Tuesday, 26 June 2012

Catholic News in Tamil - 19/06/12

1. அநீதச் சூழல்கள் மலிந்து வரும் வேளைகளில் நிதி உதவி அமைப்புக்கள் நம்பிக்கை இழக்காமல், இன்னும் தீவிரமாகச் செயல்பட வேண்டும் - திருப்பீட உயர் அதிகாரி

2. பதிமூன்றாம் ஆயர் மாமன்றத்தில் விவாதிக்கப்படவிருக்கும் கருத்துக்கள் அடங்கிய நூல் வெளியீடு

3. நல்மனம் உள்ளோர் அனைவரும் இணைந்து நீதி நிறைந்த உலகை உருவாக்க வேண்டும் - ரியோ டி ஜெனீரோ நகரில் திருஅவைத் தலைவர்களின் அறிக்கை

4. வடநைஜீரியாவின் கிறிஸ்து அரசர் பேராலயத்திற்கு வெளியே குண்டுவெடிப்பு

5. கடந்த பத்து ஆண்டுகளில் காணாத அளவு 2011ம் ஆண்டு புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது

6. Rio+20 பூமிக்கோள உச்சிமாநாட்டிற்கு ஒரு முன்னோடியாக பாதுகாப்பான நகரங்கள் பற்றிய ஒரு வரைவு திட்டம்

7. ஊர் முழுக்க அரசு அதிகாரிகள்; தகர்ந்து போன ஜாதிப்பூசல்கள்: மாற்றத்தை நிகழ்த்திய மாணவர்கள்

------------------------------------------------------------------------------------------------------

1. அநீதச் சூழல்கள் மலிந்து வரும் வேளைகளில் நிதி உதவி அமைப்புக்கள் நம்பிக்கை இழக்காமல், இன்னும் தீவிரமாகச் செயல்பட வேண்டும் - திருப்பீட உயர் அதிகாரி

ஜூன்,19,2012. உலகில் நிலவும் துன்பங்களை அக்கறையுடன் அறிந்துகொள்ளும் அறிவையும், அத்துன்பன்களைக் களைவதற்குத் தேவையான மனப்பாங்கையும் திருநற்கருணையில் இருக்கும் இறைவன் நமக்குத் தருகிறார் என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
இத்திங்கள், செவ்வாய் ஆகிய இரு நாட்கள் உரோம் நகரில் கீழை ரீதி திருஅவைகளின் நிதி உதவி அமைப்புக்களின் கூட்டமைப்பான ROACO என்ற இயக்கத்தின் 85வது கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தின் நிறைவுத் திருப்பலியில் மறையுரை ஆற்றிய கீழைரீதி பேராயத்தின் தலைவர் கர்தினால் Leonardo Sandri, அரசர்கள் முதல் நூலில் கூறப்பட்டுள்ள ஆகாபு, நாபோத் ஆகியோரின் சம்பவத்தைக் குறித்து, தன் மறையுரையில் குறிப்பிட்டார்.
ஆகாபு செல்வந்தனாய் இருந்தபோதும், நாபோத்தின் நிலத்தையும் பறிப்பதற்காக அவரைக் கொன்றதுபோல், இன்றும் செல்வந்தர்கள் தங்களுக்கு உள்ளதைக் கொண்டு திருப்தி அடையாமல் இருப்பதைக் காணமுடிகிறது என்று கர்தினால் சுட்டிக்காட்டினார்.
இவ்வகை அநீதச் சூழல்கள் மலிந்து வரும் வேளைகளில் நிதி உதவி அமைப்புக்கள் நம்பிக்கை இழக்காமல், இன்னும் தீவிரமாகச் செயல்பட வேண்டுமென்று கர்தினால் Sandri கேட்டுக் கொண்டார்.
சிரியாவில் நடைபெறும் வன்முறைகளைக் குறித்து தன் மறையுரையின் இறுதியில் குறிப்பிட்டுப் பேசிய கீழைரீதி பேராயத்தின் தலைவர் கர்தினால் Sandri, அங்குள்ள அப்பாவி மக்களின் நம்பிக்கையை வளர்க்கும் முயற்சிகளில் திருஅவை தொடர்ந்து ஈடுபடும் என்ற தன் நம்பிக்கையையும் வெளியிட்டார்.


2. பதிமூன்றாம் ஆயர் மாமன்றத்தில் விவாதிக்கப்படவிருக்கும் கருத்துக்கள் அடங்கிய நூல் வெளியீடு

ஜூன்,19,2012. கிறிஸ்துவ விசுவாசப் பாரம்பரியங்களில் முறிவு இல்லாத வண்ணம் இயேசுவின் நற்செய்தியை இன்றைய உலகிற்கு எடுத்துரைக்கும் முயற்சியே புதிய நற்செய்திப் பணியாகும் என்று வத்திக்கான் அதிகாரி ஒருவர் கூறினார்.
வருகிற அக்டோபர் மாதம் 7ம் தேதி முதல் 28ம் தேதி முடிய வத்திக்கானில் நடைபெறவிருக்கும் பதிமூன்றாம் ஆயர் மாமன்றத்தில் விவாதிக்கப்படவிருக்கும் கருத்துக்கள் அடங்கிய நூலை இச்செவ்வாயன்று செய்தியாளர்கள் கூட்டத்தில் வெளியிட்ட ஆயர் மாமன்ற பொதுச்செயலர் பேராயர் Nikola Eterovic, இவ்வாறு கூறினார்.
இந்த நூலை உருவாக்க உலகெங்கும் பரவியுள்ள 114 ஆயர் பேரவைகள், 13 கீழைரீதி ஆயர் பேரவைகள், மற்றும் 26 திருப்பீட அவைகள் இணைந்து செயல்பட்டன என்று பேராயர் Eterovic விளக்கம் அளித்தார்.
இந்நூலில் காணப்படும் நான்கு பகுதிகள் குறித்தும் பேசிய பேராயர் Eterovic, இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கம் கூடியதன் 50ம் ஆண்டு நிறைவையும், கத்தோலிக்கத் திருஅவையின் மறைகல்வி நூல் வெளியானதன் 20ம் ஆண்டு நிறைவையும் சிறப்பிக்கும் விதமாக, 13ம் ஆயர் மாமன்றம் அக்டோபர் மாதம் நடைபெறும் என்று தெரிவித்தார்.


3. நல்மனம் உள்ளோர் அனைவரும் இணைந்து நீதி நிறைந்த உலகை உருவாக்க வேண்டும் - ரியோ டி ஜெனீரோ நகரில் திருஅவைத் தலைவர்களின் அறிக்கை

ஜூன்,19,2012. நாம் வாழும் உலகில் இன்னும் பல கோடி மக்கள் உணவும், ஏனையத் தேவைகளும் இல்லாமல் வாழும் வகையில் நாம் இவ்வுலகை மாற்றியுள்ளது மிகவும் வருந்துதற்குரியது என்று திருஅவைத் தலைவர்கள் கூறினர்.
ஜூன் 20 இப்புதனன்று ரியோ டி ஜெனீரோ நகரில் ஆரம்பமாகும் Rio+20 என்ற பூமிக்கோள உச்சி மாநாட்டிற்கு ஒரு முன்னோடியாக, அந்நகரின் பேராலயத்தில் திருஅவைத் தலைவர்கள் இணைந்து வெளியிட்ட ஓர் அறிக்கையில் இவ்வாறு கூறியுள்ளனர்.
தனி மனித சுயநலன்களை அளவுக்கு அதிகமாக நாம் வளர அனுமதித்துவிட்டதால், பல கோடி மக்கள் அடிப்படைத் தேவைகளும் இல்லாமல் துன்புறும் சூழலை நாம் உருவாக்கியுள்ளோம் என்று இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உலகத்தலைவர்கள் மட்டுமல்லாமல், ஒவ்வொரு தனி மனிதரும் அடிப்படை மனமாற்றத்தையும், வேறுபட்ட ஒரு வாழ்க்கை முறையையும் பின்பற்றினால் மட்டுமே மனித சமுதாயத்தையும், சுற்றுச்சூழலையும் நாம் பாதுகாக்கமுடியும் என்று திருஅவைத் தலைவர்களின் இந்த அறிக்கை வலியுறுத்துகிறது.
150 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் இந்த உச்சி மாநாடு வெற்றி பெறவேண்டுமெனில், நல்மனம் உள்ளோர் அனைவரும் இணைந்து நீதி நிறைந்த உலகை உருவாக்க வேண்டும் என்று இவ்வறிக்கை எடுத்துரைக்கிறது.


4. வடநைஜீரியாவின் கிறிஸ்து அரசர் பேராலயத்திற்கு வெளியே குண்டுவெடிப்பு

ஜூன்,19,2012. நான் திருப்பலி நிகழ்த்திக் கொண்டிருந்த நேரத்தில் அக்கோவிலை நோக்கி வந்த வெடிகுண்டுகள் நிறைந்த வாகனம் தடுக்கப்பட்டதால், வாகனம் கோவிலுக்கு வெளியிலேயே வெடித்தது என்று நைஜீரியாவின் ஆயர் ஒருவர் கூறினார்.
வடநைஜீரியாவின் Kaduna மாநிலத்தில், கிறிஸ்து அரசர் பேராலயத்தில் Zaria மறைமாவட்ட ஆயர் George Jonathan Dodo, இஞ்ஞாயிறன்று திருப்பலி ஆற்றிக்கொண்டிருந்த வேளையில், கோவிலுக்கு வெளியே வாகனம் ஒன்று வெடித்தது. மற்றொரு கிறிஸ்தவக் கோவிலும் தாக்குதலுக்கு உள்ளானது.
இத்தாக்குதலில் இருந்து தப்பித்த ஆயர் Jonathan Dodo, தான் அரசுடன் தொடர்பு கொண்டு, கிறிஸ்துவர்களின் பாதுகாப்பு குறித்து பேசி வருவதாக Fides செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
இத்தாக்குதல்களைத் தொடர்ந்து அப்பகுதியில் கிறிஸ்துவ இளையோர்க்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே மோதல்கள் உருவாகியுள்ளன என்று BBC செய்தியொன்று கூறியது.


5. கடந்த பத்து ஆண்டுகளில் காணாத அளவு 2011ம் ஆண்டு புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது

ஜூன்,19,2012. கடந்த பத்து ஆண்டுகளில் காணாத அளவு 2011ம் ஆண்டு 8 இலட்சம் மக்கள் தங்கள் சொந்த நாடுகளைவிட்டு அண்மைய நாடுகளுக்குப் புலம்பெயரவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்று ஐ.நா. அறிக்கை ஒன்று கூறுகிறது.
ஜூன் 20 இப்புதனன்று கடைபிடிக்கப்படும் புலம்பெயர்ந்தோரின் உலக நாளையொட்டி அறிக்கை வெளியிட்ட ஐ.நா.வின் புலம் பெயர்ந்தோர் அமைப்பு, கடந்த ஈராண்டுகளில் லிபியா, சொமாலியா, சூடான் ஆகிய நாடுகள் உட்பட பல நாடுகளிலிருந்து மற்ற நாடுகளுக்குப் புலம்பெயரும் மக்களின் எண்ணிக்கை கூடிவந்துள்ளது என்று தெரிவித்துள்ளது.
அரசியல், மதம், இனம் ஆகிய பிரச்சனைகளின் அடிப்படையில் நாடு விட்டு நாடு துரத்தப்படும் மக்களின் எண்ணிக்கை கடந்த ஐந்து ஆண்டுகளில் அதிகமாகி வருகிறது என்பதை இவ்வறிக்கை கவலையுடன் சுட்டிக்காட்டுகிறது.
உலகில் மிக அதிக அளவில் புலம் பெயர்ந்தோரின் எண்ணிக்கையை உருவாக்கியுள்ளது ஆப்கானிஸ்தான் என்று சுட்டிக்காட்டும் இவ்வறிக்கை, அதற்கு அடுத்தப்படியாக ஈராக், சொமாலியா, சூடான் ஆகிய நாடுகளைக் குறிப்பிட்டுள்ளது.
புலம்பெயர்ந்தோருக்குப் புகலிடம் தருவதில் ஜெர்மனி முதல் இடத்திலும் தென் ஆப்ரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளதாக இவ்வறிக்கை மேலும் கூறுகிறது.
"புலம்பெயர்ந்தோருக்கு விருப்பத் தேர்வுகள் கிடையாது, உங்களுக்கு உண்டு" (“Refugees have no choice. You do.”) என்ற மையக்கருத்துடன் இவ்வாண்டு புலம்பெயர்ந்தோரின் உலக நாள் கடைபிடிக்கப்படுகிறது.


6. Rio+20 பூமிக்கோள உச்சிமாநாட்டிற்கு ஒரு முன்னோடியாக பாதுகாப்பான நகரங்கள் பற்றிய ஒரு வரைவு திட்டம்

ஜூன்,19,2012. ரியோ டி ஜெனீரோவில் இப்புதனன்று துவங்கவிருக்கும் Rio+20 பூமிக்கோள உச்சிமாநாட்டிற்கு ஒரு முன்னோடியாக, ஐ.நா.வின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பும், ரியோ டி ஜெனீரோ நகரும் இணைந்து பாதுகாப்பான நகரங்கள் பற்றிய ஒரு வரைவு திட்டத்தை இத்திங்களன்று வெளியிட்டன.
5 இலட்சம் மக்கள் வாழக்கூடிய வகையில் அமைந்துள்ள இந்நகரில் இயற்கைச் சக்திகளைக் கொண்டு எரிசக்தி உருவாக்கும் வசதிகள், இந்த வசதிகளைத் திறம்பட பயன்படுத்தும் கட்டிடங்களின் அமைப்பு, நகரில் உருவாகும் கழிவுப் பொருட்களைச் சரிவரப் பயன்படுத்துதல் ஆகிய திட்டங்கள் அமைந்துள்ளன. இத்திட்டங்கள் Rio+20 உச்சிமாநாட்டில் விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
ஐ.நா.வின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு கண்டறிந்துள்ள கணக்கின்படி, 2050ம் ஆண்டிற்குள் உலகின் 80 விழுக்காடு மக்கள் நகரங்களில் வாழும் சூழல் உருவாகும் என்று தெரிகிறது.
இத்திங்களன்று வெளியான இப்புதிய நகரங்கள் திட்டம் செயல்படுத்தப்பட்டால், நகரங்களில் 30 விழுக்காடு தண்ணீரையும், 50 விழுக்காடு எரிசக்தியையும் சேமிக்க முடியும் என்று கணிக்கப்படுகிறது.


7. ஊர் முழுக்க அரசு அதிகாரிகள்; தகர்ந்து போன ஜாதிப்பூசல்கள்: மாற்றத்தை நிகழ்த்திய மாணவர்கள்

ஜூன்,19,2012. தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள சேசம்பட்டி கிராமத்தில் ஓய்வு நேரங்களில் மாணவர்களே தனிவகுப்பு நடத்தி வருகின்றனர். இதனால், படிப்பவர்களின் எண்ணிக்கையும், அரசு வேலையில் சேர்பவர்களின் எண்ணிக்கையும் அதிரித்து வருவதுடன், ஜாதிப்பூசல்களும் அறவே ஒழிந்துள்ளது.
இருபது ஆண்டுகளுக்கு முன்பு, சேசம்பட்டியில் படித்து முடித்த நான்கு முதல்தலைமுறை பட்டதாரிகள், வேலைக்காக முயற்சி செய்து கொண்டிருந்த வேளையில், ஓய்வாக இருந்த நேரங்களில் அங்குள்ள பள்ளி மாணவர்களுக்கு மாலை நேரங்களில் தனி வகுப்பு எடுத்து வந்தனர்.
வேலை கிடைத்த பிறகும், வகுப்புகளைத் தொடர்ந்து நடத்தி வந்தனர். இது அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. படித்த மாணவர்கள் நடத்தும் வகுப்பு என்பதால் அங்குள்ள பெற்றோர்களே முன் வந்து, தங்கள் குழந்தைகளை வகுப்பில் சேர்த்தனர்.
இருபது ஆண்டுகளுக்கு முன்பு, இப்பகுதியில் இறுக்கமான ஜாதியக் கட்டமைப்பு இருந்த நேரத்தில், தலித் மாணவர்களையும் வகுப்பில் சேர்த்தனர். ஆரம்பத்தில் எதிர்ப்பு இருந்தாலும், பின்னர் இயல்பு நிலை வளர்ந்து, இன்று அனைத்து ஜாதி மாணவர்களும் இங்கு படிக்கின்றனர்.
மாணவர்களின் இது போன்ற வழிகாட்டுதலின் பலனாக, இன்று ஊரின் மொத்த மக்களில் பாதிபேர் அரசுப் பணிகளில் உள்ளனர். அதுமட்டுமின்றி, இன்று சேசம்பட்டியில் 90 விழுக்காட்டு இளையோர் கல்வியறிவு பெற்றிருக்கின்றனர்.


No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...