Friday 23 September 2011

Catholic News - hottest and latest - 22 September 2011

1.  ஜெர்மனியில் திருத்தந்தை.

2.  வாழ்விற்கான முழு மரியாதையும் அன்பும் பாரம்பரியமாகக் காப்பாற்றப்பட வேண்டிய ஒன்று

3.  ஈரானுக்கும் அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கும் இடையே அரசியல் வழிகள் மூலம் ஏற்படுத்தமுடியாத உறவை, மதங்களின் ஒன்றிணைந்த அணுகுமுறை மூலம் உருவாக்க முடியும்

4.   இன்றைய உலகிற்குத் தேவைப்படுவது பாலங்களேயன்றி, சுவர்களல்ல

5.   ஏழைகளுக்கு உதவும் பொருட்டு 16 இலட்சம் பவுண்டுகளை வழங்கியுள்ளது இங்கிலாந்தின் வெஸ்ட்மின்ஸ்டர் உயர்மறைமாவட்டம்.

6.   இலங்கைக்குத் தண்டனை விதிக்குமாறு 17 அரசு சார்பற்ற நிறுவனங்கள் நவநீதம்பிள்ளையிடம் கோரிக்கை

------------------------------------------------------------------------------------------------------
1.  ஜெர்மனியில் திருத்தந்தை

செப். 22, 2011.  இவ்வியாழன் உள்ளூர் நேரம் காலை 8.30 மணிக்கு அதாவது இந்திய நேரம் பகல் 12 மணிக்கு, உரோம் சம்பினோ இராணுவ விமான நிலையத்திலிருந்து தனது 21வது வெளிநாட்டுத் திருப்பயணத்தைத் தொடங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். 2005ம் ஆண்டில் பாப்பிறை பணியை ஏற்ற இவர் ஏற்கனவே இரண்டு முறைகள் அந்நாட்டிற்குச் சென்றிருந்தாலும் அரசின் அதிகாரப்பூர்வ விருந்தினராக முதல் முறையாகத் தற்போதுதான் சென்றுள்ளார். ஜெர்மன் மற்றும் வத்திக்கான் கொடிகளை முகப்பில் கொண்டு திருத்தந்தையை ஏற்றிச் சென்ற ஆல்இத்தாலியா 320 என்ற விமானம், திட்டமிடப்பட்ட நேரத்திற்கு 15 நிமிடங்கள் முன்னதாகவே அவரை அவரது தாயகத்திற்குக் கொண்டு சேர்த்தது. பெர்லின் நகர் Tegel சர்வதேச விமான நிலையத்தில் விரிக்கப்பட்டிருந்த சிவப்புக் கம்பள விரிப்பில் ஜெர்மன் அரசுத் தலைவர் கிறிஸ்டியான் Wulff, அவரது மனைவி, ஜெர்மன் சான்சிலர் அதாவது பிரதமர் ஆங்லா மிர்க்கெல், அவரது கணவர் ஆகியோர் அவரைக் கைகுலுக்கி வரவேற்றனர். இவ்வரவேற்புக்குப் பின்னர் அங்கிருந்து பத்து கிலோ மீட்டரில் இருக்கின்ற Bellevue என்ற ஜெர்மன் அரசுத் தலைவர் மாளிகைக்குக் காரில் சென்றார் திருத்தந்தை.
பெர்லின் அரசுத் தலைவர் மாளிகை சென்ற திருத்தந்தை முதலில் தங்கப் புத்தகத்தில் கையெழுத்திட்டார். பின்னர் பிரமுகர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். அம்மாளிகை வளாகத்தில் பசுமைப் புல்வெளியில் அமைக்கப்பட்டிருந்த சிவப்புக் கம்பளச் சிறிய மேடையில் அரசுத் தலைவர் Wulffம் திருத்தந்தையும் நிற்க, ஒரு நாட்டுத் தலைவருக்கு வழங்கப்படும் அரசு மரியாதை நிகழ்வுகள் தொடங்கின. ஜெர்மன் அரசுத் தலைவர் Wulffதிருத்தந்தையே, ஜெர்மன் நாட்டில் அரசும் திருச்சபையும் தனித்தனியாக இயங்குபவை. ஆயினும், திருச்சபை அதற்கு இணையாகச் செல்வது இல்லை, மாறாக, அது சமூகத்தின் மையத்தில் இருக்கின்றது. திருத்தந்தை 2ம் ஜான் பால், போலந்து கத்தோலிக்கரின் பணி, ஜெர்மன் கிறிஸ்தவ சமுதாயம் ஆகியவை இன்றி இரண்டு ஜெர்மனிகளும் அமைதியான முறையில் இணைந்திருக்கும் புரட்சிகரப் புதுமை இடம் பெற்றிருக்காது. இதற்கு ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் தான் நன்றி கூற விரும்புவதாகத் தெரிவித்தார். பின்னர் திருத்தந்தையும் தனது தாயகத்திற்கான முதல் உரையை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்குப் பின்னர் அங்கிருந்து 3 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள ஜெர்மன் ஆயர் பேரவை மையத்திற்குச் சென்றார் திருத்தந்தை. அங்கு ஜெர்மன் சான்சிலர் ஆங்லா மிர்க்கெல்லைச் சந்தித்தார். மிர்க்கெல், லூத்தரன் கிறிஸ்தவ சபைப் போதகரின் மகளாவார். இச்சந்திப்புக்குப் பின்னர் அந்த மையத்தில் மதிய உணவருந்தினார் திருத்தந்தை. மாலையில் ஜெர்மன் நாடாளுமன்றம் சென்று உரையாற்றுவது, யூதமதப் பிரதிநிதிகளைச் சந்திப்பது, பெர்லின் ஒலிம்பிக் அரங்கத்தில் திருப்பலி நிகழ்த்துவது ஆகியன இவ்வியாழன் பயணத் திட்டத்தில் குறிக்கப்பட்டுள்ளன.

2.  வாழ்விற்கான முழு மரியாதையும் அன்பும் பாரம்பரியமாகக் காப்பாற்றப்பட வேண்டிய ஒன்று

செப் 22, 2011.     வாழ்விற்கான முழு மரியாதையும் அன்பும் பாரம்பரியமாகக் காப்பாற்றப்பட வேண்டிய ஒன்று என சிலே மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் அந்நாட்டு ஆயர் பேரவைத்     தலைவர் பேராயர் ரிக்கார்தோ எட்சாத்தி.
அண்மைக்கால இயற்கைப் பேரிடர்களின்போது சிலே மக்கள் ஒருமைப்பாட்டுணர்வுடன் செயல் பட்டது குறித்து மகிழ்ச்சியை வெளியிட்ட பேராயர், முழு வாழ்விற்கான உரிமை அனைவருக்கும் உள்ளதாகத் தெரிவித்தார். நாட்டின் வருங்காலம் இளையோரின் கையில் உள்ளதையும் நினைவூட்டிய பேராயர், இன்று நாம் எதிர்நோக்கும் சவால்கள், நம் தனித்தன்மையை வெளிப்படுத்துவதற்கான நல் வாய்ப்புகள் எனவும் கூறினார்.

3.  ஈரானுக்கும் அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கும் இடையே அரசியல் வழிகள் மூலம் ஏற்படுத்தமுடியாத உறவை, மதங்களின் ஒன்றிணைந்த அணுகுமுறை மூலம் உருவாக்க முடியும்

செப் 22, 2011.      ஈரானுக்கும் அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கும் இடையே அரசியல் வழிகள் மூலம் ஏற்படுத்தமுடியாத உறவை, மதங்களின் ஒன்றிணைந்த அணுகுமுறை மூலம் உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையை வெளியிட்டுள்ளனர் அந்நாட்டிற்கு அண்மையில் சென்று திரும்பிய கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமியப் பிரதிநிதிகள் குழு.
வாஷிங்டனின் முன்னாள் பேராயர் தியோதர் மெக்காரிக் உட்பட நான்கு பேர் அடங்கிய குழு அண்மையில் ஆறு நாள் பயணத்தை ஈரானில் மேற்கொண்டு திரும்பியபோது இந்த நம்பிக்கை அக்குழுவால் வெளியிடப்பட்டது. ஈரானுக்கும் அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கும் இடையேயான உறவில் அரசியல் ரீதியான முயற்சிகள் தோல்வியைச் சந்தித்துவரும் இன்றையக் காலக்கட்டத்தில், மதங்கள் மூலமான முயற்சிகள் பலன் தரும் என்றார் கர்தினால்.
அமெரிக்க உளவாளிகள் என்ற சந்தேகத்தின் பேரில் ஈரானில் சிறைவைக்கப்பட்டிருந்த இரு அமெரிக்கர்கள், கிறிஸ்தவ-இஸ்லாம் பிரதிநிதிகளின் குழு இரானிலிருந்து திரும்பிய இரண்டே நாட்களில் விடுவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

4.   இன்றைய உலகிற்குத் தேவைப்படுவது பாலங்களேயன்றி, சுவர்களல்ல

செப் 22, 2011.      இன்றைய உலகிற்குத் தேவைப்படுவது பாலங்களேயன்றி, சுவர்களல்ல என சமூக நீதி குறித்த தங்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர் ஆஸ்திரேலிய ஆயர்கள். குற்றம்புரிபவர்கள் தண்டிக்கப்படுவது, சமூகத்தில் ஒழுங்கமைவையும் பாதுகாப்பையும் கொண்டுவர உதவலாம் என தங்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள ஆயர்கள், குற்றவாளிகளின் மனித உரிமைகள் மதிக்கப்படுவதுடன் அவர்கள் திருந்துவதற்கான வாய்ப்பாகவும் சிறை வாழ்க்கை இருக்க வேண்டும் எனவும் விண்ணப்பித்துள்ளனர். சிறை வாழ்க்கை பலவேளைகளில் தனிமைப்படுத்தப்படுவதாகவும், சித்ரவதைகள் நிறைந்ததாகவும் இருப்பதாகக் கவலையை வெளியிட்டுள்ள ஆஸ்திரேலிய ஆயர்கள், சிறைக்கைதிகளிடையே பணிபுரியும் குருக்களின் சேவையைப் பாராட்டியுள்ளனர். சிறைக்குள் கைதிகள் அநியாயமான முறையில் தண்டிக்கப்படும் வேளைகளில் அதற்கு அரசே பொறுப்பேற்க வேண்டும் எனக்கூறும் ஆஸ்திரேலிய ஆயர்களின் அறிக்கை, தண்டனை என்பது திருந்துவதற்கான வாய்ப்பை வழங்க வேண்டுமேயொழிய, மனங்கள் மேலும் கடினமாவதற்கு வழிவகுக்கக் கூடாது எனவும் விண்ணப்பித்துள்ளனர்.

5.   ஏழைகளுக்கு உதவும் பொருட்டு 16 இலட்சம் பவுண்டுகளை வழங்கியுள்ளது இங்கிலாந்தின் வெஸ்ட்மின்ஸ்டர் உயர்மறைமாவட்டம்.

செப் 22, 2011.      இலண்டனில் வாழும் ஏழைமக்களின் தேவைகளை நிறைவேற்ற உதவும் பொருட்டு 16 இலட்சம் பவுண்டுகளை வழங்கியுள்ளது இங்கிலாந்தின் வெஸ்ட்மின்ஸ்டர் உயர்மறைமாவட்டம்.
ஏழைகள், மாற்றுத்திறனாளிகள், தெருவில் வாழ்வோர் என பல்வேறுச் சூழல்களில் துன்பங்களை அனுபவிப்போருக்கு உதவுவதற்கென 2007ம் ஆண்டு முதல் இந்த மறைமாவட்டத்தால் வழங்கப்பட்டுவரும் இத்தொகையால் பல‌ன் அடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறைக்கைதிகளுக்கானப் பணிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி, எய்ட்ஸ் நோயாளிகளுக்கான சிகிச்சை, முதியோருக்கான பணிகள், அகதிகளிடையேயான பணிகள், வேலைவாய்ப்புக் கல்வி போன்றவைகளுக்கும் இவ்வுதவிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

6.   இலங்கைக்குத் தண்டனை விதிக்குமாறு 17 அரசு சார்பற்ற நிறுவனங்கள் நவநீதம்பிள்ளையிடம் கோரிக்கை

செப் 22, 2011.      இலங்கை அரசாங்கத்திற்கும் படைவீரர்களுக்கும் தண்டனை விதிக்கப்பட வேண்டுமென 17 அரசு சார்பற்ற நிறுவனங்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவையின் ஆணையர் நவநீதம்பிள்ளையிடம் கோரிக்கை விடுத்துள்ளன.
போர்க் குற்றச் செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாகத் தெரிவித்து இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இரகசியமான முறையில் அவசரமாக இந்தக் கோரிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment