1. 2016ம் ஆண்டு, 51வது அனைத்துலகத் திருநற்கருணை மாநாடு பிலிப்பின்ஸ் நாட்டின் Cebu நகரில் நடைபெறும் - திருத்தந்தை
2. கர்தினால் Marc Ouellet: திருநற்கருணை மாநாட்டின் வழியே நமது உள்ளொளியைப் பெருக்கியுள்ள இறைவனுக்கு நன்றி கூறுவோம்
3. அனைத்துலகப் புலம்பெயர்ந்தோர் நாளைக் குறித்து திருத்தந்தையின் ஞாயிறு மூவேளை செப உரை
4. கத்தோலிக்கத் தகவல் பரிமாற்ற அரங்கத்தின் ஒன்பதாவது கருத்தரங்கிற்குத் திருத்தந்தையின் வாழ்த்துக்கள்
5. திருப்பீட அதிகாரி - நிரந்தர அமைதி நிறைந்த உலகைக் கட்டியெழுப்புவது சாத்தியம்
6. சிரியாவின் கிரேக்கக் கத்தோலிக்க ஆலயத்தை இஸ்லாமியத் தீவிரவாதக் கும்பல் கைப்பற்றியுள்ளது
7. உலகம் பாலைவனமாவதைத் தடுக்கும் உலக நாளுக்கு ஐ.நா.பொதுச் செயலர் வெளியட்ட செய்தி
8. வட இலங்கை பாழடைந்து கிடக்கிறது
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. 2016ம் ஆண்டு, 51வது அனைத்துலகத் திருநற்கருணை மாநாடு பிலிப்பின்ஸ் நாட்டின் Cebu நகரில் நடைபெறும் - திருத்தந்தை
ஜூன்,18,2012. திருஅவையின் உயிர் நாடியாக விளங்கும் Koinonia என்று அழைக்கப்படும் ஒன்றிப்பு, கிறிஸ்துவுடனும் மற்ற மக்களுடனும் கொண்டிருக்கும் உறவை ஒவ்வோர் அருள்சாதனத்தின் வழியாகவும், முக்கியமாக, திருநற்கருணை வழியாகவும் நமக்குப் புரிய வைக்கிறது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
அயர்லாந்தின்
டப்ளின் நகரில் இஞ்ஞாயிறன்று நிறைவுக்கு வந்த அனைத்துலகத் திருநற்கருணை
மாநாட்டின் நிறைவுத் திருப்பலியின்போது திருத்தந்தை அனுப்பியிருந்த ஒளிச்
செய்தி மாநாட்டுத் திடலில் ஒளிபரப்பப்பட்டது.
கூடியிருந்த மக்கள் ஆரவாரத்துடன் வரவேற்ற அந்த ஒளிச் செய்தியில், இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கத்தின் 50ம் ஆண்டு நிறைவும், 50ம் அனைத்துலகத் திருநற்கருணை மாநாடும் இணைந்து வந்திருப்பது தனக்கு மிகுந்த மகிழ்வைத் தருகிறது என்று திருத்தந்தை எடுத்துரைத்தார்.
அயர்லாந்து கத்தோலிக்கத் திருஅவையின் வரலாற்றை தன் உரையில் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, திருநற்கருணை
பக்தியை உலகெங்கும் பறைசாற்ற அயர்லாந்திலிருந்து பிற நாடுகளுக்கு மறை
பணியாளர்களாய்ச் சென்ற பலரை நன்றியோடு நினைவு கூர்ந்தார்.
2016ம் ஆண்டு நடைபெறவிருக்கும் 51வது அனைத்துலகத் திருநற்கருணை மாநாடு பிலிப்பின்ஸ் நாட்டின் Cebu நகரில் நடைபெறும் என்று தனது ஒளிச் செய்தியின் இறுதியில் திருத்தந்தை அறிவித்தார்.
2. கர்தினால் Marc Ouellet: திருநற்கருணை மாநாட்டின் வழியே நமது உள்ளொளியைப் பெருக்கியுள்ள இறைவனுக்கு நன்றி கூறுவோம்
ஜூன்,18,2012. திரு அவையின் உறுப்பினர்களிடையே குறைபாடுகளும், தவறுகளும் நிகழ்ந்தாலும், உயிர்த்த இயேசுவே நமது பாதுகாப்பாக இருந்து, நமது காயங்களையும், குறைகளையும் குணப்படுத்துகிறார் என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
டப்ளின்
நகரில் இஞ்ஞாயிறன்று நிறைவுக்கு வந்த அனைத்துலகத் திருநற்கருணை மாநாட்டின்
நிறைவுத் திருப்பலியின்போது மறையுரையாற்றிய ஆயர்கள் பேராயத்தின் தலைவர்
கர்தினால் Marc Ouellet, திருநற்கருணை மாநாட்டின் வழியே நமது உள்ளொளியைப் பெருக்கியுள்ள இறைவனுக்கு நன்றி கூறுவோம் என்று கூறினார்.
திருமுழுக்கின் வழியாக நாம் பெற்றுள்ள விசுவாசம் என்ற கொடை மிகவும் மதிப்பிற்குரியது என்று கூறிய கர்தினால் Ouellet, இக்கொடையை நமது தனிப்பட்ட உடைமையாகக் காப்பாற்றுவதைவிட, இக்கொடையைப் பிறருடன் பகிர்ந்துகொள்ளவே ஒவ்வொரு கிறிஸ்தவரும் அழைக்கப்பட்டுள்ளார் என்று எடுத்துரைத்தார்.
இத்திருப்பலியின் இறுதியில் பேசிய டப்ளின் பேராயர் Diarmuid Martin, அனைத்துலக திருநற்கருணை மாநாடு மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றதற்காக அயர்லாந்து அரசுத் தலைவர், பிரதமர் உட்பட, அரசு அதிகாரிகள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
உலகின்
120க்கும் மேலான நாடுகளிலிருந்து 50வது அனைத்துலக திருநற்கருணை மாநாட்டில்
கலந்து கொண்ட அனைத்து மக்களுக்கும் தன் நன்றியைக் கூறிய பேராயர்
மார்ட்டின், 2016 ஆண்டு நடைபெறவிருக்கும் 51வது அனைத்துலக திருநற்கருணை மாநாட்டை நடத்தவிருக்கும் பிலிப்பின்ஸ் நாட்டு Cebu பேராயர் Jose Palma அவர்களையும், அந்நகரின் மக்களையும் வாழ்த்தினார்.
3. அனைத்துலகப் புலம்பெயர்ந்தோர் நாளைக் குறித்து திருத்தந்தையின் ஞாயிறு மூவேளை செப உரை
ஜூன்,18,2012. பல்வேறு துன்ப நிகழ்வுகளால் தாங்கள் பிறந்த மண்ணைவிட்டு தப்பியோடும் மக்களை நாம் நினைவு கூர்ந்து, அவர்களுக்குத்
தேவையான உதவிகளைச் செய்வதற்கு ஐ.நா. அமைப்பினால் கடைப்பிடிக்கப்படும்
அனைத்துலக புலம்பெயர்ந்தோர் நாள் நம்மை அழைக்கிறது என்று திருத்தந்தை 16ம்
பெனடிக்ட் கூறினார்.
ஜூன் 20ம் தேதி, வருகிற
புதனன்று கடைபிடிக்கப்படும் அனைத்துலகப் புலம்பெயர்ந்தோர் நாளைக் குறித்து
இஞ்ஞாயிறு தன் மூவேளை செப உரையில் திருத்தந்தை குறிப்பிட்டுப் பேசினார்.
பத்தாயிரத்துக்கும்
அதிகமாய் புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் கூடியிருந்த
மக்களிடம் நண்பகல் மூவேளை செப உரை வழங்கியத் திருத்தந்தை, போர்களாலும், பல்வேறு சமுதாய மோதல்களாலும் நாடு விட்டு நாடு புலம் பெயர்ந்துள்ள கோடிக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்பி, தங்கள் குடும்பங்களுடன் மீண்டும் இணைவதற்கு தன் செபங்களையும், ஆசீரையும் வழங்கினார்.
வேளாண்மையின் பின்னணியில் இந்த ஞாயிறன்று வழங்கப்பட்ட நற்செய்தியைக் குறித்தும் தன் மூவேளை செப உரையில் பேசியத் திருத்தந்தை, இறைவார்த்தையும், இறையரசும் நம் உள்ளங்களில் வளர்வதற்கு நமது ஒத்துழைப்பும், அர்ப்பணமும் தேவை என்று எடுத்துரைத்தார்.
அயர்லாந்தில்
இஞ்ஞாயிறன்று நிறைவுற்ற அனைத்துலக திருநற்கருணை மாநாட்டைக் குறித்தும் தன்
மூவேளை செப உரையில் குறிப்பிட்டத் திருத்தந்தை, நற்கருணை மாநாட்டின் விளைவாக மனிதகுலம் அனைத்திற்கும் இறைவனின் தொடர்ந்த பிரசன்னம் கிடைக்கவேண்டும் என்ற தன் ஆவலை வெளியிட்டார்.
4. கத்தோலிக்கத் தகவல் பரிமாற்ற அரங்கத்தின் ஒன்பதாவது கருத்தரங்கிற்குத் திருத்தந்தையின் வாழ்த்துக்கள்
ஜூன்,18,2012. சுற்றுச் சூழல் பிரச்சனைகள் குறித்த ஆழமான புரிதலும், அவற்றைக் குறித்த சரியான தகவல் பரிமாற்றம் செய்தலும் இன்றியமையாதது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
இஞ்ஞாயிறன்று இத்தாலியின் Trent நகரில்
நிறைவுற்ற கத்தோலிக்கத் தகவல் பரிமாற்ற அரங்கத்தின் ஒன்பதாவது
கருத்தரங்கிற்கு ஒரு தந்தியின் மூலம் வாழ்த்துக்களை அனுப்பியத் திருத்தந்தை, உண்மையானத் தகவல்கள் மக்களைச் சென்றடைவதன் முக்கியத்துவம் பற்றி கூறினார்.
திருத்தந்தையின் இந்தத் தந்திச் செய்தியை திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சிசியோ பெர்தோனே Trent உயர்மறைமாவட்டப் பேராயர் Luigi Bressan அவர்களுக்கு அனுப்பிவைத்தார்.
5. திருப்பீட அதிகாரி - நிரந்தர அமைதி நிறைந்த உலகைக் கட்டியெழுப்புவது சாத்தியம்
ஜூன்,18,2012. நிரந்தர அமைதி நிறைந்த உலகைக் கட்டியெழுப்புவது சாத்தியம், இருப்பினும், அந்த உலகைக் கட்ட ஒவ்வொருவரும் தங்கள் முயற்சியை வழங்கவேண்டும் என்று திருப்பீட அதிகாரி ஒருவர் கூறினார்.
இத்திங்கள் முடிய Sloveniaவில் பயணம் மேற்கொண்டுள்ள கர்தினால் அவையின் தலைவர் கர்தினால் Angelo Sodano, Slovenia நாட்டில் முதல் உலகப் போரால் பாதிக்கப்பட்டப் பகுதிகளைப் பார்வையிட்டபின், இஞ்ஞாயிறன்று Nova Gorica பேராலயத்தில் ஆற்றியத் திருப்பலியில் இவ்வாறு கூறினார்.
1996 மற்றும் 1999 ஆகிய ஈராண்டுகள் Sloveniaவுக்குப் பயணங்கள் மேற்கொண்ட திருத்தந்தை இரண்டாம் ஜான்பால், அச்சத்தை வென்று, நம்பிக்கையை வளர்க்க உறுதியான அன்பால் மட்டுமே முடியும் என்று இளையோருக்குக் கூறியதை மீண்டும் நினைவு கூர்ந்த கர்தினால் Sodano, அமைதி நிறைந்த எதிர்காலத்தை நம்பிக்கையுடன் நோக்குவோம் என்று கூறினார்.
6. சிரியாவின் கிரேக்கக் கத்தோலிக்க ஆலயத்தை இஸ்லாமியத் தீவிரவாதக் கும்பல் கைப்பற்றியுள்ளது
ஜூன்,18,2012. சிரியாவின் Qusayr எனும் நகரில் உள்ள புனித எலியாஸ் கிரேக்கக் கத்தோலிக்க ஆலயத்தை சிரிய அரசுக்கு எதிராகச் செயல்படும் Salafi என்ற இஸ்லாமியத் தீவிரவாதக் கும்பல் ஒன்று கைப்பற்றியுள்ளது.
இக்கும்பலைச் சேர்ந்தவர்கள் ஆலயத்தில் நுழைந்து, ஆலய மணியை அடித்து, அங்குள்ள பொருட்களைச் சேதப்படுத்தி, கத்தோலிக்க மறைக்கு எதிரான தங்கள் வெறுப்பை வெளிப்படுத்தினர் என்று Fides செய்திக் குறிப்பொன்று கூறியது.
தாங்கள் நடத்துவது ஒரு சமயப் போர் என்று இத்தீவிரவாதக் கும்பல் அந்நகரில் அறிவித்து வருவதாகவும், இக்கும்பலின் அராஜகத்திற்குப் பயந்து அந்நகரில் இருந்து ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் ஓடிப்போவதாகவும் இச்செய்தி மேலும் கூறுகிறது.
புனிதத்
தலங்களுக்கு எதிராக இஸ்லாமியத் தீவிரவாதக் கும்பல் மேற்கொண்டுள்ள
செயல்களுக்கு தலத்திருஅவை தன் வன்மையான கண்டனங்களைத் தெரிவித்து வருகிறது.
7. உலகம் பாலைவனமாவதைத் தடுக்கும் உலக நாளுக்கு ஐ.நா.பொதுச் செயலர் வெளியட்ட செய்தி
ஜூன்,18,2012. நலமான மண்வளம் இல்லாமல், பூமிக்கோளத்தைக் காப்பாற்றுவது கடினம் என்று ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் கூறினார்.
உலகம் பாலைவனமாவதைத் தடுக்கும் உலக நாள் ஜூன் 17 இஞ்ஞாயிறன்று கடைபிடிக்கப்பட்டதையொட்டி செய்தி வெளியட்ட பான் கி மூன், மண்வளத்தின் மதிப்பு ஒவ்வோர் ஆண்டும் குறைந்து வருவதன் ஆபத்தை எடுத்துரைத்தார்.
ஜூன் 20, வருகிற புதனன்று பிரேசில் நாட்டு, ரியோ டி ஜெனீரோவில் துவங்கவிருக்கும் அனைத்துலக ஐ.நா.மாநாட்டைக் குறித்துப் பேசிய பொதுச் செயலர், பூமிக்கோளத்தைக் காக்கும் வழிகளில் நமது முன்னேற்றத் திட்டங்கள் அமையவேண்டும் என்று வலியுறுத்தினார்.
மண்வளத்தைக் காக்கும் பல பாரம்பரிய மற்றும் புதுவகைத் திட்டங்களை உலகறியச் செய்து அனைத்து நாடுகளும் பயனடைவதற்கு Rio+20 பூமிக்கோள உச்சிமாநாடு நல்லதொரு தருணமாய் அமையும் என்ற தன் நம்பிக்கையையும் பான் கி மூன் தன் செய்தியில் வெளியிட்டார்.
8. வட இலங்கை பாழடைந்து கிடக்கிறது
ஜூன்,18,2012.
இலங்கையின் வடபகுதி பாழடைந்து காட்சியளிக்கிறது என்று அண்மையில் அங்கு
பார்வையிட்டுத் திரும்பிய அகில இந்திய ஃபார்வர்ட் பிளாக் கட்சியின்
உறுப்பினர்கள் கூறுகின்றனர்.
அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தருண் முகர்ஜி, தமிழக சட்டமன்ற உறுப்பினர் பி.வி.கதிரவன் மற்றும் தேசிய செயற்குழு உறுப்பினர் தேவராஜன் ஆகியோர் இலங்கை சென்று, அங்குள்ள இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் உட்பட பலரை சந்தித்து தமிழ் மக்களின் நலன்கள் குறித்து உரையாடியுள்ளனர்.
வட இலங்கையில் சாலைகள் போடப்படும் பணிகள் விரைவாக நடைபெற்றுவந்தாலும், ஏனையப் பணிகளில் முன்னேற்றம் ஏதும் ஏற்பட்டுள்ளதைத் தங்களால் காணமுடியவில்லை எனவும்,
மக்கள் இன்னும் அச்சம் நிறைந்த சூழலிலேயே வாழ்ந்து வருகிறார்கள் என்பதைத்
தாங்கள் உணர்ந்ததாகவும் தமிழக சட்டமன்ற உறுப்பினர் பி.வி.கதிரவன்
சுட்டிக்காட்டினார்.
இந்திய அரசு வழங்கும் நிதியுதவிகள்கூட தேவைப்படும் மக்களுக்கு முழுமையாக கிடைக்காதச் சூழல் வட இலங்கையில் நிலவுவதாகவும், பல இடங்களில் மின்சார இணைப்புகள் இல்லாத சூழலைத் தங்களால் கவனிக்க முடிந்தது எனவும் கதிரவன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment