1. திருத்தந்தை, எட்டு வட இந்திய ஆயர்கள் சந்திப்பு
2. நிதிப் பற்றாக்குறையைக் குறித்து அமெரிக்க அரசு மேற்கொண்டிருக்கும் விவாதங்கள் நன்னெறி வழியில் நடத்தப்பட வேண்டும் - அமெரிக்க ஆயர்கள்
3. குடும்பக் கட்டுபாட்டுத் திட்டத்திற்கான நிதியுதவியை நிறுத்துவதற்கான ஐ.நா. திட்டத்திற்குப் பிலிப்பைன்ஸ் பேராயர் வரவேற்பு
4. நேபாளத்தில் சிறுபான்மை மக்களுக்கு உரிய சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் - இந்துப் பெண்கள் அரசிடம் வலியுறுத்தல்
5. இலங்கையில் தீவிரவாதத்தை தடுக்கும் புதிய சட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன
6. AIDFI அமைப்புக்கு ரமோன் மகசேசே விருது
7. அமேசான் மழைக்காடுகளில் புதிய மற்றும் மிக நீளமான நிலத்தடி நதி கண்டுபிடிப்பு
8. ஒரு கொசுவர்த்தி சுருள் 100 சிகரெட்டிற்குச் சமம்
------------------------------ ------------------------------ ------------------------------ ----------------------
1. திருத்தந்தை, எட்டு வட இந்திய ஆயர்கள் சந்திப்பு
செப்.02,2011. ஆயர்கள் ஐந்தாண்டுக்கு ஒருமுறை திருத்தந்தையைச் சந்திக்கும் "ad Limina Apostolorum" என்ற சந்திப்பையொட்டி வட இந்தியாவின் எட்டு ஆயர்கள் இவ்வெள்ளிக்கிழமை திருத்தந்தையைச் சந்தித்தனர்.
உரோம் நகருக்குத் தென்கிழக்கே காஸ்தெல் கந்தோல்ஃபோவில் அமைந்துள்ள பாப்பிறைகளின் கோடைவிடுமுறை இல்லத்தில், நாசிக் ஆயர் லூர்டெஸ் டானியேல், புனே ஆயர் தாமஸ் தாப்ரே, புனே முன்னாள் ஆயர் வலேரியன் டி சூசா, வசை ஆயர்-பேராயர் பெலிக்ஸ் அந்தோணி மச்சாடோ, ஔரங்கபாத் ஆயர் எட்வின் கொலாஸ்கோ, சிந்துதுர்க் ஆயர் அந்தோணி ஆல்வின் ஃபெர்ணான்டெஸ் பரெட்டோ, அகமதபாத் ஆயர் தாமஸ் இக்னேஷியஸ் மக்வான், பரோடா ஆயர் காட்ஃப்ரே தெ ரொசாரியோ ஆகியோரைச் சந்தித்தார் பாப்பிறை.
இவ்வாண்டு மார்ச் மாதத்திலிருந்து ஜூன் மாதம் வரை இந்தியாவின் 164 மறைமாவட்டங்களின் ஆயர்களை மூன்று குழுவினராகச் சந்தித்தத் திருத்தந்தை, இருமாத இடைவெளிக்குப் பின்னர், மீண்டும் இந்த செப்டம்பர் முதல் தேதியிலிருந்து 19ம் தேதி வரை இந்திய ஆயர்களின் கடைசிக் குழுவினரைச் சந்தித்து வருகிறார்.
2. நிதிப் பற்றாக்குறையைக் குறித்து அமெரிக்க அரசு மேற்கொண்டிருக்கும் விவாதங்கள் நன்னெறி வழியில் நடத்தப்பட வேண்டும் - அமெரிக்க ஆயர்கள்
செப்.02,2011. நிதிப் பற்றாக்குறையைக் குறித்து அமெரிக்க அரசு தற்போது மேற்கொண்டிருக்கும் விவாதங்கள் ஏழைகளுக்கு அரசு ஆற்ற வேண்டிய கடமைகளை மையமாகக் கொண்டு நன்னெறி வழியில் நடத்தப்பட வேண்டும் என்று அமெரிக்க ஆயர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அரசு மேற்கொண்டுள்ள இந்த விவாதங்கள், அடுத்து பதவிக்கு எந்த கட்சி வரவேண்டும் என்பதை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்படுவதாக அமைந்தால், மக்களின் பிரதிநிதிகள் நன்நெறியினின்று பிறழ்ந்தவர்களாய் இருப்பர் என்று அமெரிக்க ஆயர்கள் பேரவை விடுத்துள்ள அறிக்கை கூறுகிறது.
அரசியல் கட்சிகளையும், பெரும் செல்வம் வாய்ந்த நிறுவனங்களையும் காக்கும் விதமாக நிதி பற்றாக்குறை விவாதங்கள் தொடர்வதற்குப் பதில், நாட்டில் நிலவும், வேலையில்லா நிலைமை, வீடுகள் இன்றி இருப்போர் நிலைமை, அடுத்தத் தலைமுறையினரின் கல்வி ஆகியவற்றை கருத்தில் கொண்டு விவாதங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஆயர்களின் அறிக்கையை அரசுக்குச் சமர்ப்பித்த Albany ஆயர் Howard Hubbard மற்றும் Stockton ஆயர் Stephen Blaire ஆகியோர் கூறினர்.
நிதி நெருக்கடியினால், ஏழைகளுக்குத் தரப்படவேண்டிய நிதி உதவிகள் தடை செய்யப்படுவது நன்னெறி வழியில் ஏற்றுக் கொள்ளமுடியாத ஒரு கருத்து என்று ஆயர்கள் தங்கள் கவலையை வெளியிட்டுள்ளனர்.
3. குடும்பக் கட்டுபாட்டுத் திட்டத்திற்கான நிதியுதவியை நிறுத்துவதற்கான ஐ.நா. திட்டத்திற்குப் பிலிப்பைன்ஸ் பேராயர் வரவேற்பு
செப்.02,2011. பிலிப்பைன்ஸ் நாட்டுக் குடும்பக் கட்டுபாட்டுத் திட்டத்திற்கு நிதியுதவி செய்வதை ஐக்கிய நாடுகள் நிறுவனம் நிறுத்திக் கொள்ளத் திட்டமிட்டிருப்பதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார் அந்நாட்டுப் பேராயர் Ramon Arguelles.
ஐ.நா.வின் இத்தீர்மானம் குறித்து வெளியாகியுள்ள செய்திகள் உண்மையாய் இருந்தால் இது மிகவும் நல்ல செய்தி என்று, பிலிப்பைன்ஸ் ஆயர் பேரவையின் குடும்பம் மற்றும் மனித வாழ்வு பணிக்குழுத் தலைவர் பேராயர் Arguelles கூறினார்.
பிலிப்பைன்ஸ் நாட்டுக் குடும்பக் கட்டுபாட்டுத் திட்டத்திற்கென ஐ.நா. வழங்கும் நிதியுதவி ஊழல் செய்வதற்கே பயன்படுத்தப்படுகிறது, மாறாக இவ்வுதவி வேறுபல முக்கியமான திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படலாம் என்றார் பேராயர்.
பிலிப்பைன்ஸ் நாட்டுக் குடும்பக் கட்டுபாட்டுத் திட்டத்திற்கு ஐ.நா. அளித்து வரும் பத்து இலட்சம் டாலர் நிதியுதவியை அடுத்த ஆண்டிலிருந்து நிறுத்த எண்ணியிருப்பதாக பிலிப்பைன்ஸ் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் இப்புதனன்று அறிவித்தார்.
4. நேபாளத்தில் சிறுபான்மை மக்களுக்கு உரிய சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் - இந்துப் பெண்கள் அரசிடம் வலியுறுத்தல்
செப்.02,2011. நேபாளத்தில் அரசையும் மதத்தையும் இணைக்க வேண்டாம் என்றும், சிறுபான்மை மக்களுக்கு உரிய சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் என்றும் அந்நாட்டின் இந்துப் பெண்கள் அரசைக் கேட்டுக்கொண்டனர்.
இவ்வியாழனன்று நேபாளத்தில் சிவன் கடவுளுக்கென கொண்டாடப்பட்ட Teej திருவிழாவில் கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமியப் பெண்களும் கலந்து கொள்ள அழைப்பு விடப்பட்டிருந்ததென்றும், இந்த விழாவையொட்டி, அரசுக்கு இந்த விண்ணப்பம் அளிக்கப்பட்டதென்றும் ஆசிய செய்தி நிறுவனம் கூறியது.
நேபாளத்தில் அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக வாழ்வதையே விரும்புகின்றனர் என்றும் மத சார்பற்ற அரசே மக்களை நல்வழியில் கொண்டு செல்ல முடியும் என்றும் இந்து கலாச்சார ஆய்வாளர் Binda Pudel கூறினார்.
தற்போது நேபாள பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு வரும் மத மாற்றத் தடைச் சட்டம் அமல்படுத்தப்பட்டால், கிறிஸ்து பிறப்பு விழா, இரமதான் போன்ற சிறுபான்மையினரின் விழாக்கள் தடை செய்யப்படும் ஆபத்து உள்ளதென்று ஆசியச் செய்திக் குறிப்பு கூறுகிறது.
5. இலங்கையில் தீவிரவாதத்தை தடுக்கும் புதிய சட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன
செப்.02,2011. இலங்கை அரசுத்தலைவர் மகிந்த இராஜ பக்சா நாட்டின் அவசரகால நிலையை நீக்கிவிட்டதாக சென்ற வாரம் அறிவித்திருந்ததை இலங்கைக் கிறிஸ்தவர்கள் தயக்கத்துடனும், சந்தேகத்துடனும் ஏற்றிருந்தனர். அவர்களது சந்தேகங்கள் சரியே எனும் வகையில், இலங்கையில் தீவிரவாதத்தை தடுக்கும் புதிய சட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
அவசரகால நிலை அமலில் இருந்தபோது காணப்பட்ட பல கட்டுப்பாடுகள் இச்சட்டங்களால் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் நிலை உருவாகியுள்ளதென்று ஆசியச் செய்தி நிறுவனம் கூறுகிறது.
இப்புதிய சட்டங்களின் அடிப்படையில், யாருடைய இல்லமும் எந்த நேரத்திலும் சோதனைகளுக்கு உட்படுத்தப்படும், மற்றும் யாரையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யும் உரிமையும் அரசுக்கு உண்டு என்பன போன்ற வழிகள் இச்சட்டங்களின் மூலம் நடைமுறைப்படுத்தப்படும்.
இம்மாதம் ஜெனீவாவில் ஐ.நா.வின் மனித உரிமைகள் உயர்மட்டக் குழு இலங்கையில் நிகழ்ந்த போர்க் குற்றங்கள் குறித்து விவாதிக்கவுள்ள இந்த வேளையில், அந்நாடு அவசரகால நிலை பிரகடனத்தை நீக்கியுள்ளதாகக் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
6. AIDFI அமைப்புக்கு ரமோன் மகசேசே விருது
செப்.02,2011. பிலிப்பைன்ஸ் நாட்டு Negros Occidental மாநிலத்தில் ஏழை கிராம மக்கள் மத்தியில் சேவை செய்து வரும் நிறுவனம் ஒன்றிற்கு இவ்வாண்டுக்கான ரமோன் மகசேசே விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
AIDFI என்ற பூர்வீகஇன மக்கள் முன்னேற்ற அமைப்பு, ஆற்று நீரை உயரமான குன்றுகளில் வாழும் ஏழை கிராம மக்களின் வீடுகளுக்கு எடுத்துச் செல்ல உதவும் தொழில்நுட்ப உதவிகளைச் செய்து வருவதைப் பாராட்டும் விதமாக இவ்விருது வழங்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.
AIDFI குழாய்கள் மூலம் தினமும் 72 ஆயிரம் லிட்டர் தண்ணீர் உயரமான பகுதிகளிலுள்ள நீர்த்தேக்கங்களுக்கு அனுப்பப்படுகிறது. இதன் மூலம் 185 கிராமங்கள் பயனடைகின்றன.
ஆசியாவின் நொபெல் விருது எனக் கருதப்படும் ரமோன் மகசேசே விருது, பிலிப்பைன்ஸின் முன்னாள் அரசுத்தலைவர் ரமோன் மகசேசே நினைவாக வழங்கப்படுகிறது. 1957ல் உருவாக்கப்பட்ட இவ்விருது ஐம்பதாயிரம் டாலர், ஒரு தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழை உள்ளடக்கியது.
7. அமேசான் மழைக்காடுகளில் புதிய மற்றும் மிக நீளமான நிலத்தடி நதி கண்டுபிடிப்பு
செப்.02,2011. தென் அமெரிக்காவின் அமேசான் மழைக்காடுகளில் நான்காயிரம் மீட்டர் ஆழத்தில் புதிய மற்றும் மிக நீளமான நிலத்தடி நதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரேசில் நாட்டு அறிவியல், தொழில்நுட்ப மற்றும் புதுக் கண்டுபிடிப்புக்கான அமைச்சகத்தின் தேசிய ஆய்வு மைய ஆய்வாளர்கள் குழு இப்புதிய நதியைக் கண்டுபிடித்துள்ளது.
‘Hamza’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்புதிய நதி, ஆன்டெஸ் மலைச்சரிவிலிருந்து உற்பத்தியாகி ஏறக்குறைய இரண்டு கிலோ மீட்டருக்குச் செங்குத்தாகப் பாய்ந்து பின்னர் நான்காயிரம் மீட்டர் ஆழத்தில் ஓடி அட்லாண்டிக்ப் பெருங்கடலில் கலப்பதாக அக்குழு கூறியது.
Hamza நதியை அமேசான் நதியோடு ஒப்பிடும் போது இதன் நீரோட்டத்தின் வேகம் குறைந்தும், அதேசமயம் இதன் அகலம் சில இடங்களில் 400 கிலோ மீட்டர் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால் அமேசான் நதியின் அகலம் 100 கிலோ மீட்டருக்குக் குறைவே.
8. ஒரு கொசுவர்த்தி சுருள் 100 சிகரெட்டிற்குச் சமம்
செப்.02,2011. ஒருகொசுவர்த்திச் சுருளின் புகை 100 சிகரெட்டுகளின் புகைக்குச் சமம் என புதுடில்லியில் நடைபெற்ற மருத்துவக் கருத்தரங்கில் டாக்டர் சந்தீப் சால்வி தெரிவித்துள்ளார்.
புதுடில்லியில் மத்திய அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் துறை, இந்திய மருத்து ஆராய்ச்சிமையம் போன்றவை இணைந்து நடத்திய கருத்தரங்கில் கலந்து கொண்டசெஸ்ட் ரிசர்ச் பவுண்டேசன் இயக்குனர் சந்தீப் சால்வி இதனை தெரிவித்தார்.
மேலும் புதுடில்லியை சேர்ந்த பத்ரா மருத்துவமனையை சேர்ந்த டாக்டர் சஞ்சீவ் பகாய் பேசும் போது இந்தியாவில் ஒலி மாசுகேட்டால் மனித உடல் நலத்திற்கு விளையும் கேடு குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படவில்லை என்றார். ஒலியால் உருவாகும் சுற்றுச்சூழல்கேடினால் ஆண்டு தோறும் ஒரு இலட்சம் இந்தியக் குழந்தைகள் பாதிக்கப்படுவதாகவும், இதனால் மரபியல் குறைபாடு ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment