Friday 30 September 2011

Catholic News - hottest and latest - 30 September 2011

1. புதிய தலைமுறைகளுக்குப் புதிய நற்செய்தி அறிவிப்பு வழிகளைக் கண்டுபிடிக்குமாறு திருத்தந்தை அழைப்பு

2. மத்திய பிரதேச தலத்திருச்சபை சிறுபான்மையினரின் உரிமைகள் குறித்த கையேட்டை வெளியிட்டுள்ளது

3. வத்திக்கான் அதிகாரி : ஜப்பான் அணுக்கசிவுப் பேரிடர் உலகளாவியப் பிரச்சனையை முன்வைக்கிறது

4. கென்யாவில் அரசுத்தலைவர் தேர்தல்களைத் தள்ளி வைக்கும் திட்டத்திற்கு ஆயர் எதிர்ப்பு

5. அக்டோபர் 9, பொதுமக்கள் கருத்து வாக்கெடுப்பில் முழு ஈடுபாட்டுடன் பங்கெடுக்க பராகுவே ஆயர்கள் வேண்டுகோள்

6. அனைத்துலக முதியோர் தினம், பான் கி மூனின் செய்தி

7. கடற்கொள்ளையர்களால் ஏற்படும் பெரும் செலவுகள் குறித்து ஐ.நா. எச்சரிக்கை

8. உலகளாவிய ஆயுத வியாபாரம் 2010ம் ஆண்டில் குறைவு

------------------------------------------------------------------------------------------------------

1. புதிய தலைமுறைகளுக்குப் புதிய நற்செய்தி அறிவிப்பு வழிகளைக் கண்டுபிடிக்குமாறு திருத்தந்தை அழைப்பு

செப்.30,2011. ஐரோப்பிய ஆயர்கள் நற்செய்தி அறிவிப்புப் பணியில் புதிய வழிகளைக் குறிப்பாக, புதிய தலைமுறைகளுக்கு இப்பணியைச் செய்வதில் அவர்கள் தைரியத்துடன் எடுத்து வரும் புதிய முயற்சிகளை ஊக்கப்படுத்தினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
அல்பேனியத் தலைநகர் திரானாவில் இவ்வியாழனன்று தொடங்கியுள்ள ஐரோப்பிய ஆயர் பேரவைகள் அவையின் நான்கு நாள் நிறையமர்வுக் கூட்டத்திற்கு அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார் திருத்தந்தை.
மேய்ப்புப் பணிகள் மற்றும் கிறிஸ்தவ ஒன்றிப்பு நடவடிக்கைகளில் ஐரோப்பிய ஆயர்கள் மத்தியில் கடந்த நாற்பது ஆண்டுகளாகக் காணப்படும் ஒத்துழைப்பு தொடரும் என்ற தனது நம்பிக்கையையும் தெரிவித்தார் திருத்தந்தை.
திருத்தந்தையின் பெயரில் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே, ஐரோப்பிய ஆயர் பேரவைகளின் அவைத் தலைவர் கர்தினால் பீட்டர் எர்டோவுக்கு இச்செய்தியை அனுப்பியுள்ளார்.
மேலும், CCEE என்ற இந்த ஐரோப்பிய ஆயர் பேரவைகள் அவையில் ருத்தேனியன் (Ruthenian) பைசான்ட்டைன் ரீதித் திருச்சபையும் தற்சமயம் புதிதாக உறுப்பினராகச் சேர்ந்து இக்கூட்டத்தில் கலந்து கொள்கிறது.
இந்தப் புதிய வரவுடன் CCEE அவை, 33 ஐரோப்பிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பாக மாறியுள்ளது.
ருத்தேனியன் பைசான்ட்டைன் ரீதித் திருச்சபை, 1646ம் ஆண்டில் கத்தோலிக்கத் திருச்சபையில் இணைந்தது.
மேலும், காஸ்தெல் கந்தோல்ஃபோவில் தனது கோடை விடுமுறையை முடித்து இச்சனிக்கிழமை வத்திக்கான் திரும்புகிறார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.


2. மத்திய பிரதேச தலத்திருச்சபை சிறுபான்மையினரின் உரிமைகள் குறித்த கையேட்டை வெளியிட்டுள்ளது

செப்.30,2011. இந்திய அரசியல் அமைப்பில் சிறுபான்மை சமூகங்களின் பாதுகாப்பு குறித்து உறுதி வழங்கப்பட்டுள்ள பகுதிகளைத் தொகுத்து ஒரு கையேடாக வெளியிட்டுள்ளது மத்திய பிரதேச தலத்திருச்சபை.
இத்தலத்திருச்சபை வெளியிட்டுள்ள இக்கையேடு குறித்துப் பேசிய போபால் பேராயர் லியோ கொர்னேலியோ,  சிறுபான்மையினரின் உரிமைகள் குறித்து அரசு அதிகாரிகளுக்கு இதமான வழியில் எடுத்துச் சொல்வதற்கு உதவியாக இக்கையேடு இருக்கிறது என்று கூறினார்.
இந்தியாவில் மிகச்சிறிய குழுவாகிய கத்தோலிக்கர் நாட்டைக் கட்டி எழுப்புவதற்கு எடுத்து வரும் முயற்சிகளை அரசு அதிகாரிகள் பாராட்ட வேண்டுமெனத் தாங்கள் விரும்புவதாகவும் கூறினார் பேராயர்  கொர்னேலியோ.
84 பக்க இக்கையேடு, நாட்டின் அரசு அதிகாரிகள் மற்றும் பல்வேறு சிறுபான்மை குழுக்களுக்கெனத் தயாரிக்கப்பட்டது.
மத்திய பிரதேச மாநிலம், 2003ம் ஆண்டிலிருந்து 100க்கு மேற்பட்ட வகுப்புவாதத் தாக்குதல்களைச் சந்தித்திருக்கிறது.


3. வத்திக்கான் அதிகாரி : ஜப்பான் அணுக்கசிவுப் பேரிடர் உலகளாவியப் பிரச்சனையை முன்வைக்கிறது

செப்.30,2011. இவ்வாண்டு ஜப்பானில் இடம் பெற்ற அணுக்கசிவுப் பேரிடர், உலகில் அணுமின் நிலையங்களின் பாதுகாப்பு குறித்த புதிய கவலைகளை ஏற்படுத்தியுள்ளது என்று திருப்பீட அதிகாரி ஒருவர் கூறினார்.
ஆஸ்ட்ரியாவின் வியன்னாவில் இருக்கின்ற உலக அணுசக்திக் கட்டுப்பாட்டு நிறுவனத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய, அணுசக்தி விவகாரங்களுக்கானத் திருப்பீடப் பிரதிநிதி பேரருட்திரு Michael Banach, அணுக்கசிவினால் ஏற்படும் எதிர்விளைவுகள் பற்றி விளக்கினார்.
Fukushima-Daiichi அணுக்கசிவுப் பேரிடர் எழுப்பும் பல அடிப்படைப் பிரச்சனைகள் களையப்பட வேண்டும் என்றுரைத்த அவர், ஜப்பானின் வளமையான வேளாண் பகுதிகளில் ஒன்றான இவ்விடத்தில் ஏற்பட்ட இப்பேரிடரின் எதிர்விளைவுகள், பொருளாதார, மருத்துவ மற்றும் மறுசீரமைப்பில் பெரும் செலவை உண்டுபண்ணியுள்ளன என்று குறிப்பிட்டார்.
கடந்த மார்ச் மாதத்தில் ஜப்பானில் இடம் பெற்ற நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் 24 ஆயிரம் பேர் இறந்தனர். அச்சமயம் ஏற்பட்ட அணுக்கசிவினால் காற்றும் நீரும் அசுத்தமடைந்தன. இதனால் 2 இலட்சத்துக்கு மேற்பட்டோர் தங்கள் வீடுகளை விட்டு அப்புறப்படுத்தப்பட்டனர். இது, 1945ம் ஆண்டில் அணுகுண்டு வெடிப்பினால் ஏற்பட்ட பாதிப்பைவிட அதிகம் என்று சொல்லப்படுகிறது.


4. கென்யாவில் அரசுத்தலைவர் தேர்தல்களைத் தள்ளி வைக்கும் திட்டத்திற்கு ஆயர் எதிர்ப்பு

செப்.30,2011. ஆப்ரிக்க நாடாகிய கென்யாவில் 2012ம் ஆண்டு ஆகஸ்டில் நடைபெறவிருக்கும் அரசுத்தலைவர் மற்றும் நாடாளுமன்றத்திற்கானத் தேர்தல்களை டிசம்பர் வரைத் தள்ளி வைக்கும் திட்டம் மாற்றப்பட வேண்டும் என்று அந்நாட்டு ஆயர் ஒருவர் வலியுறுத்தியுள்ளார்.
தேர்தல்களைத் தள்ளி வைக்கும் திட்டம், 2010ம் ஆண்டில் பொதுமக்கள் கருத்து வாக்கெடுப்பு மூலம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் அமைப்பை மீறுவதாக இருக்கும் என்று கென்யாவின் Eldoret ஆயர் Cornelius Arap Korir எச்சரித்தார்.
கென்யாவின் புதிய அரசியல் அமைப்பின்படி பொதுத்தேர்தல்கள் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி நடத்தப்பட வேண்டும். ஆயினும், தேர்தல்களை டிசம்பர் 17 வரைத் தள்ளிப் போடுவதற்கு அரசியல் அமைப்பில் மாற்றம் கொண்டு வருவதற்கு அமைச்சரவை முயற்சித்து வருகிறது என்று கூறப்படுகின்றது.

கென்யாவில் 2007ம் ஆண்டுத் தேர்தலுக்குப் பின்னர் தொடங்கிய கலவரத்தில் 1200க்கும் அதிகமானோர் இறந்தனர். 6 இலட்சத்து 60 ஆயிரம் பேர் புலம் பெயர்ந்துள்ளனர்.


5. அக்டோபர் 9, பொதுமக்கள் கருத்து வாக்கெடுப்பில் முழு ஈடுபாட்டுடன் பங்கெடுக்க பராகுவே ஆயர்கள் வேண்டுகோள்

செப்.30,2011. பராகுவே நாட்டில் இந்த அக்டோபர் 9ம் தேதி நடைபெறும் பொதுமக்கள் கருத்து வாக்கெடுப்பில் கத்தோலிக்கரும் அனைத்துக் குடிமக்களும் முழு ஈடுபாட்டுடன் பங்கெடுக்க வேண்டுமென்று அந்நாட்டு ஆயர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தென் அமெரிக்க நாடான பராகுவேயின் அரசியல் அமைப்பில் தேவைப்படும் மாற்றங்கள் குறித்து குடிமக்கள் தங்கள் அபிப்பிராயங்களை வெளியிடுவதற்கென அந்நாட்டு உச்சநீதிமன்றம் பொதுமக்கள் கருத்து வாக்கெடுப்பை நடத்தத் திட்டமிட்டுள்ளது.
வாக்களித்தல் என்பது குடிமக்களின் உரிமை மட்டுமல்ல, அது கடமையுமாகும் என்றுரைக்கும் ஆயர்களின் அறிக்கை, ஒவ்வொருவரும் பொதுநலனை மனத்திற்கொண்டு தங்கள் மனசாட்சியின்படி ஓட்டளிக்க வேண்டுமென்று கூறுகிறது.
உள்நாட்டிலும் வேறு நாடுகளிலும் வாழும் சுமார் பத்து இலட்சம் பராகுவே குடிமக்கள் இந்தப் பொதுமக்கள் கருத்து வாக்கெடுப்பில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள்.
2013ம் ஆண்டில் நடைபெறும் பொதுத் தேர்தலை மனத்தில் வைத்து அரசியல்வாதிகளும் வாக்குகளை விலைக்கு வாங்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது.


6. அனைத்துலக முதியோர் தினம், பான் கி மூனின் செய்தி

செப்.30,2011. உலகின் முதியோர்களில் ஏறக்குறைய மூன்றில்  இரண்டு பகுதியினர் வளரும் நாடுகளில் வாழும்வேளை, உலகளாவிய, மற்றும் தேசிய வளர்ச்சித் திட்டங்களில் முதியோர் இன்றும் பெரும்பாலும் ஓரங்கட்டப்பட்ட நிலையில் உள்ளனர் என்று ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் கூறினார்.
அக்டோபர் முதல் தேதி அனைத்துலக முதியோர் தினம் கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு செய்தி வெளியிட்ட பான் கி மூன், மத்ரித் சர்வதேச மாநாட்டில் முதியோர் குறித்து ஏற்றுக்கொள்ளப்பட்ட கோட்பாடுகள் அமல்படுத்தப்படுமாறு வலியுறுத்தினார்.
முதியோரின் மனித உரிமைகள் மதிக்கப்படுமாறும் அவர் அழைப்புவிடுத்துள்ளார்.
2012ம் ஆண்டு இந்த மத்ரித் மாநாடு நடைபெற்றதன் 10ம் ஆண்டும், இந்த 2011ம் ஆண்டு, முதியோர்க்கென ஐ.நா. கொள்கைகளை வகுத்த 20ம் ஆண்டும் நிறைவுறுகின்றன என்பதைச் சுட்டிக்காட்டி முதியோர் நலனில் அக்கறை காட்டுமாறு அவர் கேட்டுள்ளார்.


7. கடற்கொள்ளையர்களால் ஏற்படும் பெரும் செலவுகள் குறித்து ஐ.நா. எச்சரிக்கை

செப்.30,2011. கடற்கொள்ளையர்களால் கப்பல் தொழிலுக்கு ஏற்படும் பெரும் செலவுகள் குறித்து எச்சரித்துள்ள அதேவேளை, இந்தப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு ஐ.நா.நிறுவனங்களும் அரசுகளும் இராணுவங்களும் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுக்குமாறு அனைத்துலக கடல்சார் நிறுவனப் பொது இயக்குனர் Efthimios Mitropoulos கேட்டுக் கொண்டார்.
செப்டம்பர் 29ம் தேதி உலக கடல்சார் தினம் கடைபிடிக்கப்பட்டதையொட்டி செய்தி வெளியிட்ட Mitropoulos, கடற்கொள்ளையர் பிரச்சனை கடுமையானதாக இருப்பதால் இதனை ஓர் அமைப்பால் மட்டும் எதிர்கொள்ள முடியாது என்று கூறினார்.
2010ம் ஆண்டில் மட்டும் 4185 கடற்தொழிலாளர்கள், கடற்கொள்ளையர்களால் ஆயுதங்களால் தாக்கப்பட்டுள்ளார்கள். 1090 பேர் பிணையக் கைதிளாக எடுத்துச் செல்லப்பட்டனர். 516 பேர் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தப்பட்டனர். இதனால் சுமார் 488 பேர் மனத்தளவிலும் உடலளவிலும் துன்புறுகின்றனர். இந்தப் புள்ளி விபரங்களையும் அவரின் செய்தி குறிப்பிடுகிறது.
கடற்கொள்ளையர்களின் குற்றங்களுக்கு அப்பாவி கடல் தொழிலாளர்கள் பலியாகும்வேளை, இந்தக் கொள்ளையர்களால் உலகப் பொருளாதாரத்திலும் ஆண்டுக்கு 700 கோடி டாலர் முதல் 1200 கோடி டாலர் வரை இழப்பு ஏற்படுகின்றது என்றும் Mitropoulos தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அக்டோபர் 13, 14 தேதிகளில் உரோமையில் உலக கடல்சார் தினம் சிறப்பிக்கப்படுகின்றது.


8. உலகளாவிய ஆயுத வியாபாரம் 2010ம் ஆண்டில் குறைவு

செப்.30,2011. கடந்த ஆண்டில் நாடுகள் எதிர்நோக்கிய நிதி நெருக்கடியால், அவ்வாண்டில் உலக அரசுகள் புதிய ஆயுதங்களை வாங்கிய அளவு குறைந்திருப்பதாக புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது.
2010ம் ஆண்டில் உலகளாவிய ஆயுத வியாபாரம்என்ற தலைப்பில் அமெரிக்க ஐக்கிய நாட்டுக் காங்கிரஸ் அவை வெளியிட்ட ஆய்வில், இது 2009ம் ஆண்டைவிட 2010ம் ஆண்டில் 38 விழுக்காடு குறைவு என்று தெரிய வந்துள்ளது.
2009ம் ஆண்டில் 6,520 கோடி டாலராக இருந்த ஆயுத வியாபாரம் 2010ம் ஆண்டில் 4,040 கோடியாகக் குறைந்தது என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
2010ம் ஆண்டில் ஆயுதங்கள் வாங்கியதில் வளர்ந்து வரும் நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. அந்த வகையில் பாதுகாப்பு மேம்பாட்டுக்காக 28,420 கோடி ரூபாய் மதிப்புடைய ஆயுதங்களை இந்தியா வாங்கியதாக அமெரிக்க காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
ஆயுதங்கள் வாங்கியதில் இந்தியா முதலிடமும், தாய்வான், சவுதி அரேபியா பாகிஸ்தான் ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களையும் பிடித்துள்ளன.
இந்தியாவுக்கு ஆயுதங்கள் வழங்கியதில் இரஷ்யா முதலிடத்தில் உள்ளது. மேலும் உயர்தொழில்நுட்ப ஆயுதங்களை இஸ்ரேல், பிரான்ஸ், அமெரிக்காவிடம் இருந்தும் இந்தியா பெற்றுள்ளது.
வளரும் நாடுகளுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஒப்பந்தங்களில் அமெரிக்கா, ரஷ்யா ஆகியன முதல் 2 இடங்களில் உள்ளன.
 

No comments:

Post a Comment