத்தந்தை வழங்கிய மூவேளைச் செப உரை

4. மறைசாட்சி தேவசகாயம்பிள்ளை அவர்களை அருளாளர் நிலைக்கு உயர்த்துவதற்கான ஆவணங்களைத் திருத்தந்தை அங்கீகரித்துள்ளார்

5. மதத்தின் அடிப்படையில் துன்புறுவோரைக் காப்பது திருஅவையின் கடமை - அமெரிக்கப் பேராயர் William Lori

6. நாட்டுக்கும் மக்களுக்கும் நல்ல பணியாற்றியுள்ள ஒலிம்பிக் வீரர்களைப் பாராட்டும் வகையில் Eric Liddell விருது

7. சித்ரவதைக்கு உள்ளானவர்களுக்கு ஆதரவு வழங்குவதற்கு ஐ.நா. அழைப்பு

8. உலகில் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு செயல்திட்டம் தேவை ஐ.நா.

------------------------------------------------------------------------------------------------------

1. புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா திருப்பலியில் திருத்தந்தை வழங்கிய மறையுரை

ஜூன்,29,2012. திருஅவையின் இரு பெரும் தூண்களாகக் கருதப்படும் புனிதர்கள் பேதுருவும், பவுலும் கிறிஸ்தவ பாரம்பரியத்தில் நற்செய்தியின் முழு வடிவமாக, இணைபிரியாத இருவராகக் கருதப்படுகின்றனர் என்று திருத்தந்தை 16 ம் பெனடிக்ட் கூறினார்.
ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 29ம் தேதி கொண்டாடப்படும் புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழாவின்போது, பேராயர்களாக நியமனம் பெற்றவர்களுக்கு 'Pallium' என்ற கழுத்துப்பட்டைகளைத் திருத்தந்தை வழங்குவது வழக்கம்.
இவ்வெள்ளியன்று கொண்டாடப்பட்ட புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழாவின்போது, கடந்த ஓராண்டு நியமனம் பெற்ற 44 பேராயர்களுக்கு, புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் 'Pallium' வழங்கும் திருப்பலியைத் திருத்தந்தை நிகழ்த்தியபோது வழங்கிய மறையுரையில் இவ்வாறு கூறினார்.
புனிதர்கள் பேதுருவும், பவுலும் இணைபிரியாதவர்களாகக் கருதப்படுவதைக் குறித்து பேசியபோது, விவிலியத்தில் முதன் முதலாகக் கூறப்பட்டுள்ள காயின் ஆபேல் சகோதரர்களைக் குறித்தும் திருத்தந்தை பேசினார்.
காயினும், ஆபேலும் உடன்பிறந்தவர்களாய் இருந்தாலும், பாவம் அவர்களை வேறுபடுத்தியது, இதற்கு மாறாக, பேதுருவும், பவுலும் பல வழிகளில் வேறுபட்டவர்களாய் இருந்தாலும் கிறிஸ்துவைப் பின்பற்றியதால் இணைபிரியாமல் இணைக்கப்பட்டனர் என்று திருத்தந்தை சுட்டிக்காட்டினார்.
இப்பெருநாளன்று வழங்கப்பட்டுள்ள நற்செய்தியில், கிறிஸ்துவால் 'பாறை' என்றும் 'சாத்தான்' என்றும் பேதுரு அழைக்கப்பட்டதைக் குறித்து தன் சிந்தனைகளைப் பகிர்ந்த திருத்தந்தை, இயேசு மெசியா என்ற உண்மையை, இறைவனின் தூண்டுதலால் பேதுரு கூறியபோது, அவரைப் பாறை என்றும், மனித அறிவைக்கொண்டு இயேசுவின் பாடுகள் நிகழக்கூடாது என்று பேதுரு சொன்னபோது அவரைச் 'சாத்தான்' என்றும் இயேசு அழைக்கிறார் என்ற தன் எண்ணங்களைக் கூறினார்.
பாறை, உறுதியான அடித்தளமாக அமைய முடியும் என்றாலும், அது நாம் இலக்கு நோக்கிச் செல்லும் பாதையின் நடுவில் கிடந்தால் நம்மைத் தடுமாறி விழச்செய்யும் தடைக்கல்லாகும் என்ற அழகிய உருவகத்தையும் தன் மறையுரையில் திருத்தந்தை பயன்படுத்தினார்.
இத்திருப்பலியில் இணைந்துள்ள பல்வேறு ஆர்த்தடாக்ஸ் சபைகளின் பிரதிநிதிகளைக் குறித்தும், வத்திக்கான் பாடகர் குழுவுடன் திருப்பலி பாடல்களை இணைந்து பாடும் Westminster மடத்தின் பாடகர் குழுவைக் குறித்தும் தன் மறையுரையின் துவக்கத்தில் பேசியத் திருத்தந்தை, பல்வேறு சபைகளும் இணைந்து வந்திருக்கும் இந்தப் பெருவிழாவின் புனிதர்கள் கிறிஸ்தவ சமுதாயத்தை இன்னும் ஆழமாய் இணைக்கவேண்டும் என்ற தன் ஆவலை வெளியிட்டார்.
தன் மறையுரையின் இறுதியில், பேராயர்களுக்குத் தான் வழங்கும் 'Pallium' என்ற கழுத்துப்பட்டை, கிறிஸ்து என்ற மூலைக்கல் மீதும், பேதுரு என்ற பாறையின் மீதும் கட்டப்பட்டுள்ள திருஅவையை பேராயர்கள் கட்டிக் காக்கவேண்டும் என்பதை நினைவுறுத்தும் ஓர் அடையாளம் என்றுரைத்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.


2. இரு இந்தியர்கள் உட்பட 44 பேராயர்களுக்குத் திருத்தந்தை Pallium வழங்கினார்

ஜூன்,29,2012. ஜூன் 29 இவ்வெள்ளியன்று கொண்டாடப்பட்ட புனிதர்கள் பேதுரு பவுல் பெருவிழாவன்று காலை புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் நிகழ்ந்த ஆடம்பர கூட்டுத் திருப்பலியில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் 44 பேராயர்களுக்கு Pallium என்ற கழுத்துப் பட்டையை அணிவித்தார். இன்னும் இரு பேராயர்கள் காலம் தாழ்த்தி இதனைப் பெறுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருத்தந்தையுடன் கொண்டிருக்கும் தனிப்பட்ட உறவுக்கு அடையாளமாய் விளங்கும் இந்தக் கழுத்துப் பட்டையைப் பெறும் பேராயர்களில் 22 பேர் அமெரிக்க நாடுகளையும், 9 பேர் ஆசியாவையும், 8 பேர் ஐரோப்பாவையும் 4 பேர் ஆப்ரிக்காவையும், 3 பேர் ஒசியானாப் பகுதியையும் சார்ந்தவர்கள்.
நாடுகள் என்ற வரிசையில், பிரேசில் நாட்டிலிருந்து 7 பேரும், அமெரிக்க ஐக்கிய நாடு, கனடா, இவ்விரு நாடுகளிலிருந்து 4 பேரும் இக்குழுவில் அடங்குவர்.
ஆசியாவின் 9 பேராயர்களில் நால்வர் பிலிப்பின்ஸ் நாட்டிலிருந்தும், இருவர் இந்தியாவில் இருந்தும், பாகிஸ்தான், பங்களாதேஷ், கொரியாவிலிருந்து ஒரு பேராயரும் Pallium பெற்றனர்.
இந்தியாவின் குவஹாத்தி பேராயர் John Moolachira அவர்களும், கொல்கத்தா பேராயர் Thomas D’Souza அவர்களும் இவ்வெள்ளியன்று திருத்தந்தையின் கரங்களிலிருந்து Pallium என்ற கழுத்துப் பட்டைகளைப் பெற்றனர்.


3. புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழாவன்று திருத்தந்தை வழங்கிய மூவேளைச் செப உரை

ஜூன்,29,2012. கலிலேயக் கடல் பகுதியில் வாழ்ந்த ஓர் எளிய மீன்பிடித் தொழிலாளரும், புறவினத்தாரின் திருத்தூதரும் உரோம் நகரின் வரலாற்றில் ஆழமாய் பதிந்த இரு பெரும் நாயகர்கள் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
ஜூன் 29, இவ்வெள்ளியன்று கொண்டாடப்பட்ட புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழாவன்று புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான விசுவாசிகளுக்கு நண்பகல் மூவேளைச் செப உரை வழங்கியத் திருத்தந்தை, இவ்விருப் புனிதர்களும் திருஅவையின் ஒன்றிப்புக்கு மாபெரும் அடையாளங்கள் என்று கூறினார்.
புனித பேதுருவின் தியாகத்திற்கு ஒரு சிறந்த நினைவுச் சின்னமாக இப்புனித பேராலய பசிலிக்காவும், நாம் நின்றுகொண்டிருக்கும் சதுக்கமும் விளங்குகிறது, அதேபோல், புனித பவுலின் வாழ்வுக்கும், தியாகத்திற்கும் சாட்சியாக உரோம் நகரின் புறப்பகுதியில் அமைந்துள்ள புனித பவுல் பசிலிக்கா அமைந்துள்ளது என்பதைத் திருத்தந்தை தன் உரையில் மகிழ்வுடன் சுட்டிக்காட்டினார்.
இவ்விரு புனிதர்களின் நினைவுகள் நினைவுச் சின்னங்களில் மட்டும் இருந்துவிடாமல், நமது மனங்களிலும் நிலைத்திருக்கவேண்டும் என்றும், அவர்கள் காட்டிய நற்செய்தி வழியில் நாமும் நடக்க அவர்களின் பரிந்துரை நமக்குத் தேவை எனவும் திருத்தந்தை கூறினார்.
மூவேளை செப உரையின் இறுதியில் இப்பெருவிழாவன்று Pallium என்ற கழுத்துப்பட்டையைப் பெற்ற பேராயர்களைச் சிறப்பாக வாழ்த்திய திருத்தந்தை, இப்பேராயர்களுடன் இணைந்து இவ்விழாவில் பங்கேற்க பல நாடுகளிலிருந்தும் வந்திருந்த விசுவாசிகளையும் சிறப்பாக வாழ்த்தினார். இறுதியில் அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கினார்.


4. மறைசாட்சி தேவசகாயம்பிள்ளை அவர்களை அருளாளர் நிலைக்கு உயர்த்துவதற்கான ஆவணங்களைத் திருத்தந்தை அங்கீகரித்துள்ளார்

ஜூன்29,2012. தமிழகத்தின் கோட்டாறு மறைமாவட்டத்தில் கிறிஸ்தவ விசுவாசத்திற்காக 1752ம் ஆண்டு கொடூரமாய்க் கொல்லப்பட்ட பொதுநிலை விசுவாசி தேவசகாயம்பிள்ளை உட்பட நான்கு மறைசாட்சிகளின் வீரத்துவமான வாழ்க்கை வரலாறு குறித்த விபரங்களை ஏற்றுக்கொண்டார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட.
திருஅவையில் புனிதர்கள் மற்றும் அருளாளர் நிலைக்கு உயர்த்துவதற்கானத் திருப்பேராயத் தலைவர் கர்தினால் ஆஞ்சலோ அமாத்தோ இவ்வியாழனன்று திருப்பீடத்தில் திருத்தந்தையைச் சந்தித்து, தமிழரான தேவசகாயம்பிள்ளை உள்ளிட்ட நான்கு மறைசாட்சிகள், அமெரிக்க ஐக்கிய நாட்டின் Rochesterன் முன்னாள் பேராயர் ஃபுல்ட்டன் ஷீன் உட்பட 4 இறையடியார்களின் வீரத்துவமான புண்ணியங்கள், இன்னும், புனித டாரதி சகோதரிகள் சபையைத் தொடங்கிய இத்தாலிய மறைமாவட்ட குரு லூக்கா பாசி, பிரேசில் நாட்டு பொதுநிலை விசுவாசி பிரான்செஸ்கா தெ பவுலா தெ ஹேசுஸ் ஆகியோரின் பரிந்துரைகளால் நடைபெற்ற புதுமைகள் ஆகிய விபரங்களைச் சமர்ப்பித்தார். 
1712ம் ஆண்டு முதல் 1752ம் ஆண்டு வரை வாழ்ந்த இறையடியார் தேவசகாயம்பிள்ளை, திருவிதாங்கூர் பேரரசர் மார்த்தாண்ட வர்மாவின் நீதிமன்றத்தில் அதிகாரியாகப் பணியாற்றியவர். இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவத்திற்கு மனம் மாறிய தேவசகாயம்பிள்ளை, டச்சு கப்பற்படைத் தளபதி Eustachius De Lannoy என்பவரின் தூண்டுதலால் கத்தோலிக்கத்தைத் தழுவி மற்றவர்களும் திருமுழுக்குப் பெறுவதற்குத் தூண்டினார். தேவசகாயம்பிள்ளை கிறிஸ்தவரான பின்னர் வேறுபாடின்றி எல்லாச் சாதியினரோடும் சமூகத்தின் எல்லாத் தரப்பினரோடும் நன்றாகப் பழகியதால், பிராமணர்கள் உட்பட உயர் சாதியினரின் வெறுப்பைப் பெற்றார். அரசருக்கும் இந்து தெய்வங்களுக்கும் இவர் அவமரியாதை செய்கிறார் எனக் குற்றம் சாட்டப்பட்டார். இதனால் 1749ம் ஆண்டு பிப்ரவரி 23ம் தேதி திருவிதாங்கூர் மன்னரின் ஆணைப்படிக் கைது செய்யப்பட்டு பல கொடிய சித்ரவதைகளுக்கு உள்ளாகி 1752ம் ஆண்டு சனவரி 14 அல்லது 15ம் தேதியன்று படைவீரர்களால் 5 கனத்த ஈயக் குண்டுகளால் சுடப்பட்டு கொல்லப்பட்டார். இவர் அடக்கம் செய்யப்பட்டுள்ள கல்லறை, கோட்டாறு மறைமாவட்டப் பேராலயமான புனித பிரான்சிஸ் சவேரியார் பேராலயத்தில் உள்ளது.  
இந்திய மண்ணில் பிறந்த முதல் மறைசாட்சியான இறையடியார் தேவசகாயம்பிள்ளை இறந்து அடக்கம் செய்யப்பட்ட நாள்முதல், இவரது கல்லறையை, மதம், இனம், மொழி என்ற பாகுபாடின்றி ஆயிரக்கணக்கான மக்கள் தரிசித்து வருகின்றனர்.


5. மதத்தின் அடிப்படையில் துன்புறுவோரைக் காப்பது திருஅவையின் கடமை - அமெரிக்கப் பேராயர் William Lori

ஜூன்,29,2012. மத உரிமையைப் பாதுகாப்பது ஒவ்வொரு நாட்டின் நலனுக்கும் அவசியம் என்றும், மதத்தின் அடிப்படையில் துன்புறுவோரைக் காப்பது திருஅவையின் கடமை என்றும் அமெரிக்கப் பேராயர் ஒருவர் கூறினார்.
மத உரிமைகளின் கண்காணிப்பு என்று புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஓர் அமைப்பின் முதல் கூட்டம் உரோமையில் இவ்வியாழனன்று நடத்தப்பட்டது. அமெரிக்க ஆயர் பேரவையின் மத உரிமைகள் பணிக்குழுவின் தலைவரான பேராயர் William Lori இக்கூட்டத்தில் உரையாற்றியபோது இவ்வாறு கூறினார்.
அமெரிக்க அரசு தற்போது வலியுறுத்தி வரும் நலக்காப்பீட்டுத் திட்டம் மத உரிமைகளுக்கும், மனசாட்சிக்கும் எதிராக அமைந்துள்ளது என்பதை சுட்டிக் காட்டிய பேராயர் Lori, பல்வேறு நாடுகளிலும் மத உரிமைகள் பல்வேறு வழிகளில் பாதிக்கப்பட்டுள்ளது என்பதையும் எடுத்துரைத்தார்.
கடவுள் மீது நம்பிக்கை கொண்டுள்ளோம் என்ற விருதுவாக்குடன் உருவாக்கப்பட்ட அமெரிக்க அரசியல் சட்டங்கள் தற்போது கடவுளுக்கும், மத நம்பிக்கைக்கும் எதிராக இருப்பது நாட்டின் நலனுக்கு ஆபத்தை உருவாக்கியிருப்பதுபோல், பல நாடுகளிலும் மத உரிமைகள் மீறப்படுவது அடிப்படை மனித வாழ்வுக்கு பெரும் ஆபத்து என்பதை பேராயர் வலியுறுத்திக் கூறினார்.


6. நாட்டுக்கும் மக்களுக்கும் நற்பணியாற்றியுள்ள ஒலிம்பிக் வீரர்களைப் பாராட்டும் வகையில் Eric Liddell விருது

ஜூன்,29,2012. ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்களை வென்றவர்களில் தங்கள் நாட்டுக்கும், சமுதாயத்திற்கும் செய்துள்ள பல்வேறு தொண்டுகளின் அடிப்படையில் அவர்களுக்குச் சிறப்புப் பரிசொன்று வழங்கப்படும் என்று கிறிஸ்தவ அமைப்பு ஒன்று அறிவித்துள்ளது.
வருகிற ஜூலை மாதம் இலண்டன் நகரில் ஆரம்பமாகவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளையொட்டி, கத்தோலிக்கத் திருஅவையும், ஏனைய கிறிஸ்தவ அமைப்புக்களும் இணைந்து 'தங்கத்தையும் தாண்டி' (More Than Gold) என்ற கருத்துடன் சமுதாயச் சிந்தனை மிகுந்த நிகழ்வுகளை நடத்தி வருகின்றன.
இந்நிகழ்வுகளின் ஓர் அங்கமாக, கடந்த ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்கள் பெற்ற வீரர்களில் தங்கள் நாட்டுக்கும் மக்களுக்கும் நல்ல பணியாற்றியுள்ள வீரர்களைப் பாராட்டும் வகையில் Eric Liddell விருது ஒன்று வழங்கப்பட உள்ளது.
1924 ம் ஆண்டு பாரிஸ் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் அப்போதைய 100 மீட்டர் பந்தயத்தின் தலைசிறந்த வீரர் Eric Liddell, அப்பந்தயம் ஞாயிறன்று நடத்தப்பட்டதால், அதில் கலந்து கொள்ள மறுத்துவிட்டார். அதற்குப் பதிலாக, தனக்குப் பழக்கமில்லாத 400 மீட்டர் பந்தயம் மற்றொரு நாளில் நடைபெற்றதால், அதில் கலந்து கொண்டு தங்கப் பதக்கமும் பெற்றார்.
தன் மதக் கோட்பாட்டுக்காக தனக்கு கிடைக்கவிருந்த உலகப் புகழையும் பெற மறுத்த Eric Liddell நினைவாக இந்த விருது வழங்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


7. சித்ரவதைக்கு உள்ளானவர்களுக்கு ஆதரவு வழங்குவதற்கு ஐ.நா. அழைப்பு

ஜூன் 29,2012. சித்ரவதைக்கு உள்ளானவர்களுக்கு ஆதரவு வழங்குவதற்கும் சித்ரவதைத் தண்டனைகளை நிறுத்துவதற்கும்  ஐயத்திற்கு இடமளிக்காத தெளிவானத் திட்டங்களை வகுக்க வேண்டும் என்று ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் உலக நாடுகளைக் கேட்டுக் கொண்டார்.
மனிதத்தைச் சிதைக்கும் இந்தச் சித்ரவதையைத் தடைசெய்யும் அனைத்துலக ஒப்பந்தம் அமலுக்கு வந்து 25 ஆண்டுகள் ஆகியிருந்தாலும், பெண்களும் ஆண்களும் சிறாரும் தங்களது மனித மாண்பை இழக்கும் சித்ரவதைகளையும் முறைகேடாக நடத்தப்படுவதையும் ஒவ்வொரு நாளும் எதிர்கொள்கிறார்கள் என்றும் பான் கி மூன் கூறினார்.
இந்த அனைத்துலக உடன்பாடானது 1987ம் ஆண்டு ஜூன் 26ம் நாளன்று அமலுக்கு வந்தது. 1997ம் ஆண்டில் இந்தியா இந்த உடன்பாட்டில் கையெழுத்திட்டிருந்தாலும் அதனை அமல்படுத்துவது தொடர்பாக இன்னும் அது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை என்று கூறப்படுகின்றது. 
ஆண்டுதோறும ஜூன் 26ம் நாளன்று சித்ரவதைக்கு உள்ளானோருக்கு ஆதரவு வழங்கும் அனைத்துலக தினம் கடைப்பிடிக்கப்படுகின்றது.


8. உலகில் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு செயல்திட்டம் தேவை ஐ.நா.

ஜூன்29,2012. உலகளாவிய அளவில் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு நாடுகள் ஆர்வம் காட்டினாலும், உலக அளவில் ஏற்பட்டுள்ள இந்தத் தழும்பை அழிப்பதற்குச் செயல்திட்டங்கள் அவசியம் என்று ஐ.நா.பொது அவைத் தலைவர் Nassir Abdulaziz Al-Nasser கூறினார்.
அரசியல்ரீதியாகக் காட்டப்படும் ஆர்வத்தின் வழியாக மட்டுமே பயங்கரவாதத்திற்கெதிரான நடவடிக்கைகளைச் செயல்படுத்தி உலகைப் பயங்கரவாதம் இல்லாத இடமாக அமைக்க முடியும் என்றும் Al-Nasser கூறினார்.
பயங்கரவாதத்தை ஒழிப்பது குறித்து 2006ம் ஆண்டு செப்டம்பரில் ஐ.நா.பொது அவை ஏற்றுக் கொண்ட யுக்திகள் குறித்து மறுபரிசீலனை செய்வதற்காக நடைபெற்ற இரண்டு நாள் கூட்டத்தில் உரையாற்றிய Al-Nasser இவ்வாறு கூறினார்.
 

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...