Monday, 26 September 2011

Catholic News - hottest and latest - 26 September 2011

1. திருத்தந்தையின் நான்கு நாள் திருப்பயணம் நிறைவுக்கு வந்தது

2. நாத்ஸியிசத்தின் பாடங்களை மீண்டும் நினைவுகளுக்குக் கொணர திருத்தந்தையின் திருப்பயணம் உதவியுள்ளது

3. இந்தோனேசியாவில் கிறிஸ்தவக் கோவில் தாக்கப்பட்டதற்கு மதத்தலைவர்கள் கண்டம்

4. பிறரன்பு நடவடிக்கைகளுக்கென 100 கோடி ரூபாய் திரட்ட உள்ளது சீரோ மலங்கரா ரீதி திருச்சபை  

5. கர்நாடக கிறிஸ்தவ வளர்ச்சி அமைப்புக்கு அடுத்த ஆண்டில் 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு

6. ரூ.80 ஆயிரம் கோடி செலவிட்டும் பலனில்லை: வறுமையில் வாடுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

----------------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தையின் நான்கு நாள் திருப்பயணம் நிறைவுக்கு வந்தது

செப்.26,2011. தன் தாய் நாடான ஜெர்மனியில் நான்கு நாட்கள் திருப்பயணத்தை நிறைவுச் செய்து இஞ்ஞாயிறு மாலை உரோம் நகருக்கு அருகேயுள்ள காஸ்தல் கந்தோல்ஃபோ கோடைவிடுமுறை இல்லம் வந்தடைந்தார் திருத்தந்தை.
ஜெர்மனியின் பெர்லின், எர்ஃபூர்ட் மற்றும் ஃப்ரைய்பூர்க் நகரங்களில் திருப்பயணத்தை மேற்கொண்ட திருத்தந்தை, அப்பகுதி கத்தோலிக்க விசுவாசிகளுடன் இணைந்து செபிப்பது தன் பயணத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது என்றார்.
தன் தாய்நாட்டின் கிறிஸ்தவ வருங்காலம் குறித்து முழு நம்பிக்கையை இப்பயணத்தின்போது வெளியிட்ட திருத்தந்தை, விசுவாசப் பாதையை பின்பற்றி நடைபயிலத் தலத்திருச்சபைத் தலைவர்களுக்கு அழைப்பும் விடுத்தார்.
எங்கெங்கு க‌ட‌வுள் குடியிருக்கிறாரோ அங்கெல்லாம் ந‌ம்பிக்கையும் உள்ள‌து, அந்த‌ ந‌ம்பிக்கை, ந‌ம‌க்கு நிக‌ழ்கால‌த்தையும் தாண்டிய ஓர் உத‌ய‌த்தை திறந்து விடுகிற‌து என‌வும் இத்திருப்ப‌ய‌ண‌த்தின்போது ஜெர்ம‌ன் ம‌க்களுக்கு எடுத்துரைத்தார் திருத்தந்தை.
இந்த‌ நான்கு நாள் திருப்ப‌ய‌ண‌த்தின்போது திருத்தந்தை, க‌த்தோலிக்க‌ விசுவாசிக‌ளை சந்தித்து அவ‌ர்க‌ளுக்கு திருப்ப‌லி நிறைவேற்றிய‌துட‌ன், ஜெர்ம‌ன் பாராளும‌ன்ற‌த்தில் உரை வ‌ழ‌ங்க‌ல், யூத‌ர், இஸ்லாமிய‌ர், இவாஞ்ச‌லிக்க‌ல் கிறிஸ்த‌வ‌ ச‌பையின‌ர், ஆர்த்த‌டாக்ஸ் கிறிஸ்த‌வ‌ர் ம‌ற்றும் இளையோர் குழுவையும் வெவ்வேறு நேர‌த்தில் சந்தித்து உரை வ‌ழ‌ங்க‌ல் ஆகிய‌ நிக‌ழ்வுக‌ளிலும் க‌லந்து கொண்டார்.

2. நாத்ஸியிசத்தின் பாடங்களை மீண்டும் நினைவுகளுக்குக் கொணர திருத்தந்தையின் திருப்பயணம் உதவியுள்ளது

செப்.26,2011. நாத்ஸியிசத்தின் பெரும் சோக நிகழ்வு வழங்கிய பாடங்களை மீண்டும் நம் நினைவுகளுக்குக் கொணர திருத்தந்தையின் ஜெர்மன் நாட்டிற்கான அண்மைத் திருப்பயணம் உதவியுள்ளது என்றார் திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபைக் குரு ஃபெதரிக்கோ லொம்பார்தி.
வத்திக்கான் தொலைக்காட்சியின் 'ஒக்தாவா தியேஸ்' என்ற வாராந்திர நிகழ்ச்சியில் இக்கருத்தை வெளியிட்ட குரு லொம்பார்தி, ஒருவர் பெர்லின் நகரைத் தாண்டிச் செல்லும்போது, ஜெர்மனி மற்றும் ஐரோப்பிய வரலாற்றின் இருண்ட பக்கங்களின் சுமையை உணராமல் இருக்க முடியாது என்றார்.
நாத்ஸி கொடுமையாளர்களைத் 'திருடர்களின் கூட்டம்' எனத் திருத்தந்தை கூறியதையும், யூதப்பிரதிநிதிகளை அவர் சந்தித்து உரையாடியதையும் எடுத்துரைத்தத் திருப்பீடப் பேச்சாளர், நாத்ஸி வதைப்போர் முகாமில் துன்புற்றோர் மற்றும் அக்கொடுமைகளின் சாட்சிகளும் திருத்தந்தையுடனான சந்திப்பில் இடம்பெற்றிருந்தனர் என்றார்.
நாத்ஸி வதைப்போர் முகாம்களில் மறைசாட்சிகளாக உயிரிழந்தவர்களின் ஒளி, அக்காலத்தைய இருண்ட காலத்திலும் ஒளிர் விட்டு தற்போதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்றார் இயேசு சபை குரு லொம்பார்தி.

3. இந்தோனேசியாவில் கிறிஸ்தவக் கோவில் தாக்கப்பட்டதற்கு மதத்தலைவர்கள் கண்டம்

செப்.26,2011. இந்தோனேசியாவின் சோலோ நகரில் கிறிஸ்தவக் கோவில் ஒன்று தாக்கப்பட்டது குறித்து அந்நாட்டின் மதத்தலைவன்ர்கள் தங்கள் வன்மையானக் கண்டனத்தை வெளியிட்டுள்ளனர்.
ஞாயிறு வழிபாட்டை முடித்து விசுவாசிகள் வெளியேறிக் கொண்டிருந்தபோது இடம்பெற்ற தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் குறித்து கண்டனத்தை வெளியிட்ட Nahdlatul Ulama என்ற இஸ்லாமியக் குழு, இது ஒழுக்க ரீதிகளுக்கு எதிரான காட்டுமிராண்டி நடவடிக்கை என அறிவித்துள்ளது.
கிறிஸ்தவர்களுக்கு எதிரான இந்த நடவடிக்கையை கண்டிப்பதாக உரைத்த இந்தோனேசிய ஆயர் பேரவையின் அதிகாரி குரு அந்தோனியுஸ் பென்னி சுசெத்யோ, இது கடவுளுக்கு எதிரானச் செயல் என உரைத்ததுடன், தீவிரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக ஒன்றிணைந்து போராடவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
கிறிஸ்த‌வ‌ர்க‌ளும் இசுலாமிய‌ர்க‌ளும் ஒற்றுமையாய் வாழும் சொல்லோ ப‌குதியில் இத்த‌கைய‌தொரு தாக்குத‌ல் நடந்துள்ள‌து அதிர்ச்சிய‌ளிப்ப‌தாக‌ உள்ள‌து என‌வும் கூறினார் அவ‌ர்.
இந்தோனேசியாவின் சோலோ நகரில் இடம்பெற்ற‌ த‌ற்கொலை வெடி தாக்குத‌லில், இத்தாக்குத‌லை ந‌ட‌த்திய‌வ‌ர் உயிரிழ‌ந்த‌துட‌ன், 20 பேர் காய‌மடைந்த‌ன‌ர்.

4. பிறரன்பு நடவடிக்கைகளுக்கென 100 கோடி ரூபாய் திரட்ட உள்ளது சீரோ மலங்கரா ரீதி திருச்சபை  

செப்.26,2011.பிறரன்பு நடவடிக்கைகளுக்கென 100 கோடி ரூபாய் திரட்ட உள்ளதாக இந்தியாவின் சீரோ மலங்கரா ரீதி திருச்சபையின் உயர்மட்ட‌ கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மலங்கரா ரீதி திருச்சபையை உயிர்துடிப்புடையதாகவும் ஆன்மீகப் பலமுடையதாகவும் மாற்ற இத்தீர்மானத்தை உலகம் முழுவதிலிருந்தும் கலந்துகொண்ட 175 பிரதிநிதிகள் திருவனந்தபுரம் கூட்டத்தில் எடுத்துள்ளதாக அறிவித்தார் மலங்கரா ரீதி திருச்சபையின் தலைவர் பேராயர் பசிலியோச் மார் கிளீமிஸ்.
மத வேறுபாடுகளை நோக்காமல், வீடுகளற்ற அனைவருக்கும் குடியிருப்புகளை வழங்க தலத்திருச்சபை திட்டமிட்டுள்ளது என்றார் அவர்.
விசுவாசிகளின் ஆன்மீகப் புதுப்பித்தலுக்கும் தேசத்தைக் கட்டியெழுப்புவதில் உதவுவதற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றார் பேராயர் கிளீஈமிஸ்.
மக்கள் எளிமையான வாழ்வை மேற்கொள்தல், மதுபானங்களுக்கு எதிரான மற்றும் வாழ்வுக்கு ஆதரவான விழிப்புணர்வு நடவடிக்கைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்றவைகளும் இந்த உயர்மட்டக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
1930ல் உருவான சீரோ மலங்கரா ரீதி திருச்சபை, உலக்ம் முழுவதும் ஐந்து இலட்சம் விசுவாசிகளைக் கொண்டு, 20 கல்லூரிகள், 525 பள்ளிகள் மற்றும் 18 மருத்துவமனைகளை நடத்தி வருகின்றது.

5. கர்நாடக கிறிஸ்தவ வளர்ச்சி அமைப்புக்கு அடுத்த ஆண்டில் 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு

செப்.26,2011. கர்நாடக கிறிஸ்தவ வளர்ச்சி அமைப்புக்கு அடுத்த ஆண்டில் 100 கோடி ரூபாய் ஒதுக்குவதாக கர்நாடக முதலமைச்சர் டி.வி.சதானந்தா கவுடா அறிவித்தார்.
கொங்கனி கத்தோலிக்க கழக கூட்டமைப்பின் தலைவர் வலேரியன் பெர்னான்டஸ் தலைமையில் சென்ற பிரதிநிதிகள் குழுவிடம் பேசிய டி.வி.சதானந்தா கவுடா, தனக்கு முந்தைய முதல்வர் 50 கோடி ரூபாய் ஒதுக்கினார், அந்த நிதி ஒதுக்கீட்டைத் தான் அடுத்த ஆண்டில் இரண்டு மடங்காக்கத் திட்டமிட்டிருப்பதாகக் கூறினார்.
சிறுபான்மை கிறிஸ்தவச் சமூகத்திலிருந்து ஒருவரை அரசில் நியமிக்குமாறு பெர்னான்டஸ் முன்வைத்த பரிந்துரைக்குப் பதிலளித்த கர்நாடக முதலமைச்சர், விரைவில் திறமையான ஒருவரை நியமனம் செய்வதற்குத் திட்டமிட்டு வருவதாகத் தெரிவித்தார்.
2008ல், மங்களூர், உடுப்பி, மற்றும் பிற இடங்களில் கிறிஸ்தவ ஆலயங்கள் தாக்கப்பட்டதற்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து குற்றமற்ற கிறிஸ்தவ இளைஞர்க்கு எதிராகப் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை இரத்து செய்யுமாறு விண்ணப்பித்த போது, அரசு ஏற்கனவே இதில் நடவடிக்கையைத் தொடங்கியிருப்பதாகவும் அரசு அவசியமான நவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் டி.வி.சதானந்தா கவுடா கூறினார்

6. ரூ.80 ஆயிரம் கோடி செலவிட்டும் பலனில்லை: வறுமையில் வாடுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

செப்.26,2011."நம்நாடு சுதந்திரம் அடைந்த போது வறுமைக்கோட்டுக்கு கீழ் இருந்தவர்களின் எண்ணிக்கை  32 கோடியாக இருந்தது. தற்போது இந்த எண்ணிக்கை, 40 கோடியாக உயர்ந்துள்ளது,'' என தேசிய ஆலோசனை கவுன்சில் உறுப்பினர் என்.சி.சக்சேனா தெரிவித்துள்ளார்.
நம்நாட்டில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் எண்ணிக்கை 70 சதவீதம் என, பொருளாதார நிபுணர் அர்ஜுன் சென்குப்தாவும், 50 சதவீதம் பேர் என, என்.சி.சக்சேனாவும், 37.5 சதவீதம் என, பொருளாதார வல்லுனர் சுரேஷ் டெண்டுல்கரும் தெரிவித்துள்ளனர்."
இது குறித்து சக்சேனா கூறியதாவது: 72-73ம் ஆண்டு காலத்தில், ஒரு நாளைக்கு ஒன்றரை ரூபாய் சம்பாதிப்பவர்கள் ஏழைகளாகக் கருதப்பட்டனர். தற்போது, ஒரு நாளைக்கு 32 ரூபாய் சம்பாதிப்பவர்கள் ஏழை எனப்படுகின்றனர். ஏன் ஏழைகள் அதிகரித்துள்ளனர் என்பதற்கு அரசு விளக்கம் அளிக்க வேண்டும். என்றார்.
வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு, ரேஷன் அட்டை கொடுக்கப்பட்டு மானிய விலையில் உணவு தானியங்கள் கொடுக்கப்படுகின்றன. இந்த ரேஷன் அட்டையை வைத்திருப்பவர்களில் 60 சதவீதம் பேர், வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ளவர்கள். இதில், பரிதாபம் என்னவென்றால் உண்மையிலேயே வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள 20 சதவீதம் பேருக்கு இந்த ரேஷன் அட்டையே கிடையாது எனவும் கவலையை வெளியிட்டார் அவர்.
வறுமையில் உள்ளவர்கள் குறித்து கடைசியாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் ஏராளமான பழங்குடியினரும், ஏழைகளும் விடுபட்டுள்ளனர். இவர்களுக்கு அரசு அளிக்கும் நலத் திட்ட உதவிகள் எதுவும் கிடைப்பதில்லை. இந்த விஷயத்தில் அரசு கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்ற விண்ணப்பத்தையும் முன்வைத்தார் சக்சேனா.

No comments:

Post a Comment