1. ஜெனீவாவில் நடைபெறும் WIPO (World Intellectual Property Organization) நிறுவனத்தின் 49வது அமர்வில் பேராயர் சில்வானோ தொமாசி
2. ஐ.நா.வில் பாலஸ்தீனம் உறுப்பு நாடாக அங்கீகரிக்கப்பட திருப்பீடம் ஆதரவு
3. கருக்கலைப்பு எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வாக அமையாது - மெக்சிகோ நாட்டு கர்தினால்
4. அக்டோபர் மாதம் கடைபிடிக்கப்படும் வாழ்வை மதிக்கும் மாதத்தையொட்டி அமெரிக்க ஆயர் பேரவை அறிக்கை
5. செபமாலை அன்னை திருநாளன்று அமெரிக்காவின் வாஷிங்டன் பேராலயத்தில் 140 நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான குழந்தைகள் கூடுவர்
6. கோவா மாநிலத்தின் சுற்றுலாத் திட்டங்களில் தலத் திருச்சபை ஈடுபாடு
7. பாகிஸ்தானில் பள்ளிச் சிறுமியின் எழுத்துப்பிழையினால் தேவ நிந்தனைச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படும் ஆபத்து
8. 37 வளரும் நாடுகளில் குழந்தைகளுக்குத் தேவையான தடுப்பூசி மருந்துகள் கிடைப்பதற்கு ஐ.நா. அமைப்பின் முயற்சிகள்
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. ஜெனீவாவில் நடைபெறும் WIPO (World Intellectual Property Organization) நிறுவனத்தின் 49வது அமர்வில் பேராயர் சில்வானோ தொமாசி
செப்.28,2011. அறிவுத்திறனை ஓர் உடைமையாகப் பேணுவதில் அனைவரும் அக்கறை காட்டவேண்டும் என்பதைத் திருப்பீடம் எப்போதும் வலியுறுத்தி வந்துள்ளது என்று திருப்பீட அதிகாரி ஒருவர் கூறினார்.
ஜெனீவாவில் உள்ள ஐ.நா. நிறுவனத்தில் திருப்பீடத்தின் சார்பில் நிரந்தரப் பார்வையாளராகப் பணியாற்றும் பேராயர் சில்வானோ தொமாசி, WIPO (World Intellectual Property Organization) என்றழைக்கப்படும் அறிவு சார்ந்த உடைமைகளின் பாதுகாப்பு நிறுவனத்தின் 49வது அமர்வில் பேசியபோது இவ்வாறு கூறினார்.
அறிவு என்பது பாதுகாக்கப்பட வேண்டிய ஓர் உடைமை என்பதை வலியுறுத்திக் கூறிய பேராயர் தொமாசி, நமது அறிவுவழி கண்டுபிடிக்கப்படும் உண்மைகள் அனைத்து மக்களுக்கும் பயன்தரும் வகையில் அமைய வேண்டும் என்பதையும் சுட்டிக் காட்டினார்.
அறிவைப் பயன்படுத்தும் வழிகளை ஆராயும் ஒரு கருத்தரங்கில் ஈடுபட்டுள்ள இந்த ஐ.நா.அவை, உலகெங்கும் பார்வைத்திறன் அற்ற 284,000,000 மக்களையும் கருத்தில் கொண்டிருப்பதை பேராயர் பாராட்டினார்.
அறிவுத்திறன் உடைமைகள் என்று எண்ணும்போது, பழங்குடியினர் மற்றும் பாரம்பரிய வழிகளில் மருத்துவத்தைப் பயன்படுத்தும் பல குழுவினரின் கண்டுபிடிப்புக்களையும் இந்த அகில உலக அவை மதிக்கவேண்டும் என்று பேராயர் தொமாசி வலியுறுத்தினார்.
2. ஐ.நா.வில் பாலஸ்தீனம் உறுப்பு நாடாக அங்கீகரிக்கப்பட திருப்பீடம் ஆதரவு
செப்.28,2011. புனித பூமியில் நிலையான அமைதி ஏற்படுவதற்கு அனைத்துலக சமுதாயம் தனது அர்ப்பணத்தை அதிகரித்து அதற்கானத் தனது முன்னெடுப்புக்களை முடுக்கி விடுமாறு திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் ஐ.நாவைக் கேட்டுக் கொண்டார்.
நியுயார்க்கில் ஐ.நா.தலைமையகத்தில் நடைபெற்று வரும் 66 வது பொது அவையில் உரையாற்றிய, திருப்பீடத்தின் நாடுகளுக்கிடையேயான உறவுகளின் செயலர் பேராயர் தொமினிக் மம்பர்த்தி, புனித பூமியில் அமைதியை ஏற்படுத்தும் முயற்சியில் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனியர்களின் உரிமைகள் மதிக்கப்படுவது முக்கியம் என்பதை வலியுறுத்தினார்.
பாலஸ்தீனம் ஐ.நா.வில் உறுப்பு நாடாக அங்கம் வகிப்பது குறித்துப் பாலஸ்தீனத் தலைவர் Mahmoud Abbas இம்மாதம் 23ம் தேதி ஐ.நா.பொது அவையில் முன்வைத்துள்ள கோரிக்கையைக் குறிப்பிட்டுப் பேசிய பேராயர் மம்பர்த்தி, இந்தக் கோரிக்கைக்கு, அனைத்துலக சமுதாயத்தின் ஆதரவுடன் தீர்வு வழங்கப்படுமாறு கேட்டுக் கொண்டார்.
மேலும், தற்சமயம் “நாடுகளின் குடும்பம்” எதிர் நோக்கும் முக்கிய சவால்களாக, கிழக்கு ஆப்ரிக்க நாடுகள் எதிர்கொள்ளும் மனிதாபிமான நெருக்கடிகள், உலகில் சமய சுதந்திரம் மதிக்கப்படுவதன் தேவை, உலகம் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடி, நிதி நெருக்கடி ஆகியவற்றைச் சுட்டிக் காட்டிப் பேசினார் அவர்.
2012ம் ஆண்டு சனவரி முதல் நாள், தனது இரண்டாவது பதவிக்காலத்தைத் தொடங்கும் ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூனுக்கும், ஐ.நா.வின் 193 வது உறுப்பு நாடாகப் புதிதாக இப்பொது அவையில் கலந்து கொள்ளும் தென் சூடானுக்கும் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார் பேராயர் தொமினிக் மம்பர்த்தி.
3. கருக்கலைப்பு எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வாக அமையாது - மெக்சிகோ நாட்டு கர்தினால்
செப்.28,2011. கருக்கலைப்பு எந்த வகையிலும், எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வாக அமையாது என்று மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த கர்தினால் Norberto Rivera Carrera கூறினார்.
கருக்கலைப்பை சட்டமாக்கும் முயற்சிகளில் மெக்சிகோ அரசு ஈடுபட்டுள்ள இவ்வேளையில், இந்தப் பிரச்சனை அந்நாட்டின் உச்ச நீதி மன்றத்தில் விவாதிக்கப்பட்டு வருவதையொட்டி தன கருத்தை வெளியிட்ட மெக்சிகோ நகரப் பேராயர் கர்தினால் Carrera இவ்வாறு கூறினார்.
பணியிடங்களிலும், குடும்பங்களிலும் கருக்கலைப்பை மேற்கொள்வதற்கு பெண்கள் கட்டாயப்படுத்தப்படும்போது, திருச்சபை அவர்களுக்குப் பக்கபலமாக இருந்து நல்ல முடிவுகளை எடுக்க உதவிகள் செய்து வருகிறதென்று கர்தினால் Carrera சுட்டிக்காட்டினார்.
கருவில் வளரும் உயிர்களை ஒரு வர்த்தகப் பொருளைப்போல் கருதும் போக்கு இவ்வுலகில் பெருகிவருவதைச் சுட்டிக்காட்டிய கர்தினால் Carrera, ஒரு குழந்தை எப்போதும் கடவுள் வழங்கும் ஒரு கொடையே தவிர மனிதர்களின் உடமைப் பொருள் அல்ல என்று கூறினார்.
4. அக்டோபர் மாதம் கடைபிடிக்கப்படும் வாழ்வை மதிக்கும் மாதத்தையொட்டி அமெரிக்க ஆயர் பேரவை அறிக்கை
செப்.28,2011. வாழத் தகுதியற்றவர்கள் என்று தீர்மானித்து ஒதுக்கிவைக்கும் இவ்வுலகப் போக்கிற்கு எதிராக, முழுவாழ்வை அளிக்க வந்தேன் என்று இயேசு கூறியுள்ள உறுதிமொழி ஒலிக்கிறது என்று அமெரிக்க ஆயர் பேரவை கூறியுள்ளது.
ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் மாதம் கடைபிடிக்கப்படும் வாழ்வை மதிக்கும் மாதம் வருகிற வார இறுதி முதல் துவங்கவிருக்கும் சூழலில், அமெரிக்க ஆயர் பேரவையின் வாழ்வை வலியுறுத்தும் செயல்பாடுகள் குழுவின் தலைவரான கர்தினால் Daniel DiNardo ஆயர் பேரவையின் சார்பில் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் இவ்வாறு கூறியுள்ளார்.
கருக்கலைப்பு மற்றும் கருத்தடை ஆகியவற்றை நலக்காப்பீட்டுத் திட்டங்களில் இணைக்க அமெரிக்க அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகள் இவ்வெள்ளியன்று நிறைவுக்கு வரும் வேளையில், இந்த முயற்சிகளை கத்தோலிக்கர்கள் வன்மையாக எதிர்க்க வேண்டும் என்று அமெரிக்க ஆயர் அவை வலியுறுத்தியுள்ளது.
கருவில் வளரும் குழந்தைகள், வயது முதிர்ந்தோர் ஆகியோர் சமுதாயத்தின் பார்வையில் பயனற்றவர்கள் என்று கருதப்படுவது மிகவும் தவறான ஓர் எண்ணம் என்றும் கிறிஸ்து கொணர்ந்துள்ள வாழ்வை அனைவரும் முழுவதும் பெற வேண்டும் என்பதை உலகிற்கு பறை சாற்றவே இந்த வாழ்வை வலியுறுத்தும் மாதம் கடைபிடிக்கப்படுகிறது என்றும் கர்தினால் DiNardo கூறினார்.
5. செபமாலை அன்னை திருநாளன்று அமெரிக்காவின் வாஷிங்டன் பேராலயத்தில் 140 நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான குழந்தைகள் கூடுவர்
செப்.28,2011. வருகிற அக்டோபர் 7ம் தேதி கொண்டாடப்படும் செபமாலை அன்னை திருநாளன்று, 140 நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான குழந்தைகள் அமெரிக்காவின் வாஷிங்டன் பேராலயத்தில் கூடி வந்து, மரியன்னைக்கு ஒரு தங்க ரோஜா மலரை அளிப்பர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒன்பது ஆண்டுகளாய் ஒவ்வோர் ஆண்டும் கொண்டாடப்படும் அகில உலக குழந்தைகளின் திருநற்கருணை நேரம் என்ற இந்த முயற்சியையொட்டி அக்டோபர் 7ம் தேதி ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் கூடி வரும் இந்த நிகழ்ச்சியை EWTN என்ற தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு செய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாத்திமா அன்னையின் உலகப் பணி அமைப்பும், புனித குழந்தைப்பருவக் கழகமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்வை New Orleans பேராயர் Gregory Aymond தலைமையேற்று நடத்துவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
6. கோவா மாநிலத்தின் சுற்றுலாத் திட்டங்களில் தலத் திருச்சபை ஈடுபாடு
செப்.28,2011. கோவா மாநிலத்தின் கலாச்சாரத்தை இன்னும் அதிகமாக பலரும் உணரும் வழிகளை தலத் திருச்சபை மேற்கொள்ளவிருக்கிறது.
செப்டம்பர் 27 இச்செவ்வாயன்று கடைபிடிக்கப்பட்ட அகில உலக சுற்றுலாப் பயண நாளையொட்டி ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் கோவா தலத் திருச்சபை இவ்விதம் கூறியுள்ளது.
கோவாவில் மேற்கொள்ளப்படும் சுற்றுலாக்கள் கலாச்சாரக் கூறுகளைக் பொறுப்புணர்வுடன் கற்றுக் கொள்ளும் வகையில் அமைவதை தலத் திருச்சபை பெரிதும் விரும்புகிறது என்று இந்த ஊடக அறிக்கையை வெளியிட்ட கோவா காரித்தாஸ் இயக்குனர் அருள்தந்தை Maverick Fernandes கூறினார்.
பன்னாட்டுப் பயணிகளின் கவனத்தை கோவா ஈர்த்து வரும் இவ்வேளையில், இம்மாநிலத்தில் மேற்கொள்ளப்படும் சுற்றுலாக்கள் தவறான வழிகளில் செல்லும் போக்கை விடுத்து, கலாச்சாரத்தை வளர்க்கும் வழிகளை மக்கள் கண்டுணரும் முறையில் அமையவேண்டும் என்று தலத்திருச்சபை வெளியிட்டுள்ள இவ்வறிக்கை வலியுறுத்துகிறது.
7. பாகிஸ்தானில் பள்ளிச் சிறுமியின் எழுத்துப்பிழையினால் தேவ நிந்தனைச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படும் ஆபத்து
செப்.28,2011. குழந்தைகள் கவனக் குறைவால் செய்யும் தவறுகளையும் பெரிதுபடுத்த எண்ணும் பாகிஸ்தான் சமுதாயத்தின் கடினமான வழிமுறைகள் கவலையைத் தருகின்றன என்று இஸ்லாமாபாத் இராவல்பிண்டி ஆயர் Anthony Rufin கூறினார்.
பாகிஸ்தானில் Abbottabad எனுமிடத்தில் Faryal Bhatti என்ற 10 வயது பள்ளிச் சிறுமி இறைவாக்கினர் முகம்மது பற்றி எழுதும்போது கவனக் குறைவாக புரிந்த ஓர் எழுத்துப்பிழையை அவ்வகுப்பு ஆசிரியரும், தலைமை ஆசிரியரும் பெரிதுபடுத்தி, அக்குழந்தையை தேவ நிந்தனைச் சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
அச்சிறுமி தன் கவனக் குறைவால் ஏற்பட்ட பிழையை ஏற்றுக் கொண்ட போதிலும் அவளையும், அவளது குடும்பத்தையும் தங்கள் பகுதியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்றும், அக்குழந்தையை காவல்துறை கைது செய்யவேண்டும் என்றும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
சிறு தவறுகளையும் பெரும் பிரச்சனைகளாக மாற்றி வரும் பாகிஸ்தான் சமுதாயம், சகிப்புத் தன்மையிலிருந்து எவ்வளவு தூரம் விலகிச் சென்றுள்ளது என்பதற்கு இந்தச் சம்பவம் ஓர் எடுத்துக்காட்டு என்று ஆயர் Anthony Rufin ஆசிய செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியொன்றில் கூறினார்.
8. குழந்தைகளுக்குத் தேவையான தடுப்பூசி மருந்துகள் 37 வளரும் நாடுகளில் கிடைப்பதற்கு ஐ.நா. அமைப்பின் முயற்சிகள்
செப்.28,2011. குழந்தைகளுக்குத் தேவையான தடுப்பூசி மருந்துகள் இன்னும் 37 வளரும் நாடுகளுக்கு கிடைப்பதற்கு ஐ.நா. அமைப்பு ஆவன செய்யும் என்று இச்செவ்வாயன்று வெளியான ஓர் ஐ.நா.அறிக்கை கூறுகிறது.
குழந்தைகளுக்கு அதிக அளவில் ஏற்படும் வயிற்றுப்போக்கு, மற்றும் நிமோனியா ஆகிய நோய்களிலிருந்து குழந்தைகளைக் காப்பாற்றும் தடுப்பூசிகளை 37 நாடுகளுக்கு ஐ.நா. வழங்க உள்ளது. இந்த 37 நாடுகளில் 24 நாடுகள் ஆப்ரிக்க கண்டத்தைச் சார்ந்தவை.
ஒவ்வோர் ஆண்டும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் ஐந்து இலட்சம் பேர் வயிற்றுப் போக்கினால் இறக்கின்றனர் என்றும், இவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் ஆப்ரிக்கக் குழந்தைகள் என்றும் இந்த ஐ.நா.அறிக்கை கூறுகிறது.
2000மாம் ஆண்டு முதல் ஆரம்பிக்கப்பட்ட ஐ.நா.வின் இத்திட்டத்தால் 25 கோடி குழந்தைகள் பயன்பெற்றுள்ளனர் என்றும், 2015ம் ஆண்டுக்குள் இன்னும் அதிகமாக 5 கோடி குழந்தைகள் இத்திட்டங்களால் பயன்பெறுவர் என்றும் உலக நலவாழ்வு நிறுவனத்தின் தலைமை இயக்குனர் Margaret Chan கூறினார்.
No comments:
Post a Comment