Friday, 29 June 2012

Catholic News in Tamil - 28/06/12


1. திருத்தந்தை Constantinople ஆர்த்தடாக்ஸ் சபையின் பிரதிநிதிகளைத் திருப்பீடத்தில் சந்தித்தார்

2. கிறிஸ்தவ ஒன்றிப்புத் திருப்பீட அவையும், Constantinople ஆர்த்தடாக்ஸ் சபையின் பிரதிநிதிகளும் கலந்து கொள்ளும் நிகழ்வுகள்

3. எகிப்தின் புதிய அரசுத்தலைவர் கத்தோலிக்க ஆயர்களைத் தன் அரசு மாளிகையில் சந்தித்தார்

4. மதமாற்றத் தடைச்சட்டம் மணிப்பூர் மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்படும் முயற்சிகளுக்குக் கண்டனம்

5. சிரியாவில் ஒப்புரவை உருவாக்க "Mussalaha" என்ற பல்சமய அமைப்பு முயற்சி

6. ஆப்ரிக்காவில் சமூகப் பணியாற்றும் இயேசு சபையினரின் சிறப்புக் கூட்டம்

7. தினசரி 3 கப் காபி குடித்தால் ஞாபக மறதியே வராது: புதிய தகவல்

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை Constantinople ஆர்த்தடாக்ஸ் சபையின் பிரதிநிதிகளைத் திருப்பீடத்தில் சந்தித்தார்

ஜூன்,28,2012. Constantinople ஆர்த்தடாக்ஸ் சபையின் பிரதிநிதிகளை இவ்வியாழனன்று காலையில் திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், திருப்பாடல் 34ல் காணப்படும் "என்னுடன் ஆண்டவரை பெருமைப்படுத்துங்கள்; அவரது பெயரை ஒருமிக்க மேன்மைப்படுத்துவோம்." என்ற வார்த்தைகளுடன் அவர்களை வரவேற்றார்.
ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 29ம் தேதி கொண்டாடப்படும் புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழாவின்போது Constantinople ஆர்த்தடாக்ஸ் சபையின் சார்பாக, பிரதிநிதிகள் அடங்கியக் குழுவொன்று வத்திக்கானுக்கு வருவது வழக்கம்.
இப்பிரதிநிதிகள் குழுவினரை இவ்வியாழன் காலை திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை, கத்தோலிக்கத் திருஅவைக்கும் Constantinople சபைக்கும் விரைவில் முழுமையான ஒன்றிப்பு உருவாக வேண்டும் என்ற தன் ஆவலை வெளியிட்டார்.
Constantinople ஆர்த்தடாக்ஸ் சபையின் தலைவரான முதலாம் Bartholomew அவர்களுக்குத் தன் தனிப்பட்ட வணக்கங்களைத் தெரிவித்தத் திருத்தந்தை, புனிதர்கள் பேதுருவும், பவுலும் தங்கள் போதனைகளாலும், உழைப்பாலும் கட்டியெழுப்பிய விசுவாசத்தின் வேர்களில் நாம் ஒருமைப்பாட்டைக் காணமுடியும் என்று கூறினார்.
இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் நிகழ்ந்ததன் 50ம் ஆண்டு நிறைவை, இவ்வாண்டு அக்டோபர் 11ம் தேதி முதல் கொண்டாடவிருக்கிறோம் என்பதை நினைவுகூர்ந்தத் திருத்தந்தை, இப்பொதுச்சங்கத்தில் கத்தோலிக்கத் திருஅவைக்கும் ஏனைய ஆர்த்தடாக்ஸ் சபைகளுக்கும் இடையே உரையாடல்கள் ஆரம்பமானதைச் சுட்டிக்காட்டினார்.
நம்பிக்கை கொண்ட மக்கள் அனைவரும் ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய் இருந்தனர். என்று திருத்தூதர் பணிகள் 4: 32ல் கூறியுள்ளதுபோல், நாம் அனைவரும் ஒரே பலிபீடத்தில் வழிபாடுகளை இணைந்து நிறைவேற்றும் காலம் விரைவில் வருவதையே தான் விழைவதாகக் கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.


2. கிறிஸ்தவ ஒன்றிப்புத் திருப்பீட அவையும், Constantinople ஆர்த்தடாக்ஸ் சபையின் பிரதிநிதிகளும் கலந்து கொள்ளும் நிகழ்வுகள்

ஜூன்,28,2012. கிறிஸ்தவ ஒன்றிப்புத் திருப்பீட அவையும், Constantinople ஆர்த்தடாக்ஸ் சபையின் பிரதிநிதிகள் குழுவும் இவ்வியாழன், வெள்ளி ஆகிய இருநாட்கள் கலந்து கொள்ளும் நிகழ்வுகளை வத்திக்கான் அறிவித்துள்ளது.
1969ம் ஆண்டு, கிறிஸ்தவ ஒன்றிப்புக்கான திருப்பீட அலுவலகத்தின் தலைவராக இருந்த கர்தினால் Johannes Willebrands, புனித அந்திரேயாவின் பெருவிழாவன்று Constantinopleக்குச் சென்றதைத் தொடர்ந்து, Constantinople ஆர்த்தடாக்ஸ் சபைக்கும், கத்தோலிக்கத் திருஅவைக்கும் இடையே உறவுப் பரிமாற்றங்கள் ஆரம்பமாயின.
ஐரோப்பிய ஒன்றிய ஆர்த்தடாக்ஸ் சபையின் இயக்குனரும், பிரான்ஸ் பெருநகர் சபைத் தலைவருமான Emmanuel Adamidis தலைமையில் வத்திக்கான் வந்திருக்கும் இப்பிரதிநிதிகள் குழுவின் உறுப்பினர்களைத் திருத்தந்தை இவ்வியாழன் நண்பகல் சந்தித்து உரையாற்றினார்.
இவ்வெள்ளியன்று திருத்தந்தையின் தலைமையில் நடைபெறும் ஆடம்பரத் திருப்பலியின்போது, இக்குழுவினர் புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் சிறப்பு பார்வையாளர்களாக இருப்பர்.
தொடர்ந்து, இக்குழுவின் அங்கத்தினர்கள் கிறிஸ்தவ ஒன்றிப்புத் திருப்பீட அவையுடன் உரையாடல்களை மேற்கொள்வர்.


3. எகிப்தின் புதிய அரசுத்தலைவர் கத்தோலிக்க ஆயர்களைத் தன் அரசு மாளிகையில் சந்தித்தார்

ஜூன்,28,2012. எகிப்தில் வாழும் கிறிஸ்தவர்களுக்கு நல்ல எதிர்காலம் உண்டு என்பதன் அடையாளங்கள் தெரிகின்றன என்று எகிப்து கத்தோலிக்கத் திருஅவையின் அதிகாரப்பூர்வப் பேச்சாளர் கூறினார்.
எகிப்தின் புதிய அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள Mohammed Morsi, இப்புதன் காலையில் கத்தோலிக்க ஆயர்களைத் தன் அரசு மாளிகையில் சந்தித்ததைத் தொடர்ந்து, தலத் திருஅவையின் சார்பில் பேசிய அருள்தந்தை Rafiq Greiche இவ்வாறு கூறினார்.
அரசுத்தலைவர் Morsi இச்செவ்வாயன்று காப்டிக் ரீதி ஆர்த்தடாக்ஸ் திருஅவைத் தலைவர்களைச் சந்தித்தார் என்றும், இப்புதனன்று கத்தோலிக்கத் திருஅவைத் தலைவர்களைச் சந்தித்தார் என்றும் ஆசிய செய்தி நிறுவனம் அறிவித்தது.
ஆயர்களுடன் அரசுத்தலைவர் மேற்கொண்ட இந்தச் சந்திப்பில், கத்தோலிக்கத் திருஅவை எகிப்தில் சந்தித்து வரும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதாகவும், அனைத்து கிறிஸ்தவர்களும் அமைதியில் வாழும் வழிகளை அமைத்துத் தருவதாகவும் அரசுத் தலைவர் Morsi கூறினார் என்று கூறப்படுகிறது.
கத்தோலிக்க ஆயர்களுடன் அரசுத் தலைவர் மேற்கொண்ட இச்சந்திப்பு ஆயர்களால் திட்டமிடப்பட்டது அல்ல என்றும், அரசுத் தலைவரே இந்த அழைப்பை விடுத்தார் என்றும் அருள்தந்தை Greiche எடுத்துரைத்தார்.
அரசுத் தலைவர் போட்டியில் இஞ்ஞாயிறன்று 52 விழுக்காடு வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற Mohammed Morsi, 'இஸ்லாமியருக்கு மட்டுமல்ல, அனைத்து எகிப்தியர்களுக்கும் அரசுத் தலைவராகப் தான் பணிபுரிவேன்' என்பதைத் தன் தேர்தல் பிரச்சாரங்களில் கூறிவந்தார் என்று ஊடகங்கள் கூறுகின்றன.


4. மதமாற்றத் தடைச்சட்டம் மணிப்பூர் மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்படும் முயற்சிகளுக்குக் கண்டனம்

ஜூன்,28,2012. மதமாற்றத் தடைச்சட்டம் இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்படும் முயற்சிகளுக்கு அனைத்திந்திய கிறிஸ்தவக் கழகம் தன் வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
அடிப்படைவாத இந்துக்கள் இந்தியாவின் ஒரு சில மாநிலங்களில் செய்துவரும் அராஜகத்தைப் போல், மணிப்பூர் மாநிலத்திலும் நடைபெறுவதை எங்கள் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது என்று இக்கழகத்தின் மாநிலச் செயலர் Madhu Chandra, செய்தியாளர்களிடம் கூறினார்.
மதமாற்றத் தடைச்சட்டம் தற்போது மத்தியப்பிரதேசம், ஒடிஸ்ஸா, அருணாச்சலப்பிரதேசம், குஜராத், ஹிமாச்சலப்பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் நடைமுறையில் உள்ளது.
ஒடிஸ்ஸா, மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் இந்த சட்டத்தைச் சுட்டிக்காட்டி, கிறிஸ்தவர்களுக்கு எதிராக வன்முறைகள் நிகழ்ந்துள்ளன என்று UCA செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
மதமாற்றத் தடைச்சட்டம் குடிமக்களின் அடிப்படை சுதந்திரத்திற்கு எதிரான ஒரு சட்டம் என்று இந்தியாவிலும், பல நாடுகளிலும் உள்ள மனித உரிமை அமைப்புக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வந்துள்ளன என்று Madhu Chandra கூறினார்.


5. சிரியாவில் ஒப்புரவை உருவாக்க "Mussalaha" என்ற பல்சமய அமைப்பு முயற்சி

ஜூன்,28,2012. எங்கள் நாடு தன் இரத்தத்தை வீணாக இழந்து வருகிறது. அதிலும் முக்கியமாக, இளையோரை நாங்கள் ஒவ்வோரு நாளும் இழந்து வருகிறோம். எனவே, சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டுப் போரை உடனே நிறுத்தவேண்டும் என்று பல்சமய அமைப்பு ஒன்று அழைப்பு விடுத்துள்ளது.
ஒப்புரவு என்ற பொருள்படும் "Mussalaha" என்ற பல்சமய அமைப்பு, மனித சமுதாயத்தின் அடிமட்ட மக்களின் ஆதரவுடன் தன் பணிகளைத் தீவிரப்படுத்தி வருகிறது.
இவ்வமைப்பின் தூண்டுதலால், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர், பழங்குடி மக்கள் என்ற அனைத்துத் தரப்பைச் சார்ந்தவர்களின் குடும்பங்களும் இணைந்து வரும் முயற்சிகள் சிரியாவில் பரவி வருகிறது என்று Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
நாட்டில் நடக்கும் வன்முறைகளால் ஒவ்வொரு நாளும் 40 முதல் 100 பேர் இறக்கின்றனர் என்று கூறும் இவ்வமைப்பினர், இவ்விறப்புக்களில் அதிகமானோர் இளையோர் என்பதால், தங்கள் எதிர்காலத்தை இழந்து வருகிறோம் என்று கூறியுள்ளனர்.
இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுக்களும், மிதவாதக் குழுக்களும் இணைந்து  வருவதற்கு முயற்சிகள் மேற்கொண்டு வரும் இவ்வமைப்பினர், உலக அமைதிக்கென உழைக்கும் பன்னாட்டு அமைப்புக்களின் உதவிகளையும் கோரிவருகின்றனர் என்று Fides செய்தி கூறுகிறது.


6. ஆப்ரிக்காவில் சமூகப் பணியாற்றும் இயேசு சபையினரின் சிறப்புக் கூட்டம்

ஜூன்,28,2012. ஆப்ரிக்க நாடுகள் விரைவான பொருளாதார முன்னேற்றங்களைக் கண்டு வந்தாலும், எளிய மக்களின் அடிப்படை பிரச்சனைகளைத் தீர்க்கும் சவால்களைச் சந்தித்து வருகின்றன என்று இயேசுசபையின் சமூகப் பணி ஒருங்கிணைப்பாளர் ஒருவர் கூறினார்.
இஞ்ஞாயிறு முதல் வியாழன் முடிய ஆப்ரிக்காவின் நைரோபியில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் ஆப்ரிக்காவில் சமூகப் பணியாற்றும் இயேசு சபையினர், ஆப்ரிக்க நாடுகள் கடந்து வந்துள்ள 50 ஆண்டுகளை மறுபார்வையிடும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இக்கூட்டத்தில் பேசிய ஆப்ரிக்க சமூகப் பணிகளின் ஒருங்கிணைப்பாளரான அருள்தந்தை Michael Lewis, ஆப்ரிக்காவின் பல்வேறு நாடுகள் அந்நிய காலனி ஆதிக்கங்களிலிருந்து விடுதலை அடைந்து 50 ஆண்டுகள் நிறைவேறும் இக்காலத்தில், அங்கு வாழும் மக்கள் இன்னும் அடிப்படைத் தேவைகளும், எதிர்காலத்தின் பாதுகாப்பும் இல்லாமல் இருக்கின்றனர் என்பதைச் சுட்டிக்காட்டினார்.
ஆப்ரிக்க சமுதாயத்தில் இளையோரின் பங்கு, அனைத்துத் துறைகளிலும் நீதியை நிலைநிறுத்துதல் ஆகிய அம்சங்களுக்குத் தேவையான செயல்முறைத் திட்டங்கள் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன என்று Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.


7. தினசரி 3 கப் காபி குடித்தால் ஞாபக மறதியே வராது: புதிய தகவல்

ஜூன்,28,2012. வயதானவர்கள் தினசரி மூன்று கப் காபி குடித்தால் அவர்களின் மூளை சுறுசுறுப்பாக இருக்கும், அல்சைமர்ஸ் (Alzheimer's) எனப்படும் ஞாபக மறதி நோய் வராது என்று சமீபத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
வயதானவர்களை அதிகம் பாதிக்கும் அல்சைமர்ஸ் நோய் குறித்து தெற்கு ஃப்ளோரிடா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வுக்குழுவினர் மேற்கொண்ட ஓர் ஆய்வில், டாம்பா மற்றும் மியாமி நகரங்களைச் சேர்ந்த 65 வயது முதல் 88 வயதிற்குட்பட்ட 124 மூத்த குடிமக்கள் பங்கேற்றனர்.
அவர்களுக்கு தினசரி 3 கப் காபி குடிக்கக் கொடுக்கப்பட்டது. இரண்டு முதல் நான்கு ஆண்டுகள் வரை படிப்படியாக அவர்களை கண்காணித்தனர்.
பின்னர் அவர்களை ஆய்வு செய்ததில் அவர்களுக்கு டிமென்சியா நோய் தாக்குவதற்கான வாய்ப்பு குறைவாக இருந்தது. மேலும் அல்சைமர்ஸ் நோய் பாதிப்புகள் ஏற்படும் அறிகுறிகளும் தென்படவில்லை. இதற்குக் காரணம் காபியில் உள்ள காஃபின் எனப்படும் பொருள்தான் என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
திடீர் ஞாபகமறதி நோயளிகள், தங்களை அல்சைமர்ஸில் இருந்து தற்காத்துக் கொள்ள தினசரி 3 கப் காபி குடிப்பதில் தவறேதும் இல்லை என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இந்த ஆய்வினை நான்கு ஆண்டுகள் மேற்கொண்ட ஆய்வாளர்கள், அதன் முடிவுகளை அல்சைமர்ஸ் நோய் பற்றிய பத்திரிக்கை ஒன்றில் வெளியிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment