1. திருத்தந்தையின் மூவேளை செப உரை
2. கர்தினால் தெஸ்குரின் மரணத்தையொட்டி திருத்தந்தையின் இரங்கற்தந்தி
3. அயர்லாந்து அரசின் அறிக்கைக்கு திருப்பீடத்தின் பதில்மொழி
4. வியட்நாமில் 15 கத்தோலிக்க இளைஞர்கள் கைது
5. இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிந்து ஈராண்டுகள் கடந்த பிறகும், அங்கு அமைதி கானல் நீரைப் போல் உள்ளது - கத்தோலிக்க ஆயர்
6. அரசுக்கும், பொதுவுடைமை புரட்சியாளர்களுக்கும் இடையே அமைதிப் பேச்சு வார்த்தைகள் தொடர்வதற்கு பிலிப்பின்ஸ் தலத்திருச்சபையின் முயற்சிகள் தேவை
7. விஜயபுரம் முன்னாள் ஆயர் பீட்டர் துருத்திக்கோணம் இறைபதம் சேர்ந்தார்.
------------------------------ ------------------------------ ------------------------------ ----------------------
இந்திய ஆசிரியர் பெருமக்கள் எல்லாருக்கும் இனிய நல்வாழ்த்துக்கள்
1. திருத்தந்தையின் மூவேளை செப உரை
செப் 05, 2011. சகோதரத்துவ உணர்வுடன் கூடிய திருத்தங்களில் ஈடுபடுவதுடன் ஒன்றிணைந்து செபிப்பது நம் இலக்கணமாக இருக்கட்டும் என அழைப்பு விடுத்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இஞ்ஞாயிறு திருப்பலி வாசகங்களையொட்டி நண்பகல் மூவேளை செப உரையை காஸ்தல் கந்தோல்ஃபோ கோடை விடுமுறை இல்லத்திலிருந்து வழங்கிய திருத்தந்தை, பிறரைத் திருத்தும்போது சகோதரத்துவ உணர்வுடன் செயல்படுவது என்பது, இதயத்தில் எளிமையையும் தாழ்ச்சியையும் எதிர்பார்க்கிறது என்றார். ஒன்றிணைந்தக் குடும்பமாகச் செபிப்பது அதற்கு மேலும் உதவும் எனவும் கூறினார் பாப்பிறை.
சகோதரத்துவ அன்பு என்பது இருபக்கத்துப் பொறுப்புணர்வுடன் இணைந்து வருகிறது என்பதால், நம் சகோதரன் நமக்கு எதிராகக் குற்றமிழைக்கும்போது சகோதரனுடன் தனியாகப் பேச முயல வேண்டும் என்றார். தனக்குச் செவிமடுக்காத சகோதரனிடம் எவ்விதம் அன்பு கொண்டு திருத்த முயல வேண்டும் என இயேசு வழங்கியுள்ள அறிவுரைகளையும் சுட்டிக்காட்டினார் பாப்பிறை.
தனிப்பட்ட முறையில் செபிப்பது முக்கியத்துவம் நிறைந்தது எனினும், குழுவாக இணைந்து செபிப்பதன் அவசியத்தையும் அதன் முக்கியத்துவத்தையும் தன் நண்பகல் மூவேளை செப உரையில் மேலும் எடுத்துரைத்தார் பாப்பிறை.
2. கர்தினால் தெஸ்குரின் மரணத்தையொட்டி திருத்தந்தையின் இரங்கற்தந்தி
செப் 05, 2011. சமூகத்தொடர்புக்கானld திருப்பீட அவையின் முன்னாள் தலைவர் கர்தினால் Andrzej Maria Deskur, இறைபதம் அடைந்ததைத்தொடர்ந்து, போலந்து தலத்திருச்சபைக்குld தன் ஆழ்ந்த அனுதாபங்களை வெளியிட்டு இரங்கற்தந்தி ஒன்றை அனுப்பியுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
போலந்தின் Krakow கர்தினால் Stanislaw Dziwiszக்கு திருத்தந்தை அனுப்பியுள்ள இரங்கற் தந்தியில், கர்தினால் தெஸ்குரின் பணிகளை வெகுவாகப் பாராட்டியுள்ளதுடன், அவரின் மரணத்தால் துன்புறும் அனைவருடன் ஒருமைப்பாட்டை அறிவித்து செபத்திற்கான உறுதிமொழிகளை வழங்கியுள்ளார்.
1924ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 29ந்தேதி போலந்தில் பிறந்த கர்தினால் தெஸ்குர், 1952ல் இளங்குருவாக இருந்தபோதே திருப்பீடச் செயலகத்தில் பணிபுரிய அழைக்கப்பட்டு அதன்பின் திருப்பீடத் தலைமையகத்தில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். சமூகத்தொடர்புக்கானத் திருப்பீட அவையின் தலைவராகப் பணியாற்றியுள்ள இவர், வெரித்தாஸ் வானொலியின் ஆசிய ஒலிபரப்பு மேம்பாட்டிற்காக அதிக ஊக்கமளித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 1985ம் ஆண்டு திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பரால் இவர் கர்தினாலாக உயர்த்தப்பட்டார்.
சனியன்று காலமான கர்தினால் தெஸ்குரின் அடக்கச் சடங்கு இச்செவ்வாய் காலை வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் இடம்பெறும்.
3. அயர்லாந்து அரசின் அறிக்கைக்கு திருப்பீடத்தின் பதில்மொழி
செப் 05, 2011. அயர்லாந்து குருக்கள் மீதானப் பாலினக் குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் வேண்டி அந்நாட்டு அரசு திருப்பீடத்திற்கு அனுப்பிய அறிக்கைக்குத் திருப்பீடம் தெளிவான விளக்கங்களுடன் பதில்மொழி வழங்கியுள்ளதாக திருப்பீடப் பேச்சாளர் அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி தெரிவித்தார்.
அயர்லாந்து அரசால் தங்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் தங்கள் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கும் திருப்பீடம் ஆழ்ந்த மற்றும் மரியாதையுடன் கூடிய அக்கறையை வெளிப்படுத்தி விளக்கம் வழங்கியுள்ளதாகத் தெரிவித்த இயேசு சபை குரு ஃபெதரிக்கோ லொம்பார்தி, சிறார்களையும் இளையோரையும் பாதுகாக்க வேண்டும் என்பதை முதன்மை குறிக்கோளாகக்கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள திருப்பீடத்தின் இந்தப் பதில்மொழி அறிக்கை, அயர்லாந்து அரசுக்கும் திருச்சபைக்கும் இடையே ஒத்துழைப்பையும் நம்பிக்கையையும் உருவாக்க உதவும் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டார்.
அயர்லாந்து குருக்கள் மீதான பாலினக் குற்றச்சாட்டுகளில் திருப்பீடம் விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என அயர்லாந்து அரசு, தன் 'குளோய்ன் அறிக்கை'யில் குற்றஞ்சாட்டியதைத் தொடர்ந்து, கடந்த சனிக்கிழமை காலை தன் பதில்மொழிகள் அடங்கிய அறிக்கையை திருப்பீடத்திற்கான அயர்லாந்து தூதரகத்தில் சமர்ப்பித்தது திருப்பீடம் என்பது குறிப்பிடத்தக்கது.
4. வியட்நாமில் 15 கத்தோலிக்க இளைஞர்கள் கைது
செப் 05, 2011. பொது நலனை மேம்படுத்தும் சமூகப்பணிகளில் ஈடுபட்ட 15 கத்தோலிக்க இளைஞர்களை வியட்நாம் அரசு கைது செய்துள்ளது குறித்து தங்கள் ஆழ்ந்த கவலையை வெளியிட்டு செபத்திற்கு விண்ணப்பித்துள்ளனர் அவ்விளைஞர்களின் பெற்றோர்.
சமூகப்பணிகளில் ஈடுபட்டிருந்த இந்த 15 இளைஞர்களும் கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் தினங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
10,000 தடுப்புக்காவல் கைதிகள் விடுவிக்கப்படுவதாக வியட்நாம் அரசுத்தலைவர் அறிவித்துள்ள வேளையில் கத்தோலிக்க இளைஞர்கள் கைதுச் செய்யப்பட்டு வருவது கவலை தருவதாக உள்ளதாக வியட்நாம் கத்தோலிக்கர்கள் அறிவித்துள்ளனர்.
15 கத்தோலிக்க இளைஞர்கள் வியட்நாம் அரசால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 6 பேரே தலைநகர் சிறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், ஏனைய 9 பேர் குறித்த விவரங்கள் எதுவும் தெரியவில்லை எனவும் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
வியட்நாமின் மனித உரிமை அமைப்பின் கூற்றுப்படி, அந்நாட்டில் அரசியல் கைதிகள் மற்றும் மனச்சான்றின் கைதிகள் எனக் குறைந்தபட்சம் 258 பேர் சிறையில் உள்ளனர்.
5. இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிந்து ஈராண்டுகள் கடந்த பிறகும், அங்கு அமைதி கானல் நீரைப் போல் உள்ளது - கத்தோலிக்க ஆயர்
செப்.05,2011. இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிந்து ஈராண்டுகள் கடந்த பிறகும், அங்கு அமைதியும், சிறுபான்மையினரின் உரிமைகளும் கானல் நீரைப் போல் இருந்து வருகின்றன என்று இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை செயலரான ஆயர் Norbert Andradi கூறினார்.
சமுதாயமும் மதங்களும் என்ற மையத்தின் 40வது ஆண்டு நிறைவைக் கொண்டாட கொழும்புவில் அண்மையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பேசிய ஆயர் Andradi, இலங்கையில் பெரும்பான்மையாய் உள்ள மக்கள், சிறுபான்மை மக்களின் உரிமைகளை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர் என்று சுட்டிக்காட்டினார்.
பழைய வரலாற்றை முற்றிலும் புதைத்துவிட்டு, உண்மையான அமைதியை நிலைநாட்ட முடியாது என்று கூறிய ஆயர் Andradi, இலங்கை, பல்வேறு கலாச்சாரம், மதங்கள், மொழிகள் ஆகியவற்றின் சங்கமம் என்பதை அனைவரும் கட்டாயம் உணர வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அரசியல்வாதிகளுக்கும், இராணுவத்தினருக்கும் இடையே தற்போது நிலவி வரும் உறவுகள் குறித்து நாம் கேள்விகள் எழுப்பவேண்டும் என்று கூறிய ஆயர் பேரவையின் செயலர், அரசியல் ஆதிக்கத்திற்கு அப்பாற்பட்ட ஒரு சமுதாயத்தை உருவாக்குவதில் அனைவரும் அக்கறை காட்ட வேண்டும் என்ற வேண்டுகோளை முன் வைத்தார்.
6. அரசுக்கும், பொதுவுடைமை புரட்சியாளர்களுக்கும் இடையே அமைதிப் பேச்சு வார்த்தைகள் தொடர்வதற்கு பிலிப்பின்ஸ் தலத்திருச்சபையின் முயற்சிகள் தேவை
செப்.05,2011. பிலிப்பின்ஸ் அரசுக்கும், பொதுவுடைமை புரட்சியாளர்களுக்கும் இடையே அமைதிப் பேச்சு வார்த்தைகள் மீண்டும் தொடர்வதற்கு, பிலிப்பின்ஸ் தலத்திருச்சபை முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று NDFP என்ற அந்நாட்டின் பொதுவுடைமை புரட்சியாளர்களின் கட்சி ஒன்று பரிந்துரை செய்துள்ளது.
தலத் திருச்சபைப் பிரதிநிதிகளும், அமைதி விரும்பிகளும் அண்மையில் Quezon நகரில் நடத்திய ஒரு கூட்டத்தில் பேசிய NDFP கட்சியின் தலைவர் Luis Jalandoni இவ்வாறு கூறினார்.
பெரும்பாலான பிலிப்பின்ஸ் மக்கள் விரும்பும் இந்தப் பேச்சு வார்த்தைகளை தலத் திருச்சபை அதிகாரிகளும், ஏனைய அமைதி ஆர்வலர்களும் அரசிடம் வலியுறுத்துவது அவர்கள் கடமை என்று புரட்சியாளர்களின் தலைவர் Jalandoni கூறினார்.
அரசுக்கும் பொதுவுடைமைப் புரட்சியாளர்களுக்கும் இடையே நார்வே நாட்டின் தலைநகர் Osloவில் இம்மாதம் 12 முதல் 14 வரை அமைதிப் பேச்சு வார்த்தைகள் நடைபெறவுள்ளன.
7. விஜயபுரம் முன்னாள் ஆயர் பீட்டர் துருத்திக்கோணம் இறைபதம் சேர்ந்தார்.
செப்.05,2011. கேரளாவின் விஜயபுரம் முன்னாள் ஆயர் பீட்டர் துருத்திக்கோணம் இத்திங்கள் காலை இறைபதம் சேர்ந்தார்.
2006ம் ஆண்டு பணி ஓய்வு பெறுவதற்கு முன்னர் 18 ஆண்டுகள் விஜயபுரம் இலத்தீன் ரீதி மறைமாவட்டத்தை வழிநடத்தி வந்த ஆயர் துருத்திக்கோணம், இதயம் தொடர்பான பிரச்சனைக்காக அண்மையில் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பபட்டிருந்தார்.
இத்திங்களன்று காலை உயிரிழந்த 82 வயது ஆயர் துருத்திக்கோணம் அவர்களின் ஏழைகள் மீதான அர்ப்பணப் பணிகள் குறித்து சீரோ மலங்கரா ரீதி சபையின் தலைவர் பேராயர் ஜார்ஜ் ஆலஞ்சேரியும் கேரள முதல்வர் ஓமன் சாண்டியும் தங்கள் இரங்கற்தந்தியில் பாராட்டியுள்ளனர்.
No comments:
Post a Comment