1. இருபது வடஇந்திய ஆயர்களுக்கு திருத்தந்தை வழங்கிய உரை
2. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் வழங்கிய ஞாயிறு மூவேளை செப உரை
3. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் பிரித்தானிய மக்களுக்கு அனுப்பிய வாழ்த்துத் தந்தி
4. கத்தோலிக்கராய் வாழ்வது ஒரு சிறப்பான வாழ்வு முறை - பிரித்தானிய ஆயர் பேரவையின் அறிக்கை
5. புனித பூமியில் அமைதி நிலவவேண்டுமெனில், செபங்கள் மிக அதிக அளவில் தேவை - எருசலேம் துணை ஆயர்
6. சிங்கப்பூரில் மனித வர்த்தகத்தை முற்றிலும் ஒழிக்கும் முயற்சிகளில் புதிய அரசுத் தலைவர் ஈடுபட சிங்கப்பூர் கிறிஸ்தவர்கள் விண்ணப்பம்
7. அமைச்சர் Shahbaz Bhattiஐக் கொன்றவர்களை அரசு காப்பாற்ற முயல்வது தவறு – பாகிஸ்தான் ஆயர்
8. உணவு உற்பத்தியில் ஈடுபட்டுள்ள உலக நிறுவனங்களின் சக்திக்கு அரசுகள் பணிந்து போகக்கூடாது - ஐ.நா.வின் உயர் அதிகாரி
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. இருபது வடஇந்திய ஆயர்களுக்கு திருத்தந்தை வழங்கிய உரை
செப்.19,2011. செறிவு நிறைந்த, பழம்பெரும் பாரம்பரியத்தைக் கொண்டுள்ள இந்தியாவில், கிறிஸ்தவ பிரசன்னமும் 20 நூற்றாண்டுகளாக தழைத்து வந்துள்ளது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை ஆயர்கள் திருத்தந்தையைச் சந்திக்கும் அட் லிமினா சந்திப்பையொட்டி, இவ்வாண்டின் பல்வேறு மாதங்களில் உரோம் நகர் வந்திருந்த இந்திய ஆயர்களை குழுக்களாக திருத்தந்தை சந்தித்து வந்தார்.
இந்த சந்திப்புக்களின் இறுதி கட்டமாக, திருத்தந்தையரின் கோடை விடுமுறை இல்லமான காஸ்தெல் கந்தோல்போவில் இத்திங்கள் காலை வடஇந்திய ஆயர்கள் இருபது பேரைச் சந்தித்தத் திருத்தந்தை, அவர்களுக்கு வழங்கிய உரையில் இவ்வாறு கூறினார்.
திருச்சபையின் மூலதனம் நாம் கட்டும் கோவில்கள், பள்ளிகள், மற்றும் பிற கட்டிடங்களில் அமைவதில்லை மாறாக, விசுவாசத்தை நடைமுறை வாழ்வில் வெளிப்படுத்தும் மக்களே நமது மிக முக்கியமான மூலதனம் என்று திருத்தந்தை ஆயர்களிடம் எடுத்துரைத்தார்.
ஆயர்கள், குருக்கள், துறவியர் மற்றும் மறைகல்வி புகட்டும் பலரும், இந்தியாவில் உள்ள பல்வேறு கலாச்சாரம், மொழி, இனம், ஆகிய எதார்த்தங்களை எப்போதும் மனதில் கொள்ள வேண்டும் என்று சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, திருச்சபை என்றுமே ஏழைகளின் நண்பர் என்பதற்கு நாம் சாட்சிகளாய் வாழவேண்டும் என்று வலியுறுத்தினார்.
அருளாளர் இரண்டாம் ஜான்பால் இந்தியாவுக்கு வந்த முதல் திருப்பயணத்தின் 25ம் ஆண்டு நினைவை பல வழிகளில் கொண்டாடிய இந்தியத் திருச்சபைக்கு தன் நன்றியை வெளிப்படுத்திய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், மதங்களுக்கிடையே இன்னும் ஆழமான உரையாடல்கள் நடைபெறுவதை அதிகம் விரும்பிய அருளாளர் இரண்டாம் ஜான்பாலின் விருப்பத்தை இந்தியத் திருச்சபை இன்னும் ஆர்வமாக நிறைவேற்ற வேண்டும் என்றும் எடுத்துரைத்தார்.
இத்திங்கள் காலை இருபது வடஇந்திய ஆயர்களைச் சந்திப்பதற்கு முன், திருத்தந்தை 16ம் பெனடிக்ட், போபால் பேராயர் லியோ கொர்னேலியோவையும், நேபாளத்தின் அப்போஸ்தலிக்க நிர்வாகி, ஆயர் பிரான்சிஸ் சர்மாவையும் தனித்தனியே சந்தித்துப் பேசினார்.
2. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் வழங்கிய ஞாயிறு மூவேளை செப உரை
செப்.19,2011. கிறிஸ்துவைத் தங்கள் வாழ்வின் மூலம் வாழ்ந்துகாட்டும் குடும்பங்கள் திருச்சபையின் புதிய மறைபரப்புப் பணியின் முக்கியக் கருவிகள் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
திருத்தந்தையர்களின் கோடை விடுமுறை இல்லமான காஸ்தெல் கந்தோல்போவில் இஞ்ஞாயிறு மூவேளை செப உரையை வழங்கியபோது, ஞாயிறு திருப்பலியின் வாசகங்களில் ஒன்றான புனித பவுல் பிலிப்பியருக்கு எழுதியத் திருமுகத்தின் வரிகளை சுட்டிக்காட்டி, இவ்வாறு கூறினார் திருத்தந்தை.
சிறையில் மரண தண்டனையை எதிர்நோக்கியிருந்த புனித பவுல் 'நான் வாழ்ந்தால் அது கிறிஸ்துவுக்காகவே' என்று சொன்னதுபோல், இன்று உலகில் வாழும் பலர் கிறிஸ்துவுக்காகவே வாழ்ந்து வருகின்றனர் என்று கூறியத் திருத்தந்தை, இவர்கள் அனைவரும் ஆண்டவரின் திராட்சைத் தோட்டத்தில் உழைக்கின்றனர் என்றும் எடுத்துரைத்தார்.
புதிய மறைபரப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் கிறிஸ்தவக் குடும்பங்கள் எவ்வித பிரதிபலனும் எதிர்பார்க்காமல், இறைவனுக்கும், திருச்சபைக்கும் உழைப்பது மாபெரும் ஒரு சாட்சியாக விளங்குகிறது என்று திருத்தந்தை தன் மூவேளை செப உரையில் மகிழ்வுடன் எடுத்துரைத்தார்.
3. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் பிரித்தானிய மக்களுக்கு அனுப்பிய வாழ்த்துத் தந்தி
செப்.19,2011. நாம் தனி மனிதராகவும், ஒரு சமுதாயத்தின் உறுப்பினராகவும் அர்த்தமுள்ள வகையில் வாழ்வதற்கு நற்செய்தியின் உண்மைகள் வழி நடக்க வேண்டுமென்றும், இவ்வழி நடக்கும்போது, நமது மனங்கள் உண்மையான விடுதலைப் பெறும் என்றும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் பிரித்தானிய மக்களுக்குக் கூறினார்.
திருத்தந்தை 16ம் பெனடிக்ட் பிரித்தானிய அரசுக்கு மேற்கொண்ட திருப்பயணத்தின் முதல் ஆண்டு நினைவாக, அவ்வரசின் கத்தோலிக்கர்களுக்கு தன் மகிழ்வையும் வாழ்த்துக்களையும் ஒரு தந்தி மூலம் தெரிவித்த வேளையில், திருத்தந்தை இக்கருத்தையும் வெளியிட்டார்.
திருத்தந்தையின் பெயரால் இத்தந்தியை திருப்பீடச் செயலர் கர்தினால் தர்சிஸியோ பெர்தோனே, பேராயர் வின்சென்ட் நிக்கொல்ஸுக்கு இஞ்ஞாயிறன்று அனுப்பிவைத்தார்.
சென்ற ஆண்டு திருத்தந்தை மேற்கொண்ட திருப்பயணத்தின் நினைவாக இலண்டன் Westminster பேராலயத்தில் கொண்டாடப்பட்ட நன்றித் திருப்பலியில் இந்தத் தந்தி வாசிக்கப்பட்டது.
பிரித்தானிய மக்கள் அனைவரையும் அருளாளர் ஜான் ஹென்றி நியூமன் அவர்களின் பரிந்துரைக்கும், பாதுகாப்பிற்கும் ஒப்புவிப்பதாகக் கூறியத் திருத்தந்தை, அம்மக்கள் அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்குவதாக இத்தந்தியில் குறிப்பிட்டிருந்தார்.
4. கத்தோலிக்கராய் வாழ்வது ஒரு சிறப்பான வாழ்வு முறை - பிரித்தானிய ஆயர் பேரவையின் அறிக்கை
செப்.19,2011. கத்தோலிக்கராய் வாழ்வது ஒரு குறிப்பிட்டக் குழுவின் உறுப்பினராய் இருக்கும் கடமை அல்ல, மாறாக, அது ஒரு சிறப்பான வாழ்வு முறை என்று பிரித்தானிய ஆயர் பேரவையின் அறிக்கையொன்று கூறுகிறது.
திருத்தந்தை 16ம் பெனடிக்ட் பிரித்தானிய அரசுக்கு திருப்பயணம் மேற்கொண்ட முதலாம் ஆண்டு நினைவையொட்டி, அந்நாட்டு கத்தோலிக்கர்களுக்கு ஆயர்கள் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
திருத்தந்தை மேற்கொண்ட திருப்பயணத்தின் நினைவாக இஞ்ஞாயிறன்று Westminster பேராயர் வின்சென்ட் நிக்கோல்ஸ் தலைமையில் ஆயர்களும் குருக்களும் கொண்டாடிய கூட்டுத் திருப்பலியில், திருத்தந்தை அனுப்பிய வாழ்த்துச் செய்தியும், Canterbury ஆங்கலிக்கன் பேராயர் Rowan Williams அனுப்பியிருந்த வாழ்த்துச் செய்தியும் வாசிக்கப்பட்டன.
பிரித்தானிய நாட்டிற்கு நியமிக்கப்பட்டுள்ள திருப்பீடத் தூதர் பேராயர் அந்தோனியோ மெனினி திருத்தந்தையின் சார்பாக இத்திருப்பலியில் கலந்துகொண்டார்.
5. புனித பூமியில் அமைதி நிலவவேண்டுமெனில், செபங்கள் மிக அதிக அளவில் தேவை - எருசலேம் துணை ஆயர்
செப்.19,2011. புனித பூமியில் அமைதி நிலவவேண்டுமெனில், அரசியல் செயல்பாடுகள் மட்டும் போதாது, அதைவிட செபங்கள் மிக அதிக அளவில் தேவைப்படுகின்றன என்று புனித பூமியில் உள்ள ஓர் ஆயர் கூறினார்.
பாலஸ்தீனத்தைத் தனியொரு நாடாக ஐ.நா.அவை அங்கீகரிக்க வேண்டுமென்ற முயற்சியில் பாலஸ்தீனிய அதிகாரிகள் ஈபட்டிருக்கும் இவ்வேளையில், அங்கு கடந்த சில நாட்களாக பதட்டமும், வன்முறைகளும் பெருகி வருவதைச் சுட்டிக்காட்டி பேசிய எருசலேம் துணை ஆயர் வில்லியம் ஷொமாலி (William Shomali), அப்பகுதியில் அமைதி நிலவ செபிக்கும்படி மக்களுக்கு விடுத்த ஒரு செய்தியில் இவ்வாறு கூறினார்.
ஐ.நா. அவையில் பாலஸ்தீனம் ஒரு பார்வையாளர் நிலையைப் பெறுவதற்கு பாலஸ்தீனிய அதிகாரிகள் இந்த வாரம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். பாலஸ்தீனிய அதிகார அமைப்பின் தலைவர் Mahmoud Abbas செப்டம்பர் 23, இவ்வாரம் வெள்ளிக்கிழமை ஐ.நா.வில் இக்கோரிக்கையை முன்வைத்து உரையாற்ற உள்ளார். இந்த முயற்சி குறித்த செய்திகள் வெளியிடப்பட்ட நாட்களிலிருந்து மேற்கு கரை பகுதியில் வன்முறைகள் ஆரம்பித்துள்ளன.
அமைதியை வழங்கும் எந்த மாற்றத்தையும் மக்கள் விரும்புகின்றனர் என்பதை வலியுறுத்திக் கூறிய துணை ஆயர் வில்லியம் ஷொமாலி, வன்முறைகளால் புனித பூமியை விட்டு வெளியேறியுள்ள அனைத்து மக்களையும் மீண்டும் புனித பூமிக்கு வரும்படி கோரி, ஓர் அழைப்பையும் முன் வைத்தார்.
6. சிங்கப்பூரில் மனித வர்த்தகத்தை முற்றிலும் ஒழிக்கும் முயற்சிகளில் புதிய அரசுத் தலைவர் ஈடுபட சிங்கப்பூர் கிறிஸ்தவர்கள் விண்ணப்பம்
செப்.19,2011. மனித வர்த்தகத்தின் ஒரு முக்கிய மையமாக விளங்கும் சிங்கப்பூரில் நிலவும் இக்கொடுமையை, அந்நாட்டின் புதிய அரசுத் தலைவர் முற்றிலும் ஒழிக்கும் முயற்சிகளில் ஈடுபடவேண்டுமென்று சிங்கப்பூர் கிறிஸ்தவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
கடந்த வாரம் நாட்டின் புதிய அரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட Tony Tan அவர்களின் மிக முக்கியமான நடவடிக்கையாக மனித வர்த்தகத்தை நிறுத்துவது அமைய வேண்டும் என்று சிங்கபூர் மறைமாவட்டத்தின் தொடர்புத்துறை இயக்குனர் Joan O’Reilly Fix, Fides செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியொன்றில் கூறினார்.
சிங்கப்பூர் சந்திக்கும் பல சமுதாயப் பிரச்சனைகளில் மனித வர்த்தகம் தலையாய ஒரு பிரச்சனை என்பதைச் சுட்டிக் காட்டிப் பேசிய O’Reilly, இப்பிரச்சனையைத் தீர்க்க புதிய அரசுத்தலைவர் எடுக்கும் எந்த ஒரு முயற்சிக்கும் கிறிஸ்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள் என்று உறுதி கூறினார்.
புதிய அடிமைத்தனமாக உருவெடுத்திருக்கும் இந்த மனித வர்த்தகத்தை கடினமான அரசு நடவடிக்கைகளே தீர்க்க முடியும் என்பதையும் O’Reilly எடுத்துக் கூறினார்.
7. அமைச்சர் Shahbaz Bhattiஐக் கொன்றவர்களை அரசு காப்பாற்ற முயல்வது தவறு – பாகிஸ்தான் ஆயர்
செப்.19,2011. பாகிஸ்தான் சிறுபான்மைத் துறை அமைச்சர் Shahbaz Bhatti கொலை செய்யப்பட்டது குடும்பப் பகை காரணமாகத்தான் என்று காவல்துறையினர் இரண்டாம் முறையாகக் கூறியிருப்பதற்கு அந்நாட்டு ஆயர் ஒருவர் தன் வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
இவ்வாண்டு மார்ச் மாதம் 2ம் தேதி Shahbaz Bhatti அடையாளம் தெரியாத ஒரு கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலைகுற்றம் தொடர்பாக, இருவர் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்விருவரும் முன்பு கிறிஸ்தவர்களாய் இருந்து, பின்னர் இஸ்லாமுக்கு மாறியவர்கள் என்றும், இவர்களுக்கும் Shahbaz Bhatti குடும்பத்தினருக்கும் இடையே சொத்துக்கள் அடிப்படையில் ஏற்பட்ட பகை காரணமாக அவர் கொலை செய்யப்பட்டார் என்றும் காவல்துறையினர் அண்மையில் கூறினர்.
ஆகஸ்ட் மாதத்தில் ஒரு முறையும், தற்போது இரண்டாவது முறையும் காவல்துறை வெளியிட்டு வரும் இதுபோன்ற அறிக்கைகள் குற்றவாளிகளைக் காப்பாற்ற அரசு மேற்கொள்ளும் முயற்சிகளைப் போல் தெரிகிறதென்று இஸ்லாமாபாத் ஆயர் Rufin Anthony கூறினார்.
Shahbaz Bhatti கொலையுண்டது ஒரு அமைச்சரின் கொலை மட்டுமல்ல, பாகிஸ்தானில் குரல் எழுப்ப முடியாத சிறுபான்மையினரின் குரல் ஒன்றை நிறுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட ஒரு முயற்சி என்று ஆயர் Anthony சுட்டிக் காட்டினார். ஆயரின் இந்த கருத்தை ஒரு சில இஸ்லாமியத் தலைவர்களும் ஆதரித்துள்ளனர்.
8. உணவு உற்பத்தியில் ஈடுபட்டுள்ள உலக நிறுவனங்களின் சக்திக்கு அரசுகள் பணிந்து போகக்கூடாது - ஐ.நா.வின் உயர் அதிகாரி
செப்.19,2011. உணவு உற்பத்தியில் ஈடுபட்டுள்ள உலக நிறுவனங்களின் சக்திக்கு அரசுகள் பணிந்து போகாமல், அந்நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென்று ஐ.நா.வின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
இத்திங்கள், செவ்வாய் ஆகிய இரு நாட்கள் ஐ.நா. நடத்தி வரும் ஒரு உயர்மட்டக் கூட்டத்தையொட்டி, தன் கருத்துக்களை வெளியிட்டுள்ள ஐ.நா.உயர் அதிகாரி Olivier De Schutter உணவு நிறுவனங்களுக்கு அரசுகள் இதுவரை அளித்து வந்துள்ள வழிகாட்டும் எச்சரிக்கைகள் தகுந்த பலனைத் தரவில்லை என்று கூறினார்.
உணவு நிறுவனங்கள் உருவாக்கும் அவசர உணவுகள், உடனடியாக சமைக்கக்கூடிய உணவுகள் ஆகியவற்றில் உடல் நலனைக் கெடுக்கும் பல அம்சங்கள் அடங்கியுள்ளன என்றும், முக்கியமாக, அதிக உடல் எடை கூடும் பிரச்சனைகள் இவ்வுணவால் வருகின்றன என்றும் ஐ.நா. அதிகாரி சுட்டிக் காட்டினார்.
உலக நலவாழ்வு நிறுவன அறிக்கையின்படி, ஒவ்வோர் ஆண்டும் உலகில் 28 இலட்சம் மக்கள் அதிக உடல் பருமனால் இறக்கின்றனர்.
50 நாடுகளின் பிரதமர்களும், 34 நாடுகளின் அரசுத் தலைவர்களும் கலந்து கொண்டுள்ள இந்த உயர்மட்டக் கூட்டத்தில், புற்றுநோய், நீரழிவு நோய், இரத்த அழுத்தம் உட்பட உலகின் பல்வேறு நோய்கள் குறித்து பேசப்படுகிறது.
No comments:
Post a Comment