1. சிரியாவின் படுகொலை குறித்து திருப்பீடப் பேச்சாளரின் அறிக்கை
2. எகிப்தில் முஸ்லீம் சகோதரத்துவ கட்சியின் வெற்றி குறித்து ஆயர் கவலை
3. பொதுநிலையினருடன் உறவுகளை மேம்படுத்த பம்பாய் உயர்மறைமாவட்டம் திட்டம்
4. ஜம்மு-காஷ்மீர் கிறிஸ்தவர்களை அச்சுறுத்தும் நோக்கிலான தாக்குதல்களை நிறுத்த கோரிக்கை
5. கட்டாய மதமாற்றத்தைத் தடை செய்யும் சட்டங்கள் கொண்டுவரப்படுமாறு பாகிஸ்தான் மனித உரிமை ஆர்வலர்கள் வலியுறுத்தல்
6. மன்னார் ஆயருக்கு எதிரான அச்சுறுத்தல்களுக்கு நாடுகடந்த தமிழீழ அரசு கண்டனம்
7. யாழ்ப்பாணப் பகுதியில் மட்டும் 44 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் புலம்பெயர்ந்தோராக வாழ்கின்றனர்
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. சிரியாவின் படுகொலை குறித்து திருப்பீடப் பேச்சாளரின் அறிக்கை
மே29,2012. சிரியாவின் Hula நகரில்
ஏறத்தாழ நூறு பேர் படுகொலைச் செய்யப்பட்டது குறித்து திருத்தந்தையும்
உலகக் கத்தோலிக்கச் சமுதாயம் முழுமையும் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக அறிக்கை
ஒன்றை வெளியிட்டுள்ளார் திருப்பீடப்பேச்சாளர் இயேசு சபை குரு ஃபெதரிக்கோ
லொம்பார்தி.
அனைத்து விதமான வன்முறைகளும் நிறுத்தப்படவேண்டும் என்ற விண்ணப்பத்தை மீண்டும் முன்வைக்கும் திருப்பீடம், ஒப்புரவு மற்றும் பேச்சுவார்த்தைகளின் வழி தீர்வு காண உதவும் அனைத்து வழிகளையும் கையாள வேண்டும் என சர்வதேச சமுதாயத்தை விண்ணப்பிப்பதாகவும் அதில் தெரிவித்துள்ளார் திருப்பீடப்பேச்சாளர்.
சிரிய மக்கள் அனைவருக்காகச் செபிக்கவும், அமைதியை ஊக்குவிக்க அனைத்துத் தலைவர்களும், மத
நம்பிக்கையுள்ள அனைவரும் தங்களால் இயன்ற அனைத்தையும் மேற்கொள்ளவும்
வேண்டுமென திருப்பீடம் எதிர்பார்ப்பதாக திருப்பீடப்பேச்சாளர் அருள்தந்தை
லொம்பார்தியின் அறிக்கை கூறுகிறது.
சிரியாவில் கடந்த வெள்ளியன்று இடம்பெற்ற தாக்குதலில் ஏறத்தாழ 109 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதில் 32 பேர் குழந்தைகள்.
2. எகிப்தில் முஸ்லீம் சகோதரத்துவ கட்சியின் வெற்றி குறித்து ஆயர் கவலை
மே29,2012.
எகிப்தில் அரசுத்தலைவர் தேர்தல்களில் முஸ்லீம் சகோதரத்துவ கட்சி வெற்றி
பெற்றால் கிறிஸ்தவர்களின் வருங்காலம் கேள்விக்குறியாக மாறிவிடும் என்று
அந்நாட்டு காப்டிக் கத்தோலிக்க ஆயர் Antonios Aziz Mina கவலை தெரிவித்தார்.
முஸ்லீம் சகோதரத்துவ கட்சியினர், இன்று ஒன்றைச் சொல்வார்கள், மறுநாள் வேறு ஒன்றைச் செய்வார்கள், அவர்கள் தங்கள் வாக்குறுதிகளைக் காப்பாற்றமாட்டார்கள், இதுதான் பிரச்சனை என்று Aid to the Church in Need என்ற கத்தோலிக்கப் பிறரன்பு நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார் ஆயர் Aziz Mina.
இம்மாதம் 23 மற்றும் 24ம் தேதிகளில் நடைபெற்ற முதல் சுற்றுத் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை வாக்குகள் கிடைக்காததால், அடுத்த
சுற்றுத் தேர்தல் வருகிற ஜூன் 16 மற்றும் 17ம் தேதிகளில்
நடைபெறவிருக்கின்றது. இத்தேர்தலில் முஸ்லீம் சகோதரத்துவ கட்சி வேட்பாளர் Mohamed Morsi ம் முன்னாள் பிரதமர் Ahmed Shafik ம் போட்டியிடவுள்ளனர்.
இத்தேர்தல் குறித்து கருத்து தெரிவித்த ஆயர் Aziz Mina, அரசுத்தலைவருக்குப் போட்டியிடும் வேட்பாளர் எல்லா மதத்தவரின் சுதந்திரத்தையும் மதிக்கக்கூடியவராக இருக்க வேண்டும் எனவும், சுதந்திரத்திற்கும்
சனநாயகத்திற்கும் எகிப்தின் சிறந்த அரசியல் அமைப்புக்கும் உறுதியளிக்கும்
வேட்பாளருக்கே தாங்கள் ஓட்டளிக்கவிருப்பதாகவும் கூறினார்.
3. பொதுநிலையினருடன் உறவுகளை மேம்படுத்த பம்பாய் உயர்மறைமாவட்டம் திட்டம்
மே29,2012. பம்பாய் உயர்மறைமாவட்டம் பொதுநிலை விசுவாசிகளுடன் உறவை மேம்படுத்தும் வழிகளைத் திட்டமிட்டு வருவதாக அறிவித்துள்ளது.
பம்பாய் உயர்மறைமாவட்டம் தான் விரும்பும் வழிகளில் மக்களைச் சென்றடையவும், பிரச்சனைகளை எதிர்நோக்கும் மக்களை எவ்வாறு சந்திப்பது என்பது குறித்தும் பரிசீலித்து வருவதாக, இந்நடவடிக்கையை செயல்படுத்துவதற்கு உருவாக்கப்பட்டுள்ள குழுவின் ஒருங்கிணைப்பாளர் அருட்பணி கில்பெர்ட் தெ லீமா கூறினார்.
Goregaon புனித பயஸ் குருத்துவக் கல்லூரியில் வருகிற நவம்பர் 14 முதல் 16 வரை இது குறித்த ஆலோசனை கூட்டம் நடத்துவதற்கு பம்பாய் கர்தினால் Oswald Gracias அழைப்பு விடுத்திருப்பதாகவும் அருட்பணி தெ லீமா தெரிவித்தார்.
பம்பாய் உயர்மறைமாவட்டத்தின் இம்முயற்சிக்கு உதவும் நோக்கத்தில், நிர்மலா நிக்கேதன் நிறுவனம் பொது மக்களிடமிருந்து கருத்துக் கேட்கும் பணியைச் செய்யவிருப்பதாகவும் அவர் கூறினார்.
இத்தகைய முதல் கருத்துக்கணிப்பு 1980ம் ஆண்டில் அருட்பணியாளர்களிடம் எடுக்கப்பட்டது.
4. ஜம்மு-காஷ்மீர் கிறிஸ்தவர்களை அச்சுறுத்தும் நோக்கிலான தாக்குதல்களை நிறுத்த கோரிக்கை
மே29,2012.
கிறிஸ்தவ சமூகத்தை அச்சுறுத்தும் நோக்கில் ஜம்மு-காஷ்மீரில் இடம்பெறும்
தாக்குதல்களை நிறுத்த அம்மாநில முதல்வர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்
என அழைப்பு விடுத்துள்ளார் இந்திய கிறிஸ்தவர்களின் உலக அவையின் தலைவர் Sajan George.
அண்மையில், ஸ்ரீநகரின் திருக்குடும்ப கத்தோலிக்கக் கோவில் தாக்கப்பட்டது குறித்து தன் கருத்துக்களை வெளியிட்ட Sajan George, கிறிஸ்தவர்களின் பாதுகாப்பை வழிபாட்டுத் தலங்களின் பாதுகாப்பையும் உறுதிச் செய்ய வேண்டியது மாநில முதல்வரின் கடமையாகிறது என்றார்.
கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை நானூறைக்கூடத் தாண்டாத ஸ்ரீநகரில், கிறிஸ்தவர்களை அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் இஸ்லாமிய சமூகம் ஈடுபட்டுவருவது குறித்த கவலையையும் வெளியிட்டார் அவர்.
இதற்கிடையே, கிறிஸ்தவர்களின் மீதான தாக்குதல்கள் தொடர்வதாகவும், சனவரி
மாத இறுதியில் தன் இருசக்கர வாகனம் அடையாளம் தெரியாத நபர்களால்
எரிக்கப்பட்டதாகவும் உரைத்த திருக்குடும்ப கோவிலின் பங்குதந்தை மேத்யூ
தாமஸ், அனைத்துத் தாக்குதல்களும் திரு அவையை அச்சுறுத்தும் நோக்கம் கொண்டதாகவே உள்ளன என்றார்.
5. கட்டாய மதமாற்றத்தைத் தடை செய்யும் சட்டங்கள் கொண்டுவரப்படுமாறு பாகிஸ்தான் மனித உரிமை ஆர்வலர்கள் வலியுறுத்தல்
மே29,2012.
பாகிஸ்தானில் சிறுபான்மை மதத்தைச் சேர்ந்த பெண்கள் கட்டாய மதமாற்றத்துக்கு
உட்படுத்தப்படுவதிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதற்கு உச்சநீதிமன்றம்
நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளது என்று அந்நாட்டுக் கிறிஸ்தவ
வழக்கறிஞர்களும் மனித உரிமை ஆர்வலர்களும் குறை கூறியுள்ளனர்.
இந்தப் பெண்களுக்குச் சட்டரீதியாகப் பாதுகாப்பு வழங்கப்படுமாறு பாகிஸ்தான் அரசையும் இவர்கள் கேட்டுள்ளனர்.
பாகிஸ்தான் ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதி ஆணைய இயக்குனர் பீட்டர் ஜேக்கப், கிறிஸ்தவ வழக்கறிஞர்களுடன் நடத்திய கூட்டத்தில், சிறுபான்மை மதத்தைச் சேர்ந்த பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைக் குறிப்பிட்டார்.
கடத்தல் மற்றும் மதமாற்ற அச்சுறுத்தலில் இப்பெண்கள் தொடர்ந்து வாழ்ந்து வருகிறார்கள் என்றும் கூறிய ஜேக்கப், சிறுபான்மை
மதங்களைச் சார்ந்த பெண்கள் கட்டாய மதமாற்றம் செய்யப்படுவதைத்
தடைசெய்வதற்கு எதிராய்ச் சட்டம் கொண்டுவரப்படுமாறு பாகிஸ்தான் இந்து அவை
விடுத்த அழைப்பை உச்சநீதிமன்றம் புறக்கணித்துள்ளது என்றும் குற்றம்
சாட்டினார்.
6. மன்னார் ஆயருக்கு எதிரான அச்சுறுத்தல்களுக்கு நாடுகடந்த தமிழீழ அரசு கண்டனம்
மே29,2012. மதங்களைக் கடந்து மனிதநேயத்தின் அடிப்படையில், மக்களின் நீதிக்காக குரல் கொடுத்து வரும் மன்னார் மறைமாவட்ட ஆயர் மீது, இலங்கை அரசு மறைமுகமாகவும், வெளிப்படையாகவும் மேற்கொண்டு வரும் தொடர் அச்சுறுத்தல்களுக்கு, நாடுகடந்த தமிழீழ அரசு தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
ஆயர் இராயப்பு ஜோசப்பின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரியும், அவர் மீதான அச்சுறுத்தல்களைக் கண்டித்தும் மன்னார் புனித செபஸ்தியார் ஆலயத்தில் இடம்பெற்ற கூட்டத்திற்கு வலுவூட்டும் வகையில், நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் வழங்கிய வானொலி உரையில், போர் இடம்பெற்ற காலங்களிலும், தொடர்ந்து மனிதநேய நெருக்கடி மிகுந்த கட்டங்களிலும், மிகுந்த துணிச்சலுடன் கிறிஸ்தவ மத விழுமியங்களுடன், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஆயர் இராயப்பு ஜோசப் குரல் கொடுத்தது மட்டுமல்ல, இலங்கை அரசினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழு முன்பாக அப்பாவித் தமிழ் மக்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் நீதிவேண்டி சாட்சியம் அளித்தவர் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஒரே காரணத்தை முன்வைத்து, அவரின் தனித்துவத்தையும் நன்மதிப்பையும் புறந்தள்ளி, இலங்கைப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைக்கு உட்படுத்துவதிலும், பாராளுமன்றத்தில்
பொறுப்பற்று விமர்சிப்பதும் ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களின் திட்டமிட்ட
செயற்பாடுகளாகும் எனக்கூறும் நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர்
வி.உருத்திரகுமாரன், இத்தகையச் செயல்கள் யாவற்றினையும் நாடுகடந்த தமிழீழ அரசு மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றது என மேலும் தெரிவித்துள்ளார்.
7. யாழ்ப்பாணப் பகுதியில் மட்டும் 44 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் புலம்பெயர்ந்தோராக வாழ்கின்றனர்
மே29,2012. யாழ்ப்பாணப் பகுதியில் மட்டும் 12 ஆயிரத்து 459 குடும்பங்களைச் சேர்ந்த 44 ஆயிரத்து 559 பேர் தொடர்ந்து புலம்பெயர்ந்தோராக வாழ்ந்து வருவதாக புலம்பெயர்ந்தோர் நலப்பணி அமைப்புக்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இவர்களில் பெரும்பாலானவர்கள் 53 நலப்பணி நிலையங்களிலும், உறவினர்கள்
மற்றும் நண்பர்கள் வீடுகளிலும் அடைக்கலம் பெற்று வாழ்ந்து வருவதாகவும்
அந்த அமைப்புகள் வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, கடும்பாதுகாப்புப் பகுதியாக தொடர்ந்து பேணப்பட்டுவரும் வலிகாமம் வடக்குப் பகுதியில் மீள்க்குடியமர, சுமார் 9 ஆயிரத்து 904 குடும்பங்களை சேர்ந்த 31ஆயிரத்து 524 பேர் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்து, காத்திருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment