Saturday, 3 September 2011

Catholic News - hottest and latest - 03 September 2011

1. திருத்தந்தை, ஆறு இந்திய ஆயர்கள் சந்திப்பு

2. இந்தியாவில் கிறிஸ்தவர்கள் எதிர்நோக்கும் அடக்குமுறைகள் பற்றி ஆயர்கள் திருத்தந்தையிடம் விளக்கினர்

3. அசன்சோல் மறைமாவட்டத்தில் ஆண்டுதோறும் ஆயிரம் பேர் விசுவாசத்தை ஏற்கின்றனர்,  ஆயர் அறிவிப்பு

4. புதிய நற்செய்திப்பணிக்கு கத்தோலிக்கரும் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவரும் சேர்ந்து உழைக்கத் திருத்தந்தை அழைப்பு

5. நைஜீரியாவில் அமைதி நிலவ கிறிஸ்தவ, முஸ்லீம் தலைவர்கள் அழைப்பு

6. புதுச்சேரி தூய இருதய ஆண்டவர் ஆலயம் அதிகாரப்பூர்வமாகப் பசிலிக்காவாக அறிவிப்பு

7. 'நடைபாதை மக்களைக் கண்டுகொள்ளாத சென்னை'

8. இலங்கையில் யானை கணக்கெடுப்பு

----------------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை, ஆறு இந்திய ஆயர்கள் சந்திப்பு

செப்.03, 2011. "ad Limina" என்ற ஆயர்கள் ஐந்தாண்டுக்கு ஒருமுறை திருத்தந்தையைச் சந்திக்கும் சந்திப்பையொட்டி இந்தியாவின் ஆறு ஆயர்களை இச்சனிக்கிழமை காஸ்தெல் கந்தோல்ஃபோ கோடைவிடுமுறை இல்லத்தில் சந்தித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இவ்வாண்டு மார்ச் மாதத்திலிருந்து ஜூன் மாதம் வரை இந்தியாவின் 164 மறைமாவட்டங்களின் ஆயர்களை மூன்று குழுவினராகச் சந்தித்தத் திருத்தந்தை, இந்த செப்டம்பரிலிருந்து கடைசிக் குழுவினரைச் சந்தித்து வருகிறார்.
இச்சந்திப்பின் மூன்றாவது நாளான இச்சனிக்கிழமை காலை, பெல்காம் ஆயர் பீட்டர் மச்சாடோ, பெல்லாரி ஆயர் ஹென்ரி டி சூசா, சிக்மகலூர் ஆயர் அந்தோணிசாமி தாமசப்பா, குல்பார்கா ஆயர் இராபர்ட் மைக்கிள் மிராண்டா, கார்வார் ஆயர் டெரெக் ஃபெர்ணான்டெஸ், மங்களூர் ஆயர் அலாய்சியஸ் பவுல் டி சூசா ஆகியோரைச் சந்தித்தார் பாப்பிறை.

2. இந்தியாவில் கிறிஸ்தவர்கள் எதிர்நோக்கும் அடக்குமுறைகள் பற்றி ஆயர்கள் திருத்தந்தையிடம் விளக்கினர்

செப்.03, 2011. இச்சந்திப்பின் போது ஆயர்கள் இந்தியாவில் கிறிஸ்தவர்கள் எதிர்நோக்கும் அடக்குமுறைகளை திருத்தந்தையிடம் எடுத்துரைத்துள்ளனர்.
இவ்வியாழக்கிழமை திருத்தந்தையைச் சந்தித்த மும்பை பேராயர் கர்தினால் ஆஸ்வல்ட் கிரேசியஸ், இச்சந்திப்பு குறித்து வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்தார்.
கிறிஸ்தவர்க்கெதிரான நடவடிக்கைகளில் வன்முறை இடம் பெறுகின்றதா என்று திருத்தந்தை கேட்டதாகக் கூறிய, இந்திய ஆயர் பேரவைத் தலைவரான கர்தினால் கிரேசியஸ், இச்செயல்களில் ஈடுபடும் அடிப்படைவாதிகள் கிறிஸ்தவர்கள் மீது வெறுப்புணர்வை உருவாக்க விரும்புகிறார்கள் என்றார்.
அகில உலகத் திருச்சபையில் இந்திய ஆயர்கள் பேரவை நான்காவது பெரிய பேரவையாகும்.

3. அசன்சோல் மறைமாவட்டத்தில் ஆண்டுதோறும் ஆயிரம் பேர் விசுவாசத்தை ஏற்கின்றனர்,  ஆயர் அறிவிப்பு

செப்.03, 2011. கிழக்கிந்தியாவில் இந்துக்களையும் இசுலாமியரையும் பெரும்பான்மையாகக் கொண்டுள்ள அசன்சோல் மறைமாவட்டத்தில் ஆண்டுதோறும் சுமார் ஆயிரம் பேர் கிறிஸ்தவத்திற்கு மாறுகின்றனர் என்று அம்மறைமாவட்ட ஆயர் சிப்ரியான் மோனிஸ் தெரிவித்தார்.
அசன்சோல் மறைமாவட்டம் உருவாக்கப்பட்ட 1997ம் ஆண்டில் இருந்த கத்தோலிக்கரின் எண்ணிக்கை தற்போது இருமடங்காக உயர்ந்துள்ளதாகவும், இந்த வளரும் திருச்சபையில் ஒவ்வோர் ஆண்டும் ஆயிரம் பேர் வீதம் கத்தோலிக்க விசுவாசத்தைத் தழுவுகின்றனர் எனவும் கூறினார் ஆயர் மோனிஸ்.
அருட்பணியாளரின் எண்ணிக்கையும் மூன்று மடங்காகி தற்போது அவர்களின் எண்ணிக்கை 44 என்றுரைத்த ஆயர், அசன்சோல் மறைமாவட்டத்தில் தற்போது 29 ஆயிரம் கத்தோலிக்கர் உள்ளனர் என்று கூறினார்.
மேற்கு வங்க மாநிலத்திலுள்ள இந்தச் சிறிய மறைமாவட்டத்தின் வளர்ச்சிக்குப் பொதுநிலை விசுவாசிகளின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்றும் ஆயர் தெரிவித்தார்.

4. புதிய நற்செய்திப்பணிக்கு கத்தோலிக்கரும் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவரும் சேர்ந்து உழைக்கத் திருத்தந்தை அழைப்பு

செப்.03, 2011. பாரம்பரியக் கிறிஸ்தவ நாடுகளில் நற்செய்தியை மீண்டும் அறிவிப்பதற்கு கத்தோலிக்கரும் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவரும் சேர்ந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
கிரேக்க நகரமான தெசலோனிக்கேயில் கத்தோலிக்க மற்றும் ஆர்த்தடாக்ஸ் வல்லுனர்கள் நடத்திய நான்கு நாள் கூட்டத்தின் நிறைவுக்குக் கடிதம் அனுப்பிய திருத்தந்தை, நவீன உலகில் திருச்சபையின் சாட்சியம்என்ற தலைப்பிலான இவர்களின் விவாதங்கள் காலத்திற்கேற்றவை என்று பாராட்டியுள்ளார்.
முதல் நூற்றாண்டில் தெசலோனிக்கே நகரத்திற்கு நற்செய்தியை எடுத்துச் சென்ற புனித பவுல், கத்தோலிக்கருக்கும் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவருக்கும் இடையே புரிந்து கொள்ளுதலை ஏற்படுத்தி கிறிஸ்தவ ஒன்றிப்புக்கு வழி அமைப்பாராக என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் பாப்பிறை.
உரோம் அந்தோணியானம் பிரான்சிஸ்கன் பாப்பிறை நிறுவனமும் தெசலோனிக்கே அரிஸ்ட்டாட்டில் பல்கலைக்கழகமும் இணைந்து இக்கருத்தரங்கை நடத்தின.

5. நைஜீரியாவில் அமைதி நிலவ கிறிஸ்தவ, முஸ்லீம் தலைவர்கள் அழைப்பு

செப்.03, 2011. நைஜீரியாவின் மத்திய நகரமான ஜோஸில் இவ்வியாழக்கிழமை இடம் பெற்ற மோதல்களில் நாற்பதுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளவேளை, அந்நகரில் அமைதிக்கு அழைப்புவிடுத்துள்ளனர் கிறிஸ்தவ மற்றும் முஸ்லீம் தலைவர்கள்.  
கலவரங்களில் ஈடுபட்டுள்ள இரண்டு தரப்பினரும் பகைமையுணர்வைக் கைவிட்டுப் பேச்சுவார்த்தையை நடத்துமாறு ஜோஸ் நகரக் கத்தோலிக்கப் பேராயர் Ignatius Kaigama கூறினார்.
உள்ளூர் இசுலாமியத் தலைவர் Sheikh Sani Yahaya Jingir ம் இதேமாதிரியான எண்ணத்தையே பிபிசி வானொலியிடம் பகிர்ந்து கொண்டார்.
மேலும், இந்த மேற்கு ஆப்ரிக்க நாட்டில் இடம் பெறும் வன்முறைப் பற்றிப் பேசிய லாகோஸ் கர்தினால் Anthony Olubunmi Okogie, Boko Haram பிரிவினைவாதக் குழுவுக்கு உதவி செய்வோரை அடையாளம் காண அரசுத்தலைவர் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.
நைஜீரியாவின் அபுஜாவில் கடந்த ஆகஸ்ட் இறுதியில் ஐ.நா.கட்டிடம் குண்டு வைப்பு தாக்குதலுக்கு உள்ளானதில் குறைந்தது 23 பேர் இறந்தனர்.

6. புதுச்சேரி தூய இருதய ஆண்டவர் ஆலயம் அதிகாரப்பூர்வமாகப் பசிலிக்காவாக அறிவிப்பு

செப்.03, 2011. புதுச்சேரிக்குப் பெருமை சேர்க்கும் தூய இருதய ஆண்டவர் ஆலயத்தை பசிலிக்கா என இவ்வெள்ளிக்கிழமை திருப்பீடத்தின் பெயரால் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் இந்தியாவுக்கானத் திருப்பீடத்தூதர் பேராயர் சால்வாத்தோரே பென்னாக்கியோ.
இவ்விழா நினைவாக பசிலிக்கா பற்றிய சிறு வழிகாட்டுதல் நூலை இந்தியத் தூதர் வெளியிட பேராயர் அந்தோணி அனந்தராயர் பெற்றுக் கொண்டார்.
இச்சனிக்கிழமை இந்தியத் தபால்துறை உயர் செயலர் இராதிகா துரைசாமி சிறப்புத் தபால் உறையை வெளியிட்டார்.
இஞ்ஞாயிறன்று மாலை 7.15 மணிக்கு புதுச்சேரி கவர்னர், முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் ராஜவேலு, பேராயர் அனந்தராயர் முன்னிலையில் பசிலிக்கா நினைவு மலர் வெளியிடப்படுகிறது.
இவ்வாலயத்தின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்களின் போது 2009ம் ஆண்டு ஜூன் மாதத்தில் இதனைப் பசிலிக்காவாக உயர்த்த வேண்டுமென்ற விண்ணப்பம் கர்தினால் டெலஸ்போர் டோப்போவிடம் முன்வைக்கப்பட்டது. இதனை மைனர் பசிலிக்காவாக உயர்த்தும் பாப்பிறை ஆணைப் பத்திரம் 2011ம் ஆண்டு ஜூலை 29ம் தேதி பாண்டிச்சேரி பேராயர் இல்லத்திற்கு வந்தது. செப்டம்பர் 2, இவ்வெள்ளிக்கிழமை இப்புதிய பசிலிக்காவுக்குப் வந்த பேராயர் பென்னாக்கியோ, இந்த அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.

7. 'நடைபாதை மக்களைக் கண்டுகொள்ளாத சென்னை'

செப்.03, 2011. இந்தியாவில் பாதசாரிகளுக்கான நடைபாதை வசதிகள் சென்னையில்தான் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக ஓர் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
சிஏஐ ஆசியா என்ற ஆசிய நகரங்களில் தூய்மையான காற்றுக்கான முன்னெடுப்புஎன்ற அமைப்பு, இந்தியாவின் முக்கிய ஆறு நகரங்களில் எடுத்த ஆய்வில் சென்னை கடைசியாக வந்திருப்பதாகத் தெரிகிறது.
புனே, ராஜ்கோட், புவனேஸ்வரம், இந்தூர், சூரத், சென்னை ஆகிய ஆறு நகரங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
கள ஆய்வு, பாதசாரிகளின் நேரடிக் கருத்து மற்றும் அரசின் போக்குவரத்து மற்றும் நகர்வுக் கொள்கை ஆகியவற்றை மையமாகக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
"இந்திய நகரங்களை விரைந்து மேம்படுத்த வேண்டியது  நகரமைப்புத் திட்டமிடல்களில் போதிய கவனம் செலுத்தப்பட வேண்டும்" என்ற பரிந்துரையையும் அந்த அமைப்பு முன்வைத்துள்ளது.
பாதசாரிகளுக்கான வசதிகளைச் செய்து கொடுப்பதில் 100-க்கு 54 மதிப்பெண்கள் பெற்று, புனே நகரம் முதலிடத்தைப் பிடித்துள்ளது என்று அந்த அமைப்பின் இந்தியப் பிரதிநிதி பார்தா பாஸு கூறினார்.
சென்னை, 40 மதிப்பெண்களை மட்டும் பெற்று கடைசி இடத்தில் உள்ளது.
பேருந்து நிலையம் மற்றும் இரயில் நிலையங்களில் பாதசாரிகளுக்கான வசதிகளைப் பொருத்தவரை 6 நகரங்களிலுமே மோசமான நிலைதான் காணப்படுவதாக ஆய்வு தெரிவிக்கிறது.

8. இலங்கையில் யானை கணக்கெடுப்பு

செப்.03,2011. இலங்கையில் பல ஆண்டுகள் உள்நாட்டுப் போர் இடம் பெற்றிருந்தாலும் அந்நாட்டில் யானைகளின் எண்ணிக்கை எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருப்பதாக இவ்வெள்ளியன்று வெளியான புதிய கணக்கெடுப்பு கூறுகிறது.
சுமார் 1500 இடங்களில் 3500க்கும் மேற்பட்டோர் மூன்று நாட்களாக நடத்திய இந்தக் கணக்கெடுப்பில் இலங்கையில் மொத்தம் 5879 காட்டு யானைகள் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.
இந்தக் காட்டு யானைகளில் 1100 க்கு அதிகமான குட்டி யானைகள் உள்ளன என்றும்  தந்தம் உடைய யானைகள் 122 என்றும் தெரியவந்துள்ளது.
இதற்கு முந்தையக் கணக்கெடுப்பில் 5350 யானைகள் இருந்தன.
இலங்கையில் சாதாரணமாக மழை பெய்யத மாதமாகிய ஆகஸ்ட் மாதத்தில் பவுர்ணமியை ஒட்டிய நாட்களில் இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருந்தது.
குட்டி யானைகளை காட்டி இருந்து பிடிக்க இதுவரை அரசிடம் எந்த திட்டமும் இல்லை என்று அவர் கூறினார்.
1900மாம் ஆண்டில் இலங்கையில் சுமார் 12 ஆயிரம் யானைகள் இருந்தன. ஆனால் வேட்டையாடுதல் மற்றும் குடியிருப்பு வசதிகளால் அவ்வெண்ணிக்கை மிகவும் குறையத் தொடங்கியது.

No comments:

Post a Comment