Monday 26 September 2011

Catholic News - hottest and latest - 24 September 2011

திருத்தந்தையின் 21 வது வெளிநாட்டுத் திருப்பயணம் பெர்லின் மற்றும் எர்ஃபூர்ட் நகரங்களில் திருத்தந்தை

செப்.24,2011. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் ஜெர்மனிக்கு மேற்கொண்டு வரும் நான்கு நாட்கள் கொண்ட இத்திருப்பயணம் பற்றிய விபரங்களை அந்நாட்டில் மட்டும்  பல நாடுகளின் சுமார் நான்காயிரம் நிருபர்கள் பல்வேறு ஊடகங்களில் வெளியிட்டு வருகின்றனர். கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவராக, சுமார் 500 ஆண்டுகளுக்குப் பின்னர் பணியிலிருக்கின்ற ஒரு ஜெர்மானியத் திருத்தந்தை தனது தாயகத்திற்கு மேற்கொள்ளும் அதிகாரப்பூர்வ முதல் பயணமாக இது இருப்பதால் கண்கொத்திப் பாம்பு போல் இவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் நிகழ்வுகளை கவனித்து வருகின்றனர். கடந்த ஆண்டில் மட்டும் ஒரு இலட்சத்து 80 ஆயிரம் ஜெர்மன் கத்தோலிக்கர் திருச்சபையை விட்டு விலகியுள்ளனரே. இவர்களுக்கு அவர் சொல்வது என்ன என்ற ஆர்வமும் ஊடகவியலாளரிடம் இருக்கின்றது. ஆயினும் திருத்தந்தை அந்நாட்டில் கடந்த இரண்டரை நாட்கள் நிகழ்த்திய நிகழ்வுகள் குறித்துச் செய்தி வெளியிட்ட ஜெர்மன் நாளிதழ் Frankfurter Allgemeine Zeitung,பெர்லினுக்கு மேலே சூரியன் என்ற அடையாளத்துடன் திருத்தந்தையின் கருத்தாழமிக்க உரைகள் பற்றிய கருத்தை வெளியிட்டிருந்தது. கிறிஸ்தவ மரபில் சூரிய ஒளி, உலகை ஒளிர்விக்கும் இறையொளியைக் குறிப்பதாகும். ஆம். உரோமை ஆயரான திருத்தந்தை, இதுவரை ஜெர்மனியில் அரசியலோ பொருளாதாரமோ பேசவில்லை. ஆனால் கடவுளின் ஒளி பற்றி, கடவுள் பற்றிப் பேசி வருகிறார். இதுவரை நடைபெற்ற நிகழ்வுகள் பற்றிக் குறிப்பிடும் ஊடகங்கள்,
சமயச் சார்பற்ற போக்கு அதிகரித்து வரும் இன்றைய உலகில் கிறிஸ்தவர்களும் யூதர்களும் முஸ்லீம்களும் கடவுளின் இருப்புக்குச் சாட்சிகளாகத் திகழ வேண்டும்; யூதம், இசுலாம் மற்றும் பிரிந்த கிறிஸ்தவ சபைப் பிரதிநிதிகளைச் சந்தித்த போது, சமூக வாழ்க்கையில் மதக்கூறுகளின் முக்கியத்துவத்தை அவர்களிடம் வலியுறுத்தினார்; கடவுள் புறக்கணிக்கப்படும் உலகு எப்படி இருக்கும் என்பதற்கு நாத்சிசம் முன்னறிவிப்பாக இருக்கின்றது; உலகம் எவ்வளவு தூரம் கடவுளை விட்டு விலகுகின்றதோ அவ்வளவு தூரம் மனிதன் தனது வாழ்வை இழக்கும்படி ஆகின்றது என்று குறிப்பிடுகின்றன.
ஆம், இவ்வெள்ளி பகல் 12.20 மணியளவில் எர்ஃபூர்ட்டில் மார்ட்டின் லூத்தர் அகுஸ்தீனியன் சபைத் துறவியாக வாழ்ந்த இடத்தில் கிறிஸ்தவ ஒன்றிப்பு திருவழிபாட்டில் கலந்து கொண்டு மறையுரையாற்றிய போதும், கிறிஸ்தவ விசுவாசம் நம் வாழ்க்கையின் அடித்தளம்; எனவே கிறிஸ்தவ சபைகள் மத்தியில் மலரும் ஒன்றிப்பு, பலன்கள் மற்றும் குறைகளைக் கணிப்பதால் வளர்வது அல்ல, மாறாக, நம் எண்ணங்களிலும் வாழ்க்கையிலும் விசுவாசம் மிக ஆழமாக நுழைவதன் வழியாக மட்டும் வளர்கிறது; இயேசு, கிறிஸ்தவர்களின் ஒன்றிப்புக்காகச் செய்த செபத்தில் நமது ஒன்றிப்பின் மையத்தைக் காண்கிறோம்; இந்தச் செபத்தில் உண்மையிலேயே ஈர்க்கப்பட நம்மை அனுமதித்தால் நாம் அனைவரும் ஒரே சபையாக மாறுவோம் என்றார் திருத்தந்தை.

ஜெர்மனியில் குருக்களின் தவறானப் பாலியல் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களை இவ்வெள்ளிக்கிழமை பிற்பகலில், எர்ஃபூர்ட் குருத்துவக் கல்லூரியில் சந்தித்தார் திருத்தந்தை. அவர்கள் எதிர்கொள்ளும் துன்பங்கள் கண்டு மிகவும் வருந்தி அவர்கள் மீது மிக ஆழமான பரிவு காட்டினார். குருக்களால் பாதிக்கப்பட்ட இரண்டு பெண்கள் மற்றும் மூன்று ஆண்களை சுமார் அரைமணி நேரம் சந்தித்துப் பேசிய அவர், இத்தகைய குற்றங்கள் செய்வோர் மீது நடவடிக்கை எடுப்பதில் திருச்சபை மிகுந்த முனைப்புடன் இருக்கின்றது. மேலும், சிறாரையும் இளையோரையும் பாதுகாப்பதற்கான உறுதியான நடவடிக்கைகளுக்குத்  திருச்சபை தன்னை அர்ப்பணித்துள்ளது என்றார். 1950கள் மற்றும் 1980களுக்கு இடைப்பட்ட காலத்தில் இக்குற்றங்களால் பாதிக்கப்பட்டதாக நூற்றுக்கணக்கானோர் கூறினர். ஜெர்மனியின் 27 கத்தோலிக்க மறைமாவட்டங்களில் 18ல் இக்குற்றச்சாட்டுகள் உள்ளன. கத்தோலிக்கர் திருச்சபையைவிட்டு விலகுவதற்கு இதுவும் ஒரு காரணமாகச் சொல்லப்படுகின்றது.

இவ்வெள்ளி உள்ளூர் நேரம் மாலை 4.50 மணிக்கு ஹெலிகாப்டரில் எர்ஃபூட்டிலிருந்து Etzelsbach சென்றார் திருத்தந்தை. அந்நகரின் Wallfahrtkapelle அன்னைமரியா திருத்தலம் சென்றார். இந்தச் சிறியத் திருத்தலத்திலுள்ள மரத்தாலான அன்னைமரி திருவுருவம், 16ம் நூற்றாண்டில் இந்த இடத்தில் குதிரைச் சவாரி செய்பவர்களால் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. அதற்குப் பின்னர் எண்ணற்ற மக்கள் இங்கு திருப்பயணமாக வருகின்றனர். இத்திருத்தல வளாகத்தில் விசுவாசிகளுடன் சேர்ந்து மாலைத் திருப்பகழ்மாலை செபித்தார் திருத்தந்தை.

மறையுரையும் நிகழ்த்தினார். அதன் சுருக்கம் இதோ....

அன்னைமரியா, நாம் நம் வாழ்க்கையின் நோக்கம் பற்றிப் புரிந்து கொள்ள உதவுகிறார் மற்றும் உண்மையான மகிழ்ச்சியின் பாதையைக் காட்டுகிறார். உங்களது உண்மையான மகிழ்ச்சியைத் தவிர வேறு எதையும் ஒருபோதும் விரும்பாதவரும் நன்மையானது அனைத்தின் ஊற்றுமாகிய கடவுள், அவரது விருப்பத்திற்கேற்ப நாம் நடக்க வேண்டும் என்பதை நம்மிடம் கேட்பதற்கு உரிமையைக் கொண்டுள்ளார் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள் என்று அன்னைமரியா நம்மிடம் சொல்வது போல் இருக்கின்றது. இயேசு தனது தாய் கேட்பதை ஒருபொழுதும் மறுக்கமாட்டார் என்ற தன்னிச்சையான உறுதிப்பாட்டில் வரலாறு முழுவதும் கிறிஸ்தவர்கள் அன்னைமரியாவிடம் செல்கின்றனர். மரியா நம் தாய் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கையைக் கொண்டுள்ளோம். பெரும் துயரங்களை அனுபவித்த அந்தத் தாய், நமது வேதனைகளையும் உணர்வார். நமது கிறிஸ்தவ அழைப்பை வாழ்வதற்கு உதவுகிறார். கடவுள் எங்கே இருக்கிறாரோ அங்கே எதிர்காலம் இருக்கிறது. உண்மையில், கடவுளின் அன்பு நம் வாழ்வு முழுவதையும் ஆட்கொள்ள அனுமதித்தால் விண்ணகம் நமக்குத் திறந்திருக்கும்.

இம்மறையுரையை நிறைவு செய்து விசுவாசிகளை ஆசீர்வதித்து மீண்டும் எர்ஃபூர்ட் குருத்துவக் கல்லூரி சென்றார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். இத்துடன் இப்பயணத்தின் இரண்டாவது நாளைய நிகழ்ச்சிகள் முற்றுப்பெற்றன.
இத்திருப்பயணத்தின் மூன்றாவது நாளாகிய இச்சனிக்கிழமை காலை உள்ளூர் நேரம் 9 மணிக்கு, அதாவது இந்திய நேரம் பகல் 12.30 மணிக்கு எர்ஃபூர்ட் Domplatz ல் திருப்பலியைத் தொடங்கினார்.
இத்திருப்பலியின் துவக்கத்தில் எர்ஃபூர்ட் ஆயர் ஜோக்கிம் வாங்கே திருத்தந்தையை வாழ்த்தி வரவேற்றுப் பேசினார். இத்திருப்பலியில் திருத்தந்தை வழங்கிய மறையுரையின் சுருக்கத்திற்கு இப்போது செவிமடுப்போம்.

எர்ஃபுர்ட் பேராலய வளாகத்தில் திருத்தந்தையின் திருப்பலி மறையுரை:

இறைவனுக்கு நம் முழு இதயத்தோடு நன்றி நவில நம் ஒவ்வொருவருக்கும் காரணம் உள்ளது. ஜெர்மன் ஜனநாயக் குடியரசின் கடந்த கால கொடுங்கோலாட்சிகள், கிறிஸ்தவ மறையின் மீது அமில மழை போல் செயல்பட்டன. அதன் பிற்காலத்தைய விளைவுகள் தற்போதும் சில துறைகளில் உணரப்பட்டு வருகின்றன. இருப்பினும் கடந்த 20 ஆண்டுகளில் நல் மாற்றங்களைக் கண்டுவருகிறோம், குறிப்பாக, இறைவன் நம்மை எப்போதும் கைவிடுவதில்லை என்பதில் உறுதியோடு செயல்படுகிறோம். 'கடவுள் எங்கிருக்கிறாரோ அங்கே வருங்காலமும் உள்ளது'. நம் புதிய சுதந்திரம் என்பது மேலும் மாண்பையும், புதிய வாய்ப்புகளையும், புதுப்பித்தலையும் கோவில்களின் விரிவாக்கத்தையும் தந்துள்ளது. கடந்த காலங்களில் அர்ப்பணத்துடன் செயல்பட்ட கிறிஸ்தவர்கள், திருச்சபைக்காக பல்வேறு துன்பங்களை மனமுவந்து தாங்கியுள்ளனர். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் அகதிகளிடையே திருச்சபை ஆற்றிய சிறப்புமிக்கப் பணிகளை நான் இங்கு நினைவுகூர விழைகின்றேன். திருச்சபை விரோத சூழல்கள் நிலவி வந்த காலத்திலும் தங்கள் குழந்தைகளைக் கிறிஸ்தவ விசுவாசத்தில் வளர்த்த பெற்றோருக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன். பல புனிதர்களின் தியாகத்துடன் கூடிய மறைப்பணியால் வளர்ந்துள்ள எர்ஃபூர்ட் மறைமாவட்டத்தின் வரலாற்றில் சிறப்பான விதத்தில் டுரிஞ்சேயின் புனித எலிசபெத்தை நினைவுகூர்கின்றேன். ஏழைகள் மற்றும் நோயாளிகளிடையே சிறப்புச் சேவையாற்றிய இப்புனிதை தன் 24ம் வயதிலேயே உயிரிழந்தாலும், இவரின் புனிதத்தன்மையின் கனிகள் அளவிட முடியாதவை. நம் விசுவாசத்தின் முழுமை நிலையை கண்டுகொள்ள இப்புனிதை நமக்கு உதவ முடியும். இறைவனுடன் ஆன உறவில் நாம் வாழமுடியும் அது நன்மையானதும்கூட எனப் புனிதர்கள் நமக்குக் காட்டி நிற்கின்றார்கள். விசுவாசம் என்பது மற்றவர்களுடன் பகிர்ந்துக் கொள்ளப்படவேண்டிய ஒன்று என்பது அதன் அடிப்படைக்கூறாக உள்ளது. விசுவாசத்திற்காக முதலில் நாம் இறைவனுக்கு நன்றி கூறவேண்டும். இரண்டாவதாக, நம் உடன்வாழ்வோருக்கும் நன்றி நவில வேண்டும். புனிதர்கள் என்பவர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும், அவர்களால் உலகை மாற்ற முடியும் என்பதையும் நினைவு கூருங்கள். 1989ம் ஆண்டு இந்நாட்டில் இடம்பெற்ற அரசியல் மாற்றங்கள், வளமைக்கும் சுதந்திர இயங்கலுக்கும் ஆன ஏக்கத்தினால் மட்டும் பிறந்தவையல்ல, மாறாக, உண்மைக்கான ஏக்கத்தினாலும் விளைந்தவை.
கடின முயற்சிகளுக்குப்பின் கிட்டிய இந்த சுதந்திரத்தைப் பொறுப்புடன் வடிவமைக்க வேண்டியது நம் கடமையாகிறது. கிறிஸ்துவுக்கான நம் சாட்சியம் நாம் வாழும் இவ்வுலகில் கேட்கப்படவும் காணப்படவும், புனிதர்களின் எடுத்துக்காட்டுகள் நம்மைத் தூண்டுவதாக. இவ்வாறு எர்ஃபூர்ட் பேராலய வளாகத்தில் விசுவாசிகளுக்கு நிறைவேற்றியத் திருப்பலியில் மறையுரையாற்றினார் பாப்பிறை.
திருப்பலியை உள்ளூர் நேரம் காலை 11 மணியளவில், அதாவது இந்திய நேரம் பிற்பகல் 2.30 மணிக்கு நிறைவு செய்த திருத்தந்தை, அங்கிருந்து நேரடியாக எர்ஃபூர்ட் விமான நிலையம் சென்று, 380 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள Lahr  நகருக்கு செர்மானிய விமானம் Luftwaffe ல் பயணம் மேற்கொண்டார். விமான நிலையம் வந்திருந்த அப்பகுதியின் அரசு அதிகாரிகளையும்,  ஃப்ரெய்பூர்க் பேராயர் மற்றும் குழுவினர்களையும் மரியாதை நிமித்தம் சந்தித்த பின், உள்ளூர் நேரம் 1 மணியளவில், 50 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஃப்ரெய்பூர்க் நகர் நோக்கி காரில் பயணம் மேற்கொண்டார். ஃப்ரெய்பூர்க் பேராலயத்திற்கு ஒரு கிலோ மீட்டர் முன்னரே, தன் காரிலிருந்து இறங்கி, மக்கள் காணும் வண்ணம் வடிவமைக்கப்பட்டு, நான்கு பக்கமும் கண்ணாடி பொருத்தப்பட்ட பாப்பிறை வண்டியில் ஏறி பயணம் மேற்கொண்டார். ஃப்ரெய்பூர்க்கின் நமதன்னை பேராலயத்தில் திருத்தந்தையோடு இணைந்து செபிப்பதற்கென ஏறத்தாழ 800 பேர் குழுமியிருந்தனர். ஆண் பெண் துறவிகள், மாற்றுத்திறனாளிகள், நோயுற்றோர் என தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களே இதில் பங்குபெற்றனர். இவர்களுடன் இணைந்து செபித்தபின் ஃப்ரெய்பூர்க் மக்களுக்கென ஒரு சிறு உரை ஒன்றும் வழங்கினார் பாப்பிறை.

உங்களோடு இணைந்து செபிக்க இங்கு வந்துள்ளேன். இத்திருப்பயண நாட்கள் பயனுடையதாக இருக்கவும், நம் விசுவாசம் ஆழப்படுத்தப்படவும், நம் நம்பிக்கைகள் பலப்படுத்தப்படவும், அன்பு அதிகரிக்கப்படவும் உங்கள் செபங்களை வேண்டுகிறேன் என்றார் திருத்தந்தை.

ஃப்ரெய்பூர்க் பேராலயத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பிற்குப் பின், அந்த உயர்மறைமாவட்டத்தின் ‘Collegium Borromaeum' குருமடம் சென்ற திருத்தந்தை, உள்ளூர் நேரம் பிற்பகல் 2.30 மணிக்கு மதிய உணவருந்தி சிறிது நேரம் ஓய்வும் எடுத்துக்கொண்டார்.
 

No comments:

Post a Comment