Thursday, 29 September 2011

Catholic News - hottest and latest - 27 September 2011

1.  ஹாங்காங்கில் தேசியவாதக் கல்வித்திட்டத்தைப் புகுத்த முயலும் சைன அரசிற்கு கர்தினால் கண்டனம்

2.  ஜாம்பியக் கத்தோலிக்க அரசுத் தலைவர் பத்துக் கட்டளைகளின் அடிப்படையில் ஆட்சியை நடத்தத் திட்டம்

3.  கத்தோலிக்க அமைப்புகளின் விழிப்புணர்வுத் திட்டங்களால் நிக்கராகுவா நாட்டில் வன்முறைகள் குறைந்துள்ளன

4.  சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான பிலிப்பைன்ஸ் கத்தோலிக்கரின் உறுதிமொழி.

5.  ஐரோப்பியத் திருத்தல‌ அதிபர்களின் கூட்டம் இங்கிலாந்தில் இடம்பெறுகிறது

6.  கிறிஸ்தவ மறையை மறுதலிக்க மறுத்த‌தற்காக மரண்தண்டனையை எதிர்நோக்கியுள்ளார் இரானின் கிறிஸ்தவ குரு

----------------------------------------------------------------------------------------------------------------

1.  ஹாங்காங்கில் தேசியவாதக் கல்வித்திட்டத்தைப் புகுத்த முயலும் சைன அரசிற்கு கர்தினால் கண்டனம்

செப் 27, 2011.  ஹாங்காங்கில் தேசியவாதக் கல்விக்கென தனி வகுப்புகளை புகுத்தத் திட்டமிட்டிருக்கும் சைன அரசின் நோக்கம் குறித்து தன் வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளார் அப்பகுதி கர்தினால் ஜோசப் சென் சே சியூன்.
தீவிர தேசியவாதத்தை முன்னிறுத்தி மாணவர்களை மூளைச்சலவைச் செய்ய சைன அரசு முயன்று வருவதாக உரைத்த கர்தினால், அரசின் புதிய கல்வித்திட்டத்தின் நோக்கம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
கம்யூனிச அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வலியுறுத்தும் நோக்கம் கொண்ட இக்கல்வித் திட்டத்தை ஆசிரியர்களும் மாணவர்களும் எதிர்க்க வேண்டும் எனவும் விண்ணப்பித்துள்ளார் கர்தினால் ஜோசப் சென் சே சியூன்.

2.  ஜாம்பியக் கத்தோலிக்க அரசுத் தலைவர் பத்துக் கட்டளைகளின் அடிப்படையில் ஆட்சியை நடத்தத் திட்டம்

செப்.27,2011. ஆப்ரிக்க நாடான ஜாம்பியாவில் முதன்முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கத்தோலிக்க அரசுத் தலைவர் Michael Sata, தனது ஆட்சியை பத்துக் கட்டளைகளின் அடிப்படையில் நடத்தவிருப்பதாகக் கத்தோலிக்கரிடம் தெரிவித்தார்.
இம்மாதம் 20ம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுத் தலைவர் Michael Sata, தான் சார்ந்துள்ள பங்கு மக்களிடம் இவ்வாறு தெரிவித்தார். அத்துடன், இத்தேர்தல் அமைதியான முறையில் நடைபெறுவதற்குக் கத்தோலிக்கத் திருச்சபை ஆற்றிய செயல்களையும் பாராட்டினார்.
திருடாதே என்று ஏழாவது கட்டளை சொல்கிறது என்பதைச் சுட்டிக் காட்டிப் பேசிய அவர், தனது அரசு ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் என்பதையும் கோடிட்டுக் காட்டினார்.
மேலும், இயேசுவும் அவரது திருச்சபையும் செய்வது போல, ஜாம்பியாவில் மக்கள் எந்த அரசியல் கட்சியைச் சார்ந்திருந்தாலும் அனைவரையும் அரவணைத்துச் செல்லுமாறு புதிய அரசுத் தலைவருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் அந்நாட்டு ஆயர் பேரவைத் தலைவர் ஆயர் Ignatius Chama.
வத்திக்கான் புள்ளி விபரங்களின்படி, ஜாம்பியாவின் சுமார் ஒரு கோடியே 25 இலட்சம் மக்களில் 33 விழுக்காட்டினர் கத்தோலிக்கர்.

3.  கத்தோலிக்க அமைப்புகளின் விழிப்புணர்வுத் திட்டங்களால் நிக்கராகுவா நாட்டில் வன்முறைகள் குறைந்துள்ளன

செப் 27, 2011.  குடும்ப வன்முறைகளைக் களைய உதவும் கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்புகளின் விழிப்புணர்வுத் திட்டங்களால் நிக்கராகுவா நாட்டில் வன்முறைகள் குறைந்து,பெண்களின் வாழ்வு பாதுகாக்கப்பட்டு, குடும்பங்களில் அமைதி நிலவுவதாக அரசு சாரா அமைப்புக்கள் தெரிவிக்கின்றன.
நிக்கராகுவா நாட்டில் 60 விழுக்காட்டுப் பெண்கள் வாழ்வில் ஒருமுறையாவது உடல்ரீதியாக தாக்கப்பட்டுளார்கள் என்ற ஐநாவின் கூற்றை மேற்கோள் காட்டிய இவ்வமைப்புகள், தற்போது கத்தோலிக்க அமைப்புகளின் உதவியால் இதில் பெரும் மாற்றங்கள் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கின்றன.
CRS என்ற கத்தோலிக்க இடர்துடைப்பு நிறுவனமும் கத்தோலிக்கக் காரித்தாஸ் அமைப்பும் இணைந்து நடத்திய பல்வேறு விழிப்புணர்வு மற்றும் உதவித்திட்டங்கள் மூலம் ஆண்களிடையே பொறுப்புணர்வு அதிகரித்து குடும்ப வாழ்வு மேம்பட்டுள்ளதாக அரசு சாரா அமைப்புகள் தெரிவித்துள்ளன.

4.  சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான பிலிப்பைன்ஸ் கத்தோலிக்கரின் உறுதிமொழி.

செப் 27, 2011.  பிலிப்பைன்சின் மணிலாவில் வெள்ளப்பெருக்கு இடம்பெற்று இரண்டு ஆண்டுகள் நிறைவுற்றதை நினைவுகூரும் விதமாகக் கூடிய மரிகீனா நகர் கத்தோலிக்கர்கள், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான உறுதிமொழியை ஒன்றிணைந்து எடுத்துள்ளனர்.
இந்ந‌கரின் தூய வளன் கோவிலில் அரசு அதிகாரிகள், சுற்றுச்சூழல் நடவடிக்கையாளர்கள், சமூக மற்றும் திருச்சபை அதிகாரிகள் முன்னிலையில் இத்தீர்மானத்தை எடுத்தனர் பங்குத்தள மக்கள்.
திருப்பலியின் முடிவில் தங்கள் கைகளில் மெழுகுதிரிகளை ஏந்தியவர்களாய், கைகளை உயர்த்திய வண்ணம், கடவுளின் படைப்புகளைப் பேணிப் பாதுகாப்பதாகவும், ஏனையோருடன் அதனை சுய‌நலமின்றி பகிர்ந்து கொள்வதாகவும், ஞானமுடன் பயன்படுத்த உள்ளதாகவும் உறுதியெடுத்தனர் அவர்கள்.
இயற்கைப் பாதுகாப்பிற்கான உறுதிமொழியை எடுத்த இத்திருப்பலியில் மறையுரையாற்றிய பிலிப்பைன்சின் ஆன்டிபோலோ ஆயர் கபிரியேல் ரேயெஸ், இறைவன் எப்போதும் மன்னிக்கிறார், மனிதன் அவ்வப்போது மன்னிக்கிறான், ஆனால் இயற்கை ஒருபோதும் மன்னிப்பதில்லை என்றார்.
இதற்கிடையேஇச்செவ்வாய் காலை பிலிப்பைன்ஸ் தலைநகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் இடம்பெற்ற பெரும்புயலாலும் வெள்ளப்பெருக்காலும் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

5.  ஐரோப்பியத் திருத்தல‌ அதிபர்களின் கூட்டம் இங்கிலாந்தில் இடம்பெறுகிறது

செப் 27, 2011.  ஐரோப்பாவின் திருத்தல அதிபர்களின் கூட்டம் இச்செவ்வாய் முதல் வெள்ளிவரை இங்கிலாந்தின் வல்சிங்காம் திருத்தலத்தில் இடம்பெற்று வருகிறது.
இங்கிலாந்தின் நாசரேத் என அழைக்கப்படும் இத்திருத்தலத்தில் இடம்பெறும் இக்கூட்டத்திற்கு 'நற்செய்தி அறிவித்தலும் பக்தி முயற்சி நடவடிக்கைகளும்' என்பது தலைப்பாக எடுக்கப்பட்டுள்ளது.
வல்சிங்காம் திருத்தலத்தின் 950ம் ஆண்டு நிறைவையொட்டி இடம்பெற்று வரும் இக்கூட்டம் குறித்து எடுத்துரைத்த அத்திருத்தல அதிபர் குரு ஆலன் வில்லியம்ஸ், கத்தோலிக்கத் திருத்தலங்களைக் கத்தோலிக்கரல்லாதோரும் பெருமளவில் சந்திக்க வருவதால் அவர்களின் ஆன்மீக ஏக்கத்தை நிறைவு செய்யும் விதமாக திருத்தலங்களின் நடவடிக்கைகள் இருக்கவேண்டும் என்றார்.
ஒவ்வோர் ஆண்டும் பல இலட்சக்கணக்கான திருப்பயணிகளைக் கவர்ந்திழுக்கும் பிரான்சின் லூர்து நகரின் ஆயர் Jacques Perrier இத்திருத்தலக் கூட்டத்திற்கு தலைமை தாங்குகிறார்.
ஐரோப்பியத் திருத்தல அதிபர்களின் கூட்டம் இங்கிலாந்தில் இருபது ஆண்டிற்கு ஒருமுறை இடம்பெறுகிறது.

6.  கிறிஸ்தவ மறையை மறுதலிக்க மறுத்த‌தற்காக மரண்தண்டனையை எதிர்நோக்கியுள்ளார் இரானின் கிறிஸ்தவ குரு

செப் 27, 2011.  கிறிஸ்தவ மறையை மறுதலிக்க மறுத்த‌தற்காக மரண்தண்டனையை எதிர்நோக்கியுள்ளார் இரானின் கிறிஸ்தவ குரு ஒருவர்.
கிறிஸ்தவ மறையை விட்டு விலக வேண்டும் என இரானின் நீதிமன்றம் இருமுறை விண்ணப்பித்த போதும் அதற்கு மறுப்புத் தெரிவித்த கிறிஸ்தவக்குரு Yousef Nadarkhani, இச்செவ்வாய் மற்றும் புதன் தினங்களில் இடம்பெறும் நீதிமன்ற வழக்கில் மீண்டும் மறுப்புத் தெரிவிக்கும் பட்சத்தில் மரண தண்டனை உறுதிச்செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இசுலாம் மதத்தைக் கைவிட்டு கிறிஸ்தவத்தை தழுவியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு இவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்தது. மீண்டும் இஸ்லாமிய மறைக்கு இவர் திரும்ப மறுக்கும்பட்சத்தில், மரணதண்டனை உறுதிச்செய்யப்பட உள்ளது.
இரானில் குழந்தைகளுக்கு இசுலாம் தவிர ஏனைய மதப்படிப்பினைகள் மறுக்கப்படுவது குறித்து கேள்வி எழுப்பியதால் 2009ம் ஆண்டு அக்டோபர் 13ந்தேதி கைது செய்யப்பட்ட கிறிஸ்தவக்குரு Nadarkhani, அதற்குச் சில காலத்திற்குப் பின்னரே இசுலாமியர்களிடையே கிறிஸ்தவ மதத்தைப் பரப்ப முயன்றதாகப் புதிதாகக் குற்றம் சாட்டப்பட்டார்.
 

No comments:

Post a Comment