Thursday 22 September 2011

Catholic News - hottest and latest - 20/09/2011

1. திருத்தந்தை, வானியல் நிபுணர் குழு சந்திப்பு 

2. அமெரிக்கக் குடும்பங்களைப் பாதிக்கும் வறுமை பற்றிக் மறையுரைகளில் எடுத்துச் சொல்லுமாறு குருக்களுக்கு அழைப்பு

3. கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிரானப் போராட்டத்திற்கு இந்திய ஆயர் பேரவையின் நீதி, அமைதி மற்றும் வளர்ச்சி ஆணையம் ஆதரவு

4. தேர்தல்களைக் கண்காணிப்பதில் திருச்சபை தனது பங்கை ஆற்ற வேண்டும் - ஆப்ரிக்கத் திருச்சபை பிரதிநிதிகள் வலியுறுத்தல்

5. வாழ்வு மற்றும் குடும்பத்திற்கு எதிரானச் சட்டங்களைப் புறக்கணிக்க சிலே ஆயர் வலியுறுத்தல்

6. குஜராத் முதல்வர் நடத்திய 3 நாள் உண்ணாவிரதம் வெளிப்பகட்டு -  மனித உரிமை ஆர்வலர்

7.ஐ.நா.வின் வளர்ச்சித் திட்ட இலக்குகளை அடைவது கடினம்

8. இந்தியர்களிடம் உடல் உழைப்புக் குறைவு

----------------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை, வானியல் நிபுணர் குழு சந்திப்பு 

செப்.20,2011. இவ்வியாழன் முதல் ஞாயிறு வரை ஜெர்மனி நாட்டுக்குத் தான் மேற்கொள்ளும் திருப்பயணத்தில், தனியாள் மற்றும் சமூக வாழ்க்கையில் இறைப்பிரசன்னத்தை மீண்டும் கண்டுணருவதற்கு அழுத்தம் கொடுக்கப்படும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
இம்மாதம் 22 முதல் 25 வரை திருத்தந்தை தான் மேற்கொள்ளும் ஜெர்மனிக்கானத் திருப்பயணத்தையொட்டி வழங்கிய ஒலி-ஒளிச் செய்தியில், பாப்பிறை என்ற முறையில் தனது தாயகத்திற்கு மேற்கொள்ளும் இந்த மூன்றாவது திருப்பயணத்தைத் தான் ஆவலோடு எதிர்நோக்குவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கடவுள் எங்கே இருக்கிறாரோ அங்கே எதிர்காலம் இருக்கின்றது என்ற இத்திருப்பயணத்தின் கருப்பொருளை மையமாக வைத்தும் அச்செய்தியை அவர் வழங்கியுள்ளார்.
கடவுளின் இருப்பை அறிவியல்ரீதியாக நிரூபிக்க இயலாது எனினும், படைப்பின் அழகு, திருமறை நூல், மக்களைச் சந்திப்பது போன்ற பல வழிகளில் மக்கள் கடவுளின் இருப்பை வளர்த்துக் கொள்ள முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
திருத்தந்தையின் இச்செய்தி ஜெர்மனி அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.
மேலும், சர்வதேச விண்வெளி நிலையத்தின் வானியல் நிபுணர் குழு ஒன்றை காஸ்தெல் கந்தோல்ஃபோவில் இத்திங்களன்று சந்தித்தார் திருத்தந்தை.
இரண்டு இத்தாலியர்கள் உள்ளிட்ட இந்த 9 நிபுணர்கள் விண்வெளியில் இருந்த போது இவர்களுடன் கடந்த மே 21ம் தேதி வீடியோச் செய்தி மூலம் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

2. அமெரிக்கக் குடும்பங்களைப் பாதிக்கும் வறுமை பற்றிக் மறையுரைகளில் எடுத்துச் சொல்லுமாறு குருக்களுக்கு அழைப்பு

செப்.20,2011. அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்களும் அருட்பணியாளர்களும் தங்களது மறையுரைகளில் அந்நாட்டின் குடும்பங்களும் சமூகங்களும் தற்போது எதிர்கொள்ளும் கடும் பொருளாதார நெருக்கடி குறித்துப் பேசுமாறு கேட்டுக் கொண்டார் அந்நாட்டு ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் திமோத்தி டோலன்.
நிர்வாகக் குழுவின் பரிந்துரையின் பேரில் அந்நாட்டின் அனைத்து ஆயர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ள பேராயர் டோலன், மேய்ப்பர்கள், ஆசிரியர்கள், தலைவர்கள் என்ற முறையில் ஆயர்களும் அருட்பணியாளர்களும் தங்களுக்கு இருக்கும் வாய்ப்புக்களைப் பயன்படுத்தி, இந்தச் சமுதாயத்தில் நிலவும் வேலைவாய்ப்பின்மை மற்றும் வறுமையை பொது மக்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லுமாறு கேட்டுள்ளார்.
அமெரிக்க ஐக்கிய நாட்டில் பரவலாகக் காணப்படும் வேலைவாய்ப்பின்மை, தரமற்ற வேலை, ஏழ்மை ஆகியவை மனித மாண்பின் தன்மையைக் குறைக்கின்றன மற்றும் குழந்தைகளையும் குடும்பங்களையும் பாதிக்கின்றன என்றும் பேராயர் டோலனின் கடிதம் கூறுகிறது.
அமெரிக்க ஐக்கிய நாட்டு மக்கள் கணக்கெடுப்பு அலுவலகம் கடந்த வாரத்தில் வெளியிட்ட புள்ளி விபரங்களின்படி, அந்நாட்டில் 2010ம் ஆண்டில், ஒரு கோடியே 60 இலட்சம் சிறார் உட்பட 4 கோடியே 60 இலட்சம் பேர் வறுமையில் வாழ்ந்தனர் என்பதையும் பேராயர் டோலன் சுட்டிக் காட்டியுள்ளார்.

3. கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிரானப் போராட்டத்திற்கு இந்திய ஆயர் பேரவையின் நீதி, அமைதி மற்றும் வளர்ச்சி ஆணையம் ஆதரவு

செப்.20,2011. தமிழகத்தின் நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள அணுமின் நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இடிந்தகரையில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவேளை, இந்திய ஆயர் பேரவையின் நீதி, அமைதி மற்றும் வளர்ச்சி ஆணையம் இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
இவ்வாணையச் செயலர் அருட்பணி சார்லஸ் இருதயம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள், இப்போராட்டத்தைத் தொடங்குவதற்கு முன்னரே 500க்கும் மேற்பட்டோர் மீது காவல்துறை பொய் வழக்குப் பதிவு செய்திருப்பது குறித்த கவலையும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாணையத் தலைவர் தூத்துக்குடி ஆயர் யுவான் அம்புரோஸ் அவர்கள், இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை அடிக்கடிப் பார்வையிட்டு தனது ஆதரவைத் தெரிவித்து வருவதாகவும் இந்த ஆணையம் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.
இந்திய அரசியல் அமைப்பில் உறுதி வழங்கப்பட்டுள்ள குடிமக்களின் வாழ்வதற்கான உரிமைகளும், காடுகள், ஏரிகள், ஆறுகள், வனவிலங்குகள் உட்பட சுற்றுச்சூழலும்  பாதுகாக்கப்படவும் இவ்வாணையம் அரசை விண்ணப்பித்துள்ளது.
2004ம் ஆண்டில் சுனாமியால் பாதிக்கப்பட்டுள்ள இப்பகுதி மக்கள், கூடங்குளம் இப்புதிய அணுமின் நிலையத்தால் மேலும் பாதிக்கப்படும் ஆபத்து இருக்கின்றது என்றும் இவ்வாணையத்தின் அறிக்கை எச்சரிக்கிறது.
மேலும், இப்பிரச்சனைக்கு மத்திய, மாநில அரசுகளே பொறுப்பேற்க வேண்டும் என்று சமூக சேவகி மேதா பட்கர் கூறினார்.

4. தேர்தல்களைக் கண்காணிப்பதில் திருச்சபை தனது பங்கை ஆற்ற வேண்டும் - ஆப்ரிக்கத் திருச்சபை பிரதிநிதிகள் வலியுறுத்தல்

செப்.20,2011. தேர்தல் காலங்களில் அதிக வன்முறைகள் இடம் பெறும் ஆப்ரிக்க நாடுகளில் அத்தேர்தல்களைக் கண்காணிப்பதில் திருச்சபை தனது பங்கை ஆற்ற வேண்டுமென்று 20 ஆப்ரிக்க நாடுகளின் திருச்சபை பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.
ஆப்ரிக்காவில், 2011ம் ஆண்டு முடிவதற்குள் 12 நாடுகளும், 2012ம் ஆண்டில் 14 நாடுகளும் பொதுத் தேர்தல்கள் நடத்தத் திட்டமிட்டிருப்பதைச் சுட்டிக் காட்டிய அப்பிரதிநிதிகள், ஆப்ரிக்காவில் தேர்தல்களின் போதும் அதற்குப் பின்னரும் வன்முறை அல்லது கலவரங்கள் நடைபெறுவதற்கு மோசமான நிர்வாகமே காரணம் என்று குறை கூறினர்.
கத்தோலிக்க நிவாரணப்பணி அமைப்பும், ஆப்ரிக்க மற்றும் மடகாஸ்கர் ஆயர் பேரவைகளும் இணைந்து நடத்திய கருத்தரங்கில் கலந்து கொண்ட பிரதிநிதிகள் இவ்வாறு தெரிவித்தனர்.
சனநாயகக் கொள்கைகள் மற்றும் நடைமுறைகளுக்கு ஆதரவளிக்கும் சீர்திருத்தங்களை அமல்படுத்த அரசியல் ரீதியாக விருப்பம் காட்டப்படாமையும் இம்மோதல்களுக்குக் காரணம் என்றும் அக்கருத்தரங்கில் கூறப்பட்டது.

5. வாழ்வு மற்றும் குடும்பத்திற்கு எதிரானச் சட்டங்களைப் புறக்கணிக்க சிலே ஆயர் வலியுறுத்தல்

செப்.20,2011. கருக்கலைப்பை அல்லது குடும்பத்தைப் பலவீனப்படுத்த அனுமதிக்கும் சட்டங்களைப் புறக்கணிக்குமாறு சிலே நாட்டு வால்பரைசோ ஆயர் கொன்சாலோ துவார்த்தே கார்சியா அந்நாட்டுக் கிறிஸ்தவர்களைக் கேட்டுக் கொண்டார்.
குடும்பங்கள் நலிவடைவது, சிலே சமுதாயத்தை மிகவும் பலவீனப்படுத்தும் கூறுகளில் ஒன்றாக இருந்து வருகிறது என்றுரைத்த ஆயர் துவார்த்தே கார்சியா, இதில் திருச்சபை முனைப்பாக நின்று செயலாற்றுவதற்குத் தார்மீகக் கடமையைக் கொண்டுள்ளது என்றார்.
சிலே மக்கள் கருக்கலைப்புக்கு ஆதரவானச் சட்டங்களைப் புறக்கணிக்குமாறும் ஆயர் வலியுறுத்தினார்.

6. குஜராத் முதல்வர் நடத்திய 3 நாள் உண்ணாவிரதம் வெளிப்பகட்டு -  மனித உரிமை ஆர்வலர்

செப்.20,2011. அமைதி மற்றும் நல்லிணக்கத்தை வலியுறுத்தி குஜராத் முதல்வர் நரேந்திர மோடி நடத்திய 3 நாள் உண்ணாவிரதம் வெளிப்பகட்டுக்காக நடத்தப்பட்டது என்று அகமதபாத் மனித உரிமை ஆர்வலர் இயேசு சபை அருள்தந்தை செத்ரிக் பிரகாஷ் கருத்து தெரிவித்தார்.
குஜராத்தில் 2002ம் ஆண்டில் இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே இடம் பெற்ற மோதல்களில் மனித உரிமைகள் மீறல்களில் நரேந்திரமோடி ஈடுபட்டிருந்தார் என்று குற்றம் சாட்டப்பட்டிருந்தார் எனவும், இவர் உண்மையிலேயே நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்ப விரும்பினால் அக்கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டுமெனவும் கிறிஸ்தவர் என்ற முறையில் தான் விரும்புவதாகக் தெரிவித்தார் அருள்தந்தை செத்ரிக் பிரகாஷ்.
இப்படுகொலைக் கலவரம் நடந்து பத்தாண்டுகள் ஆகிய பின்னரும் சிறுபான்மையினராகிய கிறிஸ்தவரும் முஸ்லீம்களும் ஓரங்கட்டப்படுகின்றனர் மற்றும் எல்லாத் துறைகளிலும், குறிப்பாக கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் பாகுபடுத்தப்படுகின்றனர் என்றும் அவர் குறை கூறினார்.
இந்நிலையில் எந்த நல்லிணக்கம் பற்றி நாம் பேசுகிறோம் என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார்.

7.ஐ.நா.வின் வளர்ச்சித் திட்ட இலக்குகளை அடைவது கடினம்

செப்.20,2011. வளரும் நாடுகளில் ஐந்து வயதுக்குட்பட்ட சிறாரின் இறப்பு அதிகமாக இருப்பதாகவும் 137 வளரும் நாடுகளில் ஒன்பது மட்டுமே பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலவாழ்வை மேம்படுத்தும் இலக்கை அடைந்துள்ளதுள்ளன எனவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
த லான்செட் மருத்துவப் பத்தரிகை வெளியிட்ட செய்தியில், 2015க்குள் இந்த வயதுச் சிறாரின் இறப்பைக் குறைப்பதற்கான இலக்கை ஆப்ரிக்காவின் சஹாராவையடுத்த பகுதியில் எந்த நாடும் அடையாது என்று கூறப்பட்டுள்ளது. 
சிறாரின் இறப்பு விகிதத்தைக் குறைப்பதில் கடந்த பத்தாண்டுகளில் சீனா, ருவாண்டா, போஸ்ட்வானா ஆகிய நாடுகள் நல்ல முன்னேற்றத்தைக் கண்டு பாராட்டைப் பெற்றுள்ளன என்றும் அவ்வாய்வாளர்கள் கூறுகின்றனர்.

8. இந்தியர்களிடம் உடல் உழைப்புக் குறைவு

செப்.20,2011. நோய்களிடம் இருந்து காத்துக் கொள்வதற்கு தேவையான உடல் உழைப்பு மற்றும் உடற்பயிற்சி இல்லாத இந்தியர்களின் எண்ணிக்கை 29 விழுக்காடு என்ற அதிர்ச்சித் தகவலை ஓர் ஆய்வு வெளியிட்டுள்ளது.
தொற்றிக் கொள்ளாத நோய்கள் குறித்த ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் முதலாவது உச்சி மாநாட்டில் சமர்ப்பிப்பதற்காக இந்திய பொது சுகாதார அமைப்பு சார்பில் நாடு முழுவதும் நடத்தப்பட்ட விரிவான ஆய்வில் இது தெரியவந்துள்ளது.
இந்தியாவின் வயது வந்தோர் எண்ணிக்கையில் 29 விழுக்காட்டினர் உடற்பயிற்சி என்ற ஒன்றை அறிந்திருக்கவில்லை, அதில் ஈடுபடவும் இல்லை என அவ்வாய்வு கூறுகிறது.
இந்த விடயத்தில் ஆண்களைவிட பெண்கள் மேலும் மோசமான நிலையில் உள்ளனர் எனவும், உடல் உழைப்பு இல்லாத பெண்களின் எண்ணிக்கை 34 விழுக்காடு, அதாவது, 3ல் ஒரு பெண் எனவும் கூறப்பட்டுள்ளது.
வாரத்தில் சராசரியாக 149 நிமிடங்கள் உடல் உழைப்பு அவசியம் என்ற அளவுகோலில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இது தெரிய வந்தது.
உடற்பயிற்சியும், உடல் உழைப்பும் இல்லாததால் நகரங்களில் 6.6 முதல் 12.7 விழுக்காட்டினர் இதய நோயால் பாதிக்கப்படுகின்றனர். மேலும், இந்தியாவில் 5.1 கோடிப் பேர் நீரழிவு நோயாளிகள். 2025ல் இது 8.7 கோடியாக உயரும் அபாயம் உள்ளது. இந்திய நோயாளிகளில் 8.5% பேர் மனநோய் பாதித்தவர்கள் என்று அவ்வாய்வு  தெரிவிக்கிறது.

No comments:

Post a Comment