Saturday 10 September 2011

Catholic News - hottest and latest - 10 September 2011

1. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் : எந்த ஒரு சூழ்நிலையும் பயங்கரவாதச் செயல்களை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது

2. அங்கோனாவுக்குத் திருத்தந்தை பயணம்

3. திருத்தந்தையின் ஜெர்மனிப் பயணத்தின் போது ஆப்ரிக்காவுக்காக உண்டியல் எடுக்கப்படும்

4. ஜாம்பியாவில் 58 விழுக்காட்டினருக்கு மட்டுமே போதுமான சுகாதார வசதி உள்ளது

5. சிறுவர்களைப் பயங்கரவாதிகளின் தாக்கத்தினின்று பாதுகாக்கும் நோக்கத்தில் புதிய பள்ளிக்கூடங்கள்

6. பாகிஸ்தானில் கொட்டும் மழையால் சுமார் ஐம்பது இலட்சம் பேர் பாதிப்பு

7. மான்செஸ்டரில் நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னர் முதன்முறையாக மாதா பவனி

8. காடுகளுக்கு அருகில் தீ வைப்பதில் கவனமாக இருக்க நாடுகளுக்கு அழைப்பு

----------------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் : எந்த ஒரு சூழ்நிலையும் பயங்கரவாதச் செயல்களை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது

செப்.10,2011. வன்முறை, கடவுளின் பெயரால் ஒருபோதும் நடத்தப்படக்கூடாது மற்றும் எந்த ஒரு சூழ்நிலையும் பயங்கரவாதச் செயல்களை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறியுள்ளார்.
2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி நியுயார்க் உலக வர்த்தக இரட்டைக் கோபுரம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு உள்ளான பத்தாம் ஆண்டு நினைவையொட்டி அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவைத் தலைவரான நியுயார்க் பேராயர் திமோத்தி டோலனுக்கு அனுப்பிய கடிதத்தில், உலகிற்கு கருணையும் நீதியும் தேவைப்படுகின்றன என்று கூறியுள்ளார் திருத்தந்தை.
உலகில் வன்முறைச் செயல்களாக அடிக்கடி கிளம்பும் பழிவாங்கும் உணர்விலிருந்து உலகம் விடுபடுவதற்கு, ஒருமைப்பாட்டுக் கலாச்சாரத்திற்கும் நீதிக்கும் உலகினர் தங்களை உறுதியாக அர்ப்பணிக்க வேண்டும் என்று தான் உருக்கமாகச் செபிப்பதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.
இத்தகைய அர்ப்பணமானது, ஒளிமயமான மற்றும் அதிகப் பாதுகாப்பான எதிர்காலத்தை அமைக்கத் தேவையான நீதியும் வளமையும் பெருக உதவும் என்றும் திருத்தந்தையின் கடிதம் கூறுகிறது.
உலக வர்த்தக இரட்டைக் கோபுரம் இருந்த இடத்தை 2008ல் திருத்தந்தை பார்வையிட்டு செபித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி காலை அல்கெய்தா அமைப்பினரைச் சேர்ந்த 19 இசுலாம் தீவிரவாதிகள் நான்கு ஜெட் விமானங்களைக் கடத்தினர். இவற்றில் இரண்டு நியுயார்க் உலக வர்த்தக இரட்டைக் கோபுரத்தைத் தரைமட்டமாக்கின. மூன்றாவது விமானம், அந்நாட்டு Arlington லுள்ள பென்டகன் இராணுவக் கோட்டையில் விழுந்தது. நான்காவது விமானத்தைப் பயணிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த போது அது பென்சில்வேனியாவில், Shanksvilleக்கு அருகிலுள்ள வயலில் விபத்துக்குள்ளாகியது.
இந்தப் பயங்கரவாதத் தாக்குதல்களில் உலகின் பல நாடுகளைச் சேர்ந்த சுமார் மூவாயிரம் பேர் இறந்தனர்.

2. அங்கோனாவுக்குத் திருத்தந்தை பயணம்

செப்.10,2011. இத்தாலியின் தேசிய திருநற்கருணை மாநாட்டு நிறைவு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கென இஞ்ஞாயிறன்று Anconaவுக்குச் செல்கிறார் திருத்தந்தை. 
ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்?, அன்றாட வாழ்வுக்கு திருநற்கருணைஎன்ற தலைப்பில் இம்மாதம் 3 முதல் 11 வரை இத்தாலியின் 25வது தேசிய திருநற்கருணை மாநாடு Anconaவில் நடைபெறுகின்றது.
இந்தத் திருநற்கருணை மாநாட்டின் தொடக்க நிகழ்வு அன்றே அம்மாநாட்டிற்குத் திருத்தந்தை தனது வாழ்த்துச் செய்திகளை அனுப்பியிருந்தார். கடந்த ஞாயிறு மூவேளை செபத்திற்குப் பின்னரும், இதில் கலந்து கொள்வோருக்குத் தனது செபங்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார். ஒவ்வொரு மனிதனுக்கும் அகில உலகுக்கும் வாழ்வு மற்றும் நம்பிக்கையின் ஊற்றாக இருப்பது திருநற்கருணை என்றும்   திருத்தந்தை கூறினார்

3. திருத்தந்தையின் ஜெர்மனிப் பயணத்தின் போது ஆப்ரிக்காவுக்காக உண்டியல் எடுக்கப்படும்

செப்.10,2011. இம்மாதத்தில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் ஜெர்மனிக்கு மேற்கொள்ளும் திருப்பயணத்தின் ஒரு நிகழ்வில் எடுக்கப்படும் உண்டியல், கிழக்கு ஆப்ரிக்காவில் கடும் வறட்சி மற்றும் பஞ்சத்தை எதிர்நோக்கும் மக்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று ஜெர்மன் ஆயர் பேரவைத் தலைவரான Freiburg பேராயர் Robert Zollitsch அறிவித்தார்.
இம்மாதம் 22ம் தேதி திருத்தந்தை தனது தாயகத்திற்கு மேற்கொள்ளும் முதல் அதிகாரப்பூர்வத் திருப்பயணம், அந்நாட்டுக் கத்தோலிக்கச் சமுதாயம் விசுவாசத்தில் ஆழப்படுவதற்கு உதவும் என்று நிருபர்களிடம் கூறினார் பேராயர் Zollitsch.
இம்மாதம் 22 முதல் 25 வரை இடம் பெறும் திருத்தந்தையின் திருப்பயணத்தின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கு இதுவரை 2 இலட்சத்து 50 ஆயிரத்துக்கு அதிகமான மக்கள் பதிவு செய்துள்ளார்கள் என்றும் பேராயர் கூறினார்.
இதற்கிடையே, சொமாலியாவில் புரட்சியாளர்களின் கட்டுப்பாட்டிலுள்ள வறட்சிப் பகுதிகளுக்கு மனிதாபிமான உதவிகள் தடையின்றி செல்வதற்குப் பாதுகாப்புகள் வழங்கப்படுமாறு எத்தியோப்பியா கேட்டுள்ளது.
சொமாலியாவில் இன்னும் நான்கு மாதங்களில் 7 இலட்சத்து 50 ஆயிரம் பேர் பஞ்சத்தால் இறக்கக்கூடும் என்று ஐ.நா.எச்சரித்துள்ளது.

4. ஜாம்பியாவில் 58 விழுக்காட்டினருக்கு மட்டுமே போதுமான சுகாதார வசதி உள்ளது

செப்.10,2011. ஆப்ரிக்க நாடான ஜாம்பியாவில் அடிக்கடி ஏற்படும் வெள்ளம், மோசமான தண்ணீர் வடிகால் வசதி, கழிவறைகள் இல்லாமை ஆகியவற்றால் பல கிராம மக்கள் இரவுநேரத்தில் பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்துகின்றனர் என்று ஃபீதெஸ் செய்தி நிறுவனம் கூறியது.
தங்கள் வீடுகளுக்கு 200 மீட்டருக்கும் அதிகமான தூரத்திற்கு அப்பால் கழிவறைகள் இருப்பதால் அம்மக்கள் பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்துகின்றனர் என்று அச்செய்தி நிறுவனம் மேலும் கூறியது.
இந்நிலை குறித்து ஃபீதெஸ் செய்தி நிறுவனத்திடம் கருத்துத் தெரிவித்த அந்நாட்டு ஆயர் Evans Chinyemba, தண்ணீர் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு முக்கிய கவனம் செலுத்த வேண்டியுள்ளது என்றார்.
அரசு சில பகுதிகளில் கிணறுகளை வெட்டினாலும் அவை அந்தந்த மாநிலங்களில் எல்லாப் பகுதிகளுக்கும் போதுமானதாக இல்லையென்று ஆயர் கூறினார்.
2008ம் ஆண்டில் ஓர் அரசு-சாரா அமைப்பு நடத்திய ஆய்வி்ல், ஜாம்பிய மக்களில் 58 விழுக்காட்டினருக்கு மட்டுமே போதுமான சுகாதார வசதி உள்ளது எனவும், 13 விழுக்காட்டினருக்கு கழிவறை வசதிகளே இல்லை எனவும் தெரிய வந்துள்ளது.
ஜாம்பியாவில் மலேரியாவால் ஆண்டுக்கு 50 ஆயிரம் பேர் இறக்கின்றனர். இது அந்நாட்டில் இடம் பெறும் இறப்புக்களில் 23 விழுக்காடாகும்.

5. சிறுவர்களைப் பயங்கரவாதிகளின் தாக்கத்தினின்று பாதுகாக்கும் நோக்கத்தில் புதிய பள்ளிக்கூடங்கள்

செப்.10,2011. பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் பயங்கரவாதத் தாக்குதல்கள் அடுத்தடுத்து இடம் பெற்று வரும் பகுதியில் புதிய பள்ளிக்கூடங்களைத் திறந்துள்ளது ஒரு கிறிஸ்தவ அமைப்பு.
சிறுவர்களைப் பயங்கரவாதிகளின் தாக்கத்தினின்று பாதுகாக்கும் நோக்கத்தில் "Masihi" என்ற அமைப்பு இப்பள்ளிகளை ஆரம்பித்துள்ளது.
பாகிஸ்தானில் கிறிஸ்தவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக உழைத்து வரும் இந்த Masihi அமைப்பு, அந்நாட்டு மக்கள் அனைவரின் சமூக மற்றும் கலாச்சார வளர்ச்சிக்காகவும் தன்னை அர்ப்பணித்துள்ளது.

6. பாகிஸ்தானில் கொட்டும் மழையால் சுமார் ஐம்பது இலட்சம் பேர் பாதிப்பு

செப்.10,2011. பாகிஸ்தானில் பெய்து வரும் கனமழையால் சுமார் ஐம்பது இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அந்நாட்டுக் காரித்தாஸ் நிறுவனம் அறிவித்தது.
தெற்குப் பாகிஸ்தானின் சிந்து பகுதியில் பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளதாகவும் சில பகுதிகளில் ஒரு நாளில் 166 மில்லி மீட்டர் அளவு மழை பெய்துள்ளதாகவும் பாகிஸ்தான் காரித்தாஸின் பேரிடர்த் துடைப்பு ஒருங்கிணைப்பாளர் எரிக் தயாள் தெரிவித்தார்.
கடந்த 2010ம் ஆண்டு கோடையில் பெய்த கனமழையில் நாட்டின் ஐந்தில் ஒரு பகுதி நீரில் மூழ்கியிருந்தது. அச்சமயம் காரித்தாஸ் அமைப்பு, முதல் 5 மாதங்களில் மட்டும் சுமார் 75 இலட்சம் யூரோக்களைச் செலவழித்தது என்று தயாள் கூறினார்.

7. மான்செஸ்டரில் நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னர் முதன்முறையாக மாதா பவனி

செப்.10,2011. பிரிட்டனின் மான்செஸ்டர் நகரில் நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னர் முதன்முறையாக மாதா பவனி நடைபெறவிருக்கின்றது.
மரியா, ஒப்புரவின் தாய்என்ற தலைப்பில் வருகிற அக்டோபர் முதல் தேதியன்று இது நடைபெறும்.
கிறிஸ்தவ வாழ்வு இயக்கம்”, “ஒப்புரவுமரியா தோழமை இயக்கம்ஆகிய இரண்டும் சேர்ந்து இந்தப் பவனியை நடத்துகின்றன. இந்த இயக்கங்கள் 1985ம் ஆண்டு பெரு நாட்டு லீமா நகரில் தொடங்கப்பட்டன.

8. காடுகளுக்கு அருகில் தீ வைப்பதில் கவனமாக இருக்க நாடுகளுக்கு அழைப்பு

செப்.10,2011. குப்பைகள், வேளாண்மைக் கழிவுகள் போன்ற கழிவுகளைக் காடுகள் இருக்கும் இடத்திற்கு அருகில் எரிக்காமல் இருப்பதன் மூலம் நாடுகள் 95 விழுக்காட்டு காட்டுத்தீயைக் குறைக்க முடியும் என்று ஐ.நா.ஆதரவு பெற்ற ஓர் அமைப்பு கூறியுள்ளது.
ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம் உட்பட 14 சர்வதேச நிறுவனங்கள் மற்றும் செயலகங்களை உள்ளடக்கிய CPF என்ற காடுகள் பற்றிய கூட்டுப் பங்கீட்டு அமைப்பானது இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளது.
பல நாடுகளில் காடுகள் தீயினால் பாதிப்படைவது அதிகரித்து வருவதையொட்டி இவ்வேண்டுகோளை விடுத்துள்ள இவ்வமைப்பு, பல இடங்களில் காட்டுத்தீயானது வேளாண்மை அல்லது மேய்ச்சல் நிலங்களிலிருந்து பரவுகின்றது என்று கூறியது.

No comments:

Post a Comment