1. திருத்தந்தையுடன் பிரித்தானிய அரசின் திருப்பீடத் தூதர் Baker சந்திப்பு
2. வெறுப்புணர்வைப் புறக்கணித்து பயங்கரவாதத்துக்கு எதிராகத் தொடர்ந்து போராடுவதற்கு அமெரிக்கப் பேராயர் அழைப்பு
3. ஓணம் விழாவையொட்டி மதுபானங்களின் பயன்பாடு அதிகரித்து வருவது சரியான போக்கு அல்ல - திருச்சூர் பேராயர்
4. பழங்குடியினர் பற்றிய இந்திய அரசின் ஆய்வு பயனளிக்குமா - தலத்திருச்சபையின் ஐயம்
5. தென் சூடான் மக்கள் ஒப்புரவை வளர்க்கும் முயற்சிகளில் அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும் - சூடான் கத்தோலிக்க ஆயர்கள் அவை அழைப்பு
6. தாய்மைப்பேறுகால விடுப்பு குறித்த உலக தொழில் நிறுவனத்தின் நடவடிக்கைக்கு சுவிட்சர்லாந்து ஆயர்கள் ஆதரவு
7. வறுமை மற்றும் நோயை அகற்றுவதற்கு எழுத்தறிவின்மை இன்றியமையாதது - ஐ.நா.பொதுச் செயலர்
8. மியான்மாரிலுள்ள அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட ஐ.நா.பொதுச்செயலர் வலியுறுத்தல்
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தையுடன் பிரித்தானிய அரசின் திருப்பீடத் தூதர் Baker சந்திப்பு
செப்.09,2011. வத்திக்கானும், பிரித்தானிய அரசும் 30 ஆண்டுகளுக்கு முன் மீண்டும் புதுப்பித்துக் கொண்ட அரசியல் உறவுகள் சிறப்பான முறையில் வளர்ந்து வந்துள்ள நிலையில், கடந்த ஆண்டு தான் பிரித்தானிய அரசுக்கு மேற்கொண்ட பயணத்தால் உறவுகள் இன்னும் வலுப் பெற்றுள்ளன என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
பிரித்தானிய அரசின் திருப்பீடத் தூதரான Nigel Marcus Bakerஐ திருத்தந்தையர்களின் கோடை விடுமுறை இல்லமான காஸ்தல் கண்டோல்போவில் இவ்வெள்ளி காலை சந்தித்து, அவரிடமிருந்து நம்பிக்கைச் சான்றிதழைப் பெற்றுக் கொண்ட திருத்தந்தை, அவரிடம் ஆற்றிய உரையில் இவ்வாறு கூறினார்.
தான் பல ஆண்டுகளாக மதித்து வந்த கர்தினால் ஜான் ஹென்றி நியூமன் அவர்களை அருளாளராக உயர்த்தியதால் தன் தனிப்பட்ட ஆவல்களில் ஒன்று நிறைவேறியது என்று கூறிய திருத்தந்தை, அருளாளர் நியூமன் தன் எழுத்துக்களில் வழங்கியுள்ள கருத்துக்களை ஆழமாகச் சிந்தித்தால், நாம் இன்று எதிர்கொள்ளும் அரசியல், பொருளாதார மற்றும் சமுதாயக் கேள்விகளுக்கு பதில்களைக் காணலாம் என்று கூறினார்.
அண்மையில் பிரித்தானிய அரசி அயர்லாந்துக்கு பயணம் மேற்கொண்டது இவ்விரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாய் நிலவி வரும் பிரச்சனைகள் நிறைந்த உறவைச் சரி செய்யும் ஒரு முயற்சி என்பதைச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, உலகம் இன்று அதிகமாகத் தேடி வரும் நிலையான அமைதிக்கு இப்பயணம் ஒரு தூண்டுகோலாக அமைந்துள்ளது என்று கூறினார்.
இவ்வுலகைத் தாண்டிய நிரந்தர மதிப்பீடுகளின் அடிப்படையில் பிரித்தானிய அரசு தன் அரசியல் முடிவுகளை எடுக்க காட்டி வரும் முனைப்பு நம்பிக்கையைத் தருகிறது என்று கூறிய திருத்தந்தை, இளையோரைச் சரியான பாதையில் வழி நடத்தும் கல்வி, ஏழைகளுக்கும் சமுதாயத்தில் வலுவிழந்தோருக்கும் காட்டும் மதிப்பு ஆகிய விழுமியங்களின் அடிப்படையில் பிரித்தானிய அரசு தன் சமுதாயத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்று பரிந்துரைத்தார்.
அண்மையில் அந்நாடு சந்தித்தக் கலவரங்களிலிருந்து மீண்டும் அந்நாட்டை கட்டியெழுப்பிவரும் அனைத்து முயற்சிகளிலும் பிரிட்டனில் உள்ள கத்தோலிக்கத் திருச்சபை அரசுக்கு உறுதுணையாக இருக்கும் என்று திருத்தந்தை பிரித்தானிய அரசின் திருப்பீடத் தூதர் Bakerஇடம் உறுதி அளித்தார்.
2. வெறுப்புணர்வைப் புறக்கணித்து பயங்கரவாதத்துக்கு எதிராகத் தொடர்ந்து போராடுவதற்கு அமெரிக்கப் பேராயர் அழைப்பு
செப்.09,2011. வெறுப்புணர்வைப் புறக்கணித்து பயங்கரவாதத்துக்கு எதிராகத் தொடர்ந்து போராடுவதற்கு உறுதி எடுத்துள்ளதாக அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் திமோத்தி டோலன் கூறியுள்ளார்.
நியுயார்க் உலக வர்த்தக இரட்டைக் கோபுரம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு உள்ளான பத்தாம் ஆண்டு நினைவையொட்டி செய்தி வெளியிட்ட பேராயர் டோலன், 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி நடைபெற்ற கொடும் நிகழ்வுகளை நினைவுகூரும் இவ்வேளையில், நாம் நம்மிடையே காணப்படும் வேறுபாடுகளைப் பின்னுக்குத் தள்ளி நாட்டையும் உலகையும் புதுப்பிப்பதற்கான நமது கடமையில் ஒன்றிணைவோம் எனக் கேட்டுள்ளார்.
இப்பயங்கரவாதத் தாக்குதல் இடம் பெற்று பத்தாண்டுகள் ஆகிய பின்னரும், அப்பாவி மக்கள் மீதான தாக்குதல்களுக்கு மதத்தைத் தவறாகப் பயன்படுத்துவது நியாயப்படுத்தப்படுகின்றது, இன்னும், முஸ்லீம்கள் உட்பட எல்லா மதத்தினரையும் புகலிடம் தேடும் அகதிகளையும் ஏற்பதற்குக் கருத்துக் கோட்பாடுகள் இடம் கொடுக்கவில்லை என்ற கவலையும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலர் வேலையின்றி இருப்பது, போர்கள் மற்றும் பயங்கரவாதங்கள் முன்வைக்கும் ஆபத்துக்களைக் குடும்பங்கள் தொடர்ந்து எதிர்கொள்வது போன்ற சவால்களை எதிர்நோக்கும் நாம், செப்டம்பர் 11ம் தேதியின் உணர்வில் இச்சவால்களைச் சந்திப்பதற்கு ஒன்றிணைவோம் என்று பேராயர் டோலன் கேட்டுள்ளார்.
3. ஓணம் விழாவையொட்டி மதுபானங்களின் பயன்பாடு அதிகரித்து வருவது சரியான போக்கு அல்ல - திருச்சூர் பேராயர்
செப்.09,2011. கேரளாவில் கடந்த பத்து நாட்களாகக் கொண்டாடப்பட்ட ஓணம் விழாவின்போது, மக்கள் மிக அதிக அளவில் மதுபானங்களைப் பயன்படுத்தியுள்ளது வேதனை தருகிறதென்று கேரள கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் தலைவர் கூறினார்.
ஓணம் விழாவையொட்டி அண்மையில் அறிக்கையொன்றை வெளியிட்ட திருச்சூர் பேராயர் Andrews Thazhath, ஒவ்வோர் ஆண்டும் மதுபானங்களின் பயன்பாடு அதிகரித்து வருவது சரியான போக்கு அல்ல என்று கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு ஓணம் விழாவையொட்டி, 160 கோடி ரூபாய் மதிப்புள்ள மதுபானங்கள் விற்கப்பட்டன என்றும், இது அதற்கு முந்தைய ஆண்டைக் காட்டிலும் 17.6 விழுக்காடு அதிகம் என்றும் UCAN செய்திக் குறிப்பு கூறுகிறது.
மதுபானமற்ற ஓணம் கொண்டாடப்பட முடியும் என்பதை மக்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்று பேராயர் Thazhath கூறியுள்ளதை கேரளாவின் அமைச்சர்களில் ஒருவரான K.பாபு பெரிதும் வரவேற்றுள்ளார்.
4. பழங்குடியினர் பற்றிய இந்திய அரசின் ஆய்வு பயனளிக்குமா - தலத்திருச்சபையின் ஐயம்
செப்.09,2011. இந்தியாவில் பழங்குடியினரின் மக்கள் தொகை கடந்த சில ஆண்டுகளாக குறைந்து வருவது குறித்து இந்திய அரசு ஆய்வுகள் மேற்கொண்டுள்ளதைக் குறித்து தலத்திருச்சபை அதிகாரிகள் தங்கள் ஐயத்தை வெளியிட்டுள்ளனர்.
பழங்குடியினர் மத்தியில் எண்ணிக்கை குறைந்து வருவதற்கான காரணங்களை அறிய அரசு மேற்கொண்டுள்ள இந்த ஆய்வு வெறும் பேச்சாக, தாள்களில் பதியப்பட்ட எண்களாக மட்டுமே இருக்குமேயொழிய, இது அரசை செயல்பாடுகளுக்கு இட்டுச் செல்லுமா என்பது கேள்விக் குறியே என்று இந்திய கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் பழங்குடியினர் அலுவலகச் செயலர் இயேசுசபை அருள்தந்தை ஸ்தனிஸ்லாஸ் திர்கி கூறினார்.
1996ம் ஆண்டு பழங்குடியினர் வாழும் பகுதிகளில் உள்ள பஞ்சாயத்துக்களைக் குறித்து அரசு ஆய்வுகள் நடத்தின. ஆனால், அந்த ஆய்வின் பயனாக எந்த ஒரு செயல் திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய அருள்தந்தை திர்கி, தற்போது அரசு மேற்கொண்டுள்ள இந்த ஆய்வும் வெறும் காகிதங்களில் அடைபடும் விவரங்களாகவே மாறும் ஆபத்து உள்ளது என்று கூறினார்.
பழங்குடியினர், சமுதாயத்தின் மையத்தில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதாலும், அவர்கள் மத்தியில் அடிப்படை நலவாழ்வுப் பராமரிப்பு இல்லாததாலும் இவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறதென்று பழங்குடியினர் மத்தியில் பணி புரியும் குழந்தைநல மருத்துவர் Cecil Khakha கூறினார்.
5. தென் சூடான் மக்கள் ஒப்புரவை வளர்க்கும் முயற்சிகளில் அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும் - சூடான் கத்தோலிக்க ஆயர்கள் அவை அழைப்பு
செப்.09,2011. உலக நாடுகள் வரிசையில் அண்மையில் சேர்க்கப்பட்ட தெற்கு சூடான், பிரச்சனைகள் பலவற்றைச் சந்தித்து வந்தாலும், வன்முறையற்ற, ஒப்புரவை வளர்க்கும் முயற்சிகளில் அரசுடன் இணைந்து மக்கள் செயல்பட வேண்டும் என்று சூடான் கத்தோலிக்க ஆயர்கள் அவை அழைப்பு விடுத்துள்ளது.
இவ்வியாழன் வரை அந்நாட்டில் நடைபெற்ற ஆயர்கள் அவையின் மூன்று நாள் கூட்டத்தின் இறுதியில், ஆயர்கள் இணைந்து வெளியிட்ட ஓர் அறிக்கையில், பல்வேறு இனம், மொழி இவைகளை உள்ளடக்கிய ஒரு நாட்டை உருவாக்க அனைவரும் கடமைப் பட்டுள்ளோம் என்று கூறியுள்ளனர்.
ஒவ்வோர் இனமும், குழுவும் தங்களுக்குரிய உரிமைகளைப் பெறுவதில் மட்டும் குறியாக இல்லாமல், அனைவரும் இணைந்து இந்த நாட்டைக் கட்டியெழுப்ப, கடின உழைப்பு என்ற கலாச்சாரத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று ஆயர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பல்வேறு இனங்கள், குழுக்களுக்கிடையே உருவாகும் உரிமைப் பிரச்சனைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்பதை விடுத்து, ஆயுதங்களையும் வன்முறையையும் மக்கள் நம்பி வாழ்வது நாட்டை நல்லதொரு எதிர்காலத்திற்கு அழைத்துச் செல்லாது என்று ஆயர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஜூலை 9ம் தேதி தனி நாடாகப் பிரிந்த தெற்கு சூடான், தற்போது இரு மாதங்களை நிறைவு செய்துள்ளது.
6. தாய்மைப்பேறுகால விடுப்பு குறித்த உலக தொழில் நிறுவனத்தின் நடவடிக்கைக்கு சுவிட்சர்லாந்து ஆயர்கள் ஆதரவு
செப்.09,2011. தாய்மைப்பேறுகால விடுப்பு மற்றும் தாய்ப்பால் கொடுப்பதை ஊக்குவித்தல் குறித்த சர்வதேச தொழில் நிறுவனத்தின் ஒப்பந்த எண் 183ல் மாற்றங்கள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைக்கு சுவிட்சர்லாந்து கத்தோலிக்க ஆயர்கள் தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் வழங்கப்படும் பாதுகாப்பு, குடும்பங்களுக்கு மட்டுமன்றி, வாழ்வை ஊக்குவிக்கும் சமுதாயத்திற்கும் கிடைக்கின்றது என்று, சுவிட்சர்லாந்து ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதி ஆணையம் வெளியிட்ட அறிக்கை கூறுகின்றது.
சுவிட்சர்லாந்தில் 14 விழுக்காட்டுப் பெண்களே, தாய்மைப்பேறுகால ஆறுமாத விடுப்பை எடுக்கின்றனர் என்று 2003ம் ஆண்டின் தேசியக் கணக்கெடுப்புக் கூறுவதாகக் கூறும் அவ்வறிக்கை, குழந்தை பிறந்து 14 வாரங்களுக்குப் பின்னர் பல பெண்கள் வேலைக்குத் திரும்புவதால் அந்தச் சமயத்தில் தாய்-சேய்க்குக் கொடுக்கப்பட வேண்டிய கவனம் இல்லாமல் போகின்றது என்று தெரிவிக்கிறது.
மனிதன் பற்றிய கிறிஸ்தவக் கண்ணோட்டத்தில் ஆணும் பெண்ணும் சமமாண்பைக் கொண்டுள்ளனர் என்பதையும் அவ்வறிக்கை சுட்டிக் காட்டுகின்றது.
7. வறுமை மற்றும் நோயை அகற்றுவதற்கு எழுத்தறிவின்மை இன்றியமையாதது - ஐ.நா.பொதுச் செயலர்
செப்.09,2011. இன்றைய உலகில் சுமார் ஏழு கோடிச் சிறார் உட்பட ஏறக்குறைய எண்பது கோடிப்பேர் எழுத வாசிக்கத் தெரியாமல் இருக்கும்வேளை, வறுமை, நோய் போன்ற சமூகத் தீமைகளைக் களைவதற்கான முயற்சிகளுக்கு எழுத்தறிவின்மை தடையாய் இருக்கின்றதென ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் கூறினார்.
செப்டம்பர் 8ம் தேதி அனைத்துலக எழுத்தறிவு தினம் கடைபிடிக்கப்பட்டதையொட்டி செய்தி வெளியிட்ட பான் கி மூன், கல்வியறிவின்மை, நாடுகளின் உறுதியான தன்மைக்கே அச்சுறுத்தலாக இருக்கின்றது என்று கூறியுள்ளார்.
“கல்வியறிவும் அமைதியும்” என்ற தலைப்பில் இவ்வாண்டில் கடைபிடிக்கப்பட்ட இத்தினம் பற்றிக் கூறிய பான் கி மூன், 2009ல், உலகிலிருந்த 79 கோடியே 30 இலட்சம் எழுத்தறிவில்லாத வயது வந்தோரில் சுமார் மூன்றில் இரண்டு பகுதியினர் பெண்கள் என்றும், அதே ஆண்டில் ஆரம்பப்பள்ளிக்குச் செல்லக்கூடிய சுமார் 6 கோடியே 70 இலட்சம் சிறாரும் 7 கோடியே 20 இலட்சம் விடலைப் பருவத்தினரும் கல்வி கற்கும் வாய்ப்பைப் பெறவில்லை என்றும் தெரிவித்தார்.
மேலும், பெனின், புர்க்கினா ஃபாசோ, சாட், எத்தியோப்பியா, காம்பியா, கினி, ஹெய்ட்டி, மாலி, நைஜர், செனெகல், சியேரா லியோன் ஆகிய 11 நாடுகளில் பாதிக்கும் மேற்பட்ட வயது வந்தோர் கல்வியறிவில்லாதவர்கள் என்று யுனெஸ்கோ அறிவித்தது.
இந்தியாவில் தற்போது எழுத்தறிவு பெற்றவர்கள் சுமார் 70 விழுக்காடாகும். இந்நிலை கடந்த சில ஆண்டுகளாக உயர்ந்து வந்தாலும் உலகில் அதிகமான எழுத்தறிவில்லாத மக்களைக் கொண்டுள்ள நாடுகளில் ஒன்றாக இந்தியா இருந்து வருகிறது.
8. மியான்மாரிலுள்ள அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட ஐ.நா.பொதுச்செயலர் வலியுறுத்தல்
செப்.09,2011. மியான்மாரில் உருவாக்கப்பட்டுள்ள தேசிய மனித உரிமைகள் ஆணையம் உட்பட அந்நாட்டில் அண்மையில் தொடங்கப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் ஊக்கமளிக்கக்கூடியதாய் இருந்தாலும், இரண்டாயிரத்துக்கும் அதிகமான அரசியல் கைதிகள் இன்னும் அந்நாட்டுச் சிறைகளில் இருப்பது குறித்து எச்சரித்துள்ளார் ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன்.
கடந்த நவம்பரில் நடைபெற்ற போலித்தனமான தேர்தலைத் தொடர்ந்து அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் ஆங் சான் சு கி விடுதலை செய்யப்பட்டது, நாடு முன்னேற்றப் பாதையைத் தொடங்குவதற்கு வாய்ப்பை வழங்கியுள்ளது என்று இவ்வியாழனன்று வெளியான அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் பான் கி மூன்.
மியான்மாரில் அறிவிக்கப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் உடனடியாக அமல்படுத்தப்படுமாறு வலியுறுத்தியுள்ளார் பான் கி மூன்.
No comments:
Post a Comment