Saturday, 16 June 2012

Catholic News in Tamil - 09/06/12

1.திருத்தந்தை: திருமணத்தின் புனிதம் பாதுகாக்கப்படுமாறு அழைப்பு  

2.திருத்தந்தை, இலங்கை அரசுத்தலைவர் சந்திப்பு

3.வேளாண்மை, நிலையான சமூகங்கள் குறித்த திருப்பீட நிகழ்வு

4. 50வது அனைத்துலக திருநற்கருணை மாநாடு ஆரம்பம்

5. ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நாள்களில் உலகில் அமைதிக்காகச் செபம்

6. நிமோனியா மற்றும் வயிற்றுப்போக்கு நோய்களைத் தடுத்து நிறுத்தினால் இலட்சக்கணக்கான சிறாரின் வாழ்வைப் பாதுகாக்க முடியும் - யுனிசெப்

7. காலநிலை மாற்றத்தால் இந்தியாவில் ஏற்படும் தாக்கம்

8. பீகாரில் 40 நாட்களில் 74 குழந்தைகள் பலி
-------------------------------------------------------------------------------------------

1.திருத்தந்தை: திருமணத்தின் புனிதம் பாதுகாக்கப்படுமாறு அழைப்பு  

ஜூன் 09,2012. கத்தோலிக்க அறநெறிப் போதனைகளுக்கு ஒத்துச்செல்லும் விதத்தில் திருமணம் மற்றும் குடும்பம் குறித்த நற்செய்திப்பணிகளுக்கு ஆயர்கள் தங்களது மேய்ப்புப்பணியில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கேட்டுக் கொண்டார்.
Papua New Guinea மற்றும் Solomon தீவுகள் நாடுகளின் ஆயர்களை அட் லிமினா சந்திப்பையொட்டி இச்சனிக்கிழமை திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, ஓர் ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையே இடம்பெறும் திருமணத்தின் இயற்கையான பந்தத்தின் அடிப்படையில் அமைந்த குடும்பத்தையே திருஅவை சோர்வின்றி அறிவித்து வருகிறது என்று கூறினார்.
திருமணத்தின் புனிதம் பாதுகாக்கப்படுவதற்குத் தமது குருதியைச் சிந்திய அருளாளர் Peter To Rot பிறந்ததன் நூறாம் ஆண்டு சிறப்பிக்கப்பட்டுவரும் இந்நாள்களில் திருமணமான தம்பதியர் இப்புனிதரின் எடுத்துக்காட்டைப் பின்பற்றி நடக்குமாறும் திருத்தந்தை அழைப்பு விடுத்தார்.
உதவி தேவைப்படும் ஏழைகள், நோயாளிகள், குறிப்பாக எய்ட்ஸ் நோயாளிகளுக்கும், பொதுநலவாழ்வில் அறநெறிக் கோட்பாடுகள் காக்கப்படுவதற்கும் Papua New Guinea மற்றும் Solomon தீவுகள் நாடுகளின் ஆயர்கள் செய்து வரும் பல்வேறு மேய்ப்புப்பணிகளை உற்சாகப்படுத்திய திருத்தந்தை, இப்பணிகளில் ஆயர்கள் அரசு அதிகாரிகளுடன் உரையாடலை மேற்கொண்டு ஆற்றிவரும் பணிகளைத் தொடர்ந்து செய்யுமாறும் ஊக்கப்படுத்தினார்.
மீட்பு வரலாற்றில் கலாச்சாரத்தின் முக்கிய பங்கைச் சுட்டிக்காட்டிய அவர், கடவுள் தமது ஒரே மகனை ஒரு குறிப்பிட்ட கலாச்சாரத்தில் பிறக்க வைத்தார் என்றும் கூறினார்.
ஆயர்கள் தங்களது நற்செய்திப்பணியில் அந்தந்த மக்களின் பழக்கவழக்கங்களுக்கு ஏற்ப நற்செய்தி உண்மைகளை எடுத்துரைக்குமாறும் கேட்டுக்கொண்ட திருத்தந்தை, மனிதர் ஏற்படுத்தியுள்ள எல்லைகளையும் கடந்து எல்லா நாடுகளுக்கும் நற்செய்தியை அறிவிப்பதற்குத்  திருஅவை அனுப்பப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
இந்நற்செய்தி அறிவிப்புப்பணியில் குருக்கள், துறவியர் மற்றும் பொதுநிலை விசுவாசிகளின் சாட்சியவாழ்வு இன்றியமையாதது என்றும் திருத்தந்தை Papua New Guinea மற்றும் Solomon தீவுகள் நாடுகளின் ஆயர்களிடம் கூறினார்.

2.திருத்தந்தை, இலங்கை அரசுத்தலைவர் சந்திப்பு

ஜூன் 09,2012. இலங்கை அரசுத்தலைவர் மகிந்த இராஷபக்ஷேவை இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இலங்கையின் ஒப்புரவுக்கு உலகினர் இணைந்து தீர்வு காண்பார்கள் என்ற தனது நம்பிக்கையைத் தெரிவித்தார்.
இலங்கையின் நீண்டகால உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களின் நியாயமான ஏக்கங்களுக்கு ஒத்திருக்கும் வகையில் தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கையைத் தெரிவித்தார் திருத்தந்தை.
இலங்கையின் வெளியுறவு அமைச்சர், உதவி அமைச்சர், மத்திய வங்கித் தலைவர், முன்னாள் நீதி அமைச்சர் உட்பட 2 பெண்கள் மற்றும் 8 ஆண்கள் கொண்ட குழுவுடன் திருத்தந்தையைச் சந்தித்த அரசுத்தலைவர் இராஷபக்ஷே, அச்சந்திப்புக்குப்பின்னர் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சிசியோ பெர்த்தோனே, திருப்பீட நாடுகளுடனான உறவுகளின் செயலர் பேராயர் தொமினிக் மம்பர்த்தி ஆகியோரையும் சந்தித்தார்.
அந்நாட்டின் சமூக, பொருளாதார முன்னேற்றத்துக்கும் ஒப்புரவுக்குமென எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் இச்சந்திப்பில் இடம்பெற்றன என்று திருப்பீட பத்திரிகை அலுவலகம் அறிவித்தது.

3.வேளாண்மை, நிலையான சமூகங்கள் குறித்த திருப்பீட நிகழ்வு

ஜூன் 09,2012. பிரேசில் நாட்டு ரியோ டி ஜெனிரோவில் இம்மாதம் 20 முதல் 22 வரை நடைபெறவிருக்கும் நீடித்த வளர்ச்சி குறித்த Rio+20 என்ற உச்சிமாநாட்டையொட்டி திருப்பீடமும் இம்மாதம் 19ம் தேதி ஒரு நிகழ்ச்சியை நடத்தத் திட்டமிட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்துலக காரித்தாஸ், அனைத்துலக பிரான்சிஸ்கன் அமைப்பு, அனைத்துலக வளர்ச்சி மற்றும் ஒருமைப்பாட்டு ஒத்துழைப்பு நிறுவனம் ஆகியவை திருப்பீடத்துடன் இணைந்து இந்நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது.
வேளாண்மையும் உறுதியான சமூகங்களும் : உணவுப் பாதுகாப்பு, நிலம் மற்றும் தோழமை என்ற தலைப்பில் ரியோ டி ஜெனிரோவில் திருப்பீடத்தின் இந்நிகழ்வு நடைபெறும்.
ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத்துக்கு அறநெறி சார்ந்த, நடைமுறைக்கு ஏற்ற மற்றும் உறுதியான தீர்மானங்கள் குறித்து இத்திருப்பீட நிகழ்வில் பரிசீலிக்கப்பட்டு பரிந்துரைக்கப்படும். 

4. 50வது அனைத்துலக திருநற்கருணை மாநாடு ஆரம்பம்

ஜூன்09,2012. அயர்லாந்து நாட்டு டப்ளின் நகரில் 50வது அனைத்துலக திருநற்கருணை மாநாடு இஞ்ஞாயிறன்று ஆரம்பமாகின்றது.
திருநற்கருணை : கிறிஸ்துவோடும் நம்மோடும் ஒன்றிப்பு என்ற தலைப்பில் இம்மாதம் 10 முதல் 17 வரை இம்மாநாடு நடைபெறுகின்றது.
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை வெவ்வேறு நாடுகளில் நடைபெறும் இம்மாநாட்டில், திருநற்கருணை நமது வாழ்வின் மையம் என்பதை வலியுறுத்தும் திருவழிபாடுகள், கலாச்சார நிகழ்வுகள், மறைக்கல்வி, சாட்சியக் கூட்டங்கள், பயிற்சிப்பாசறைகள் போன்றவை நடைபெறும்.
இந்த டப்ளின் மாநாட்டில் சுமார் 70 ஆயிரம் பேர் பங்கு கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

5. ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நாள்களில் உலகில் அமைதிக்காகச் செபம்

ஜூன் 09,2012. இலண்டனில் வருகிற ஜூலையில் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடைபெறும் நாள்களில், நாடுகளில் போர்நிறுத்தம் கடைப்பிடிக்கப்படவேண்டுமென்பதை வலியுறுத்தி இவ்வெள்ளியும் இச்சனிக்கிழமையும் இலண்டனில் செப வழிபாடு நடைபெற்றது.
Pax Christy அமைப்பு ஏற்பாடு செய்த இச்செப வழிபாட்டில் கிறிஸ்தவர்கள், புத்த மதத்தினர், சீக்கியர்கள், முஸ்லீம்கள் எனப் பலநாடுகளின் பல்வேறு மதத்தவர் கலந்து கொண்டனர்.   
வருகிற ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 12 வரை இலண்டனில் கோடைகால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவிருக்கின்றன.
மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டிகள் வருகிற ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 9 வரை நடைபெறும்.

6. நிமோனியா மற்றும் வயிற்றுப்போக்கு நோய்களைத் தடுத்து நிறுத்தினால் இலட்சக்கணக்கான சிறாரின் வாழ்வைப் பாதுகாக்க முடியும் - யுனிசெப்

ஜூன்09,2012. ஐந்து வயதுக்குட்பட்ட சிறாரின் இறப்புக்கு முக்கிய காரணங்களாக இருக்கும் நிமோனியா மற்றும் வயிற்றுப்போக்கு நோய்களைத் தடுத்து நிறுத்தினால் உலகில் இருபது இலட்சத்துக்கு மேற்பட்ட சிறாரின் வாழ்வைப் பாதுகாக்க முடியும் என்று யுனிசெப் என்ற ஐ.நா.வின் குழந்தைநல அமைப்பு வெளியிட்ட புதிய அறிக்கை கூறுகிறது.
சிறாரின் உயிர்வாழ்க்கைக்கு மிகப்பெரும் தடைகளாக இருக்கும் இவ்விரண்டு நோய்களைக் கட்டுப்படுத்தினால் ஒவ்வொரு குழந்தையும் வளர்வதற்கு வாயப்பளிக்க முடியும் என்று யுனிசெப் இயக்குனர் Anthony Lake கூறினார்.
உலகில் இடம்பெறும் ஐந்து வயதுக்குட்பட்ட சிறாரின் இறப்பில் மூன்றில் ஒரு பகுதி இறப்புக்கு இவ்விரு நோய்களுமே காரணம் என்றும், இவ்விறப்புக்களில் சுமார் 90 விழுக்காடு ஆப்ரிக்காவின் சகாராவையடுத்த பகுதிகள் மற்றும் தெற்கு ஆசியாவில் இடம்பெறுகின்றன என்றும் Anthony Lake மேலும் கூறினார்.

7. காலநிலை மாற்றத்தால் இந்தியாவில் ஏற்படும் தாக்கம்

ஜூன் 09,2012. காலநிலை மாற்றம் தொடர்பாக இந்தியாவில் ஏற்படும் தாக்கம், அதற்கு அரசு எடுத்துள்ள தடுப்பு நடவடிக்கைகைள் உள்பட பல்வேறு அம்சங்கள் கொண்ட விளக்க அறிக்கையை இந்தியா ஐ.நா.விடம் சமர்ப்பித்துள்ளது.
வனம், வேளாண்மை, நலவாழ்வு, வெப்பநிலை, மழையளவு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் குறிப்பிடத்தக்க தாக்கங்கள் ஏற்படும் என்று அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக புனே நகரில் உள்ள செம்பியாஸிஸ் அனைத்துலக பல்கலைக் கழகத்தின் எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் துறையின் தலைவர் பிரகாஷ் ராவ் தெரிவித்தார்.
வெப்பநிலை ஒரு டிகிரி செல்சியஸ் உயரும்போது, கோதுமையின் உற்பத்தி 6 மில்லியன் டன் குறைய வாய்ப்பு உள்ளதாகவும், அரிசி, உருளைக்கிழங்கு போன்றவற்றின் உற்பத்தியும் பாதிக்கப்படும் எனவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளில் வெப்பநிலை எல்லா இடங்களிலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றும், 3.5 டிகிரி சென்டிகிரேட் முதல் 4.5 டிகிரி சென்டிகிரேட் வரை வெப்பநிலை உயரக்கூடும் என்றும், அது அடுத்த 50 ஆண்டுகள் வரை படிப்படியாக உயரும் என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நலவாழ்வைப் பொருத்தவரை, டெங்கு, மலேரியா போன்ற பல்வேறு விதமான நோய்கள் பரவக்கூடும் என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பிரகாஷ் ராவ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முதல் அறிக்கை, 2005-ம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், தற்போது இரண்டாவது அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

8. பீகாரில் 40 நாட்களில் 74 குழந்தைகள் பலி

ஜூன்09,2012. பீகாரில், மூளை தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டு, கடந்த 40நாட்களில் மட்டும், 74 குழந்தைகள் இறந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்துப் பேசிய பீகார் மாநில முதன்மைச் செயலர் அமர்ஜித் சின்கா, பீகாரில், அண்மைக்காலமாக மூளை தொடர்பான நோய்களால் குழந்தைகள் அதிகப் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர் என்று கூறினார்.
கடந்த 40 நாட்களில், மூளை தொடர்பான நோய்களால், 197 குழந்தைகள் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 74 குழந்தைகள் இறந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...