Saturday, 16 June 2012

Catholic News in Tamil - 15/06/12

1. திருத்தந்தை, ஐ.நா. பொது அவையின் 66வது அமர்வின் தலைவர் சந்திப்பு

2. ஆஸ்திரேலியாவில் புதிய ordinariate

3. விளையாட்டு விழுமியங்கள் குறித்த வத்திக்கானின் புதிய திட்டங்கள்

4. சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு கேரள ஆயர்கள் புதிய திட்டம்

5. மன்னார் ஆயர் எதிர்நோக்கும் அச்சுறுத்தல்கள் நிறுத்தப்படுவதற்குத் திருத்தந்தை தலையிடுமாறு கோரிக்கை

6. தடுத்து நிறுத்தக்கூடிய நோய்களால் ஏற்படும் சிறார் இறப்புக்களை நிறுத்துவதற்கு உலக அளவில் முயற்சி

7. சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் பணம் ரூ.12 ஆயிரத்து 740 கோடியாக அதிகரிப்பு

8. சிரியா இராணுவம் மனித சமுதாயத்துக்கு எதிரான குற்றங்களைச் செய்கின்றது, ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் புகார்

------------------------------------------------------------------------------------------------------
1. திருத்தந்தை, ஐ.நா. பொது அவையின் 66வது அமர்வின் தலைவர் சந்திப்பு
ஜூன்15,2012. ஐக்கிய நாடுகள் நிறுவனப் பொது அவையின் 66வது அமர்வின் தலைவர் Nassir Abdulaziz al-Nasserஐ இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இச்சந்திப்புக்குப் பின்னர், திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சிசியோ பெர்த்தோனே, திருப்பீட நாடுகளுக்கு இடையேயான உறவுகளின் செயலர் பேராயர் தொமினிக் மம்பர்த்தி ஆகியோரையும் சந்தித்தார் Abdulaziz al-Nasser.
உலகில் இடம்பெறும் சண்டைகளுக்குத் தீர்வு காண்பதில் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின், குறிப்பாக அதன் பொது அவையின் பங்கு பற்றியும், உலகில் தற்போது சண்டைகள் இடம்பெற்று வரும் பல்வேறு பகுதிகள், குறிப்பாக, ஆப்ரிக்கா, மற்றும் மத்திய கிழக்குப் பகுதிகள் பற்றியும், இச்சண்டைகள் ஏற்படுத்தும் கடும் அவசர மனிதாபிமான நெருக்கடிகள் பற்றியும் இச்சந்திப்புக்களில் பேசப்பட்டன என்று திருப்பீட பத்திரிகை அலுவலகம் அறிவித்தது.
மேலும், உலகின் அமைதி மற்றும் வளர்ச்சியில் கத்தோலிக்கத் திருஅவையின் பங்கு, மதங்களுக்கும் கலாச்சாரங்களுக்கும் இடையே ஒத்துழைப்பு இருக்கவேண்டியதன் முக்கியத்துவம் போன்ற தலைப்புக்களும் இச்சந்திப்புக்களில் இடம்பெற்றன என்றும் திருப்பீட பத்திரிகை அலுவலகம் அறிவித்தது.


2. ஆஸ்திரேலியாவில் புதிய ordinariate

ஜூன்15,2012. ஆங்லிக்கன் சபையிலிருந்து கத்தோலிக்கத் திருஅவையில் சேரும் உறுப்பினர்களுக்கென ordinariate எனப்படும் புதிய திருஆட்சி அமைப்பை இவ்வெள்ளியன்று ஆஸ்திரேலியாவில் உருவாக்கியுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
Personal Ordinariate of Our Lady of the Southern Cross என அழைக்கப்படும் இப்புதிய திருஆட்சி அமைப்பின் தலைவராக, பாரம்பரிய ஆங்கிலிக்கன் சபையின் முன்னாள் ஆயர் Harry Entwistle என்பவரை நியமித்துள்ளார் திருத்தந்தை.
இத்தகைய திருஆட்சி அமைப்புகள் இங்கிலாந்திலும், அமெரிக்க ஐக்கிய நாட்டிலும் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளன. 
ஆங்லிக்கன் சபையின் பாரம்பரியக் கூறுகளைக் கடைப்பிடித்துக்கொண்டு கத்தோலிக்கத் திருஅவையில் முழுவதும் இணைந்து வாழ விரும்புவோர்க்கெனத் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இத்தகைய திருஆட்சி அமைப்புகளை உருவாக்கி வருகிறார்.
ஆஸ்திரேலியாவில் உருவாக்கப்பட்டுள்ள இப்புதிய ordinariateன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள Harry Entwistle என்பவர் கத்தோலிக்கத் திருஅவையில் இவ்வெள்ளியன்று குருவாகவும் திருநிலைப்படுத்தப்பட்டார்.


3. விளையாட்டு விழுமியங்கள் குறித்த வத்திக்கானின் புதிய திட்டங்கள்

ஜூன்15,2012. சந்தைப் பொருளாதாரத்தால் வரையறைக்கப்பட்டுள்ள இன்றைய உலகம், விளையாட்டுக்கள் வழியாக ஊக்குவிக்கப்படும் விழுமியங்களை மழுங்கடிக்கின்றது என்று திருப்பீட அதிகாரி ஒருவர் குறை கூறினார்.
திருப்பீடக் கலாச்சார அவையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கலாச்சார மற்றும் விளையாட்டுத் துறையும், திருப்பீடப் பொதுநிலையினர் அவையின் விளையாட்டுத் துறையும் இணைந்து எடுத்துள்ள புதிய முயற்சி பற்றிப் பேட்டியளித்த திருப்பீடக் கலாச்சார அவையின் நேரடிச் செயலர் பேரருட்திரு Melchor Sanchez de Toca y Alameda இவ்வாறு கூறினார்.
விளையாட்டு உலகம் எங்கே சென்று கொண்டிருக்கின்றது?, கால்பந்து விளையாட்டு இரசிகர்களுக்கு இடையே இடம்பெறும் வன்முறைக்குக் காரணம் என்ன?, விளையாட்டு வீரர்கள் உண்ணும் ஊக்கமருந்து எப்படி? போன்ற கேள்விகளை எழுப்பிய பேரருட்திரு Sanchez de Toca y Alameda, விளையாட்டு விழுமியங்கள் குறித்து அனைவரும் ஆர்வமாக இருப்பதால் இது குறித்த விவாதங்களை நடத்த புதிய முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
போலந்திலும் உக்ரேய்னிலும் ஐரோப்பிய கால்பந்து விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இரசிகர்களுக்கு இடையே வன்முறைகள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இலண்டனில் வருகிற ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 12 வரை கோடைகால ஒலிம்பிக் போட்டிகளும் நடைபெறவிருக்கின்றன.
இந்த விளையாட்டுக்களையொட்டி திருப்பீட அவைகள் புதிய முயற்சிகளை எடுத்துள்ளன.


4. சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு கேரள ஆயர்கள் புதிய திட்டம்

ஜூன்15,2012. உலகில் சுற்றுச்சூழல் பாதிப்பின் தாக்கம் அதிகரித்து வரும்வேளை, இப்பாதிப்புக்களுக்கு எதிரான முயற்சிகளுக்கு உதவும் நோக்கத்தில் கேரள ஆயர்கள் புதிய சுற்றுச்சூழல் கொள்கையை உருவாக்கியுள்ளனர்.
சூரியசக்திப் பயன்பாடு, மழைநீர்ச் சேகரிப்பு, சொந்த வாகனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்தல், காடுகள் அழிந்து வருவதைத் தடுத்தல் போன்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடத் தூண்டும் கொள்கையை வகுத்துள்ளனர் கேரள ஆயர்கள்.
இம்மாதத்தில் நடைபெற்ற ஆண்டுக் கூட்டத்தின் இறுதியில் ஆயர்கள் வெளியிட்ட அறிக்கையில் இக்கொள்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் தேசிய மக்கள் தொகை நெருக்கம் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 382 பேர் வீதம் என்ற நிலையில் இருக்க, இது கேரள மாநிலத்தில் 859 பேராக இருப்பதாக 2011ம் ஆண்டில் எடுக்கப்பட்ட புள்ளிவிபரக் கணக்கெடுப்பு   கூறுகிறது. மேலும், கேரளாவின் காடுகள் 12,300 ஏக்கருக்கும் மேலாக ஒவ்வோர் ஆண்டும் அழிக்கப்பட்டு வருகின்றன என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.
இயற்கைக்கு எதிரான பாவங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு அழைப்பு விடுக்கும் இப்புதிய கொள்கை, குருத்துவக் கல்லூரிகள் மற்றும் மறைக்கல்வி வகுப்புக்களில் சுற்றுச்சூழல் ஆன்மீகத்தை ஊக்குவிக்கும் பாடங்கள் எடுக்கப்படுமாறும் பரிந்துரைக்கின்றது.


5. மன்னார் ஆயர் எதிர்நோக்கும் அச்சுறுத்தல்கள் நிறுத்தப்படுவதற்குத் திருத்தந்தை தலையிடுமாறு கோரிக்கை

ஜூன்15,2012. இலங்கையின் மன்னார் ஆயர் ஜோசப் இராயப்பு  அநியாயமாய் எதிர்நோக்கும் அச்சுறுத்தல்கள் நிறுத்தப்படுவதற்குத் திருத்தந்தை தலையிடுமாறு மன்னாரில் இடம்பெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் விண்ணப்பிக்கப்பட்டது.
மன்னார் புனித செபஸ்தியார் ஆலயத்தில் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட பொதுக் கூட்டத்தில் பேசிய நாடாளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர் Jayalath Jayawardena, பல அரசு அமைச்சர்கள் மற்றும் ஊடகங்களால் ஆயர் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றார் என்று கூறினார்.
இவ்விவகாரம் தொடர்பாக இப்புதனன்று திருத்தந்தைக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், திருத்தந்தை தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி இலங்கை அரசோடு பேசி மன்னார் ஆயரின் பாதுகாப்புக்கு உறுதி வழங்குமாறு கேட்கப்பட்டுள்ளது என UCA செய்தி நிறுவனம் கூறியது.
இலங்கையின் போர்க் குற்றங்களை விசாரிப்பதற்கு தனிப்பட்ட பன்னாட்டு குழு ஒன்று தேவை என மன்னார் ஆயர் அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து அவருக்கு எதிரான நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக ஊடகங்கள் கூறுகின்றன.


6. தடுத்து நிறுத்தக்கூடிய நோய்களால் ஏற்படும் சிறார் இறப்புக்களை நிறுத்துவதற்கு உலக அளவில் முயற்சி

ஜூன்15,2012. தடுத்து நிறுத்தக்கூடிய நோய்களால் ஏற்படும் சிறார் இறப்புக்களை நிறுத்துவதற்கு அரசுகளும் அரசு-சாரா அமைப்புகளும் எடுத்து வரும் முயற்சிகளுக்கு ஐ.நா.வின் யுனிசெப் நிறுவனமும் தனது ஆதரவை வழங்கியுள்ளது.
இந்தியா, அமெரிக்க ஐக்கிய நாடு மற்றும் எத்தியோப்பிய நாடுகளின் அரசுகளும், ஐ.நா.வின் குழந்தை நல அமைப்பான யுனிசெப் நிறுவனமும் இணைந்து சிறாரைக் காப்பாற்றுவதற்கான உயர்மட்ட கூட்டம் ஒன்றை வாஷிங்டனில் இவ்வியாழனன்று நடத்தியுள்ளன.
உலகில், குறிப்பாக, ஆப்ரிக்காவின் சஹாராவையடுத்த நாடுகளிலும், தெற்கு ஆசியாவிலும் இலட்சக்கணக்கான சிறார் ஐந்து வயதை எட்டு முன்னரே ஆண்டுதோறும் இறக்கின்றனர். 2010ம் ஆண்டில், ஆயிரம் குழந்தைகளுக்கு 57 குழந்தைகள் வீதம் இறந்தன என்று யுனிசெப் அறிவித்தது. இவ்விறப்பை 20 அல்லது அதற்கு குறைவான எண்ணிக்கையாக 2035ம் ஆண்டுக்குள் மாற்றுவதற்கு இக்கூட்டத்தில் நாடுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டது.
இந்தப் பரிந்துரையை நாடுகள் நிறைவேற்றினால் 2035ம் ஆண்டுக்குள் மேலும் 4 கோடியே 50 இலட்சம் சிறாரின் வாழ்வைக் காப்பாற்ற முடியும் என்று யுனிசெப் கூறியது.


7. சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் பணம் ரூ.12 ஆயிரத்து 740 கோடியாக அதிகரிப்பு

ஜூன்15,2012. சுவிட்சர்லாந்து வங்கிகளில் இந்தியர்கள் சேமித்து வைத்துள்ள பணம், 2011ம் ஆண்டின் இறுதியில், 12 ஆயிரத்து 740 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த ஐந்தாண்டுகளில் இப்போதுதான் முதன்முறையாக உயர்ந்துள்ளது என்று சுவிட்சர்லாந்து தேசிய வங்கி வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறுகின்றது.
சுவிட்சர்லாந்து வங்கிகளில், இந்தியாவைச் சேர்ந்த தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் சேமித்து வைத்துள்ள பணம் மற்றும் இந்தியர்கள் தங்களது நம்பிக்கைக்கு உரியவர்கள் மூலம் சேமித்து வைத்துள்ள பணம் என, இந்தியர்கள் மொத்தம் சேமித்து வைத்துள்ள பணத்தின் அளவு 2011ம் ஆண்டின் இறுதியில், 12 ஆயிரத்து 740 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என்றும் அவ்வறிக்கை கூறுகின்றது.
சுவிட்சர்லாந்து வங்கிகளில் இந்தியர்கள் சேமித்து வைத்துள்ள பணம், கடந்த 2006ம் ஆண்டில், 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் உயர்ந்தது. ஆனால், 2010ம் ஆண்டில் இதில் மூன்றில் ஒரு பங்கிற்குக்கீழ் குறைந்தது. 2011ம் ஆண்டில் 3,500 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. அதாவது, 2010ம் ஆண்டின் முடிவில், சுவிஸ் வங்கிகள் இந்தியர்களுக்கு செலுத்த வேண்டிய தொகை 9,295 கோடி ரூபாய். இவ்வாறு அந்நாட்டு ஆண்டுக் கையேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


8. சிரியா இராணுவம் மனித சமுதாயத்துக்கு எதிரான குற்றங்களைச் செய்கின்றது, ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் புகார்

ஜூன்15,2012. சிரியாவில் சட்டத்துக்குப் புறம்பே கொலைகளும், சித்ரவதைகளும், திட்டமிட்ட கைதுகளும், வீடுகள் பாகுபாடற்று அழிக்கப்படுவதும் இடம்பெறுகின்றன என்று ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் என்ற பன்னாட்டு மனித உரிமைகள் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
சிரியா இராணுவம் மனித சமுதாயத்துக்கு எதிரான குற்றங்களைச் செய்கின்றது என்று குறை கூறும் ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல், அந்த இராணுவம் செய்துவரும் குற்றங்கள் தண்டிக்கப்படாமல் இருப்பதால் அக்குற்றங்கள் பெருகி வருகின்றன என்று கூறியது.
சிரியா இராணுவம் நடத்திவரும் தொடர் தாக்குதல்கள் நிறுத்தப்படுவதற்குச் சர்வதேச சமுதாயம் தலையிடுமாறும் அக்கழகம் கேட்டுள்ளது.
மேலும், சீனாவில் ஒரு குழந்தை கொள்கையின்கீழ் இடம்பெறும் கட்டாயக் கருக்கலைப்புக்கள், சிரியாவில் பெண்களும் குழந்தைகளும் கொல்லப்படுவது போன்று இருக்கின்றது என்று ஊடகங்கள் குறை கூறுகின்றன.

 

No comments:

Post a Comment

வத்திக்கான் ஆவணக்காப்பகம் மற்றும் நூலகத்தை விரிவுபடுத்தினார் திருத்தந்தை

  வத்திக்கான் ஆவணக்காப்பகம் மற்றும் நூலகத்தை விரிவுபடுத்தினார் திருத்தந்தை வத்திக்கான் அப்போஸ்தலிக்க ஆவணக் காப்பகத்தையும், அப்போஸ்தலிக்க நூல...