Friday, 30 September 2011

Catholic News - hottest and latest - 29 September 2011

1. யூதர்களின் புத்தாண்டு பெருவிழாவுக்குத் திருத்தந்தை வாழ்த்து

2. 2012ம் ஆண்டு உலக சமூகத் தொடர்பு நாளுக்கானக் கருப்பொருள் அறிவிப்பு

3. கர்தினால் பெர்த்தோனே : திருச்சபையால் கற்பிக்கப்படும் உண்மைகளை பிரமாணிக்கத்துடன் அறிவிக்க வேண்டியது வத்திக்கான் வானொலிப் பணியாளர்களின் கடமை

4. ஆசியாவில் மறைபரப்புப் பணிக்கு எதிரான சவால்கள் பற்றி குவகாத்தி பேராயர் கருத்து

5. திருத்தந்தை வெளியிட்ட Caritas in Veritate என்ற சுற்று மடலுக்கு பொதுநிலையினர் அளித்துள்ள பதில்

6. சுற்றுச்சூழல் சீர்குலைந்த நகரங்கள் ஆசியாவிலும் மத்தியக் கிழக்குப் பகுதிகளிலும் உள்ளன - WHO அறிக்கை

7. உலகின் உணவுப் பிரச்சனைக்குத் தீர்வுகள் காணும் கணனிவழி விளையாட்டு

8. காட்டுப் பகுதியில் மீள் குடியமர்த்தும் இலங்கை அரசின் முயற்சிக்கு மக்கள் எதிர்ப்பு


------------------------------------------------------------------------------------------------------

யூதர்களின் புத்தாண்டு பெருவிழாவுக்குத் திருத்தந்தை வாழ்த்து

செப்.29,2011. Rosh Hashanah என்ற யூதர்களின் 5772ம் புத்தாண்டு பெருவிழாக் கொண்டாட்டங்கள் இவ்வியாழன், இவ்வெள்ளி தினங்களில் நடைபெறுவதையொட்டி யூதமதத்தினருக்குத் தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
Rosh Ha-Shanah 5772, Yom Kippur, Sukkot ஆகிய யூதமத விழாக்களையொட்டி உரோம் யூதமதத் தலைமைக்குரு ராபி ரிக்கார்தோ தி செஞ்ஞிக்கு திருத்தந்தை அனுப்பியுள்ள வாழ்த்துத் தந்தியில், உண்மைக்கு உறுதியான சாட்சியங்கள் தேவைப்படும் இவ்வுலகில் நீதியையும் அமைதியையும் ஊக்குவிப்பதற்கு நல்ல மனைத இப்பெரு விழா அனைவரிலும் கொண்டு வரட்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இறைவன், எபிரேய சமூகத்தைப் பாதுகாக்கவும் உரோம் மற்றும் உலகின் பிற பகுதிகளிலுள்ள எபிரேயர்களுக்கும் நமக்கும் இடையே நல்ல நட்புறவு வளரவும் வேண்டுமென்ற ஆவலையும் இச்செய்தியில் வெளியிட்டுள்ளார் திருத்தந்தை.
இந்தப் புத்தாண்டு பெருவிழாவுக்கு 8 நாள்களுக்குப் பின்னர் Yom Kippur என்ற பாவக்கழுவாய் நிகழ்வும், இதற்கு ஐந்து நாள்களுக்குப் பின்னர் Sukkot என்ற கூடாரப் பெருவிழாவும் சிறப்பிக்கப்படுகின்றன.


2012ம் ஆண்டு உலக சமூகத் தொடர்பு நாளுக்கானக் கருப்பொருள் அறிவிப்பு

செப்.29,2011.மௌனமும் இறைவார்த்தையும் நற்செய்தி அறிவிப்புக்கான பாதை என்பதை, 2012ம் ஆண்டு மே 20ம் தேதி சிறப்பிக்கப்படும் உலக சமூகத் தொடர்பு நாளுக்கானத் தலைப்பாகத் திருத்தந்தை தேர்ந்தெடுத்துள்ளார் என்று திருப்பீட சமூகத் தொடர்பு அவை அறிவித்தது.
தேர்ந்து தெளிதல் மற்றும் சிந்தனை செய்யும் பழக்கத்திற்கு, மௌனம் எப்போதும் உதவுவதால் இது இறைவார்த்தையை ஏற்பதற்கும் உதவுகின்றது என்று அவ்வவை கூறியது.
எழுத்தாளர்களின் பாதுகாவலரான தூய பிரான்சிஸ் தெ சேல்ஸ் விழாவான சனவரி 24ம் தேதியன்று இவ்வுலக நாளுக்கானத் திருத்தந்தையின் செய்தி ஒவ்வோர் ஆண்டும்  வெளியிடப்படுகின்றது.  
பெந்தெகோஸ்தே விழாவுக்கு முந்திய ஞாயிறன்று உலக சமூகத் தொடர்பு நாள் திருச்சபையில் வழக்கமாகக் கொண்டாடப்படுகின்றது.


கர்தினால் பெர்த்தோனே : திருச்சபையால் கற்பிக்கப்படும் உண்மைகளை பிரமாணிக்கத்துடன் அறிவிக்க வேண்டியது வத்திக்கான் வானொலிப் பணியாளர்களின் கடமை  

செப்.29,2011. திருச்சபையால் கற்பிக்கப்படும் உண்மைகளை, சிறப்பாக, விசுவாசம் மற்றும் அறநெறிகள் சார்ந்த விவகாரங்களில் திருச்சபையின் ஆசிரியத்தால் அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளிக்கப்பட்டு போதிக்கப்படும் உண்மைகளைப் பிரமாணிக்கத்துடன் அறிவிக்க வேண்டியது வத்திக்கான் வானொலிப் பணியாளர்களின் கடமை என்று திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே கூறினார்.
வத்திக்கான் வானொலியின் பாதுகாவலராகிய கபிரியேல் அதிதூதரின் விழாத் திருப்பலியை வத்திக்கான் கெபியில் வத்திக்கான் வானொலிப் பணியாளர்களுக்கு இவ்வியாழனன்று  நிகழ்த்திய கர்தினால் பெர்த்தோனே, திருத்தந்தை மற்றும்   திருச்சபையின் உண்மையான ஆசிரியப் போதனைகளை நேயர்களுக்குத் தெரிவிக்கும் பொறுப்பு இப்பணியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றார்.
இந்த உண்மையானது நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவே, இவர் ஒவ்வொரு மனிதனையும் சந்திக்க விரும்புகிறார், மனிதரால் அறியப்படவும் அன்புகூரப்படவும் விரும்புகிறார் என்றும் கர்தினால் உரையாற்றினார்.
பல்வேறு மொழிகளில் நற்செய்தியை அறிவிக்க அழைக்கப்படுவோர் திறந்த இதயத்துடன் ஆவியானவர் வழிநடத்தும் பாதையை ஏற்றுக் கொள்ள முன்வரவேண்டும், இயேசுவைச் சந்திப்பதில் முதல் சாட்சிகளாக வத்திக்கான் வானொலிப் பணியாளர்கள் இருக்க வேண்டும் எனவும் திருப்பீடச் செயலர் வலியுறுத்தினார்.
இந்த நம் காலத்தின் மொழியிலும் மக்களின் பல்வேறு மொழிகளிலும் பல்வேறு கலாச்சாரங்களிலும் பல்வேறு மனநிலை கொண்டவர்களுக்கும் வழங்கும் இந்தப் பணியானது எப்போதும் எளிதாக இருக்காது என்றுரைத்த கர்தினால், இவ்வுலகோடு எப்படி உரையாடல் நடத்த வேண்டும் என்பதற்கு இவர்கள் நன்கு தயாரிக்கப்பட்டவர்களாய் இருக்க வேண்டும் என்றார்.
வத்திக்கான் வானொலி இவ்வாண்டு தனது 80 வருடச் சேவையைச் சிறப்பிப்பதையொட்டி இவ்வானொலியோடு தொடர்புடைய பலரும் இத்திருப்பலியில் கலந்து கொண்டனர்.


ஆசியாவில் மறைபரப்புப் பணிக்கு எதிரான சவால்கள் பற்றி குவகாத்தி பேராயர் கருத்து

செப்.29,2011. உலக மயமாக்கும் போக்கு மற்றும் மத அடிப்படைவாதம் ஆகிய இரண்டும் ஆசியாவில் மறைபரப்புப் பணிக்கு எதிரான பெரும் சவால்கள் என்று குவகாத்தி பேராயர் தாமஸ் மேனம்பரம்பில் கூறினார்.
ஆசிய ஆயர்கள் அவை பாங்காக்கில் கூடி விவாதிக்கவிருக்கும் மறைபரப்புப் பணி கருத்தரங்கைக் குறித்து FIDES செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியொன்றில், ஆசிய ஆயர்கள் பேரவையின் மறைபரப்புப் பணிக்குழுவின் தலைவரான பேராயர் மேனம்பரம்பில் இவ்வாறு கூறினார்.
திருவழிபாடுகளில் கலந்து கொள்வோர் எண்ணிக்கை ஒவ்வொரு நாட்டிலும் குறைந்து வருவதைக் காணும்போது, உலகமயமாகும் போக்கு பரவி வருவதையும், சிறப்பாக இந்தப் போக்கு இளையோரிடையே பரவி வருவதையும் காண முடிகிறது என்று கூறிய பேராயர் மேனம்பரம்பில், மத அடிப்படை வாதமும் உலகமயமாகும் போக்கைச் சார்ந்தே வளர்ந்து வருகிறது என்று கூறினார்.
இளையோரை மிக அதிக அளவில் கவர்ந்து வரும் இவ்விரு போக்குகளையும் கட்டுப்படுத்த கத்தோலிக்க மறையானது தீவிரமான கொள்கைப் பரப்புப் பணியில் ஈடுபடுவது சரியான முறை அல்ல என்பதைச் சுட்டிக்காட்டிய பேராயர் மேனம்பரம்பில், ஆழமான மத கோட்பாடுகளே இவ்விரு போக்குகளிலிருந்தும் இளையோரை நல்வழிப் படுத்தும் என்ற தன் கருத்தையும் வெளியிட்டார்.


திருத்தந்தை வெளியிட்ட Caritas in Veritate என்ற சுற்று மடலுக்கு பொதுநிலையினர் அளித்துள்ள பதில்

செப்.29,2011. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் 2009ம் ஆண்டு வெளியிட்ட Caritas in Veritate என்ற சுற்று மடலுக்கு பொதுநிலையினர் சிலர் தங்கள் பதிலை ஒரு சிறு புத்தகமாக வெளியிட்டுள்ளனர்.
அமெரிக்காவின் Los Angeles நகரில் உள்ள இலத்தீனோ தலைவர்களின் கத்தோலிக்கக் குழு என்ற அமைப்பு, திருத்தந்தையின் இந்த சுற்றுமடலுக்கு அளித்துள்ள பதிலிருப்பு 28 பக்கங்கள் அடங்கிய ஒரு புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் புத்தகத்தை திருப்பீடத்திற்கு அளிப்பதற்கென உரோம் நகர் வந்துள்ள Los Angeles பேராயர் Jose Gomez, திருத்தந்தையின் சுற்று மடலுக்கு வர்த்தக உலகில் உள்ளவர்கள் அளித்துள்ள இந்த பதில் கத்தோலிக்க விசுவாசத்தின்படி இவ்வுலகைக் காணும் ஒரு வழியைக் கூறுகிறது என்று சொன்னார்.
பொது நிலையினர் மத்தியிலிருந்து வந்துள்ள இந்த முயற்சி பெரிதும் வரவேற்கத் தக்கது என்று கூறிய அமைதி மற்றும் நீதிக்கான திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன், திருத்தந்தை விடுக்கும் சுற்றுமடல்களை பொதுநிலையினர் ஆழ்ந்து படித்து பதிலிறுக்கும் முயற்சிகளைத் தான் பெரிதும் வரவேற்பதாகக் கூறினார்.
சில ஆண்டுகளுக்கு முன், உலகம் சந்தித்த பொருளாதார நெருக்கடி நிலைக்கு தகுந்த ஒரு பதிலாக திருத்தந்தையின் இந்தச் சுற்றுமடல் அமைந்திருந்ததால், அதற்கு வர்த்தக உலகின் சார்பில் தகுந்த பதில்களை கூற முயன்றுள்ளோம் என்று இந்த கழகத்தின் தலைவர் Robert Aguirre கூறினார்.


சுற்றுச்சூழல் சீர்குலைந்த நகரங்கள் ஆசியாவிலும் மத்தியக் கிழக்குப் பகுதிகளிலும் உள்ளன - WHO அறிக்கை

செப்.29,2011. உலக நகரங்கள் அனைத்திலும் மிக அதிக அளவில் சுற்றுச்சூழல் சீர்குலைந்த நகரங்கள் ஆசியாவிலும் மத்தியக் கிழக்குப் பகுதிகளிலும் உள்ளன என்று உலக நலவாழ்வு நிறுவனத்தின் அறிக்கை கூறுகிறது.
கட்டுக்குட்படாத வேகத்துடன் பரவி வரும் இயந்தர மயமாக்கலின் விளைவாகவும், வாகனங்களின் பெருக்கத்தாலும் இந்தியா, பாகிஸ்தான், சீனா, ஈரான் மற்றும் மங்கோலியா ஆகிய நாடுகளில் சுவாசிக்கும் காற்று மிக அதிக அளவில் மாசுபட்டுள்ளது என்று WHO நிறுவனம் அண்மையில் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் கூறுகிறது.
புது டில்லி, இஸ்லாமாபாத், பெய்ஜிங் ஆகிய நகரங்கள் அதிக மாசடைந்துள்ள நகரங்களில் முதல் 10 இடங்களில் உள்ளன என்று இவ்வறிக்கையில் தெரிய வந்துள்ளது.
மாசடைந்த காற்றை சுவாசிப்பதால் ஒவ்வோர்  ஆண்டும் 13 இலட்சம் மக்கள் இறக்கின்றனர் என்றும் இவர்களில் பெரும்பாலானோர் ஆசிய நாடுகளைச் சார்ந்தோர் என்றும் இவ்வறிக்கை கூறுகிறது.


உலகின் உணவுப் பிரச்சனைக்குத் தீர்வுகள் காணும் கணனிவழி விளையாட்டு

செப்.29,2011. Freerice.com என்ற ஒரு கணனிவழி விளையாட்டின் மூலம் ஐ.நா.வின் உலக உணவு திட்டத்திற்கு நன்கொடை வழங்கும் ஒரு வழி பிரெஞ்ச் மற்றும் இத்தாலிய மக்களுக்கு இப்புதனன்று அறிமுகப்படுத்தப்பட்டது.
Freerice.com என்ற இவ்விளையாட்டின் மூலம் ஒவ்வொருவரும் தங்கள் மொழியின் வார்த்தைத் திறனில் வளர முடியும். சரியான வார்த்தைகளைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஒவ்வொரு முறையும் வெற்றிபெறும்போது, உலக உணவு திட்டத்திற்கு 10 தானியங்களை விளம்பர நிறுவனங்கள் வழங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2007ம் ஆண்டு ஆங்கிலம் மற்றும் இஸ்பானியம் ஆகிய மொழிகளில் அறிமுகமான இவ்விளையாட்டுக்கள் இப்புதன் முதல் பிரெஞ்ச் மற்றும் இத்தாலியம் ஆகிய மொழிகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
John Breen என்பவரால் வடிவமைக்கப்பட்ட இந்த விளையாட்டில், ஒவ்வொரு நாளும் 40,000 க்கும் அதிகமானோர் பங்கேற்கின்றனர் என்றும், இதன் பயனாக ஒருவரது சொல் திறமை வளரும் அதே நேரத்தில் உலகின் உணவுப் பிரச்சனைக்கும் சில தீர்வுகள் கிடைக்கின்றன என்றும் ஐ.நா.செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
2007ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட Freerice.com விளையாட்டின் மூலம் இதுவரை 10,000 கோடி உணவு தானியங்கள் தானமாக வழங்கப்பட்டுள்ளன என்றும், இந்த உணவு ஒரு நாளைக்கு 4 கோடியே 80 இலட்சம் மக்களின் பசியை போக்க வல்லது என்றும் இச்செய்திக் குறிப்பு மேலும் கூறுகிறது.


காட்டுப் பகுதியில் மீள் குடியமர்த்தும் இலங்கை அரசின் முயற்சிக்கு மக்கள் எதிர்ப்பு

செப்.29,2011. இலங்கை உள்நாட்டுப் போரின்போது தங்கள் சொந்த இடங்களை விட்டு அப்புறப்படுத்தப்பட்ட மக்களில் 2 இலட்சம் பேரை வேறொரு இடத்தில் குடியமர்த்தும் முயற்சிகளில் இலங்கை அரசு இறங்கியுள்ளது.
உள்நாட்டுப் போரின்போது உருவாக்கப்பட்ட பல முகாம்களில் வாழ்ந்து வந்தவர்களை முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒரு காட்டுப் பகுதியில் மீள் குடியமர்த்தும் இலங்கை அரசின் முயற்சிக்கு அம்மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இலங்கை அரசு ஏற்பாடு செய்துவரும் 600 ஏக்கர் நிலப்பரப்பில் குடிநீர், கழிநீர் வசதிகள், பள்ளிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் என்று எவ்வித வசதிகளும் இல்லை என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறுகிறது.
அரசின் இந்த முயற்சிக்கு எதிர்ப்பு கூறும் இம்மக்கள் தாங்கள் வாழ்ந்த பகுதிகளுக்குத் திரும்பிச் செல்ல விருப்பம் தெரிவித்துள்ளனர். மீன் பிடிக்கும் தொழிலில் இருந்த இம்மக்களுக்கு தற்போது அரசு ஏற்பாடு செய்து வரும் பகுதிகள் மீன்பிடிப்பிற்கு ஏற்ற பகுதிகள் அல்ல என்பதும், தங்கள் பிள்ளைகளுக்குத் தகுந்த பள்ளிகள் இல்லை என்பதும் இவர்கள் மறுப்புத் தெரிவிப்பதற்கு முக்கிய காரணங்கள் என்று கூறப்படுகின்றன.

 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...