1. திருநற்கருணை தேசிய மாநாட்டின் நிறைவுத் திருப்பலியில் திருத்தந்தை வழங்கிய மறையுரை
2. அன்கொனா நகரில் திருநற்கருணை தேசிய மாநாட்டின் இறுதியில் திருத்தந்தையின் மூவேளை செப உரை
3. ஜப்பான் நிலநடுக்கம், சுனாமி ஆகியவற்றின் ஆறாம் மாத நினைவு
4. வீடுகளை இழந்திருக்கும் மக்கள் ஜப்பானில் வரவிருக்கும் குளிர் காலத்தில் சந்திக்க இருக்கும் துயர்கள் குறித்து காரித்தாஸ் கவலை
5. இந்தோனேசியாவில் நடைபெறவிருக்கும் ஓர் அகிலஉலக கருத்தரங்கிற்கு திருத்தந்தையை அழைக்கும் ஆவலில் இந்தோனேசிய இஸ்லாமிய மாணவர் குழு
6. பல்வேறு பிரச்சனைகளில், அன்புப் பணிகள் மூலம், கிறிஸ்துவின் பணியாளராய் நம்மால் பதில் சொல்லமுடியும் - சிங்கப்பூர் பேராயர்
7. செல்வம் நிறைந்த சூழலில் வளர்ந்து வந்தாலும், தற்காலக் குழந்தைகள் பல பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் - ஆஸ்திரேலிய அறிக்கை
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருநற்கருணை தேசிய மாநாட்டின் நிறைவுத் திருப்பலியில் திருத்தந்தை வழங்கிய மறையுரை
செப்.12,2011. திருநற்கருணை முன் பணிந்து கிறிஸ்துவைத் திருவிருந்தில் ஏற்றுக்கொள்ளும் ஒவ்வொருவரும் அயலவரின் தேவைகளைப் புரிந்துகொண்டு, அவர்களுடன் தங்கள் உடமைகளைப் பகிர்ந்து வாழ தயாராக இருக்க வேண்டும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
இத்தாலியில் அன்கொனா நகரில் கடந்த ஒரு வாரமாகக் கொண்டாடப்பட்ட 25வது திருநற்கருணை தேசிய மாநாட்டின் நிறைவுத் திருப்பலியை இஞ்ஞாயிறன்று நிகழ்த்தி மறையுரை வழங்கிய திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
இன்றைய உலகில் பெருமளவு வளர்ந்து வரும் சுயநலம், தற்பெருமை ஆகிய குறைகளுக்கு ஒரு மாற்று மருந்தாக திருநற்கருணையைச் சார்ந்துள்ள ஆன்மீகம் விளங்குகிறது என்று திருத்தந்தை சுட்டிக் காட்டினார்.
திருநற்கருணைக்கு முன் தாழ்மையோடு மண்டியிடும் எவரும் அடுத்தவரின் தேவைகளைக் கவனியாது இருக்க முடியாது என்றும், அடுத்தவரின் பசி, தாகம், ஆடையின்மை, உடல்நலக் குறைவு ஆகிய பல்வேறு தேவைகளைத் தீர்க்காமல் போகமாட்டார்கள் என்றும் தன் மறையுரையில் வலியுறுத்தினார் திருத்தந்தை.
திருச்சபை என்ற குடும்பத்தின் இதயத்துடிப்பாக விளங்கும் திருநற்கருணை ஆன்மீகம், பிளவுகளையெல்லாம் மேற்கொள்ளும் ஒரு சிறந்த வழி என்று கூறியத் திருத்தந்தை, சமுதாயத்தில் மிகவும் நலிந்தோரை மீண்டும் மனித குலத்தின் மையத்திற்குக் கொண்டுவரும் வலிமைபெற்றது இந்த ஆன்மீகம் என்றும் கூறினார்.
அன்கொனா நகரில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமாக கூடியிருந்த மக்களுக்கு திறந்தவெளியரங்கில் திருப்பலியையும் ஞாயிறு மூவேளை செப உரையையும் வழங்கியத் திருத்தந்தை ஞாயிறு மாலை மீண்டும் வத்திக்கான் திரும்பினார்.
2. அன்கொனா நகரில் திருநற்கருணை தேசிய மாநாட்டின் இறுதியில் திருத்தந்தையின் மூவேளை செப உரை
செப்.12,2011. இந்த உலகில் நாம் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு வன்முறை ஒரு நாளும் தீர்வாகாது என்பதை உலகத் தலைவர்களும் நல்மனம் கொண்ட அனைவரும் உணர வேண்டும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கேட்டுக் கொண்டார்.
இத்தாலியின் அன்கொனா நகரில் 25வது திருநற்கருணை தேசிய மாநாட்டின் இறுதியில் திருப்பலி நிகழ்த்தியபின், அங்கு கூடியிருந்த ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்குத் தன் ஞாயிறு மூவேளை செப உரையை வழங்கியத் திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி நியூயார்க் நகரிலும், வாஷிங்டனிலும் நடைபெற்ற விமானத் தாக்குதல்களின் பத்தாம் ஆண்டு நினைவு கடைபிடிக்கப்பட்டதையொட்டி, சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்களும் திருத்தந்தை தன் உரையிலும் அமெரிக்க மக்களுக்கு அனுப்பியுள்ள செய்தியிலும் இதுபற்றி குறிப்பிட்டு வருகிறார்.
3. ஜப்பான் நிலநடுக்கம், சுனாமி ஆகியவற்றின் ஆறாம் மாத நினைவு
செப்.12,2011. அமெரிக்காவில் பல துயரங்களை விளைவித்த செப்டம்பர் 11ம் தேதியின் பத்தாம் ஆண்டு நினைவு கடைபிடிக்கப்பட்ட இந்த ஞாயிறன்று ஜப்பானிலும் மற்றொரு வேதனையின் நினைவு கடைபிடிக்கப்பட்டது.
இந்த ஆண்டு மார்ச் 11ம் தேதி ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம், சுனாமி ஆகியவற்றின் அழிவுகளில் இருந்து மீண்டுவர முயற்சிகள் செய்து வரும் ஜப்பான் மக்கள், அந்த நிகழ்வின் ஆறாம் மாத நினைவைக் கடைபிடித்தனர்.
டோக்கியோவில் ஜப்பான் கத்தோலிக்க ஆயர் பேரவையும், தேசிய கிறிஸ்தவக் கழகமும் இணைந்து அந்நகரின் Shitaya கோவிலில் வழிபாடு ஒன்றை மேற்கொண்டன. இக்கிறிஸ்தவ ஒன்றிப்பு வழிபாட்டில் பயன்படுத்தப்பட்ட விசுவாசிகள் மன்றாட்டை ஜப்பான் ஆயர் பேரவையின் தலைவரான Osaka பேராயர் Jun Ikenaga உருவாக்கியிருந்தார்.
இந்த ஆறாம் மாத நினைவையொட்டி இப்பேரிடர்களால் மிக அதிக அளவில் பாதிப்புக்களுக்கு உள்ளான Sendai மறைமாவட்டத்தின் ஆயரான Tetsuo Hiraga செய்தியொன்றை வெளியிட்டிருந்தார்.
இத்துயர நிகழ்வுகளின் ஆறாம் மாதம் முடிவடையும் இவ்வேளையில் நாம் 'புதுப் படைப்பு' என்று உயிர்ப்புத் திருநாளன்று வெளியிட்ட நமது திட்டங்களின் இரண்டாம் நிலைக்குள் அடியெடுத்து வைக்கிறோம் என்றும், இந்த இரண்டாம் நிலை 2013ம் ஆண்டு மார்ச் மாதம் நிறைவுறும் என்று எதிர்பார்ப்பதாகவும் ஆயர் இச்செய்தியில் கூறியுள்ளார்.
4. வீடுகளை இழந்திருக்கும் மக்கள் ஜப்பானில் வரவிருக்கும் குளிர் காலத்தில் சந்திக்க இருக்கும் துயர்கள் குறித்து காரித்தாஸ் கவலை
செப்.12,2011. இதற்கிடையே, ஜப்பானை மீண்டும் கட்டியெழுப்புவதில் முழு மூச்சுடன் உழைத்து வரும் ஜப்பான் காரித்தாஸ் அமைப்பின் இயக்குனர் அருள்தந்தை Daisuke Narui, FIDES செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியொன்றில், ஜப்பான் விரைவில் சந்திக்க இருக்கும் குளிர்காலத்தைக் குறித்தும், வீடுகளை இழந்திருக்கும் பல்லாயிரம் மக்கள் கடுமையான இக்குளிர் காலத்தில் சந்திக்க இருக்கும் துயர்கள் குறித்தும் எடுத்துரைத்தார்.
காவல்துறை வெளியிட்டுள்ள கணக்கின்படி, மார்ச் 11ம் தேதி நிகழ்ந்த நிலநடுக்கம், சுனாமி, ஆகிய பேரிடர்களில் இதுவரை 15,774 பேர் இறந்துள்ளனர், 4,227 பேர் காணாமற் போயுள்ளனர், மற்றும் 410,000 பேர் வீடுகளை இழந்துள்ளனர். மற்றும் அணுக்கதிர் வீச்சு ஆபத்துக்களால் மேலும் 84,000 பேர் வீடுகளை விட்டு வெளியேறும் நிர்ப்பந்தகளுக்கு ஆளாகியுள்ளனர்.
இம்மக்களை குளிர்காலத்தின் கொடுமைகளில் இருந்து காப்பது தற்போது காரித்தாஸ் சந்திக்கும் ஓர் அவசரத் தேவை என்றும், இத்தேவைகளில் தங்கள் பணம், உழைப்பு நேரம் அனைத்து வழிகளிலும் உதவி வரும் கிறிஸ்தவர்களின் தாராள மனம் பெரும் பின்பலமாக உள்ளது என்றும் ஜப்பான் காரித்தாஸ் அமைப்பின் இயக்குனர் அருள்தந்தை Daisuke Narui கூறினார்.
5. இந்தோனேசியாவில் நடைபெறவிருக்கும் அகிலஉலக கருத்தரங்கிற்கு திருத்தந்தையை அழைக்கும் ஆவலில் இந்தோனேசிய இஸ்லாமிய மாணவர் குழு
செப்.12,2011. மதங்களுக்கிடையே நடைபெறவேண்டிய உரையாடல் மற்றும் அமைதி ஆகிய கருத்துக்களை மையமாகக் கொண்டு இந்தோனேசியாவில் 2012ம் ஆண்டு நடைபெறவிருக்கும் ஓர் அகில உலக கருத்தரங்கிற்கு திருத்தந்தையை அழைக்கும் ஆவலில் வத்திக்கான் வந்திருந்த இந்தோனேசிய மாணவர் குழுவொன்றை வத்திக்கான் அதிகாரி ஒருவர் சந்தித்தார்.
HMI என்று இந்தோனேசிய மொழியில் அழைக்கப்படும் இந்தோனேசிய இஸ்லாமிய மாணவர்கள் என்ற அமைப்பின் பிரதிநிதிகள் வர்த்தகக் கோபுரங்கள் தாக்கப்பட்டதன் பத்தாம் ஆண்டு நினைவு நேரத்தில் வத்திக்கான் வந்திருந்தனர். அப்போது, பல்சமய உரையாடல் திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Jean Louis Tauran ஐச் சந்தித்தனர்.
பத்து ஆண்டுகளுக்கு முன் வர்த்தகக் கோபுரங்கள் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்க அரசு ஆப்கானிஸ்தானில் மேற்கொண்ட இராணுவத் தாக்குதல்களை வன்மையாகக் கண்டித்த இந்த மாணவர் அமைப்பு, தற்போது உலக அமைதிக்கென உழைத்து வருகிறது.
அடிப்படை வாதங்களையும், வன்முறை வழிகளையும் உலகிலிருந்து அகற்ற உழைத்து வரும் கிறிஸ்தவ மற்றும் பிற மத அமைப்புக்களின் முயற்சிகளை இந்த மாணவர் அமைப்பு தற்போது பெரிதும் ஆதரித்து வருகிறது. தங்கள் முயற்சிகளுக்கு இந்தோனேசியத் தலத்திருச்சபையும், வத்திக்கானும் ஆதரவு தரவேண்டும் என்று இவ்வமைப்பினர் கோரி வருகின்றனர்.
6. பல்வேறு பிரச்சனைகளில், அன்புப் பணிகள் மூலம், கிறிஸ்துவின் பணியாளராய் நம்மால் பதில் சொல்லமுடியும் - சிங்கப்பூர் பேராயர்
செப்.12,2011. இயற்கைப்பேரிடர், சுற்றுச்சூழல் மாற்றம், குடியேற்றதாரர்களின் பிரச்சனைகள் என்று பல்வேறு பிரச்சனைகளில், அன்புப் பணிகள் மூலம், கிறிஸ்துவின் பணியாளராய் நம்மால் பதில் சொல்லமுடியும் என்று சிங்கப்பூர் பேராயர் நிக்கோலஸ் சியா (Nicholas Chia) கூறினார்.
மனிதாபிமான பணிகளில் ஈடுபட்டுள்ள 30 நிறுவனங்களிலிருந்து வந்திருந்த 600க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்டு, சிங்கப்பூரில் முதன் முதலாக நடைபெற்ற மனிதாபிமான கருத்தரங்கில் இஞ்ஞாயிரன்று உரையாற்றிய பேராயர் நிக்கோலஸ் சியா இவ்வாறு கூறினார்.
சிங்கப்பூர் செல்வங்கள் கொழிக்கும் நாடு என்பதைச் சுட்டிக்காட்டிப் பேசிய பேராயர் Chia, பிறரன்புச் சேவைகள் உலகில் நடக்க பல மனிதாபிமான நிறுவனங்கள் உலகில் இருந்தாலும், இறுதியாக இப்பணிகளை நிறைவுக்குக் கொண்டுவருவது தனிப்பட்ட மனிதர்களின் ஒட்டுமொத்த முயற்சியே என்று சுட்டிக் காட்டினார்.
ஒவ்வொரு மனிதரும் மதிப்புடன் வாழக்கூடிய வகையில் உலகச் சமுதாயத்தை உருவாக்குவது நம் அனைவரின் கடமை என்று இக்கூட்டத்தில் உரையாற்றிய அகில உலக காரித்தாஸ் அமைப்பின் தலைமைச் செயலர் Michel Roy கூறினார்.
7. செல்வம் நிறைந்த சூழலில் வளர்ந்து வந்தாலும், தற்காலக் குழந்தைகள் பல பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் - ஆஸ்திரேலிய அறிக்கை
செப்.12,2011. தற்காலக் குழந்தைகள் நலமான, செல்வம் நிறைந்த சூழலில் வளர்ந்து வந்தாலும், அவர்களில் பலர் கவலைதரும் பல பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஆஸ்திரேலியாவில் அண்மையில் வெளியிடப்பட்டுள்ள ஓர் அறிக்கை கூறுகிறது.
'குழந்தைகள் மற்றும் இளையோருக்கென்று ஆஸ்திரேலிய சமுதாயச் சூழலை சீரமைப்பது' என்ற தலைப்பில் ஆஸ்திரேலிய கிறிஸ்தவ அமைப்பு ஒன்று மேற்கொண்ட ஓர் ஆய்வின் முடிவுகள் கடந்த வார இறுதியில் வெளியாயின.
சமுதாய முன்னேற்றம், கல்வி, பொருளாதார உறுதிப்பாடு ஆகிய பல்வேறு அம்சங்களில் ஆஸ்திரேலியா மேலான இடங்களை வகித்து வந்தாலும், குழந்தைகள் சந்திக்கும் பல ஆபத்தான பிரச்சனைகளுக்கு இச்சமுதாயம் சரியான கவனம் செலுத்தவில்லை என்று இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
மன நலம் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள், தங்கள் சோகத்திலிருந்து மீள மருந்துகளை நாடும் குழந்தைகள் ஆகியோரின் எண்ணிக்கை ஒவ்வோர் ஆண்டும் அதிகரித்து வருகிறது என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
மணமுறிவு செய்து கணவன், மனைவி ஆகியோர் பிரிந்து வாழும் குடும்பங்களே இந்த நிலைக்குப் பெரியதொரு காரணம் என்றும் இந்த ஆய்வின் முடிவுகள் கூறுகின்றன.
No comments:
Post a Comment