Monday, 26 September 2011

Catholic News - hottest and latest - 23 September 2011

 
1.  பெர்லின் மற்றும் எர்ஃபூர்ட் நகரங்களில் திருத்தந்தை

2.  ஸ்காண்டிநேவியாவில் கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது

3.  திருமணச் சட்டத்தின் அரசியலமைப்பு ரீதியான பாதுகாப்பை குறைத்து மதிப்பிட வேண்டாம்

4.  சிறுபான்மை மதத்தவரின் உரிமைகள் மதிக்கப்பட மத்தியப்பிரதேச ஆளுனரிடம் விண்ணப்பம்

5.  மியான்மார் நாட்டைக் கட்டியெழுப்புவதில் மதத்தலைவர்களின் ஈடுபாடு வலியுறுத்தப்பட்டுள்ளது

6.  முன்னாள் போராளிகள் மற்றும் சந்தேக நபர்கள் 1,500 பேர் 30ம் தேதி விடுவிக்கப்படுவர்

------------------------------------------------------------------------------------------------------
1.  பெர்லின் மற்றும் எர்ஃபூர்ட் நகரங்களில் திருத்தந்தை

செப்.23,2011. ஜெர்மனியில் நான்கு நாள் பயணம் மேற்கொண்டுவரும் திருத்தந்தை, இவ்வியாழனன்று முதல் நிகழ்வுகளாக, தலைநகர் பெர்லினில் ஜெர்மன் அரசுத்தலைவர், பிரதமர் ஆகியோரைத் தனித்தனியே சந்தித்து உரையாடினார். மாலையில் பெர்லின் திருப்பீடத் தூதரகத்திலிருந்து 5 கிலோ மீட்டரில் இருக்கின்ற வரலாற்று சிறப்புமிக்க Reichstag என்ற நாடாளுமன்றக் கட்டிடத்திற்குச் சென்றார். இந்த வரலாற்று சிறப்புமிக்க Reichstag கட்டிடத்திற்குச் சென்ற திருத்தந்தையை ஜெர்மன் கூட்டுக் குடியரசின் நாடாளுமன்ற அவைத் தலைவர் Norbert Lammert வரவேற்று அந்த அவைக்கு அழைத்துச் சென்றார். பலத்த நீண்ட நேரக் கைதட்டல்வரவேற்புகளுக்கு மத்தியில் ஜெர்மன் நாடாளுமன்றத்தில் இருபது நிமிடங்கள் உரையாற்றினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். ஜெர்மானியர்கள் மதத்தைப் புறக்கணிக்க வேண்டாம், வெற்றியைத் தேடுவதைவிட நீதியைத் தேடுங்கள் என்று குரல் கொடுத்தார். செவிசாய்க்கும் இதயம் : சட்டத்தின் அடித்தளங்கள் பற்றிய சிந்தனைகள் என்ற தலைப்பில் இவ்வுரை அமைந்திருந்தது.
பின்னர் இந்த Reichstag கட்டிடத்தில் 15 பேர் அடங்கிய யூதமதப் பிரதிநிதிக் குழுவினரைச் சந்தித்தார் திருத்தந்தை.
யூதமதப் பிரதிநிதிகளிடம் விடைபெற்று, அந்த Reichstag கட்டிடத்திலிருந்து பெர்லின் நகர் ஒலிம்பிக் விளையாட்டுத் திடலுக்குச் சென்றார். இந்த ஒலிம்பிக் திடலில் சுமார் எழுபதாயிரம் விசுவாசிகள் திருத்தந்தையின் திருப்பலியில் கலந்து கொள்வதற்கு ஆர்வமுடனும் பக்தியுடனும் அமர்ந்திருந்தனர்.
இயேசுவில் நிலைத்திருக்க விசுவாசிகளுக்கு அழைப்பு விடுத்து இங்கு திருப்பலியை நிறைவேற்றிய திருத்தந்தை, பின்னர் பெர்லின் திருப்பீடத் தூதரகம் சென்று இரவு உணவருந்தி உறங்கச் சென்றார்.
இத்திருப்பயணத்தின் இரண்டாம் நாளாகிய இவ்வெள்ளி காலை 9 மணியளவில் பெர்லின் திருப்பீடத் தூதரகத்தில் ஜெர்மனியிலுள்ள சுமார் 40 இலட்சம் முஸ்லீம்கள் சார்பாக வந்த அம்மதப் பிரதிநிதிகள் குழுவைச் சந்தித்தார்.
இச்சந்திப்புக்குப் பின்னர் பெர்லினின் தெகெல் சர்வதேச விமான நிலையம் சென்று எர்ஃபூர்ட் நகருக்கு விமானத்தில் புறப்பட்டார். எர்ஃபூர்ட் புனித அன்னை மரியா பேராலயம் சென்ற பின்னர், அகுஸ்தீனியன் துறவு சபையினர் வாழ்ந்த துறவு இல்லம் சென்றார். அங்கு எவாஞ்சலிக்கல் கிறிஸ்தவ சபையின் 15 பிரதிநிதிகளைச் சந்தித்தார் திருத்தந்தை.
அந்தத் துறவு இல்ல ஆலயத்தில் கிறிஸ்தவ ஒன்றிப்பு வழிபாடும் நடைபெற்றது. சுமார் 300 பேர் பங்கு கொண்ட இவ்வழிபாட்டில் மறையுரையும் ஆற்றினார் திருத்தந்தை.

2.  ஸ்காண்டிநேவியாவில் கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது

செப் 23, 2011.  ஸ்காண்டிநேவியாவில் கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை அண்மைக்காலங்களில் அதிகரித்து வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
ஜெர்மனியின் Paderborn  நகரில் கூடிய தல ஆயர்களின் கூட்டத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, கத்தோலிக்க மறைக்கு மனம் திரும்புவோர் மற்றும் திருமுழுக்குப் பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரியவந்துள்ளது. அண்மைப் புள்ளி விவரங்களின்படி, டென்மார்க், ஸ்வீடன், ஃபின்லாந்து, நார்வே மற்றும் ஐஸ்லாந்தில் ஏறத்தாழ நான்கு இலட்சத்து முப்பதாயிரம் கத்தோலிக்கர்கள் வாழ்கின்றனர். நார்வேயின் Trondheim-Tromso மறைமாவட்டத்தில் கடந்த ஆண்டில் கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை இரு மடங்காகியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்காண்டிநேவிய நாடுகளில் புனிதத் தலங்களை சந்திக்கும் திருப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தும், கிறிஸ்தவ ஒன்றிப்பு முயற்சிகள் பெருகியும் வரும் சூழலில், வரும் ஆண்டு மார்ச் மாதம் ஸ்காண்டிநேவிய ஆயர் பேரவை, லூத்தரன் ஆயர்களுடனான கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது.

3.  திருமணச் சட்டத்தின் அரசியலமைப்பு ரீதியான பாதுகாப்பை குறைத்து மதிப்பிட வேண்டாம்

செப் 23, 2011.  அமெரிக்க ஐக்கிய நாட்டின் திருமணச் சட்டத்தின் அரசியலமைப்பு ரீதியான பாதுகாப்பைக் குறைத்து மதிப்பிட முயலும் அரசுத்தலைவர் பாரக் ஒபாமாவின் செயல் குறித்து தன் கவலையை வெளியிட்டுள்ளார் அமெரிக்க ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் திமோத்தி டோலன்.
திருமணத்தின் புனிதத்துவத்தை குறைவாக மதிப்பிட முயல்வது, அமெரிக்க மக்கள் ஒழுக்க ரீதிக் குருடர்களாக உள்ளார்கள் என அரசுத்தலைவர் தவறாகக் கணிப்பது போல் உள்ளது எனக் குற்றஞ்சாட்டினார் அவர்.
ஒரு தாயாலும் தந்தையாலும் அன்புச் செய்யப்படவேண்டியதை எதிர்பார்க்கும் உரிமை ஒவ்வொரு குழந்தைக்கும் உள்ளது என்ற பேராயர் டோலன், ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையேயான‌ ஐக்கிய‌மாக‌ இருக்கும் திரும‌ண‌மே குழந்தைக‌ளுக்கும் பொதுந‌ல‌னுக்கும் உகந்த‌து என‌வும் கூறினார்.

4.  சிறுபான்மை மதத்தவரின் உரிமைகள் மதிக்கப்பட மத்தியப்பிரதேச ஆளுனரிடம் விண்ணப்பம்

செப் 23, 2011.  இந்திய அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள மதிப்பீடுகளும், தனிமதச்சார்பற்ற நிலைகளும் பாதுகாக்கப்படவேண்டும் என மத்திய பிரதேசப் புதிய ஆளுநனரிடம் விண்ணப்பம் ஒன்றை விடுத்துள்ளனர் அம்மாநில மதத்தலைவர்கள்.
புதிய ஆளுனர் ராம் நரேஷ் யாதவைச் சந்தித்த அம்மாநில இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ, சீக்கிய மற்றும் புத்த மதத்தலைவர்கள் குழு, நாட்டின் தனிமதச் சார்பற்ற மதிப்பீடுகளும் சிறுபான்மையரின் உரிமைகளும் பாதுகாக்கப்படவேண்டும் என விண்ணப்பித்தது.
2004ம் ஆண்டு மத்திய பிரதேசத்தில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்ததிலிருந்து கிறிஸ்தவர்கள் மீது நூற்றுக்கும் மேலான தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

5.  மியான்மார் நாட்டைக் கட்டியெழுப்புவதில் மதத்தலைவர்களின் ஈடுபாடு வலியுறுத்தப்பட்டுள்ளது

செப் 23, 2011.  ஜனநாயகத்தை நோக்கி மியான்மார் நாடு சென்று கொண்டிருக்கும் வேளையில், நாட்டைக் கட்டியெழுப்புவதில் மதத்தலைவர்களின் ஈடுபாட்டின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தியுள்ளனர் அந்நாட்டுக் கத்தோலிக்கர்.
நாட்டில் நல் மாற்றத்தைக் கொணர அரசியல் தலைவர்களுடன் இணைந்து உழைக்க வேண்டிய பொறுப்பு தலத்திருச்சபைக்கு உள்ளது என்றார் யன்கோன் பேராயர் சார்ல்ஸ் போ.
நாட்டின் சூழல்களை மேம்படுத்தவும், நிலையான அமைதியைப் பெறவும் மதத்தலைவர்களுடன் இணைந்து உழைக்க அரசியல் தலைவர்களும் முன்வரவேண்டும் என்ற அழைப்பையும் விடுத்தார் பேராயர் போ. மதம் என்பது கலாச்சாரத்தில் ஆழமாக வேரூன்றிப்போயுள்ள இந்த நாட்டில் அரசியல் தலைவர்கள் மதத்தலைவர்களைப் புறக்கணிக்க முயல்வது கவலை தருவதாக உள்ளது என மேலும் கூறினார் பேராயர்.

6.  முன்னாள் போராளிகள் மற்றும் சந்தேக நபர்கள் 1,500 பேர் 30ம் தேதி விடுவிக்கப்படுவர்

செப் 23, 2011.  புனர்வாழ்வு அளிக்கப்பட்ட 1500 முன்னாள் போராளிகள், விடுதலைப் புலிகள் என சந்தேகத்தில் கைது செய்யப்பட்டோர்இம்மாதம் 30ம் தேதி வவுனியா கலாòdசார மண்டபத்தில் வைத்து அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.அதன் பின்னர் புனர்வாழ்வு அளிக்கப்படும் எஞ்சிய முன்னாள் விடுதலைப்புலிச் சந்தேக நபர்களின் தொகை 1200 ஆகக் குறைவடையும் எனவும் அந்த அலுவலக உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
புனர்வாழ்வுப் பயிற்சி வழங்குமாறு நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டவர்கள் மற்றும் புனர்வாழ்வுப் பயிற்சியைப் பூர்த்தி செய்யாதவர்கள் ஆகிய தரப்பினர் மேற்குறிப்பிட்ட தொகையில் அடங்குவர் எனவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
புனர்வாழ்வுப் பயிற்சியை மேற்கொண்டு வரும் அனைவரும் இந்த ஆண்டு முடிவுக்குள் சமூகத்தில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலை புனரமைப்பு அமைச்சகத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
தற்போது வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இயங்கி வரும் 7 புனர்வாழ்வு மையங்களில் புனர்வாழ்வு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருவதுடன் இந்த மையங்கள் விரைவில் ஐந்தாகக் குறைக்கப்படவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
வன்னி இறுதிப் போரின் போது பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்த 11,664 விடுதலைப் புலிகள் உறுப்பினர்களில் இதுவரை புனர்வாழ்வு அளிக்கப்பட்ட 8500 பேர் சமூகத்துடன் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment