Friday 16 September 2011

Catholic News - hottest and latest - 16 September 2011

1. திருத்தந்தை, 11 இந்திய ஆயர்கள் சந்திப்பு

2. இத்தனை புத்தகங்களை எழுதியிருக்கிறேனா?, திருத்தந்தை வியப்பு!

3. கருத்தாங்கிய பெண்களுக்குப் போதிய கவனம் செலுத்தப்பட திருப்பீட அதிகாரி அழைப்பு

4. இந்தியாவில் மரணதண்டனை இரத்துச் செய்யப்பட வேண்டும் - டெல்லி பேராயர் வலியுறுத்தல்

5. மியான்மாரில் இளம்பெண்கள் வியாபாரம் குறித்து தலத்திருச்சபை கவலை

6. பல்சமயத் தலைவர்கள் Dachau வில் அமைதிக்கு அழைப்பு விடுத்தனர்

7. பாகிஸ்தானில் மறைபரப்பு ஆண்டு

8. இப்பூமிப்பந்தைப் பாதுகாக்க நன்னெறிச் சுற்றுலாக்கள் அவசியம்-ஐ.நா.

----------------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை, 11 இந்திய ஆயர்கள் சந்திப்பு

செப்.16,2011. ஆயர்கள் ஐந்தாண்டுக்கு ஒருமுறை திருத்தந்தையைச் சந்திக்கும் ad Limina Apostolorum” என்ற சந்திப்பையொட்டி இந்தியாவின் 11 ஆயர்களை இவ்வெள்ளியன்று காஸ்தெல் கந்தோல்ஃபோவிலுள்ள பாப்பிறைகளின் கோடை விடுமுறை இல்லத்தில் சந்தித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
ஆக்ரா பேராயர் ஆல்பர்ட் டி சூசா, டெல்லி பேராயர் வின்சென்ட் மைக்கிள் கொன்செஸ்சாவோ, டெல்லி துணை ஆயர் ஃபிராங்கோ முலக்கல், அலகாபாத் ஆயர் இசிதோர் பெர்ணான்டெஸ், பரெலி ஆயர் அந்தோணி பெர்ணான்டெஸ், ஜெய்ப்பூர் ஆயர் ஆஸ்வால்ட் லெவிஸ், ஜான்சி ஆயர் ஃப்ரெட்ரிக் டி சூசா, லக்னௌ ஆயர் ஜெரால்ட் ஜான் மத்தியாஸ், மீரட் ஆயர் பிரான்சிஸ் கலிஸ்ட், வாரனாசி ஆயர் Raphy Manjaly, ஜம்மு-ஸ்ரீநகர் ஆயர் Peter Celestine Elampassery ஆகியோரைச் சந்தித்தார் திருத்தந்தை               
2. இத்தனை புத்தகங்களை எழுதியிருக்கிறேனா?, திருத்தந்தை வியப்பு!

செப்.16,2011. காஸ்தெல் கந்தோல்ஃபோவிலுள்ள பாப்பிறைகளின் இல்லத்தில் தற்காலிகமாக வைக்கப்பட்டிருந்த திருத்தந்தை 16ம் பெனடிக்ட் எழுதிய புத்தகங்கள் அடங்கிய கண்காட்சியை அவர் பார்வையிட்டு வியப்படைந்தார் என வத்திக்கான் அதிகாரிகள் கூறினர்.
திருத்தந்தை 16ம் பெனடிக்ட், பாப்பிறைப் பணிக்கு வருவதற்கு முன்னும் அப்பணியின் போதும் அவர் எழுதிய பல புத்தகங்களும், அவற்றின் பல மொழிபெயர்ப்புப் பதிப்புக்களும் அடங்கிய சுமார் 600 புத்தகங்கள் இந்தக் கண்காட்சியில் வைக்கப்பட்டிருக்கின்றன.
வருகிற வியாழனன்று திருத்தந்தை மேற்கொள்ளவிருக்கும் ஜெர்மன் நாட்டுத் திருப்பயணத்தையொட்டி இக்கண்காட்சி வத்திக்கானில் இவ்வெள்ளியன்று சுற்றுலாப் பயணிகளுக்கெனத் திறந்து வைக்கப்பட்டது. மேலும், செப்டம்பர் 24ம் தேதி ஜெர்மனியின் Freiburg நகரில் இப்புத்தக கண்காட்சி திறந்து வைக்கப்படும்.
வத்திக்கான் பதிப்பகமும், ஜெர்மன் புத்தக வெளியீட்டாளரான Herder ம் இணைந்து இக்கண்காட்சியை நடத்துகின்றனர்.
இதனைப் பார்வையிட்ட திருத்தந்தை, இந்தப் புத்தகங்களிலுள்ள வார்த்தைகள், மக்கள் தங்கள் வாழ்க்கைப் பாதைகளைக் கண்டு கொள்ள உதவும் என்ற நம்பிக்கையைத் தெரிவித்தார்.

3. கருத்தாங்கிய பெண்களுக்குப் போதிய கவனம் செலுத்தப்பட திருப்பீட அதிகாரி அழைப்பு

செப்.16,2011. ஒரு சமூகத்தின் உறுதியான தன்மைக்கும் வளர்ச்சிக்கும் அடிப்படையாக அமையும் குடும்பத்திற்குத் தாயின் இருப்பு மிக முக்கியம் என்பதால், தாய்மைப்பேறு  காலத்தில் இடம் பெறும் இறப்புக்கள் தவிர்க்கப்பட நடவடிக்கை எடுக்கப்படுமாறு பேராயர் சில்வானோ தொமாசி கேட்டுக் கொண்டார்.
தாய்மைப்பேறு அடைந்துள்ள பெண்களுக்குப் போதிய கவனம் கொடுக்கப்படாததால், கருவுற்ற காலம் மற்றும் குழந்தை பிறப்பின் போது உலகில் சுமார் 3 இலட்சத்து ஐம்பதாயிரம் பெண்கள் ஆண்டுதோறும் இறக்கின்றனர் என்றும் பேராயர் தொமாசி கூறினார்.
தாய்மைப்பேறு கால இறப்பும் மனித உரிமைகளும்என்ற தலைப்பில் நடைபெற்ற ஐ.நா.கூட்டத்தில் இவ்வியாழனன்று உரையாற்றிய, ஜெனீவாவிலுள்ள ஐ.நா.அலுவலகங்களுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் தொமாசி இவ்வாறு கூறினார்.
பாதுகாப்பற்ற கருக்கலைப்புக்களைத் தடுப்பதற்காகக் கருத்தடைச் சாதனங்களையும் குடும்பக்கட்டுப்பாட்டு முறைகளையும் ஊக்குவிக்கும் நடவடிக்கைகளைத் திருப்பீடம் கடுமையாய் எதிர்க்கின்றது என்றார் பேராயர்.
அதேசமயம், எத்தனை குழந்தைகளைக் கொண்டிருப்பது, எவ்வளவு இடைவெளியில் குழந்தைகளைப் பெற்றெடுப்பது போன்ற விவகாரங்களில் ஒரு கணவனுக்கும் அவரது மனைவிக்கும் சுதந்திரம் அளிக்கப்பட வேண்டுமென்றும் அவர் தெரிவித்தார்.
உயர்இரத்த அழுத்த நோய்கள், ஓயாதவேலை, இரத்தப்போக்கு, எய்ட்ஸ் தொடர்புடைய நோய்கள் என ஆப்ரிக்காவில் பெண்கள் இறப்பதற்கான முக்கிய காரணங்களையும் பேராயர் சுட்டிக்காட்டினார்.

4. இந்தியாவில் மரணதண்டனை இரத்துச் செய்யப்பட வேண்டும் - டெல்லி பேராயர் வலியுறுத்தல்

செப்.16,2011. இந்தியத் திருச்சபை மரணதண்டனைக்கு எதிராக இருக்கின்றது என்று சொல்லி முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியைக் கொலை செய்தவர்கள் மரணதண்டனையிலிருந்து காப்பாற்றப்பட வேண்டுமென்று டெல்லி உயர்மறைமாவட்ட பேராயர் வின்சென்ட் கொன்செஸ்சாவோ கேட்டுக் கொண்டார்.
ராஜீவ் காந்தியைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள மூவர் விவகாரத்தில் இந்தியாவில் கருத்து வேறுபாடுகள் இருப்பதையொட்டி ஃபீதெஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்தார் பேராயர் கொன்செஸ்சாவோ
மரணதண்டனை நிறைவேற்றுவது ஏன் நீக்கப்பட வேண்டும் என்பதற்கான காரணம் இந்திய மக்களுக்குப் புரிய வைக்கப்பட வேண்டும் என்றுரைத்த டெல்லி பேராயர், மரணதண்டனை நிறைவேற்றுப்படுவதால் கொலைக்குற்றங்கள் குறைந்துள்ளனவா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார்.

5. மியான்மாரில் இளம்பெண்கள் வியாபாரம் குறித்து தலத்திருச்சபை கவலை

செப்.16,2011. மியான்மாரின் ஷான் மாநிலத்தில் இளம்பெண்கள் பெருமளவில் வியாபாரம் செய்யப்படுவது குறித்து தலத்திருச்சபை தனது கவலையை வெளியிட்டுள்ளது.
மியான்மாரில் நடைபெற்ற இளையோர் கருத்தரங்கில் பேசிய கருணா லாஷியோ சமூகநலப்பணி மைய இயக்குனர் அருட்பணி கிறிஸ்டோபர் ராஜ், இந்த மனித வியாபாரம் குறித்து இளையோருக்கு விழிப்புணர்வு கொடுத்து வருவதாகத் தெரிவித்தார்.
2011ம் ஆண்டில் மனித வியாபாரம்என்ற தலைப்பில் அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசு வெளியிட்ட அறிக்கையில், இந்த வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள மூன்று முக்கிய நாடுகளில் மியான்மாரும் ஒன்று எனக் குறிப்பிட்டுள்ளது.
உலகில் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 30 இலட்சம் பேர் இந்த வியாபாரத்திற்குப் பலிகடா ஆகின்றனர். இந்த வியாபாராம் ஆண்டுக்கு மூவாயிரம் கோடிக்கு மேற்பட்ட டாலர் பணத்தை ஈட்டுகின்றது என்று பேராயர் தொமாசி இப்புதனன்று ஐ.நா.கூட்டமொன்றில் கூறினார்.

6. பல்சமயத் தலைவர்கள் Dachau வில் அமைதிக்கு அழைப்பு விடுத்தனர்

செப்.16,2011. இரண்டாம் உலகப் போர் சமயத்தில் வதைப்போர் முகாமாக இயங்கிய ஜெர்மனியின் Dachauவில் கூடிய பல நாடுகளின் பல சமயத் தலைவர்கள், உலகில் போருக்கு எதிராக தங்கள் குரலை உயர்த்தினர்.
போலந்து, ஹங்கேரி, ரொமானியா, உக்ரேய்ன், இத்தாலி, இரஷ்யா போன்ற நாடுகளின் சமயத் தலைவர்கள் மியூனிக்கில் பல்சமய கூட்டமொன்றில் கலந்து கொண்ட பின்னர் Dachau சென்றனர்.  
1933ம் ஆண்டு முதல் 1945 வரை இந்த Dachau முகாமில் சுமார் 2 இலட்சம் பேர் வைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 42 ஆயிரம் பேர் இறந்து விட்டனர். ஆனால் இவர்களில் யாருமே இயற்கையான மரணத்தை அடையவில்லை என ஊடகங்கள் கூறுகின்றன.
24 நாடுகள் மற்றும் 134 மறைமாவட்டங்களைச் சேர்ந்த சுமார் மூவாயிரம் குருக்கள் இந்த 12 ஆண்டுகளில் இங்கு வைக்கப்பட்டிருந்தனர் என்றும் கூறப்பட்டுள்ளது.   

7. பாகிஸ்தானில் மறைபரப்பு ஆண்டு

செப்.16,2011. பாகிஸ்தானில் பாப்பிறை மறைபரப்புக் கழகங்கள் தொடங்கப்பட்டதன் 60ம் ஆண்டைக் கொண்டாடும் விதமாக அந்நாட்டுத் திருச்சபை, மறைப்பரப்பு ஆண்டை இம்மாதம் 30ம் தேதி தொடங்குகின்றது.
இந்த மறைபரப்பு ஆண்டு, 2011, அக்டோபர் ஒன்றாந்தேதியிலிருந்து 2012ம் ஆண்டு செப்டம்பர் 30 வரை கடைப்பிடிக்கப்படும்.
படகை ஆழத்திற்குத் தள்ளிக் கொண்டு போங்கள் என்ற தலைப்பில் இந்த ஆண்டு சிறப்பிக்கப்படும்.
8. இப்பூமிப்பந்தைப் பாதுகாக்க நன்னெறிச் சுற்றுலாக்கள் அவசியம்-ஐ.நா.

செப்.16,2011. பொறுப்பற்ற சுற்றுலாப் பயணங்கள் சமூகங்களுக்குத் தீமைகளைக் கொண்டு வருகின்றன என்பதால் சுற்றுலாத் தொழிலை நடத்துவோர் தங்கள் தொழில்களில் அறநெறிக் கூறுகளைக் கடைபிடிக்குமாறு ஐ.நா.அதிகாரிகள் கூறினர்.
ஒழுக்கநெறியும் சுற்றுலாவும் என்ற தலைப்பில் மத்ரித்தில் தொடங்கியுள்ள முதல் அனைத்துலக மாநாட்டைத் துவக்கி வைத்துப் பேசிய, ஐ.நா.வின் உலக சுற்றுலா நிறுவனப் பொதுச் செயலர் Taleb Rifai, நன்னெறியைக் கடைபிடிக்கும் மனச்சான்று இன்றி நடத்தப்படும் உலக சுற்றுலாக்கள் இப்பூமிப் பந்திற்குத் தீங்கை வருவிக்கும் என எச்சரித்தார்.
இம்மாநாட்டில் சுற்றுலா அதிகாரிகள், தொழிற்துறை தலைவர்கள், பன்னாட்டு நிறுவனங்கள், நன்னெறியியல் வல்லுனர்கள் என 450க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கின்றனர்.

No comments:

Post a Comment