1. புதிதாக நியமனம் பெற்றுள்ள ஆயர்களுக்கு திருத்தந்தை வழங்கிய உரை
2. அர்ஜெண்டினாவில் இரயில் விபத்தில் இறந்தவர்களுக்குத் திருத்தந்தை அனுப்பிய அனுதாபத் தந்தி
3. ஐ.நா. மனித உரிமைகள் அவையின் 18வது அமர்வில் பேராயர் சில்வானோ தொமாசி வழங்கிய உரை
4. பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் பரவிவரும் டெங்கு காய்ச்சலால் தலத்திருச்சபை பாதிப்பு
5. தென் ஆப்ரிக்காவில் புதிதாக ஒரு கத்தோலிக்க வானொலி நிலையத்திற்கு அரசு அனுமதி
6. இந்தியாவின் சில மாநிலங்களில் மதச் சிறுபான்மையினருக்கு சரியான பாதுகாப்பு இல்லை - அமெரிக்க ஐக்கிய நாட்டு அறிக்கை
7. வருகிற அக்டோபர் 31ம் தேதி உலக மக்கள் தொகை 700 கோடியைத் தாண்டும்
8. துபாயில் அக்டோபர் 1ம் தேதி முதல் இரண்டாம் உலகத்தமிழர் பொருளாதார மாநாடு
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. புதிதாக நியமனம் பெற்றுள்ள ஆயர்களுக்கு திருத்தந்தை வழங்கிய உரை
செப்.15,2011. ஆயர்கள் தனி மனிதர்கள் அல்ல, மாறாக, நமது ஆன்மாக்களின் மேய்ப்பரும், ஆயருமான கிறிஸ்துவுடன் இணைந்துள்ள ஓர் அங்கம் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
புதிதாக நியமனம் பெற்றுள்ள ஆயர்கள் உரோமையில் உள்ள புனித பேதுருவின் கல்லறைக்குத் திருப்பயணம் மேற்கொள்ளும் பழக்கத்தின்படி, உரோம் நகர் வந்துள்ள புதிய ஆயர்களை திருத்தந்தையரின் கோடை விடுமுறை இல்லமான காஸ்தல் கந்தோல்போவில் இவ்வியாழனன்று சந்தித்தத் திருத்தந்தை அவர்களுக்கு வழங்கிய உரையில் இவ்வாறு கூறினார்.
இலத்தீன் ரீதி, மற்றும் கீழை ரீதி ஆயர்களை, சிறப்பான முறையில் வாழ்த்துவதாகக் கூறியத் திருத்தந்தை, மத்தியக் கிழக்குப் பகுதியில் பலவித இன்னல்களைத் தாங்கி வரும் மக்களை தான் சிறப்பான முறையில் நினைவு கூர்வதாகக் கூறினார்.
குருத்துவம் என்ற அருள்சாதனத்தின் முழு நிறைவை வழங்கும் ஆயர் நிலையானது, திருச்சபை என்னும் குடும்பத்திற்கு சேவை செய்வதற்கென உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று திருத்தந்தை புதிய ஆயர்களுக்கு சுட்டிக்காட்டினார்.
தூய ஆவியானவர் வழங்கும் கொடைகள் அனைத்தும் அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படுகிறது என்றும், இந்தக் கொடைகளை மக்கள் இன்னும் அதிகமாகப் பெறுவதற்கு ஆயர்கள் ஆவன செய்யவேண்டும் என்றும் திருத்தந்தை கூறினார்.
கண்ணால் காணக்கூடிய தலத்திருச்சபையின் ஒற்றுமைக்கு ஒவ்வோர் ஆயரும் ஓர் அடையாளமாய் இருந்து, தங்கள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ள மக்களை ஒற்றுமையிலும், ஒப்புரவிலும் வளர்ப்பது ஆயர்களின் தலையாயக் கடமை என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் எடுத்துரைத்தபின், அங்கு கூடியிருந்த அனைத்து புதிய ஆயர்களுக்கும் தன் உரையின் இறுதியில், சிறப்பு அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கினார்.
2. அர்ஜெண்டினாவில் இரயில் விபத்தில் இறந்தவர்களுக்குத் திருத்தந்தை அனுப்பிய அனுதாபத் தந்தி
செப்.15,2011. இச்செவ்வாய் காலை அர்ஜெண்டினாவின் Buenos Airesல் நிகழ்ந்த இரயில் விபத்தில் இறந்தவர்கள், மற்றும் காயமடைந்தோருக்குத் தன் ஆழ்ந்த அனுதாபங்களைத் திருத்தந்தை தெரிவித்தார்.
இச்செவ்வாய் காலை Buenos Aires நகரில் இரயில் அடைப்பைத் தாண்டிச் செல்ல முயன்ற ஒரு பேருந்தினால், இரு இரயில்கள் மற்றும் அந்தப் பேருந்து விபத்துக்குள்ளாகி 11 பேர் இறந்துள்ளனர், மற்றும் 200க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்தைக் குறித்து கேள்விபட்டத் திருத்தந்தை, திருப்பீடச் செயலர் கர்தினால் தர்சிசியோ பெர்தோனே வழியாக அர்ஜென்டினா கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவர் கர்தினால் Jorge Bergoglioவுக்குத் தன் அனுதாபங்களைத் தெரிவிக்கும் தந்தியொன்றை அனுப்பியுள்ளார்.
விபத்தில் இறந்தவர்களுக்கு இறைவன் நித்திய சாந்தி அருளவேண்டும் என்றும், காயப்பட்டவர்களுக்கு குணமும், ஆறுதலும் வழங்க வேண்டும் என்றும் இச்செய்தியில் கூறியுள்ள திருத்தந்தை, பாதிக்கப்பட்ட அனைவரோடும் தானும் செபத்தால் ஒன்றியிருப்பதாக இத்தந்தியில் தெரிவித்துள்ளார்.
3. ஐ.நா. மனித உரிமைகள் அவையின் 18வது அமர்வில் பேராயர் சில்வானோ தொமாசி வழங்கிய உரை
செப்.15,2011. மனித வர்த்தகம், முக்கியமாக, பெண்களையும் குழந்தைகளையும் வர்த்தகம் செய்யும் புதிய அடிமை வர்த்தகம் உலகின் பல நாடுகளில் நடைபெற்று வருகிறதென்று திருப்பீட அதிகாரி ஒருவர் கூறினார்.
ஐ.நா. மனித உரிமைகள் அவையின் 18வது அமர்வில் இச்செவ்வாயன்று, ஐ.நா.அவையில் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளராகப் பணிபுரியும் பேராயர் சில்வானோ தொமாசி, உலகில் இன்று நடைபெறும் புதிய அடிமை வர்த்தகத்தால் ஒவ்வோர் ஆண்டும் 30 இலட்சம் பேர் பாதிக்கப்படுகின்றனர் என்று எடுத்துக் கூறினார்.
மிகக் கடினமானச் சூழலில் பெண்களும், குழந்தைகளும் அயல்நாடுகளுக்குப் பயணங்கள் மேற்கொள்வதைப் பற்றிக் கூறிய பேராயர் தொமாசி, இந்த நவீன அடிமைகளின் பாஸ்போர்ட் மற்றும் பிற ஆவணங்கள் இவர்களை விலைகொடுத்து வாங்கும் முதலாளிகளின் கைகளில் சிக்கிக் கொள்வதால் எழும் பல துயரங்களையும் தன் உரையில் குறிப்பிட்டார்.
இக்கொடுமைகளுக்கு எதிராக பல்வேறு சட்டங்களை உலக நாடுகள் உருவாக்கியிருந்தாலும், ஒவ்வோர் ஆண்டும் இந்தக் கொடுமை பல்வேறு புதிய வடிவங்கள் பெற்றுவருவதையும் பேராயர் எடுத்துரைத்தார்.
இந்தப் பிரச்னையை வேரோடு களைய ஒவ்வோர் அரசும் மிகக் கடினமான சட்டங்களையும், வழிமுறைகளையும் கண்டுபிடிப்பது நம் அனைவரின் மனசாட்சிக்கும் விடுக்கப்பட்டுள்ள ஒரு சவால் என்று ஐ.நா.அவையில் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளராகப் பணிபுரியும் பேராயர் சில்வானோ தொமாசி வலியுறுத்திக் கூறினார்.
இத்திங்களன்று ஜெனீவாவில் ஆரம்பமான ஐ.நா. மனித உரிமைகள் அவையின் 18வது அமர்வு, இம்மாதம் இறுதிவரை நடைபெறும் என்று செய்திகள் கூறுகின்றன.
4. பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் பரவிவரும் டெங்கு காய்ச்சலால் தலத்திருச்சபை பாதிப்பு
செப்.15,2011. பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் பரவிவரும் டெங்கு காய்ச்சலால் தலத்திருச்சபை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரு மாதங்களாய் அங்கு நிலவி வரும் இந்தக் காய்ச்சலால் இதுவரை 5000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், இவர்களில் இரண்டு கிறிஸ்தவர்கள் உட்பட 18 பேர் இறந்துள்ளனர் என்றும் செய்திகள் கூறுகின்றன.
இந்த காய்ச்சல் பரவுவதைக் கட்டுப்படுத்த பஞ்சாப் மாநில அரசு, லாகூர் நகரில் தலத்திருச்சபை நடத்தும் பல பள்ளிகள் உட்பட அனைத்து பள்ளிகளையும் இச்செவ்வாய் முதல் பத்து நாட்களுக்கு மூடி, பள்ளிகளில் கொசு ஒழிப்பு மருந்துகளை பயன்படுத்தி வருகின்றது.
இந்தக் காய்ச்சலுக்கு எதிராக மக்கள் கடைபிடிக்க வேண்டிய பல பாதுகாப்பு முயற்சிகளைப் பற்றி லாகூர் மறைமாவட்ட முதன்மை குரு Andrew Nisari புனித அந்தோனியார் நவநாள் பக்தி முயற்சிகளுக்குப் பின் மக்களுக்கு எடுத்துரைத்தார்.
பல குருக்கள் கோவில்களில், திருப்பலி நேரங்களில் டெங்கு காய்ச்சலில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் வழிகளை மக்களுக்குக் கூறி வருகின்றனர் என்று UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
5. தென் ஆப்ரிக்காவில் புதிதாக ஒரு கத்தோலிக்க வானொலி நிலையத்திற்கு அரசு அனுமதி
செப்.15,2011. பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட ஒரு முயற்சியின் பயனாக, தென் ஆப்ரிக்காவில் ஒரு கத்தோலிக்க வானொலி நிலையம் ஒலிபரப்புச் செய்வதற்கு அந்நாட்டு அரசு உத்தரவு வழங்கியுள்ளது.
Radio Veritas என்ற பெயருடன் செயல்படும் இந்த வானொலிக்கு உத்தரவு வழங்கிய அரசுக்கு தன் நன்றிகளைத் தெரிவித்த Johannesburg பேராயர் Buti Tlhagale இவ்வானொலியின் மூலம் தன் உயர்மறைமாவட்டம் பெருமளவு பயன்படும் என்பதைக் கூறினார்.
2000மாம் ஆண்டு ஆரம்பமான இந்த முயற்சி 11 ஆண்டுகளுக்குப் பின் பயனளித்திருப்பது தனக்கு மிகுந்த மன நிறைவைத் தருகிறதென்று இம்முயற்சிக்கு வித்திட்ட அருள்தந்தை Emil Blaser கூறினார்.
இவ்வானொலி நிலையம் செயல்படும் அலைவரிசைகள், மற்றும் பிற விவரங்கள் அடங்கிய அறிக்கையொன்று இச்செவ்வாயன்று வெளியிடப்பட்டது.
ஆப்ரிக்காவின் உகாண்டாவில் கடந்த ஆண்டு முதல் இயங்கி வரும் மற்றொரு கத்தோலிக்க வானொலி நிலையம், அந்நாட்டில் இராணுவப் பயிற்சிகளில் ஈடுபட கட்டாயப்படுத்தப்படும் குழந்தை வீரர்களை மீட்கும் பணியில் தீரிவமாக செயல்பட்டது குறிப்பிடத் தக்கது.
6. இந்தியாவின் சில மாநிலங்களில் மதச் சிறுபான்மையினருக்கு சரியான பாதுகாப்பு இல்லை - அமெரிக்க ஐக்கிய நாட்டு அறிக்கை
செப்.15,2011. மதச் சுதந்திரம் என்பது இந்தியக் குடிமக்களின் அடிப்படை உரிமை என்று கூறப்பட்டாலும், அந்நாட்டின் ஒரு சில மாநிலங்களில் மதச் சிறுபான்மையினருக்கு எதிராக நடத்தப்படும் கொடுமைகளை நீக்குவதற்கு அம்மாநில அரசுகள் சரிவரச் செயல்படவில்லை என்று அமெரிக்க ஐக்கிய நாடு வெளியிட்டுள்ள ஓர் அறிக்கை கூறுகிறது.
2010ம் ஆண்டின் இரண்டாம் பாதியில் அகில உலகில் நிலவிய மதச் சுதந்திரம் பற்றிய ஓர் அறிக்கையை இச்செவ்வாயன்று அமெரிக்க அரசுச் செயலரான Hillary Clinton வெளியிட்டார்.
உலகின் பல அரசுகள் தங்கள் நாட்டு மக்களுக்கு சமய உரிமைகளை மறுத்து, அவர்களை சமய அடிப்படையில் வதைத்து வருவது இவ்வறிக்கையில் புள்ளிவிவரங்களுடன் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் சமயம் சார்ந்த வன்முறைகள் நிகழ்கின்றன என்பதை உறுதி செய்துள்ள இவ்வறிக்கையில், அந்நாட்டில் சரியான பயிற்சிகள் பெறாத காவல் துறையினரின் சக்தியற்ற செயல்பாடும், நீதித் துறை மிகவும் தாமதமாகச் செயல்படுவதும் இந்த வன்முறைகளுக்கு முக்கிய காரணம் என்று கூறப்பட்டுள்ளது.
2010ம் ஆண்டு ஜூலை முதல் டிசம்பர் வரை 198 நாடுகளின் சமயம் சார்ந்த உரிமைகள் குறித்து விவரங்களை வெளியிட்டுள்ள இவ்வறிக்கையில், மியான்மார், சீனா, ஈரான், வடகொரியா, சவூதி அரேபியா, சூடான் ஆகிய நாடுகள் கவலைக்குரிய போக்கில் செல்வதாகக் கூறப்பட்டுள்ளது.
7. வருகிற அக்டோபர் 31ம் தேதி உலக மக்கள் தொகை 700 கோடியைத் தாண்டும்
செப்.15,2011. விரைவில் நமது உலகின் மக்கள் தொகை 700 கோடியைத் தாண்டும் என்றும் இந்த மைல்கல்லை உலகம் அடையும் வேளையில், உலக அரசுகள் ஒன்று கூடி வந்து, இந்த சவாலைச் சந்திக்க வேண்டும் என்றும் ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் கூறினார்.
வல்லுனர்களின் கணிப்பின்படி வருகிற அக்டோபர் மாதம் இவ்வுலக மக்கள் தொகை 700 கோடியைத் தாண்டும் என்று சுட்டிக்காட்டிய பான் கி மூன், ‘700 கோடி செயல்பாடுகள்’ என்ற திட்டத்தை இப்புதனன்று நியூயார்க் நகரில் ஐ.நா. தலைமைச் செயலகத்தில் ஆரம்பித்து வைத்தார்.
தேவைக்கும் அதிகமாக உணவு உற்பத்தியில் உலகம் வளர்ந்திருந்தாலும், உலகில் பசியாலும், பட்டினியாலும் வாடும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது என்பது நம் உலகின் முரண்பாடுகளில் ஒன்று என்பதைச் சுட்டிக்காட்டிய பான் கி மூன்,
700 கோடியைத் தாண்டிப் பிறக்கும் முதல் குழந்தை முரண்பாடுகள் அதிகமாகி வரும் இதுபோன்ற ஓர் உலகைச் சந்திக்க வேண்டியுள்ளது என்று கூறினார்.
உலக அரசுகளும், அரசு சாரா அமைப்புக்கள் இன்னும் பிற நிறுவனங்கள் அனைத்தும் மக்கள் மீது தங்கள் முதலீடுகளை செலவழித்தால், தகுந்த பயன்களை மனித சமுதாயம் உறுதியாகப் பெறும் என்ற தன் நம்பிக்கையையும் வெளியிட்டார் ஐ.நா.பொதுச் செயலர்.
ஐ.நா. அண்மையில் வெளியிட்ட உலக மக்கள்தொகை கணக்கின்படி, அக்டோபர் 31ம் தேதி உலக மக்கள் தொகை 700 கோடியைத் தாண்டும் என்றும், இதே அளவில் மக்கள்தொகை அதிகரித்து வந்தால், 2050ம் ஆண்டிற்குள் மக்கள் தொகை 900 கோடியையும், 21ம் நூற்றாண்டு முடிவடைவதற்குள் உலக மக்கள்தொகை 1001 கோடியையும் தாண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
8. துபாயில் அக்டோபர் 1ம் தேதி முதல் இரண்டாம் உலகத்தமிழர் பொருளாதார மாநாடு
செப்.15,2011. இரண்டாம் உலகத் தமிழர் பொருளாதார மாநாடு மற்றும் கண்காட்சி துபாயில் உள்ள உலக வர்த்தக மையத்தில், அக்டோபர் 1ம் தேதி முதல் 4 நாட்கள் நடைபெறும் என்று செய்திகள் கூறுகின்றன.
உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் கலாசாரம் மற்றும் பொருளாதார நிலை குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது. தற்போதைய உலகத் தமிழர் நிலை, முதலீட்டு வாய்ப்புகள், தொழில்நுட்பம் ஆகியவை குறித்து பல நிபுணர்கள் உரையாற்றுகின்றனர்.
உலகம் முழுவதிலுமிருந்து தமிழர்கள் இதில் பங்கேற்று, தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள உள்ளனர். கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் வாய்ப்புகள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தனி நபர் மற்றும் குழுவாக ஒன்றிணைந்து சமுதாய வளர்ச்சிக்கு பாடுபடவும் இந்த மாநாடு நடத்தப்படுகிறது.
இந்த மாநாட்டில் இந்தியா உட்பட பல நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள், நீதிபதிகள், அதிகாரிகள், கல்வியாளர்கள், தொழில் அதிபர்கள் பலரும் பங்கேற்கின்றனர். உலகத் தமிழர்களுக்கு பல துறைகளிலும் சேவை புரிந்தவர்களுக்கு உலகத்தமிழ் மாமணி என்ற விருது வழங்கப்படுகிறது.
No comments:
Post a Comment