Saturday, 17 September 2011

Catholic News - hottest and latest - 17 September 2011

1. திருத்தந்தை, ஏழு இந்திய ஆயர்கள் சந்திப்பு

2. பேராயர் தொமாசி : முதியோருக்கு உதவுவதை, ஒருவர் அவர்களுக்கு கடமைப்பட்டுள்ள நன்றிக்கடன் என நோக்க வேண்டும்

3. ஜெர்மன் எதிர்ப்பு அச்சுறுத்தல்கள் குறித்து வத்திக்கான் கருத்து 

4. கருக்கலைப்புக்கள் வன்முறைகளை மேலும் அதிகரிக்கும் - மெக்சிகோ ஆயர்கள் எச்சரிக்கை

5. பாலஸ்தீனம், ஐ.நா.வில் முழு அங்கீகாரம் பெற க்குமாறு எருசலேம் காரித்தாஸ் வாழ்த்து

6. சிறுபான்மை மதத்தவர்க்கெதிராய்க் காணப்படும் ஒருதலைச்சார்பு போக்கு நீக்கப்படுவதற்கு இந்தியப் பிரதமர் அழைப்பு

7. பாதுகாப்பற்ற உணவுப் பொருட்களை ஒழிப்பதற்கு ஐ.நா.நிபுணர் அழைப்பு

8. இரு சூரியன்களைச் சுற்றிவரும் கோள்

----------------------------------------------------------------------------------------------------------------
1. திருத்தந்தை, ஏழு இந்திய ஆயர்கள் சந்திப்பு

செப்.17,2011. ஆயர்கள் ஐந்தாண்டுக்கு ஒருமுறை திருத்தந்தையைச் சந்திக்கும் “ad Limina” வையொட்டி இந்தியாவின் 7 ஆயர்களை இச்சனிக்கிழமையன்று காஸ்தெல் கந்தோல்ஃபோவிலுள்ள பாப்பிறைகளின் கோடை விடுமுறை இல்லத்தில் சந்தித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
ஜலந்தர் ஆயர் Anil Joseph Thomas Couto, சிம்லா-சண்டிகர் ஆயர் Ignatius Lojola Mascarenhas, குவாலியர் ஆயர் Joseph Kaithathara, இன்டோர் ஆயர் Chacko Thottumarickal, ஜபல்பூர் ஆயர் Gerald Almeida, ஜாபுவா ஆயர் Devprasad John Ganawa, காண்டுவா ஆயர் Arockia Sebastian Durairaj ஆகியோரைச் சந்தித்தார் திருத்தந்தை.     

2. பேராயர் தொமாசி : முதியோருக்கு உதவுவதை, ஒருவர் அவர்களுக்கு கடமைப்பட்டுள்ள நன்றிக்கடன் என நோக்க வேண்டும்

செப்.17,2011. ஒருவர் முதியோருக்கு உதவுவதைத் தனது தாராளப் பண்பின் வெளிப்பாடாக நோக்காமல், அவர்களுக்குத் தான் பட்டுள்ள நன்றிக்கடனைச் செலுத்துவதாகக் கருத வேண்டுமென்று திருப்பீட அதிகாரி ஒருவர்  வலியுறுத்தினார்.
வயதானவர்களின் நலவாழ்வு குறித்து ஐ.நா.மனித உரிமைகள் அவையின் 18வது அமர்வில் உரையாற்றிய பேராயர் சில்வானோ மரிய தொமாசி, உலகில் வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கத்தோலிக்கத் திருச்சபை சுமையாக நோக்காமல் அதனை ஓர் ஆசீர்வாதமாகப் பார்ப்பதாகத் தெரிவித்தார்.
உலகில் கத்தோலிக்கத் திருச்சபை, வயதானவர்கள், தீராத நோயாளிகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கென 15,448 இல்லங்களை நடத்துகின்றது என்பதையும், ஜெனீவாவிலுள்ள ஐ.நா.அலுவலகங்களுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் தொமாசி குறிப்பிட்டார்.
2010ம் ஆண்டின் இறுதியில், உலகில் அறுபதும் அதற்கு மேற்பட்ட வயதினரும் சுமார் 76 கோடிப் பேர் இருந்தனர் எனவும் இவ்வெண்ணிக்கை அடுத்த பத்து ஆண்டுகளில் நூறு கோடியைத் தாண்டும் எனவும் ஐ.நா.அறிக்கையில் கூறப்பட்டதைச் சுட்டிக் காட்டிப் பேசிய பேராயர் தொமாசி, வயதானவர்களின் மனித உரிமைகளைப் பாதுகாத்து வளர்க்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை என்பதையும் கோடிட்டுக் காட்டினார்.
வாழ்வு என்பது ஒரு கொடை, இதை முடித்துக் கொள்வதற்கு எந்த மனிதருக்கும் உரிமை கிடையாது, மரணமானது இயற்கையாகவே இடம்பெற வேண்டுமேயொழிய, உயிர்மருத்துவம் அல்லது வேறு வழிகளில் அந்த மரணத்தைத் தழுவ முயற்சிக்கக் கூடாது என்பதைக் கத்தோலிக்கத் திருச்சபை ஆணித்தரமாக வலியுறுத்துகின்றது என்று அவர் கூறினார்.

3. ஜெர்மன் எதிர்ப்பு அச்சுறுத்தல்கள் குறித்து வத்திக்கான் கருத்து 

செப்.17,2011. திருத்தந்தை 16ம் பெனடிக்ட், தனது அண்மை ஜெர்மன் நாட்டுத் திருப்பயணத்தின் போது அவர் பாராளுமன்றத்தில் உரையாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவிருப்பதாக அச்சுறுத்தல்கள் கிளம்பியிருக்கும் வேளை, ஏற்கனவே திட்டமிட்டபடி அவர் பாராளுமன்றத்தில் உரையாற்றுவார் என்று திருப்பீடப் பேச்சாளர் அறிவித்தார்.
வருகிற வியாழன் காலை ஜெர்மனிக்கானத் தனது முதல் அதிகாரப்பூர்வத் திருப்பயணத்தைத் தொடங்கும் திருத்தந்தை, அன்று மாலையே பாராளுமன்றத்தில் உரையாற்றுவதாகத் திட்டமிடப்பட்டுள்ளது. அந்நாட்டின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள்,  திருத்தந்தை இங்கு பேசுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்யப் போவதாகவும், பாராளுமன்ற  வளாகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தப்போவதாகவும் அச்சுறுத்தியுள்ளனர்.
இது குறித்துக் கருத்து தெரிவித்த இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி, திருத்தந்தையின் உரையை எல்லாரும் கேட்டால் அது மகிழ்ச்சியைக் கொடுக்கும் என்றார்.
அப்படி அவர்கள் கலந்து கொள்ளவில்லையென்றால் அது தங்களைப் பாதிக்காது எனவும் பாராளுமன்றத்தில் இருப்பவர்களுக்குத் திருத்தந்தை உரையாற்றுவார் எனவும் திருப்பீடப் பேச்சாளர் அறிவித்தார்.
திருத்தந்தையின் ஜெர்மனிக்கானத் திருப்பயணம் இம்மாதம் 22 முதல் 25 வரை இடம் பெறும். 

4. கருக்கலைப்புக்கள் வன்முறைகளை மேலும் அதிகரிக்கும் - மெக்சிகோ ஆயர்கள் எச்சரிக்கை

செப்.17,2011. கருவில் வளரும் சிசுக்கள், கருவிலே கொல்லப்படுவதை அனுமதிக்கும் ஒரு சமுதாயம் வன்முறைகளைக் கண்டு வியப்படையக் கூடாது என்று மெக்சிகோ ஆயர் பேரவை அறிக்கை வெளியிட்டுள்ளது.
கருக்கலைப்பு, கருவளக்கேடு போன்ற நடவடிக்கைகளைக் கண்டித்துள்ள ஆயர்கள், உண்மையான திருமணங்களை மதிப்பதன் மூலம் குழந்தைகள் சமுதாயத்தில் வரவேற்கப்பட வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், வாழ்வு முடியப்போகும் தருவாயில் கருணைக்கொலை அதற்குத் தீர்வாக அமையாது என்றும், தீராத நோயாளிகளுக்கு வாழ்வின் தரத்தை வெளிப்படுத்தும்  கவனம் காட்டப்பட வேண்டுமென்றும் ஆயர்களின் அறிக்கை கூறுகிறது.
தென் அமெரிக்க நாடான அர்ஜெண்டினாவில் ஆண்டுதோறும் சுமார் ஐந்து இலட்சம் பெண்கள் கருக்கலைப்பு செய்கின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.

5. பாலஸ்தீனம், ஐ.நா.வில் முழு அங்கீகாரம் பெற க்குமாறு எருசலேம் காரித்தாஸ் வாழ்த்து

செப்.17,2011. பாலஸ்தீனம், ஐக்கிய நாடுகள் நிறுவனத்தில் முழு உறுப்பினர் என்ற நிலையை அங்கீகரிக்குமாறு பாலஸ்தீன நிர்வாகத் தலைவர் விண்ணப்பிக்கவிருப்பதற்கு எருசலேம் காரித்தாஸ் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் ஆக்ரமிப்பினால் ஏற்பட்டுள்ள கடும் விளைவுகளைக் கடந்த 44 ஆண்டுகளாகத் தாங்கள் பார்த்து வருவதாகக் கூறும் எருசலேம் காரித்தாஸ் அமைப்பின் அறிக்கை, பாலஸ்தீனம் ஐ.நா.வின் உறுப்பு நாடாக மாறினால் பாலஸ்தீனியர்கள் தங்கள் மாண்பைப் பெறுவார்கள் என்று கூறியது.
அடுத்த வாரத்தில் கூடும் ஐ.நா.பொது அவையில் இந்த விண்ணப்பம் சமர்ப்பிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

6. சிறுபான்மை மதத்தவர்க்கெதிராய்க் காணப்படும் ஒருதலைச்சார்பு போக்கு நீக்கப்படுவதற்கு இந்தியப் பிரதமர் அழைப்பு

செப்.17,2011. இந்தியாவில் சிறுபான்மை மதத்தவர்க்கெதிராய் சட்ட அமைப்பாளர்கள் மத்தியில் காணப்படும் ஒருதலைச்சார்பு போக்கு நீக்கப்படுவதற்கு உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படுமாறு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக் கொண்டார்.
நாட்டின் எல்லாப் பிரிவினரின் நம்பிக்கையையும் ஒத்துழைப்பையும் பெறுவதற்குத் தேவையான பலன்தரக்கூடிய கொள்கைகளை அமைப்பதற்கு இத்தகைய போக்கு எதிரானதாக இருக்கின்றது என்று மேலும் கூறினார் மன்மோகன் சிங்.
நாட்டின் காவல்துறை தலைவர்கள் மற்றும் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகள் புதுடெல்லியில் கலந்து கொண்ட தேசியக் கருத்தரங்கில் உரையாற்றிய போது இவ்வழைப்பை முன்வைத்தார் பிரதமர் மன்மோகன் சிங்.
இந்து தீவிர வாதிகள் பிற மதத்தவரைத் தாக்கும் போது உள்ளூர் காவல்துறை அலுவலகர்கள் பல நேரங்களில் பார்வையாளர்களாக இருக்கின்றனர் என்ற புகார்கள் வருவதையும் அவர் குறிப்பிட்டார்.

7. பாதுகாப்பற்ற உணவுப் பொருட்களை ஒழிப்பதற்கு ஐ.நா.நிபுணர் அழைப்பு

செப்.17,2011. உடல்நலத்திற்குத் தீமை வருவிக்கக்கூடிய உணவுப் பொருட்களை ஒழிப்பதற்கு உலகத் தலைவர்கள் கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஐ.நா.மனித உரிமைகள் வல்லுனர் ஒருவர் கேட்டுக் கொண்டார்.
இத்தகைய உணவு வகைகளால் ஒவ்வோர் ஆண்டும் ஏறக்குறைய 30 இலட்சம் வயது வந்தோர் இறக்கின்றனர் என்று எச்சரிக்கும் Olivier De Schutter, உலகத் தலைவர்கள் உணவு உற்பத்தித் தொழிற்சாலைகளின் அழுத்தங்களுக்கு வளைந்து கொடுக்கக் கூடாது என்று கேட்டுள்ளார்.    
புற்றுநோய், நீரழிவு நோய், இதய நோய்கள், நுரையீரல் நோய்கள், பக்கவாதம் போன்ற நோய்கள் பதப்படுத்தப்பட்ட உணவுகளைச் சாப்பிடுவதால் ஏற்படுகின்றன என்பதையும் அவர் குறிப்பிட்டார்.
உலக நலவாழ்வு நிறுவனத்தின் கணிப்புப்படி, அதிகப்படியான உடல்பருமனால் ஒவ்வோர் ஆண்டும் குறைந்தது 28 இலட்சம் வயது வந்தோர் இறக்கின்றனர். இவர்களில் 44 விழுக்காட்டினர் நீரழிவு நோயால் இறக்கின்றனர். 

8. இரு சூரியன்களைச் சுற்றிவரும் கோள்

செப்.17,2011. ஒன்றை ஒன்று சுற்றிக்கொண்டிருக்கும் இரண்டு சூரியன்களையும் அந்த இரண்டு சூரியன்களையும் சுற்றிவரக்கூடிய கோள் ஒன்றையும் நாசாவின் கெப்லர் விண்கலம் கண்டுபிடித்துள்ளது.
பூமிக்கு சுமார் 200 ஒளி ஆண்டுகள் தூரத்திலுள்ள இந்தக் கோளுக்கு, கெப்லர் 16பி (Kepler-16b) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்தக் கோள், அதன் இரண்டு சூரியன்களையும் சுற்றிவர 229 நாட்கள் எடுத்துக்கொள்வதாகவும் இந்தக் கிரகத்துக்கு ஒளி வழங்கும் ஆதாரம் இரண்டுமே ஒன்றுக்கொன்று அருகில் இருப்பதால் இந்தக் கிரகம் எந்நேரமும் ஒளி வெள்ளத்தில் மிதக்கும் எனவும், கூறப்பட்டுள்ளது.
அதேவேளை உயிர்கள் வாழ்வதற்குரிய அம்சங்கள் இந்தக் கோளத்தில் இல்லை எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...