Saturday, 10 September 2011

Catholic News - hottest and latest - 08 September 2011

1. திருத்தந்தை இந்திய ஆயர்களுக்கு வழங்கிய உரை

2. புதுடில்லியில் நடைபெற்ற குண்டு வெடிப்புக்கு இந்தியக் கிறிஸ்தவத் தலைவர்களின் வன்மையானக் கண்டனம்

3. ஆப்ரிக்கக் கர்தினால் Monsengwo: வன்முறைகளை வளர்க்கும் போர்களமாக தேர்தல்கள் மாறக்கூடாது

4. வேளாங்கண்ணி மாதா பசிலிக்காப் பேராலயத்தின் நிறைவு விழா நிகழ்ச்சிகள்

5. வேளாங்கண்ணி மாதா ஆலயத் தாக்குதலில் ஈடுபட்டவர்களில் பத்து பேர் கைது

6. சட்ட விரோதமாக சுரங்கத் தொழிலில் ஈடுபட்டிருந்த இருவர் கைது:  கிறிஸ்தவத் தலைவர்கள் வரவேற்பு

7. நியூயார்க் நகரில் உலக வர்த்தக கோபுரங்கள் தாக்கப்பட்ட பத்தாவது ஆண்டு நினைவு நிகழ்ச்சிகள்

8. இலங்கை ஆணையம்: அம்னெஸ்டி இண்டர்னேஷனல் விமர்சனம்

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை இந்திய ஆயர்களுக்கு வழங்கிய உரை

செப்.08,2011. மனுக்குலத்தின் மீது கடவுள் கொண்டுள்ள அன்புக்கு ஒரு வெளிப்படையான அடையாளமாகவும், பிறரன்புச் சேவைகளின் வெளிப்பாடாகவும் உள்ள பல கத்தோலிக்க நிறுவனங்களின் வழியாக இறைவன் இந்தியத் திருச்சபையை ஆசீர்வதித்திருக்கிறார் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
ஆயர்கள் ஐந்தாண்டுக்கு ஒருமுறை திருத்தந்தையைச் சந்திக்கும் "ad Limina Apostolorum" என்ற சந்திப்பையொட்டி கடந்த சில நாட்களாக மும்பை, பெங்களூரு, நாக்பூர், காந்திநகர் மற்றும் கோவா டாமன் ஆகிய உயர்மறைமாவட்டங்களின் கீழ் அடங்கியுள்ள பல்வேறு மறைமாவட்டங்களின் ஆயர்களைத் தனித்தனியே சந்தித்து வந்த திருத்தந்தை 16ம் பெனடிக்ட்,  இவ்விழாயன் காலை திருத்தந்தையரின் கோடை விடுமுறை இல்லமான காச்தல் கந்தோல்போவில் இம்மறைமாவட்டங்களின் 23 ஆயர்களை ஒரு குழுவாகச் சந்தித்தபோது, அவர்களுக்கு வழங்கிய உரையை இவ்விதம் துவக்கினார்.
இந்தியத் திருச்சபை நடத்தி வரும் பல்வேறு நிறுவனங்களில் இளையோரை வழிநடத்தும் பள்ளிகள் முக்கிய இடம் வகிக்கின்றன என்பதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, இப்பள்ளிகளின் மூலம் நீதியும், வளமையும் நிறைந்த எதிர்காலத்தை இந்தியாவில் உருவாக்க திருச்சபை சிறப்பான முறையில் அழைக்கப்பட்டுள்ளது என்றார்.
திருச்சபையின் கண்காணிப்பில் நடத்தப்படும் பள்ளிகளில் சரியான கத்தோலிக்கப் படிப்பினைகளும் உண்மையான வழிமுறைகளும் கற்றுத் தரப்படுகின்றனவா என்பதை உறுதி செய்வதும், கல்விப் பணியில் ஈடுபட்டுள்ள அனைவருமே கிறிஸ்தவ மதிப்பீடுகளைப் பெற்றுள்ளனரா என்பதை கண்காணிப்பதும் ஆயர்களின் கடமை என்று எடுத்துரைத்தார் திருத்தந்தை.
இவ்வியாழன் காலை ஆயர்கள் அனைவரையும் சந்தித்து உரைவழங்குவதற்கு முன், மைசூர் ஆயர் தாமஸ் அன்டனி வாழப்பில்லியையும், ஷிமோகா ஆயர் ஜெரால்ட் ஐசக் லோபோவையும் திருத்தந்தை தனியே சந்தித்தார்.


2. புதுடில்லியில் நடைபெற்ற குண்டு வெடிப்புக்கு இந்தியக் கிறிஸ்தவத் தலைவர்களின் வன்மையானக் கண்டனம்

செப்.08,2011. புதுடில்லியின் உயர்நீதி மன்ற வளாகத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பை இந்தியக் கிறிஸ்தவ தலைவர்களும், பல்வேறு அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்களும் வன்மையாகக் கண்டனம் செய்துள்ளனர்.
இந்த வன்முறை இந்திய ஆயர்கள் அனைவரையும் பாதித்துள்ளது என்றும், பதட்டம் நிறைந்த இச்சூழலில் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து, அமைதியையும் சகோதர மனப்பான்மையையும் வளர்க்க வேண்டுமென்றும் மும்பைப் பேராயர் கர்தினால் ஆஸ்வல்ட் கிரேசியஸ் கூறினார்.
ஆயர்கள் திருத்தந்தையைச்  சந்திக்கும் 'அட் லிமினா'வுக்கென உரோம் நகர் வந்துள்ள இந்திய ஆயர் பேரவையின் தலைவரான கர்தினால் கிரேசியஸ் Fides செய்திக்கு அளித்த பேட்டியொன்றில் இவ்வாறு கூறினார்.
இந்தியக் கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் சார்பில் பேசிய அருள்தந்தை பாபு ஜோசப், முற்றிலும் மதியற்ற ஒரு வன்முறை இது என்று கூறியதோடு, இந்திய அரசு இவ்வன்முறைக்குக் காரணமானவர்களை விரைவில் கண்டுபிடித்து செயல்படுவதே இத்தகைய வன்முறைகளைத் தடுக்கும் ஒரு வழி என்று வலியுறுத்தினார்.
ஒவ்வொரு முறையும் இவ்வாறான வன்முறைகள் நிகழும்போது, அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் துரித கதியில் இல்லாததால், இவ்வன்முறைகள் மீண்டும் மீண்டும் நடைபெறுகின்றன என்று இந்தியத் துறவறத்தார் அவையின் தலைவர் சகோதரர் மானி மேக்குன்னெல் கூறினார்.
தற்போது பங்களாதேஷில் தன் அரசுப் பயணத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் மன்மோகன் சிங் இத்தாக்குதல் கோழைத் தனமான ஒரு செயல்பாடு என்று தன் கண்டனத்தை வெளியிட்டார்.


3. ஆப்ரிக்கக் கர்தினால் Monsengwo: வன்முறைகளை வளர்க்கும் போர்களமாக தேர்தல்கள் மாறக்கூடாது

செப்.08,2011. வன்முறைகளை வளர்க்கும் போர்களமாக தேர்தல்கள் மாறக்கூடாது என்று ஆப்ரிக்காவின் கர்தினால் ஒருவர் கூறினார்.
செப்டம்பர் 5 இத்திங்களன்று காங்கோ நாட்டில் நடைபெற்ற தேர்தலைத் தொடர்ந்து, அந்நாட்டின் தலைநகரில் இடம்பெற்ற வன்முறைகளைக் குறித்து ஆழ்ந்த வேதனை படுவதாக Kinshasa உயர்மறைமாவட்டத்தின் பேராயர் கர்தினால் Laurent Monsengwo Pasinya  கூறினார்.
பதிலுக்குப் பதிலளிக்கும் வகையில் நாட்டில் வளர்ந்து வரும் வன்முறைகளால் நாடு சிக்குண்டிருப்பதால், நாம் சந்திக்க வேண்டிய முக்கியமான பல பிரச்சனைகள் திசை திருப்பப்படுகின்றன என்று கூறிய கர்தினால் Monsengwo, மக்கள் இவ்வன்முறைகளால் தூண்டப்பட்டு, பழிவாங்கும் உணர்வில் ஆழ்ந்துவிட வேண்டாமென்று வேண்டுகோள் விடுத்தார்.


4. வேளாங்கண்ணி மாதா பசிலிக்காப் பேராலயத்தின் நிறைவு விழா நிகழ்ச்சிகள்

செப்.08,2011. நாகப்பட்டினம் வேளாங்கண்ணி ஆரோக்கியமாதா பசிலிக்காப் பேராலயத்தில் இப்புதன் இரவு நடந்த பெரிய தேர் பவனியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நாகைக்கு அடுத்த வேளாங்கண்ணியில், ‘கீழை நாடுகளின் லூர்துஎன அழைக்கப்படும் ஆரோக்கிய அன்னை பேராலயத்தின் ஆண்டுப் பெருவிழா, ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி துவங்கியது. நாள்தோறும் மதியம் 12 மணிக்கு கொடியேற்றப்பட்டு, மாலையில் மாதாவின் திருத்தேர் பவனி நடந்தன.
இரு அடுக்குகளாகக் கட்டப்பட்டுள்ள இப்பசிலிக்காப் பேராலயத்தின் மேல், கீழ் கோவில்களில் தமிழ், மராத்தி, ஆங்கிலம், கொங்கனி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் திருப்பலியும், மாலையில் செபமாலை, மாதா மன்றாட்டு, நவநாள் செபம், மறையுரை, திருநற்கருணை ஆசீர் என அனைத்து வழிபாடுகளும் நடந்து வந்தன.
முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர் பவனி இப்புதன் இரவு 8 மணிக்கு நடைபெற்றது. தஞ்சை ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில், 20 அருட்பணியாளர்கள் பங்கேற்ற கூட்டுப்பாடல் திருப்பலியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
இவ்வியாழன் மாதாவின் பிறந்த நாளை முன்னிட்டு, காலை 6 மணிக்கு ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் கூட்டுப்பாடல் திருப்பலி நடைபெற்றது. மாலை 6.30 மணிக்கு பேராலய வளாகத்தில் ஏற்றப்பட்டிருந்த மாதாவின் உருவம் பொறித்த கொடி இறக்கப்பட்டு, விழா நிறைவுக்கு வந்தது.
இப்பெருவிழாவை முன்னிட்டு, நாகை மாவட்ட நிர்வாகம் சார்பில், இவ்வியாழன் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டது.


5. வேளாங்கண்ணி மாதா ஆலயத் தாக்குதலில் ஈடுபட்டவர்களில் பத்து பேர் கைது

செப்.08,2011. கடந்த ஞாயிறன்று கேரளாவில் கொல்லத்திற்கருகே வேளாங்கண்ணி மாதா ஆலயம் ஒன்றில் புகுந்து வன்முறைச் செயல்களில் ஈடுபட்டவர்களில் பத்து பேரை கொல்லம் காவல்துறையினர் இப்புதனன்று கைது செய்துள்ளனர்.
தாக்குதல்களுக்குக் காரணமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது திருப்தியை அளிக்கிறது என்றும், தாக்கப்பட்ட கோவிலைச் சுற்றி காவல் பலப்படுத்தப்பட்டுள்ளதென்றும் கொல்லம் மறைமாவட்ட ஆயர் Stanly Roman கூறினார்.
இந்தத் தாக்குதல்களுக்கு இந்து அடிப்படைவாதக் குழுக்களே காரணம் என்று ஊடகங்கள் கூறிவந்தன.
இத்தாக்குதல்கள் இரு குழுக்களிடையே உருவான பகையின் ஒரு வெளிப்பாடே என்றும், மத அடிப்படைவாதம் காரணம் அல்லவென்றும் காவல்துறை அதிகாரி T.J.ஜோஸ் கூறினார்.


6. சட்ட விரோதமாக சுரங்கத் தொழிலில் ஈடுபட்டிருந்த இருவர் கைது:  கிறிஸ்தவத் தலைவர்கள் வரவேற்பு

செப்.08,2011. கர்நாடகாவில் சட்ட விரோதமாக சுரங்கத் தொழிலில் ஈடுபட்டிருந்த இருவரை காவல் துறையினர் இச்செவ்வாயன்று கைது செய்துள்ளதை கிறிஸ்தவத் தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.
கர்நாடகாவின் முன்னாள் சுற்றுலாத் துறை அமைச்சர் Gali Janardhana Reddyயும்Obulapuram சுரங்கத் தொழில் நிறுவனத்தின் உரிமையாளர் Srinivas Reddyயும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே மேற்கொண்ட உண்ணாநோன்பு போராட்டத்திற்குப் பின், உயர் நிலையில் உள்ளவர்கள் கைது செய்யப்படுவது இதுவே முதல் முறை என்று UCAN செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
அநியாயமாகச் சுரங்கத் தொழிலில் ஈடுபட்டுள்ள இவர்களது தயவிலேயே பெல்லாரி பகுதியின் பெரும்பாலான ஏழை மக்கள் வாழும் கட்டாயம் உள்ளது என்று கர்நாடகா ஆயர் பேரவையின் சார்பில் பேசிய அருள்தந்தை Faustine Lobo கூறினார்.
சுரங்கத் தொழிலில் ஈடுபட 2006ம் ஆண்டு வரை மட்டுமே கொடுக்கப்பட்ட உத்தரவை ஏமாற்று வழிகளில் 2017ம் ஆண்டு வரை நீட்டித்துள்ளனர் என்று மறைமாவட்டத்தின் நிதித் துறையில் பணிபுரியும் அருள்தந்தை அன்டனி ராஜ் கூறினார்.


7. நியூயார்க் நகரில் உலக வர்த்தக கோபுரங்கள் தாக்கப்பட்ட பத்தாவது ஆண்டு நினைவு நிகழ்ச்சிகள்

செப்.08,2011. 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி நியூயார்க் நகரில் உலக வர்த்தகக் கோபுரங்கள் இரண்டும், வாஷிங்கடனில் 'பென்டகன்' என்றழைக்கப்படும் இராணுவக் கோட்டையும் விமானங்களால் தாக்கப்பட்டு பத்து ஆண்டுகள் முடிவடைகின்றன. இந்த பத்தாவது ஆண்டு நினைவை பல நிகழ்ச்சிகள் மூலம் அமெரிக்க மக்கள் கடைபிடிக்கவும், கொண்டாடவும் திட்டமிட்டுள்ளனர்.
செப்டம்பர் 10ம் தேதி, வருகிற சனிக்கிழமையன்று நியூயார்க் பெருநகரின் புனித பாட்ரிக் பேராலயத்தில் ஐ.நா.வுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப்பார்வையாளர் பேராயர் பிரான்சிஸ் சுல்லிக்காட் திருப்பலியை நிறைவேற்றுவார். பேராயர் சுல்லிக்காட் இத்திருப்பலியை நிறைவேற்றுவதன் மூலம், அமெரிக்கக் கத்தோலிக்கக் குடும்பத்தின் மீது வத்திக்கான் கொண்டுள்ள ஆழ்ந்த ஒருமைப்பாடு விளங்குகிறது என்று இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யும் Jan Schmidt கூறினார்.
Baltimoreல் உள்ள விண்ணேற்பு மாதா பேராலயத்தில் ஞாயிறு நடைபெறும் திருப்பலியை பேராயர் எட்வின் ஓ'பிரையன் நிகழ்த்துவார் என்று CNA செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
இந்த நாளையொட்டி, WCC எனப்படும் உலகச் சபைகளின் உயரவை செய்தியொன்று அனுப்பியுள்ளது. அமெரிக்க ஐக்கிய நாட்டில் உயிரிழந்தோர், மற்றும் இத்தாக்குதலின் எதிரொலியாக ஆப்கானிஸ்தான், ஈராக் ஆகிய நாடுகளில் உயிரிழந்தோர் ஆகிய அனைவரையும் நினைவு கூர்வதாகவும், உலகெங்கும் அமைதி காலாச்சாரத்தை வளர்க்கும்படியாகவும் இச்செய்தி அமைந்துள்ளது.


8. இலங்கை ஆணையம்: அம்னெஸ்டி இண்டர்னேஷனல் விமர்சனம்

செப்.08,2011. இலங்கை உள்நாட்டுப் போரின்போது நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்த இலங்கை அரசின் விசாரணைகள் அடிப்படையில் குறைபாடுள்ளவை என்று அகில உலக மனித உரிமை அமைப்பான அம்னெஸ்டி இண்டர்னேஷனல் வெளியிட்டுள்ள புதிய அறிக்கை ஒன்று கூறுகிறது. இந்த விசாரணை, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு நீதியையும் வழங்காது என்றும் இவ்வறிக்கை கூறுகிறது.
இலங்கை அரசால் நியமிக்கப்பட்ட படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணையத்தின் முன்னர் நடந்த விசாரணைகளின் எழுத்து வடிவ ஆவணங்களை ஆராய்ந்த அம்னெஸ்டி இண்டர்னேஷனல், பெரிய அளவில் மனித உரிமை மீறல்கள் குறித்த ஆதாரங்கள் இவ்விசாரணைகளில் அலட்சியப்படுத்தப்பட்டுள்ளன என்று கூறுகிறது
போரின் போது மருத்துவமனைகள் தாக்கப்பட்டது, பலவந்தமாக ஆட்கள் கடத்தபப்ட்டது போன்ற விடயங்கள் அந்த ஆணையத்தால் உரிய முறையில் கவனிக்கப்படவில்லை என்று தமது ஆய்வுகளில் தெரிய வந்துள்ளதாக அம்னெஸ்டி இண்டர்நேஷனல் கூறுகிறது.
இலங்கை அரசை அந்த ஆணையம் காப்பாற்றி வருகிறது என்று அம்னெஸ்டி இண்டர்னேஷனல் அமைப்பின்  ஆசிய பசிபிக் பகுதிக்கான இயக்குநர் சாம் ஜாஃப்ரி தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமை கவுன்சிலில் இலங்கை தொடர்பான விடயம் சில நாட்களில் விவாதத்துக்கு வரவுள்ள நிலையில், போரின் இறுதிகட்டம் குறித்த ஒரு சுயாதீனமான சர்வதேச விசாரணை தேவை என்கிற அழுத்தத்தை அதிகரிக்கவே செய்யும்.
இந்த ஆண்டின் முற்பகுதியில், தமிழ் கைதிகள் சுட்டுக் கொல்லப்படுவதாக வெளியான படங்கள் உண்மையானவையே என்று ஐ நா வின் அதிகாரிகள் குழு ஒன்று முடிவு செய்திருந்தது. அந்தக் குழுவிலிருந்த ஒரு ஆய்வாளர் அந்தப் படம் மட்டுமே போர் குற்றங்கள் இடம்பெற்றன என்பதற்கு சாட்சியாகும் என தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment