1. விசுவாசத்தின் மகிழ்ச்சிநிறை வசந்த காலத்தில் கியூப மக்கள் வாழ்ந்து வருவதாக அறிவித்துள்ளார் கர்தினால் ஹைமே ஒர்த்தெகா.
2. இறை அன்பிற்குச் சாட்சிகளாக விளங்குமாறு வியட்நாம் கத்தோலிக்கர்களுக்கு அழைப்பு விடுத்தார் அந்நாட்டிற்கான திருப்பீடப் பிரதிநிதி
3. தகவல் தொடர்புத்துறையின் புதிய தொழில்நுட்பங்கள் குறித்த இந்திய ஆயர் பேரவையின் கருத்தரங்கு
4. சொமாலியாவில் ஏழு இலட்சத்து ஐம்பதாயிரம் பேர் கடும் பசிக்கொடுமையை எதிர்நோக்குவார்கள்: ஐ.நா. அறிக்கை
5. போரினால் உறுப்பிழந்தோருக்கு செயற்கை உறுப்புகள்
6. கடன் சுமையில் தவிக்கும் 50 விழுக்காட்டு விவசாயிகள்
7. உலக பொருளாதாரத்துக்கு காத்திருக்கிறது ஆபத்து, உலக வங்கி எச்சரிக்கை
------------------------------------------------------------------------------------------------------
1. விசுவாசத்தின் மகிழ்ச்சிநிறை வசந்த காலத்தில் கியூப மக்கள் வாழ்ந்து வருவதாக அறிவித்துள்ளார் கர்தினால் ஹைமே ஒர்த்தெகா.
செப் 06, 2011. கியூபா நாட்டில் நல்ல மாற்றங்கள் இடம்பெறத் துவங்கி, விசுவாசத்தின் மகிழ்ச்சிநிறை வசந்த காலத்தில் மக்கள் வாழ்ந்து வருவதாக அறிவித்துள்ளார் அந்நாட்டின் ஹவானா பேராயர் கர்தினால் ஹைமே ஒர்த்தேகா.
அச்சம், முரண்பாடு, மோதல் என்பவைகளெல்லாம் கடந்த காலத்திற்கு உரியவைகளாக மாறி, மக்கள் கத்தோலிக்கத் திருச்சபையோடு நெருங்கி வருவதைக் காண முடிகின்றது என்றார் கர்தினால் ஒர்த்தேகா.
பிறரன்பின் கன்னிமரி என்ற பெயரில் கியூபாவின் பாதுகாவலியாகச் சிறப்பிக்கப்படும் அன்னை மரியின் திரு உருவச்சிலை அந்நாட்டில் கண்டெடுக்கப்பட்டதன் 400ம் ஆண்டு 2012ல் சிறப்பிக்கப்பட உள்ளதையொட்டி, ஓராண்டாக அத்திரு உருவச்சிலை நாட்டின் அனைத்து நகர்களுக்கும் எடுத்துச் செல்லப்பட்டு வருவது பற்றியும் குறிப்பிட்ட கர்தினால் ஒர்த்தேகா, இத்திருப்பயணம், நாட்டில் பேச்சுவார்த்தையையும் ஒப்புரவையும் வளர்க்கும் ஒரு தருணத்தை வழங்கியுள்ளதாகவும், அனைத்து கியூப மக்களும் நாட்டின் அமைதிக்கும் வளர்ச்சிக்கும் ஒன்றிணைந்து உழைக்குமாறும் அழைப்பு விடுத்தார்.
2. இறை அன்பிற்குச் சாட்சிகளாக விளங்குமாறு வியட்நாம் கத்தோலிக்கர்களுக்கு அழைப்பு விடுத்தார் அந்நாட்டிற்கான திருப்பீடப் பிரதிநிதி
செப் 06, 2011. எத்தனைத் துன்பங்களை எதிர்நோக்க வேண்டி இருந்தாலும், கடந்தவைகளை மறந்து, இறை அன்பிற்குச் சாட்சிகளாக விளங்குமாறு வியட்நாம் கத்தோலிக்கர்களுக்கு அழைப்பு விடுத்தார் அந்நாட்டிற்கான திருப்பீடப் பிரதிநிதி பேராயர் லியோபோல்தோ ஜிரெல்லி.
திருப்பீடத்திற்கும் வியட்நாமிற்கும் இடையே முழு அரசியல் உறவை உருவாக்க உழைப்பதும், தலத்திருச்சபைக்கும் திருப்பீடத்திற்கும் இடையே உறவுகளைப் பலப்படுத்தி பாலமாகச் செயல்படுவதும், தன் முக்கிய பணி என்ற பேராயர் ஜிரெல்லி, வியட்நாம் கத்தோலிக்கர்கள் ஏனையோருடன் ஒன்றிணைந்து பணியாற்றுவதுடன், தலத்திருச்சபைக்கான பணியில் தங்களுக்குள்ளேயே ஒன்றிணைந்துச் செயல்பட வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார்.
வியட்நாமிற்குள்ளேயே தங்கிப் பணியாற்றுவதற்கு அந்நாட்டு அரசு அனுமதி மறுத்துள்ள போதிலும், அத்தகைய அனுமதி விரைவில் கிட்டும் வாய்ப்பு உள்ளது என்ற நம்பிக்கையையும் வெளியிட்டார் பேராயர் ஜிரெல்லி.
கத்தோலிக்க மதத்தின் மீது சில கட்டுப்பாடுகளைக் கொண்டுள்ள வியட்நாமில் அந்நாட்டு கத்தோலிக்கத் துறவியர் 1140 பேர், அந்நாட்டுப் பங்குத் தளங்களிலும், எயிட்ஸ் நோயாளிகளிடையேயும், ஏழைகள் மற்றும் வீடற்றோரிடையேயும் சிறப்புப் பணியாற்றி வருகின்றனர்.
3. தகவல் தொடர்புத்துறையின் புதிய தொழில்நுட்பங்கள் குறித்த இந்திய ஆயர் பேரவையின் கருத்தரங்கு
செப் 06, 2011. தகவல் தொடர்புத்துறையின் புதியத் தொழில்நுட்பங்கள் குறித்த இரு நாள் கருத்தரங்கை டிசம்பர் முதல் வாரத்தில் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது இந்திய ஆயர் பேரவையின் சமூகத்தொடர்பு ஆணைக்குழு.
கொல்கத்தாவிலுள்ள அமெரிக்கத் துணைத்தூதரகத்தின் ஒத்துழைப்புடன் டிசம்பர் முதல் தேதி துவங்கும் இந்தக் கருத்தரங்கில் 'புதியத் தகவல் தொடர்புத் தொழில்நுட்பங்களும் சவால்களும்' என்பது குறித்து விவாதிக்கப்படும்.
ஒவ்வொரு பல்கலைக்கழகமும் கல்லூரியும் தகவல் தொடர்புத் துறையைச் சேர்ந்த அதிகபட்சம் 4 மாணவர்களையும் ஓர் ஆசிரியரையும் இக்கருத்தரங்கிற்கு அனுப்பவேண்டும் என இந்திய ஆயர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
தகவல் தொடர்பு ஆய்வு, கருத்தரங்குகள் ஏற்பாடுச் செய்தல், இத்துறையில் மாணவர்களுக்கென கல்வித் திட்டங்களை வகுத்தல் போன்றவைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றது இந்திய ஆயர் பேரவையின் தகவல் தொடர்பு ஆணைக்குழு.
4. சொமாலியாவில் ஏழு இலட்சத்து ஐம்பதாயிரம் பேர் கடும் பசிக்கொடுமையை எதிர்நோக்குவார்கள்: ஐ.நா. அறிக்கை
செப்.06,2011. "ஆப்ரிக்காவின் சொமாலியாவில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பஞ்சத்தால் அடுத்த நான்கு மாதங்களில் அந்நாட்டின் ஏழு இலட்சத்து ஐம்பதாயிரம் பேர் கடும் பசிக்கொடுமையை எதிர்நோக்குவார்கள் மற்றும் 40 இலட்சம் மக்கள் உலக நாடுகளின் உதவிகளை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்' என ஐ.நா. தெரிவித்துள்ளது.
ஐ.நா.,வின் உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச் சத்து உணவு ஆராய்ச்சிக்கான அமைப்பு (எஸ்.எஸ்.என்.ஏ.யு.,), வெளியிட்டுள்ள அறிக்கையில், சோமாலியாவில் மொத்தம், 40 லட்சம் பேர் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உடனடியாக உணவுப் பொருட்கள் தேவைப்படுகின்றன. பஞ்சம் நீடிக்கும் பட்சத்தில் இன்னும் சில மாதங்களில், ஏழரை லட்சம் பேர் இறந்து விடுவர். ஏற்கனவே ஆயிரக்கணக்கான குழந்தைகள் உட்பட, பலர் பட்டினியால் இறந்து விட்டனர். இந்த 40 லட்சம் பேரில், 30 லட்சம் பேர் நாட்டின் தென்பகுதியில் தான் உள்ளனர். ஒட்டு மொத்தமாக, கிழக்கு ஆப்ரிக்காவில் மட்டும், 1 கோடியே, 20 லட்சம், மக்களுக்கு உணவு தேவைப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்ரிக்காவின் கிழக்குப் பகுதியிலுள்ள, எத்தியோப்பியா, சொமாலியா, கென்யா ஆகிய மூன்று நாடுகளில், வரலாறு காணாத பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இவற்றில் சொமாலியாவில், 1991ல் இருந்து நிலையான அரசியல் சூழல் இல்லை. நாட்டின் பெரும்பான்மையான தெற்குப் பகுதி, அல் ஷபாப் பயங்கரவாத அமைப்பிடம் சிக்கியுள்ளது. பிற பகுதிகள் பல்வேறு இனக் குழுக்களிடம் உள்ளன. தலைநகர் மொகாடிஷூவும் வேறு ஒரு சில பகுதிகளும் மட்டுமே, அரசு வசம் உள்ளன.
கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, இந்தாண்டு மழையே இல்லாததால், சொமாலியா, எத்தியோப்பியா, கென்யா ஆகிய நாடுகள் பஞ்சத்தால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன. இவற்றோடு திஜிபுத்தி, எரித்ரியா மற்றும் உகாண்டா நாடுகளிலும், மழையின்மையால் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.
5. போரினால் உறுப்பிழந்தோருக்கு செயற்கை உறுப்புகள்
செப்.06,2011. இலங்கையின் வடமாகாணத்தில் போரினால் பாதிக்கப்பட்டு அவயவங்களை இழந்தவர்களுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் ஏற்பாட்டில் செயற்கை அவயவங்களை வழங்கும் சிகிச்சை முகாம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூர் நிறுவனத்தைச் சேர்ந்த இருபது பேர் கொண்ட மருத்துவர் மற்றும் தொழில்நுட்பவியலாளர்கள் அடங்கிய குழு இதற்கென யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ளது.
யாழ்ப்பாணம் கோண்டாவில் பிரதேச மருத்துவமனையில் சனிக்கிழமையன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்தச் சிகிச்சை முகாம் சுமார் ஒரு மாதத்திற்குத் தொடர்ந்து நடக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
வடமாகாணத்தில் உள்ள வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் இருந்து ஏற்கனவே தெரிவு செய்யப்பட்ட 500 பேருக்கு இந்தச் செயற்கை உறுப்பு சிகிச்சை மற்றும் தொழில்நுட்ப சேவைகள் வழங்கப்படவுள்ளதாக யாழ் மாவட்ட பிராந்திய சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்தார்.
எனினும் இந்த சிகிச்சை முகாமின் ஊடாக ஆயிரம் பேருக்கு சிகிச்சை மற்றும் தொழில்நுட்ப சேவைகளை வழங்குவதற்குத் தாங்கள் திட்டமிட்டிருப்பதாக இந்தக் குழுவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த வைத்திய சேவைக்கான ஒருங்கிணைப்பு, மேற்பார்வை உட்பட்ட பணிகளை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரக அதிகாரிகள், வடமாகாண சுகாதார அமைச்சகத்தின் அதிகாரிகள், வடமாகாண ஆளுனர் ஆகியோருடன் இணைந்து மேற்கொண்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
6. கடன் சுமையில் தவிக்கும் 50 விழுக்காட்டு விவசாயிகள்
செப் 06, 2011. "இந்தியாவில் 50 விழுக்காட்டு விவசாயிகள் கடன் சுமையில் மூழ்கியுள்ளனர்' என மத்திய அமைச்சர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும், ஒன்பது கோடி விவசாயிகள் கடன் சுமையில் தத்தளிப்பதாகத் தெரிவிக்கும் தேசிய ஆய்வு, ஆந்திராவில் அதிக பட்சமாக 49 லட்சம் பேர், அதாவது 82 விழுக்காட்டினரும், தமிழகத்தில் 74 விழுக்காட்டினரும், பஞ்சாபில் 65 விழுக்காட்டினரும், மகாராஷ்டிராவில் 54 விழுக்காட்டினரும் கடனாளிகளாக இருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளதை, சரத் பவார் பாராளுமன்றத்தில் எடுத்துரைத்தார்.
விவசாயிகளைக் கடன் சுமையிலிருந்து மீட்க, அவர்களது கடனைத் தள்ளுபடி செய்யும் திட்டம், 2008ல் அறிமுகப்படுத்தப்பட்டு, இந்தத் திட்டத்தின் கீழ், மூன்று கோடியே 69 இலட்சம் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதற்காக மத்திய அரசு 65 ஆயிரத்து 318 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது என்ற அமைச்சர், கடன் தந்த நிறுவனங்களுக்காக மத்திய அரசு 51 ஆயிரத்து 340 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது எனவும் தெரிவித்தார்.
7. உலக பொருளாதாரத்துக்கு காத்திருக்கிறது ஆபத்து, உலக வங்கி எச்சரிக்கை
செப்.06,2011 உலக பொருளாதாரம் ஆபத்தை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. அதை தவிர்க்க ஏற்றுமதி மீதான கவனத்தை சீனா கைவிட்டு, உள்நாட்டு நுகர்வு அடிப்படையிலான வளர்ச்சியில் அக்கறை காட்ட வேண்டும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.
அடுத்த சில மாதங்களுக்கு சர்வதேச பொருளாதாரம் ஆபத்தான கட்டத்தை எதிர்நோக்கி யுள்ளது. அது சீனாவுக்கும் பொருந்தும். அதிக உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை நோக்கியே சீன பொருளாதாரம் இப்போது செயல்படுகிறது. அதை உள்நாட்டு நுகர்வை அதிகரிக்கும் வகையில் அடிப்படை கட்டமைப்பில் சீர்திருத்தங்களை சீன அரசு செய்ய வேண்டும் என, தற்போது சீனாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுவரும் உலக வங்கியின் தலைவர் ராபர்ட் ஜோலிக் அழைப்பு விடுத்தார்.
No comments:
Post a Comment