Thursday 1 September 2011

Catholic News - hottest and latest - 31 August 2011

1. கத்தோலிக்கர்களாகிய நாம் கிறிஸ்துவை உலகறியச்  செய்வதற்கு தவறியதற்காக மனம் வருந்த வேண்டும் - திருத்தந்தை

2. கத்தோலிக்கத் திருச்சபையும், அகில உலக லூத்தரன் ஒன்றியமும் இணைந்து தாயாரித்து வரும் அறிக்கை

3. திருத்தந்தை பிரித்தானிய அரசில் மேற்கொண்ட பயணத்தின் முதல் ஆண்டு நிறைவு கொண்டாட்டங்கள்

4. ஜப்பானில் புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் பிரதமர் சிறப்பான முறையில் செயல்படுவார் ஆயர் Isao Kikuchi

5. நைஜீரியாவில் இரு குழுக்களிடையே உருவான வன்முறை வேதனையையும், வெட்கத்தையும் தருகின்றது - ஆப்ரிக்க ஆயர் Ignatius Ayau Kaigama

6. பாகிஸ்தானில் பாப்பிறை மறைபணிக் கழகங்கள் துவக்கப்பட்டதன் 60ம் ஆண்டு நிறைவைக் கொண்டாடத் திட்டமிடப்பட்டுள்ளது

7. காணாமல் போனவர்களுக்கான அகில உலக நாள் - ஐ.நா.அவை அறிவித்துள்ளது

------------------------------------------------------------------------------------------------------

1. கத்தோலிக்கர்களாகிய நாம் கிறிஸ்துவை உலகறியச்  செய்வதற்கு தவறியதற்காக மனம் வருந்த வேண்டும் - திருத்தந்தை

ஆக.31,2011. கத்தோலிக்கர்களாகிய நாம் தொட்டில் குழந்தைகள் போல அடைபட்டு, கிறிஸ்துவை உலகறியச்  செய்வதற்கு தவறியதற்காக மனம் வருந்த வேண்டும் என்று திருத்தந்தை கூறினார்.
திருத்தந்தை இறையியல் பேராசிரியராகப் பணியாற்றியபோது, அவர் வழிநடத்தி முனைவர் பட்டம் பெற்ற மாணவர்களுடன் கோடை விடுமுறை இல்லமான காஸ்தல் கந்தோல்போவில், கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்த திருத்தந்தை, அக்கூட்டத்தின் இறுதியில் அவர்களுடன் நிகழ்த்திய திருப்பலியில் மறையுரை வழங்கும்போது இவ்வாறு கூறினார்.
கிறிஸ்து என்ற உண்மையை, அவர் இன்னும் நம்முடன் வாழ்கிறார் என்ற விசுவாசத்தை உலகம் கேட்பதற்கு ஆவலாக இருக்கும் வேளையில், அவ்வுண்மைகளை எடுத்துச் சொல்வதற்கு கத்தோலிக்கர்களாகிய நாம் காட்டி வந்துள்ள தயக்கம் பெரும் வருத்தத்திற்குரியதென்று திருத்தந்தை கூறினார்.
கடவுளைத் தேடும் உள்ளத்தைப் பற்றி விவரிக்கும் திருப்பாடல் 63ன் என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது: நீரின்றி வறண்ட தரிசு நிலம் போல என் உடல் உமக்காக ஏங்குகின்றதுஎன்ற வரிகளை எடுத்துக்கூறி, திருத்தந்தை தன் கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்.


2. கத்தோலிக்கத் திருச்சபையும், அகில உலக லூத்தரன் ஒன்றியமும் இணைந்து தாயாரித்து வரும் அறிக்கை

ஆக.31,2011. திருச்சபைச் சீர்திருத்தங்களைப் பற்றி மார்ட்டின் லூத்தர் அறிக்கை விடுத்த 500ம் ஆண்டு நிறைவையொட்டி, கத்தோலிக்கத் திருச்சபையும், அகில உலக லூத்தரன் ஒன்றியமும் இணைந்து அறிக்கையொன்றை தயாரித்து வருவதாக வத்திக்கான் அதிகாரி ஒருவர் கூறினார்.
திருத்தந்தை 16ம் பெனடிக்ட் செப்டம்பர் மாதம் ஜெர்மனிக்குத் திருப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் சூழலில், KNA எனப்படும் ஜெர்மன் கத்தோலிக்க நிறுவனம் ஒன்றுக்குப் பேட்டியளித்த கிறிஸ்தவ ஒன்றிப்புக்கான திருப்பீட அவையின் தலைவர் கர்தினால்  Kurt Koch இவ்வாறு கூறினார்.
தற்போது தயாரிக்கப்பட்டு  வரும் அறிக்கையில், 2000 ஆண்டுகளாய் வளர்ந்து வந்துள்ள கிறிஸ்தவ வரலாற்றின் ஒரு பகுதியாக திருச்சபை சீர்திருத்தங்களைப் பற்றிய சிந்தனைகள் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
திருத்தந்தை ஜெர்மனியில் மேற்கொள்ளவிருக்கும் பயணம் கிறிஸ்தவ ஒன்றிப்பை மையமாகக் கொண்டிருக்கும் என்ற கருத்து தனக்கு மிகுந்த உற்சாகம் தருவதாக ஜெர்மன் பிரதமர் Angela Merkel கூறியுள்ளார்.


3. திருத்தந்தை பிரித்தானிய அரசில் மேற்கொண்ட பயணத்தின் முதல் ஆண்டு நிறைவு கொண்டாட்டங்கள்

ஆக.31,2011. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய பகுதிகளில் மேற்கொண்ட திருப்பயணத்தின் முதல் ஆண்டு நிறைவு நெருங்கி வருவதையொட்டி, அப்பயணத்தின் நல்ல நினைவுகளை கொண்டாட வேண்டுமென Westminster பேராயர் வின்சென்ட் நிக்கோல்ஸ் கூறினார்.
2010ம் ஆண்டு செப்டம்பர் 16 முதல் 19 வரை திருத்தந்தை பிரித்தானிய அரசில் மேற்கொண்ட பயணத்தின் முதல் ஆண்டு நிறைவை 'பாப்பிறை பெனடிக்ட் கொண்டாட்டங்கள்' என்று நினைவுகூரும்படி பேராயர் நிக்கோல்ஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
இத்துடன், செப்டம்பர் 18 ஞாயிறன்று, இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து தலத்திருச்சபை Home Mission Sunday அதாவது, உள்நாட்டில் மறைபரப்புப் பணி ஞாயிறை சிறப்பிக்கவிருக்கிறது.
நாம் பயணம் செய்யும் பாய்மரங்களில் புதியக்காற்றுஎன்ற கருத்து இந்த ஞாயிறுக்கென குறிக்கப்பட்டுள்ளது என்பதைச் சுட்டிக் காட்டிய பேராயர் நிக்கோல்ஸ், திருத்தந்தை சென்ற ஆண்டு பிரித்தானிய அரசில் மேற்கொண்ட திருப்பயணம் தலத்திருச்சபையின் பயணத்தில் புதிய காற்றைக் கொண்டு வந்ததென்று குறிப்பிட்டார்.


4. ஜப்பானில் புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் பிரதமர் சிறப்பான முறையில் செயல்படுவார் ஆயர் Isao Kikuchi

ஆக.31,2011. நிலநடுக்கம், சுனாமி ஆகியவற்றின் பாதிப்புக்களிலிருந்து ஜப்பானை மீண்டும் கட்டியெழுப்பும் முயற்சிகளில் புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் பிரதமர் சிறப்பான முறையில் செயல்படுவார் என்ற தன் நம்பிக்கையை வெளியிட்டார் அந்நாட்டின் ஆயர் ஒருவர்.
ஜப்பானில் இவ்வாண்டு மார்ச் மாதம் நிகழ்ந்த இந்த இயற்கைக் கொடூரத்தின் மத்தியில் அங்கு கத்தோலிக்கத் துறவு சபையினரும், மற்ற கிறிஸ்தவ பிறரன்பு நிறுவனங்களும் மேற்கொண்ட உன்னதமான பணிகளை புதிய பிரதமர் உணர்வார் என்றும் ஜப்பான் காரித்தாசின் தலைவர் ஆயர் Isao Kikuchi கூறினார்.
இயற்கைப் பேரழிவு மற்றும் அணு உலைகளின் ஆபத்து ஆகியவை நிகழ்ந்தபோது, காரித்தாஸ் அமைப்பு ஜப்பானில் மேற்கொண்ட பணிகளைக் கண்ட அந்நாட்டு மக்களின் எண்ணங்களில் காரித்தாஸ் அமைப்பைக் குறித்த மதிப்பு பல மடங்காக உயர்ந்துள்ளது என்று ஆயர் Kikuchi மேலும் கூறினார்.
மார்ச் மாதம் ஜப்பான் சந்தித்த இடர்களின்போது உறுதியான முறையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்ற விமர்சனத்தை அடுத்து, முன்னாள் பிரதமர் Naoto Kan பதவி விலகியதைத் தொடர்ந்து, Yoshihiko Noda புதிய பிரதமராக இச்செவ்வாயன்று பொறுப்பேற்றுள்ளார்.


5. நைஜீரியாவில் இரு குழுக்களிடையே உருவான வன்முறை வேதனையையும், வெட்கத்தையும் தருகின்றது - ஆப்ரிக்க ஆயர் Ignatius Ayau Kaigama

ஆக.31,2011. ஆப்ரிக்காவின் நைஜீரியாவில் இரு குழுக்களிடையே இத்திங்கள் இரவு உருவான வன்முறை வேதனையையும், வெட்கத்தையும் தருகின்றது என்று ஆப்ரிக்க ஆயர் ஒருவர் கூறினார்.
திங்கள் இரவு இரமதான் தொழுகைக்கென சென்றிருந்த ஓர் இஸ்லாமியக் குழுவுக்கும், அதேபகுதியில் வழிபாடுகள் மேற்கொள்ள சென்றிருந்த ஒரு கிறிஸ்தவ குழுவுக்கும் இடையே உருவான வாக்குவாதங்கள் வன்முறையாக வெடித்ததால் உயிர் இழப்புக்கள், காயங்கள், மற்றும் பொருட்களுக்குச் சேதங்கள் ஏற்பட்டன என்று Jos மறைமாவட்ட ஆயர் Ignatius Ayau Kaigama, FIDES செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியொன்றில் கூறினார்.
நைஜீரியாவில் கடந்த சனிக்கிழமை ஐ.நா.தலைமையகம் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்நாட்டில் இன்னும் பதட்டமானச் சூழலே நிலவி வருவதாக FIDES செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
ஆயர்கள் என்ற முறையில் அமைதிக்கான அழைப்பையும், வேண்டுகோள்களையும் அனைவரும் விடுத்து வருகிறோம். எனினும், அரசு தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வன்முறைகள் தொடராதவாறு பாதுகாக்க வேண்டும் என்று ஆயர் Kaigama வலியுறுத்தினார்.


6. பாகிஸ்தானில் பாப்பிறை மறைபணிக் கழகங்கள் துவக்கப்பட்டதன் 60ம் ஆண்டு நிறைவைக் கொண்டாடத் திட்டமிடப்பட்டுள்ளது

ஆக.31,2011. பாகிஸ்தான் கத்தோலிக்க தலத் திருச்சபை விரைவில் துவங்கவிருக்கும் மறைப்பணி ஆண்டுக்கான கருப்பொருள் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் பாப்பிறை மறைபணிக் கழகங்கள் துவக்கப்பட்டதன் 60ம் ஆண்டு நிறைவையொட்டி, இவ்வாண்டினை மறைப்பணி ஆண்டாகக் கொண்டாடத் திட்டமிடப்பட்டுள்ளது என்று பாப்பிறை மறைபணிக் கழகங்களின் பாகிஸ்தான் ஒருங்கிணைப்பாளரான அருள்தந்தை Mario Rodrigues கூறினார்.
வருகிற செப்டம்பர் 30ம் தேதி ஆரம்பமாகும் இந்த மறைப்பணி ஆண்டின் கருப்பொருளாக, பாகிஸ்தான் சமுதாயத்தில் உரிமைகள், சுதந்திரம், கிறிஸ்தவர்களின் பங்கு ஆகியவை முன்வைக்கப்பட்டுள்ளன.
பாகிஸ்தானை ஓர் உண்மையான மக்கள் ஆட்சி நாடாக மாற்றுவதில் கிறிஸ்துவர்கள் ஆற்ற வேண்டிய பங்கு குறித்து இந்த ஆண்டில் சிந்திக்க இது ஒரு சிறந்த வாய்ப்பு என்று அருள்தந்தை Rodrigues எடுத்துரைத்தார்.
பாகிஸ்தானில் உள்ள நல் மனம் கொண்ட பலருடன் கிறிஸ்தவர்களும் இணைந்து, இந்நாட்டில் ஒற்றுமையையும், மதங்களுக்கிடையே நல்லுறவையும் வளர்க்க முடியும் என்று தான் நம்புவதாக அருள்தந்தை Rodrigues மேலும் கூறினார்.


7. காணாமல் போனவர்களுக்கான அகில உலக நாள் - ஐ.நா.அவை அறிவித்துள்ளது

ஆக.31,2011. காணாமல் போனவர்களுக்கான அகில உலக நாளாக ஆகஸ்ட் 30ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. உலகெங்கும் காணாமல்போன பல்லாயிரக் கணக்கானோர் மற்றும் அவர்கள் பற்றிய தகவல்களுக்காக காத்துக்கொண்டிருக்கும் அவர்களது உறவினர்களின் துயரம் குறித்து கவனத்தை ஈர்க்கும் வகையில் இச்செவ்வாயன்று ஐ.நா.அவை இந்த நாளை அறிவித்துள்ளது.
மனித உரிமைகள் பல வழிகளில் மீறப்படும் வகையில், சில நாடுகளில் ஆட்களைக் கட்டாயமாக கடத்தி, அல்லது வேறு வழியில் காணாமல் போகச் செய்யும் நடைமுறை மேற்கொள்ளப்படுவதை, இந்த நாளில் ஐ.நா. கண்டித்திருக்கிறது.
அதேவேளை, காணாமல் போனவர்களின் குடும்பங்களின் தேவைகள் எப்போதாவதுதான் கவனிக்கப்படுவதாகக் கூறும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், அத்தகைய குடும்பங்களுக்கு மேலும் உதவிகள் தேவை என்றும் கோரியுள்ளது.
உலகெங்கும் மொத்தமாக எத்தனை பேர் காணாமல் போயிருக்கிறார்கள் என்பது எவருக்கும் நிச்சயமாகத் தெரியாது. ஆனால், இந்த எண்ணிக்கை லட்சக்கணக்கில் இருக்கும் என்று நம்பப்படுகின்றது. இத்தகைய இக்கட்டான சூழ்நிலை வருடக்கணக்கில் தொடரலாம் என்று செஞ்சிலுவைச் சங்கம் கூறுகிறது.
கட்டாயமாகக் காணாமல் போகச் செய்யப்படுபவர்கள் குறித்த ஐ.நா. சாசனம் கடந்த வருடம் முதல் அமலுக்கு வந்தது. ஆனால், கட்டாயமாகக் காணாமல் போகச் செய்யப்படுதல் இன்னமும் ஒரு கவலைக்குரிய போக்காகத் தொடர்கிறதென ஐ.நா. அதிகாரிகள் கூறுகிறார்கள்.
சில நாடுகளில் மக்களாட்சியை முறையாகக் கோருவோரை அடக்கவோ, குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை அடக்கவோ அல்லது பயங்கரவாதத்தை அடக்கவோ இது ஓர் ஆயுதமாக பயன்படுத்தப்படுவதாகவும் ஐநா அதிகாரிகள் கூறுகிறார்கள்.
கட்டாயமாகக் காணாமல் செய்யப்படுதல் தடை செய்யப்பட வேண்டும் என்றும், தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் சட்ட நடவடிக்கைகளுக்கு உரிமையுடையவர்கள் என்றும், அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறியும் உரிமை அவர்களது குடும்பத்தினருக்கும் உள்ளது என்றும் ஐ.நா. வலியுறுத்துகிறது.
 

No comments:

Post a Comment