Thursday, 22 September 2011

Catholic News - hottest and latest - 21/09/2011

1. செப்டம்பர் 22-25, ஜெர்மனியில் திருத்தந்தை

2. சிக்கிம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவுகள் இடர்துடைப்புப் பணிகளுக்குத் தடையாய் இருக்கின்றன - டார்ஜிலிங் ஆயர் கவலை

3. ஆயர் மர்த்தினெல்லி : லிபியாவில் மக்கள் முழுநம்பிக்கையுடன் புதுவாழ்வைத் தொடங்கக் காத்திருக்கின்றனர்

4. தென் கொரியாவின் ஏழு முக்கிய மதங்களின் தலைவர்கள் இணைந்து முதன்முறையாக வட கொரியவுக்குப் பயணம்

5. சீரோ-மலங்கரா ரீதி கத்தோலிக்கத் திருச்சபையின் முதல் பொது மாநாடு

6. வெள்ளிக்கிழமைகளில் புலால் உண்பதைத் தவிர்க்கும் பழக்கம் இங்கிலாந்து மற்றும் வேல்சில் மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது

7. தரிசு நிலங்கள் விளைநிலங்களாக மாற்றப்பட வேண்டும்

8. இலட்சக்கணக்கான இந்தியர் வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழ்கின்றனர்

9. தமிழகத்தில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டோர் 1,54,000 பேர்

----------------------------------------------------------------------------------------------------------------

1. செப்டம்பர் 22-25, ஜெர்மனியில் திருத்தந்தை

செப்.21,2011. எதிர்காலத்தைப் பற்றிப் பயப்படுவோர் திருத்தந்தையின் ஜெர்மனிக்கானத் திருப்பயண நிகழ்வுகளைக் காண வேண்டும் என்று திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி கூறினார்.
இவ்வியாழன் உள்ளூர் நேரம் காலை 8.15 மணிக்கு திருத்தந்தை தொடங்கும் ஜெர்மனிக்கான நான்கு நாட்கள் திருப்பயணத்தில் மனித வாழ்க்கையின் மிக முக்கியமான கேள்விகளுக்கானப் பதில்களை அவர் பரிந்துரைப்பார் என்று அருள்தந்தை லொம்பார்தி மேலும் கூறினார்.
"Octava Dies" என்ற வத்திக்கான் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் திருத்தந்தையின் இந்த ஜெர்மனிக்கானத் திருப்பயணம் பற்றிப் பேசிய அவர், "எங்கே கடவுள் இருக்கிறாரோ அங்கே எதிர்காலம் இருக்கின்றது" என்ற இத்திருப்பயணத்தின் விருதுவாக்கையும் சுட்டிக் காட்டினார்.
வருகிற ஞாயிறு வரை நடை பெறும் இத்திருப்பயணம் திருத்தந்தை ஜெர்மனிக்கு மேற்கொள்ளும் மூன்றாவது திருப்பயணமாக அமைந்தாலும், இது அந்நாட்டு அரசின் அதிகாரப்பூர்வ விருந்தாளியாக அவர் மேற்கொள்ளும் முதற்பயணமாகும். 
இவ்வியாழன் காலை 10.30 மணிக்கு பெர்லின் சர்வதேச விமானநிலையம் செல்லும் திருத்தந்தை விமானநிலைய வரவேற்பில் கலந்து கொள்வார். பின்னர் ஜெர்மன் அரசுத் தலைவர் கிறிஸ்டியான் வூல்ஃப், பிரதமர் ஆஞ்சலா மெர்க்கெல் ஆகியோரைச் சந்திப்பார். மாலையில் நாடாளுமன்றம் சென்று உரையாற்றுவார்.
இந்த நான்கு நாட்கள் திருப்பயணத்தில் பெர்லின், எர்ஃபூர்ட், ஃப்ரைபூர்க் ஆகிய மூன்று நகரங்களில் 17 உரைகள் நிகழ்த்துவார் திருத்தந்தை.
இப்பயண நிகழ்வுகளை நிறைவு செய்து இஞ்ஞாயிறு இரவு 8.45 மணிக்கு உரோம் சம்ப்பினோ விமானநிலையம் வந்து அங்கிருந்து காஸ்தெல் கந்தோல்ஃபோ செல்வார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

2. சிக்கிம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவுகள் இடர்துடைப்புப் பணிகளுக்குத் தடையாய் இருக்கின்றன - டார்ஜிலிங் ஆயர் கவலை

செப்.21,2011. பூட்டான், சீனா, நேபாளம் ஆகிய நாடுகளின் எல்லைப்புறத்திலுள்ள இமாலய மாநிலமான சிக்கிம் ஏற்கனவே நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளவேளை,  அங்கு ஏற்பட்டுள்ள நிலச்சரிவுகளால் இடர்துடைப்புப் பணிகளைத் தொடர்ந்து செய்ய இயலாமல் இருக்கின்றது என்ற கவலையைத் தெரிவித்தார் டார்ஜிலிங் ஆயர் Stephen Lepcha.
அண்மையில் இடம் பெற்ற நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள சிக்கிம் மாநிலத்தில் குன்றுப்பகுதிகள் மற்றும் சாலைகளில் பரவலாக கீறல்கள் ஏற்பட்டுள்ளன என்றுரைத்த ஆயர் Lepcha, இக்கீறல்களில் மழைத்தண்ணீர் விழுந்தால் அது நிலச்சரிவுகளை ஏற்படுத்தும் என்றும் கூறினார்.
செப்டம்பர் 18ம் தேதி 40 வினாடிகள் இடம் பெற்ற நிலநடுக்கத்தில் இந்திய எல்லைப்பகுதியில் 60க்கும் மேற்பட்டோரும் நேபாளத்தில் குறைந்தது 20 பேரும் என 80க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். இந்திய அரசும் 5,000த்துக்கு மேற்பட்ட இராணுவப் பணியாளரைச் சீரமைப்புப் பணியில் அமர்த்தியுள்ளது. 

3. ஆயர் மர்த்தினெல்லி : லிபியாவில் மக்கள் முழுநம்பிக்கையுடன் புதுவாழ்வைத் தொடங்கக் காத்திருக்கின்றனர்

செப்.21,2011. லிபியாவில் மக்கள் மத்தியில் நம்பிக்கைக் காற்று வீசத் தொடங்கியிருக்கின்றது என்றும் மக்கள் ஒப்புரவையும் புதிய தொடக்கத்தையும் விரும்புகின்றனர் என்றும் டிரிப்போலி அப்போஸ்தலிக்க நிர்வாகி ஆயர் ஜொவான்னி இன்னோச்சென்சோ மர்த்தினெல்லி கூறினார்.
உரோமையில் மருத்துவ சிகிச்சை பெற்று டிரிப்போலி திரும்பியுள்ள ஆயர் மர்த்தினெல்லி, லிபியாவில் இடம் பெற்ற 40 வருட சர்வாதிகார ஆட்சி, ஆறு மாதப் போர் ஆகியவற்றுக்குப் பின்னர் தற்போது அந்நாட்டில் அனைத்துத் தரப்பு மக்களும் புதிய நம்பிக்கையைக் கொண்டிருப்பதைக் காண முடிகின்றது என்று கூறினார்.
இதற்கிடையே, கடாஃபி ஆதரவாளர்களுக்கும் புரட்சியாளர்களுக்கும் இடையேயான போர் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. அப்பாவி மக்கள் கொல்லப்படுவதும் காயமடைவதும் தொடர்கின்றன என்று ஊடகங்கள் கூறுகின்றன.

4. தென் கொரியாவின் ஏழு முக்கிய மதங்களின் தலைவர்கள் இணைந்து முதன்முறையாக வட கொரியவுக்குப் பயணம்

செப்.21,2011. இரண்டு கொரிய நாடுகளுக்கும் இடையேயான உறவை மேம்படுத்தும் நோக்கத்தில் தென் கொரியாவின் ஏழு முக்கிய மதங்களின் தலைவர்கள் முதன்முறையாக வட கொரிய கம்யூனிச நாட்டிற்குப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
KCRP என்ற மதம் மற்றும் நீதிக்கான கொரிய அவையின் அனைத்து ஏழு தலைவர்களும் ஒன்றாக இணைந்து முதன் முறையாகச் சென்றுள்ள இப்பயணத்தில் Pyongyang நகரையும் கொரியத் தீபகற்பத்தில் மிக உயரமான மலையாகிய Baekdusan யும் பார்வையிடுவர்.
இப்பயணம் பற்றிப் பேசிய இவ்வவையின் தலைவர் Kwangju கத்தோலிக்கப் பேராயர் Hyginus Kim Hee-joong, தங்களது இம்முயற்சிகளுக்குத் தென் கொரிய அரசு தொடர்ந்து ஆதரவு கொடுக்கும் என்று தான் நம்புவதாகத் தெரிவித்தார்.
இத்தலைவர்களின் இப்பயணம் இச்சனிக்கிழமை நிறைவடையும். 

5. சீரோ-மலங்கரா ரீதி கத்தோலிக்கத் திருச்சபையின் முதல் பொது மாநாடு

செப்.21,2011. சீரோ-மலங்கரா ரீதி கத்தோலிக்கத் திருச்சபை தனது வரலாற்றில் முதன்முறையாக அதன் முதல் பொது அவையைக் கூட்டியுள்ளது.
4 இலட்சத்து 20 ஆயிரம் உறுப்பினர்களைக் கொண்ட இத்திருச்சபை, திருத்தூதர் புனித தாமஸ் கி.பி.52ல் கேரளாவுக்கு வந்து நற்செய்தியை அறிவித்ததுடன் தொடர்பு கொண்டது. 
1653ம் ஆண்டில் ஆயிரக்கணக்கான புனித தாமஸ் கிறிஸ்தவர்கள் கத்தோலிக்கத் திருச்சபையை விட்டுப் பிரிந்து மலங்கரா ஆர்த்தடாக்ஸ் சிரியரீதித் திருச்சபையைத் தொடங்கினர். பின்னர், இச்சபையைச் சேர்ந்த துறவியும் ஆயருமான Geevarghese Mar Ivanios, 1930ல் திருப்பீடத்தோடு சமாதானம் ஆகினார். அத்துடன் சீரோ-மலங்கரா ரீதி கத்தோலிக்கத் திருச்சபையும் உருவானது. இச்சபையினர் திருவழிபாட்டில் அந்தியோக் மரபைப் பின்பற்றுகின்றனர்.

6. வெள்ளிக்கிழமைகளில் புலால் உண்பதைத் தவிர்க்கும் பழக்கம் இங்கிலாந்து மற்றும் வேல்சில் மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது

செப்.21,2011. வெள்ளிக்கிழமைகளில் புலால் உண்பதைத் தவிர்க்கும் பழக்கம் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கத்தோலிக்கத் திருச்சபையில் 27 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது.
இந்த நடைமுறைப் பழக்கத்தை வரவேற்றுப் பேசிய, மூன்று பிள்ளைகளுக்குத் தாயான மார்கிரேட், சில அடிப்படையான நல்ல கத்தோலிக்கப் பழக்கவழக்கங்கள் சுமார் 30 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது மகிழ்ச்சியைக் கொடுக்கிறது என்றார்.
திருத்தந்தை 16ம் பெனடிக்ட் பிரிட்டனுக்குத் திருப்பயணம் மேற்கொண்டதன் ஓராண்டு நிறைவு நாளான செப்டம்பர் 16ம் தேதி இப்பழக்கம் நடைமுறைக்கு வந்தது.

7. தரிசு நிலங்கள் விளைநிலங்களாக மாற்றப்பட வேண்டும்

செப்.21,2011. உலகில் சுமார் 200 கோடிப் பேருக்குச் சொந்தமான வறண்டு போன நிலங்களைப் பாதுகாப்பதற்கு உறுதியான நடவடிக்கை எடுப்பதன் மூலம் வறுமையைக் குறைத்து வளர்ச்சிக்கானக் கூறுகளை மேம்படுத்த முடியும் என்று ஐ.நா.உயர்மட்டக் கூட்டத்தில் கலந்து கொள்வோர் கூறுகின்றனர்.
நிலங்கள் பாலைவனமாகி வருவது அதிகரித்து வருவதால் ஆண்டு தோறும் ஒரு கோடியே 20 இலட்சம் ஹெக்டேருக்கு அதிகமான பயிர் நிலங்கள் இழக்கப்பட்டு வருகின்றன, இந்த இழப்பின் அளவானது ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கும் தென்னாப்ரிக்க நாட்டின் அளவாக இருந்து வருகிறது என்று அவர்கள் கூறினர்.
2050ம் ஆண்டில் உலக மக்கள் தொகை 900 கோடியை எட்டும் எனவும் இதனால் உலக உணவு உற்பத்தி 70 விழுக்காடு அதிகரிக்கப்பட வேண்டுமெனவும் ஐ.நா.பொதுச் செயலர் கூறினார்.

8. இலட்சக்கணக்கான இந்தியர் வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழ்கின்றனர்

செப்.21,2011. இந்தியாவின் சுமார் 121 கோடி மக்களில் 37 விழுக்காட்டினர் வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழ்கின்றனர் என்று அதிகாரப்பூர்வ புள்ளி விபரங்கள் கூறுகின்றன.
இந்தியாவின் கிராமங்களில் ஒரு தனியாளின் ஒரு நாளைய உணவு, கல்வி மற்றும் நலவாழ்வு வசதிகளுக்கு 25 ரூபாயும் நகரங்களில் ஒரு தனியாளுக்கு 32 ரூபாயும் போதுமானது என்று திட்டக்குழு, இந்திய உச்சநீதிமன்றத்திடம் கூறியுள்ளது.
அரசு நடத்தும் நியாயவிலைக் கடைகள் வழியாகக் குறைந்த விலையில் உணவு மற்றும் சமையல் எண்ணெய், தற்சமயம் நாட்டின் 36 கோடிப் பேருக்கு வழங்கப்பட்டு வருவதாக அக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

9. தமிழகத்தில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டோர் 1,54,000 பேர்

செப்.21,2011. தமிழகத்தில் ஒரு இலட்சத்து 54 ஆயிரம் பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், இந்த விடயத்தில், இந்தியாவிலேயே ஆந்திரா முதலிடம் வகிக்கிறது எனவும் இந்திய தொழிற் கூட்டமைப்பின் சார்பில், சென்னையில் நடைபெற்ற எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் விழிப்புணர்வு பற்றிய தேசிய அளவிலான கருத்தரங்கில்  தெரிவிக்கப்பட்டது.
இக்கருத்தரங்கில் பேசிய தமிழக எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையத்தின் செயல் இயக்குனர் பழனிக்குமார், எய்ட்ஸ் நோய்க் குறித்த விழிப்புணர்வு, மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை என்று கூறினார்.
தமிழகத்தில் நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களில்தான் இந்நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்றுரைத்த பழனிக்குமார், தேசிய அளவில் அமைப்பு சாரா தொழிலாளர்களாக, 40 கோடிப் பேர் உள்ளனர். இவர்களிடம் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதே எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையத்தின் குறிக்கோள் என்றும்  கூறினார்.

No comments:

Post a Comment