1. மியூனிக் நகரில் நடைபெற்ற கிறிஸ்தவ ஒன்றிப்பு மாநாட்டிற்கு திருத்தந்தை அனுப்பிய செய்தி
2. 9/11 தாக்குதல்களின்போது சேவைகள் செய்து உயிரிழந்தவர்கள் இருள் சூழ்ந்த உலகின் ஒளிவிளக்குகள் - திருப்பீடப் பேச்சாளர்
3. மெக்சிகோ நாட்டில் பெருகியுள்ள வன்முறைகள் குறைந்து மனிதம் மீண்டும் வாழும் - கர்தினால் Norberto Rivera Carrera
4. மும்பையில் உள்ள புகழ்பெற்ற மரியன்னைத் திருத்தலத்தில் எல்.கே.அத்வானி
5. கந்தமால் பகுதியில் தடை செய்யப்பட்டிருந்த கோவில்களை மீண்டும் கட்டுவதற்கு உத்திரவு
6. 'தமிழ் கைதிகளை விடுதலை செய்யுங்கள்' - கைதிகளின் உறவினர்கள் கோரிக்கை
7. லிபியாவில் இடைப்பட்ட அரசுக் குழு பொறுப்பேற்றது
8. இசைக் கலைஞர்களின் கேட்கும் திறன் அதிக ஆண்டுகள் நீடிக்கின்றது - கனடாவில் வெளியான ஆய்வு
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. மியூனிக் நகரில் நடைபெற்ற கிறிஸ்தவ ஒன்றிப்பு மாநாட்டிற்கு திருத்தந்தை அனுப்பிய செய்தி
செப்.13,2011. பகிர்ந்து வாழும் வாழ்வு என்பது இதுவரை மதம் என்ற ஒரு வரையறைக்குள் மட்டுமே அதிகமாய் கடைபிடிக்கப்பட்டு வந்துள்ளது. நாம் வாழும் இக்காலத்தில் அந்த எல்லையையும் கடந்து, மனிதகுலம் முழுவதுமே பகிர்ந்து வாழ வேண்டிய நிலையில் இருக்கிறோம் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
இஞ்ஞாயிறு முதல் செவ்வாய் வரை ஜெர்மனியின் மியூனிக் நகரில் நடைபெற்ற கிறிஸ்தவ ஒன்றிப்பு மாநாட்டிற்கு திருத்தந்தை அனுப்பிய ஒரு செய்தியில், அனைத்து கிறிஸ்தவக் குழுக்களும் திறந்த மனதோடும், ஒருவரை ஒருவர் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தோடும் வாழும்படி அழைப்பு விடுத்துள்ளார்.
25 ஆண்டுகளுக்கு முன் அருளாளர் இரண்டாம் ஜான் பால் இத்தாலியின் அசிசி நகரில் உலகின் பல மதத் தலைவர்களுக்கென ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார். இந்த நிகழ்வைத் தொடர்ந்து Sant Egidio என்ற அமைப்பு ஒவ்வோர் ஆண்டும் கிறிஸ்தவ ஒன்றிப்பு கூட்டங்களை நடத்தி வருகின்றது.
Sant Egidio அமைப்பும், Munich Freising உயர்மறைமாவட்டமும் இணைந்து கடந்த மூன்று நாட்கள் மியூனிக் நகரில், 'சேர்ந்து வாழ கடமைப் பட்டுள்ளோம். மதங்களுக்கும், கலாச்சாரங்களுக்கும் இடையே உரையாடல்' என்ற தலைப்பில் மாநாட்டை நடத்தி வந்தன.
ஒப்புரவையும், புரிந்து கொள்ளுதலையும் வளர்க்க நடத்தப்படும் இந்தக் கூட்டங்கள் உலகில் இன்னும் புரிந்து கொள்ளுதலும், பகிரும் வாழ்வும் வளர்வதற்குரிய வழிகளைத் தேட வேண்டும் என்று திருத்தந்தை தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
2. 9/11 தாக்குதல்களின்போது சேவைகள் செய்து உயிரிழந்தவர்கள் இருள் சூழ்ந்த உலகின் ஒளிவிளக்குகள் - திருப்பீடப் பேச்சாளர்
செப்.13,2011. 9/11 தாக்குதல்களின்போது உடனடியாக தங்கள் சேவைகளைத் துவங்கி, அதனால் தங்கள் உயிர்களை இழந்தவர்கள் அந்த இருள் சூழ்ந்த நாளின் ஒளிவிளக்குகளாய் திகழ்கின்றனர் என்று வத்திக்கான் சார்பில் பேசிய இயேசுசபை அருள்தந்தை லொம்பார்தி கூறினார்.
2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி அன்று நியூயார்க் நகரில் உலக வர்த்தகக் கோபுரங்கள் தாக்கப்பட்டதன் பத்தாம் ஆண்டு நினைவையொட்டி, தன் கருத்துக்களை வத்திக்கான் வானொலியில் கூறிய அருள்தந்தை லொம்பார்தி இவ்வாறு கூறினார்.
நியூயார்க், வாஷிங்க்டன் ஆகிய நகரங்களில் நடந்த இத்தாக்குதல்களில் அமெரிக்க ஐக்கிய நாட்டு மக்கள் மட்டுமல்ல இன்னும் மற்ற 70 நாடுகளைச் சார்ந்தவர்களும் கொல்லப்பட்டுள்ளனர் என்று சுட்டிக் காட்டிய அருள்தந்தை லொம்பார்தி, ஆபத்தில் சிக்கியவர்கள் அந்த இடத்தை விட்டு தப்பியோட முனைந்தபோது, வேறு பலர் உயிர்களைக் காக்க வேண்டும் என்ற உந்துதலால் ஆபத்தை நோக்கி விரைந்துச் சென்றனர் என்று கூறினார்.
தங்கள் உயிருக்கு ஆபத்து என்பதை உணர்ந்திருந்தும், பிற உயிர்களைக் காக்க வேண்டும் என்று விரைந்த தீயணைப்புப் படையினர், இன்னும் மற்றவர்கள் மனித வாழ்வுக்கு அர்த்தம் கொடுக்கும் ஒளிவிளக்குகள் என்று திருப்பீட பேச்சாளர் கூறினார்.
9/11 தாக்குதல்களில் உடனடியாக சேவைகளில் இறங்கிய 343 தீயணைப்புப் படை வீரர்கள் உட்பட 400க்கும் அதிகமானவர்கள் தங்கள் உயிரை இழந்துள்ளனர்.
அமைதியும் வளர்ச்சியும் பெருகும் என்ற நம்பிக்கையுடன் நாம் ஆரம்பித்த 21ம் நூற்றாண்டு வன்முறையில் துவங்கியது என்பதைக் கூறிய அருள்தந்தை லொம்பார்தி, இந்தத் தாக்குதலுக்குப் பின் பத்தாண்டுகள் கழித்து ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்ட பிறகும் வன்முறைகள் உலகில் குறைந்ததாகத் தெரியவில்லை என்ற தன் வருத்தத்தைத் தெரிவித்தார்.
இந்த நம்பிக்கையற்றச் சூழலில், உயிர்களைக் காக்கும் பணியில் தங்கள் உயிரைத் தியாகம் செய்யும் மனிதர்கள் நம் மத்தியில் இன்னும் வாழ்வது நமக்கு நம்பிக்கையைத் தருகின்றது என்று திருப்பீடப் பேச்சாளர் கூறினார்.
3. மெக்சிகோ நாட்டில் பெருகியுள்ள வன்முறைகள் குறைந்து மனிதம் மீண்டும் வாழும் - கர்தினால் Norberto Rivera Carrera
செப்.13,2011. மெக்சிகோ நாட்டில் பெருகியுள்ள வன்முறைகள் குறைந்து மனிதம் மீண்டும் இந்த நாட்டில் வாழும் என்றும், மக்கள் நம்பிக்கை குறையாமல் இருக்க வேண்டும் என்றும் மெக்சிகோ உயர்மறைமாவட்டத்தின் பேராயர் கர்தினால் Norberto Rivera Carrera கூறினார்.
ஆகஸ்ட் மாத இறுதியில் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட Monterrey நகரில் மெக்சிகோ கத்தோலிக்க ஆயர் பேரவையின் ஆண்டுக் கூட்டம் நடைபெறுவதாக ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது.
அந்நகரில் வன்முறைகள் இருந்தாலும், ஆயர்கள் கூட்டம் வேறு இடத்திற்கு மாற்றப்படக் கூடாது என்று மெக்சிகோ ஆயர்கள் கூறியதால், கூட்டம் அந்நகரிலேயே திட்டமிட்டபடி நடைபெற்றது என்று கர்தினால் Carrera செய்தியாளர்களிடம் கூறினார்.
வன்முறைகளைச் சந்தித்துள்ள இந்நகரில் வாழ்பவர்களும், இன்னும் மெக்சிகோ நாட்டில் வாழும் அனைவரும் நம்பிக்கை இழக்காமல் வாழும்படி அனைத்து ஆயர்களும் விரும்புகின்றனர், அதையே ஆசிக்கின்றனர் என்று ஆயர்கள் சார்பில் பேசிய கர்தினால் Carrera வலியுறுத்திக் கூறினார்.
4. மும்பையில் உள்ள புகழ்பெற்ற மரியன்னைத் திருத்தலத்தில் எல்.கே.அத்வானி
செப்.13,2011. இத்திங்களன்று கொண்டாடப்பட்ட மரியாவின் புனிதப்பெயர் திருவிழாவையொட்டி, பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவரான திரு எல்.கே.அத்வானி மும்பையில் உள்ள புகழ்பெற்ற மரியன்னைத் திருத்தலத்திற்குச் சென்றார்.
செப்டம்பர் மாதம் மரியன்னையின் பக்தியால் ஈர்க்கப்பட்டு, மும்பையின் பாந்த்ரா மரியன்னை பசிலிக்காப் பேராலயத்திற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர் என்றும், இவர்களில் 30 விழுக்காட்டினரே கிறிஸ்தவர்கள் என்றும் பசிலிக்காப் பேராலயத்தின் உதவி அதிபர் அருள்தந்தை Aniceto Pereira கூறினார்.
மரியன்னையின் புனிதப்பெயர் திருவிழாவான இத்திங்களன்று திரு எல்.கே.அத்வானி இப்பேராலயத்திற்கு வந்து அன்னையின் பாதங்களில் மலர்மாலை சாற்றி, வணங்கிச் சென்றார் என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறியது.
உள்ளூர் ஊடங்களுக்குப் பேட்டியளித்த எல்.கே.அத்வானி, கராச்சியில் கிறிஸ்தவ பள்ளியில் தான் படித்ததைச் சுட்டிக் காட்டி, தான் இங்கு வந்து குருக்களைச் சந்தித்து ஆசீர் பெற்றுச் செல்வது மனதுக்கு மகிழ்வையும், நிறைவையும் தருகிறதென்று கூறினார்.
பேராலயத்திற்கு வந்த திரு எல்.கே.அத்வானி இத்திருத்தலத்தின் மீதும், கிறிஸ்தவ மதத்தின் மீதும் பெரும் மரியாதை காட்டினார் என்றும் அவருக்கு இப்பசிலிக்காப் பேராலயத்தின் வரலாறு அடங்கிய புத்தகத்தைத் தான் அளித்ததாகவும் உதவி அதிபர் அருள்தந்தை Aniceto Pereira கூறினார்.
5. கந்தமால் பகுதியில் தடை செய்யப்பட்டிருந்த கோவில்களை மீண்டும் கட்டுவதற்கு உத்திரவு
செப்.13,2011. ஒரிஸ்ஸாவின் கந்தமால் பகுதியைச் சார்ந்த ஓர் உயர் அரசு அதிகாரி அப்பகுதியில் தடை செய்யப்பட்டிருந்த கோவில்களை மீண்டும் கட்டுவதற்கு உத்திரவு அளித்துள்ளார்.
மூன்று ஆண்டுகளுக்கு முன் கிறிஸ்தவர்களுக்கு எதிராக கந்தமால் பகுதியில் நடைபெற்ற வன்முறைகளில் சேதமடைந்த கோவில்களை புதுப்பிப்பதற்கும், புதுக் கோவில்களைக் கட்டுவதற்கும் அப்பகுதியின் இடைநிலை அரசு அதிகாரி ஒருவர் தடை விதித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து, அரசு அதிகாரிகளுக்கும் கிறிஸ்தவ பிரதிநிதிகள் குழுவுக்கும் இடையே அண்மையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் பயனாக, கந்தமால் மாவட்டத் தலைவர் ராஜேஷ் பிரபாகர் பட்டில் கோவில்கள் மீண்டும் கட்டப்படலாம் என்ற உத்திரவை வழங்கினார்.
2008ம் ஆண்டு இப்பகுதியில் நடைபெற்ற வன்முறைகளில் 230 கோவில்கள் பெருமளவில் சேதமடைந்துள்ளன என்று FIDES செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
6. 'தமிழ் கைதிகளை விடுதலை செய்யுங்கள்' - கைதிகளின் உறவினர்கள் கோரிக்கை
செப்.13,2011. இலங்கை சிறைச்சாலைகளில் பல ஆண்டுகளாக சிறைப்படுத்தப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை, கைதிகள் தினத்தையொட்டி மனிதாபிமான ரீதியில் பொது மன்னிப்பளித்து விடுதலை செய்ய வேண்டும் என்று கைதிகளின் உறவினர்கள் இத்திங்களன்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மாவட்டங்களில் உள்ள அரசு அதிகாரிகளின் வழியாக இந்தக் கோரிக்கைகள் அடங்கிய விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்த விண்ணப்பங்களின் பிரதிகள் மட்டக்களப்பு, மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர்கள் உள்ளிட்ட மதத் தலைவர்களிடமும் கையளிக்கப்பட்டிருக்கின்றன.
இந்தக் கைதிகளின் தற்போதைய நிலை குறித்து கருத்து வெளியிட்ட மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப், சட்ட திட்டங்களுக்கு அமைய அவர்கள் விசாரணை செய்யப்பட வேண்டும் அல்லது விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் போர் முடிவடைந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகின்றது. நாட்டில் நடைமுறையில் இருந்த அவசரகால சட்டமும் நீக்கப்பட்டிருக்கின்றது. இந்த நிலையில் கைதிகளுக்குப் பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டிருக்கின்றது.
இராணுவத்தினரிடம் சரணடைந்துள்ள விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்களுக்குப் பொதுமன்னிப்பளித்து, மறுவாழ்வுப் பயிற்சிகள் வழங்கி விடுதலை செய்வதைப் போன்று சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு சிறைகளில் வாடுகின்றவர்களுக்கும் மன்னிப்பளிக்கப்பட வேண்டும் என்று அந்த விண்ணப்பங்களில் கோரப்பட்டிருக்கின்றது.
7. லிபியாவில் இடைப்பட்ட அரசுக் குழு பொறுப்பேற்றது
செப்.13,2011. கடாபி போய்விட்டார், லிபியா புதிய தலைமையைப் பெற்றுள்ளது என்று இத்திங்கள் இரவு லிபியாவின் இடைப்பட்ட அரசின் தலைவரான Mustafa Abdul Jalil கூறினார்.
லிபியாவின் தலைநகர் Tripoliயில் சாட்சிகளின் சதுக்கம் (Martyrs Square) என்று புதிதாகப் பெயர் சூட்டப்பட்டுள்ள திறந்த வெளியரங்கில் இடைப்பட்ட அரசுக்குழுவின் பன்னிரு தலைவர்களுடன் இத்திங்கள் இரவு மேடையேறிய Jalil இவ்வாறு கூறினார்.
இப்புதிய அரசுக் குழு அடுத்த 20 மாதங்களில் புதிய சட்டதிட்டங்களை வகுக்கும் என்றும், லிபியாவை மிதமான இஸ்லாமியக் கொள்கைகளைக் கொண்ட ஒரு நாடாக உருவாக்குவதே தங்கள் இலக்கு என்றும் Jalil எடுத்துரைத்தார்.
இதற்கிடையே, லிபியாவின் முன்னாள் தலைவர் கடாபி இருக்கும் இடம் சரிவரத் தெரியவில்லை என்று உலக நாடுகளின் பல ஊடகங்கள் கூறி வருகின்றன.
மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றங்களை கடாபிக்கு எதிராகவும், அவருக்கு விசுவாசமாய் இருக்கும் இராணுவத்திற்கு எதிராகவும் அம்னெஸ்ட்டி இன்டர்நேஷனல் என்ற அமைப்பு இஞ்ஞாயிறன்று வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
8. இசைக் கலைஞர்களின் கேட்கும் திறன் அதிக ஆண்டுகள் நீடிக்கின்றது - கனடாவில் வெளியான ஆய்வு
செப்.13,2011. இசைக்கருவிகளை இசைப்பவர்களின் கேட்கும் திறன் மற்றவர்களின் கேட்கும் திறனை விட அதிக ஆண்டுகள் நீடிக்கின்றது என்று கனடாவில் வெளியான ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.
வயதாகும் போது நிகழும் மாற்றங்களையும் மன நலத்தையும் இணைத்து மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், இசைக்கருவிகள் இசைக்கும் 74 பேரிடமும், இசைக்கருவிகள் இசைக்காத 89 பேரிடமும் ஆய்வுகள் நடத்தப்பட்டன.
70 வயதான இசைக் கலைஞரின் கேட்கும் திறன், இசைக் கலையற்ற 50 வயதுடையோரின் கேட்கும் திறனை ஒத்திருந்ததென இந்த ஆய்வின் முடிவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக மனிதர்களுக்கு 60 வயது தொடங்கி கேட்கும் திறன் குறைந்து வரும். அவர்கள் 80 வயதை அடையும்போது அவர்களது கேட்கும் திறன் 60 விழுக்காடு குறைந்து விடும்.
Toronto நகரின் Rotman Research Institute என்ற ஆய்வு மையம் 18 வயது முதல் 91 வயதுக்கு இடைப்பட்டோரிடையே நடத்திய இந்த ஆய்வின் முடிவில், இசைக் கருவிகள் இசைப்போரின் கேட்கும் திறன் பெரும்பாலும் நல்ல நிலையில் உள்ளதென்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment