Thursday, 15 September 2011

Catholic News - hottest and latest - 14 September 2011

1. இளையோரின் ஒருங்கிணைந்த வளர்ச்சியில் கவனம் செலுத்தப்பட திருத்தந்தை அழைப்பு

2. உரோம் நகரிலும், ஜெர்மனியின் Freiburg நகரிலும் திருத்தந்தை எழுதிய புத்தகங்கள் அடங்கிய கண்காட்சி

3. லிபியாவில் பொறுப்பேற்றிருக்கும் புரட்சிக் குழுவினரின் நல்ல எண்ணங்களை மதிக்கவேண்டும் - Tripoliயின் அப்போஸ்தலிக்க நிர்வாகி

4. போர்க்கருவிகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் கண்காட்சியை எதிர்த்து இலண்டனில் அமைதிப் போராட்டம்

5. ஒரிஸ்ஸாவைச் சூழ்ந்துள்ள வெள்ளம் குறித்து கட்டக்-புபனேஸ்வர் சமூகப்பணிக் குழுவின் இயக்குனர்

6. பாகிஸ்தானில் சிறுபான்மையினர் சந்தித்து வரும் துன்பங்களைக் குறித்து ஆயர் பேரவையின் அறிக்கை

7. பாகிஸ்தானைச் சூழ்ந்துள்ள வெள்ள நிலை பெரும் ஆபத்தை உருவாக்கியுள்ளது - காரித்தாஸ் அமைப்பு

8. வத்திகானின் பல சுற்றுப்பயணியர் தலங்கள் செப்டம்பர் மாத இறுதி ஞாயிறன்று இலவசமாகத் திறந்து விடப்படும்

9. 68 லட்சம் பேர் அரசு வேலைக்காக காத்திருக்கின்றனர்

------------------------------------------------------------------------------------------------------

1. இளையோரின் ஒருங்கிணைந்த வளர்ச்சியில் கவனம் செலுத்தப்பட திருத்தந்தை அழைப்பு

செப்.14,2011. மனிதனின் ஒருங்கிணைந்த வளர்ச்சியை குறிக்கோளாகக் கொண்டிருக்கும் கல்வியை நன்முறையில் வழங்குவதற்கு, பெற்றோர், ஆசிரியர், மேய்ப்பர்கள் மற்றும் அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்பு வேண்டப்படுகிறது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
போலந்து நாட்டில் கல்வி வாரம்கடைபிடிக்கப்படுவதையொட்டி இப்புதன் மறைபோதகத்தில் போலந்து மொழியில் இவ்வாறு உரைத்தத் திருத்தந்தை,  இளையோரின் இதயங்களிலும் உணர்வுகளிலும் நல்ல பயிற்சியை வழங்கும் பொறுப்பை இவ்வாரம் அனைவருக்கும் உணர்த்தட்டும் என்று வாழ்த்தினார்.
மேலும், இப்புதனன்று இத்தாலியில் இறையடியார் அருட்சகோதரி Elena Aiello,  அருளாளர் நிலைக்கு உயர்த்தப்படுவது குறித்து குறிப்பிட்ட திருத்தந்தை, இந்த அருட்சகோதரி திருநற்கருணைமீது கொண்டிருந்த அளப்பரிய பக்தியானது நம் எல்லாரிலும் வளர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
அருட்சகோதரி Elena Aiello, இயேசு கிறிஸ்துவின் பாடுகளின் அருட்சகோதரிகள் சபையை ஆரம்பித்தவர்.


2. உரோம் நகரிலும், ஜெர்மனியின் Freiburg நகரிலும் திருத்தந்தை எழுதிய புத்தகங்கள் அடங்கிய கண்காட்சி

செப்.14,2011. திருத்தந்தை மேற்கொள்ளவிருக்கும் ஜெர்மன் நாட்டுத் திருப்பயணத்தையொட்டி, அவர் எழுதியுள்ள பல புத்தகங்கள் அடங்கிய கண்காட்சி ஒன்று உரோம் நகரிலும், ஜெர்மனியின் Freiburg நகரிலும் திறந்து வைக்கப்படும் என்று வத்திக்கான் பதிப்பாளர் இல்லம் இச்செவ்வாயன்று கூறியது.
திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கர்தினாலாக இருந்த காலத்திலிருந்து அவர் எழுதிய பல புத்தகங்களும், அவற்றின் பல மொழிபெயர்ப்புப் பதிப்புக்களும் அடங்கிய சுமார் 600 புத்தகங்கள் இந்தக் கண்காட்சியில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கண்காட்சி முதலில் திருத்தந்தையர்களின் கோடை விடுமுறை இல்லமான காஸ்தெல் கந்தோல்போவில் திருத்தந்தையின் பார்வைக்கு வைக்கப்படும் என்றும், பின்னர் இக்கண்காட்சி இவ்வெள்ளியன்று வத்திக்கானிலும், பின்னர் செப்டம்பர் 24ம் தேதி Freiburgலும்  திறக்கப்படும் என்றும் இச்செய்திக்குறிப்பு கூறியுள்ளது.


3. லிபியாவில் பொறுப்பேற்றிருக்கும் புரட்சிக் குழுவினரின் நல்ல எண்ணங்களை மதிக்கவேண்டும் - Tripoliயின் அப்போஸ்தலிக்க நிர்வாகி

செப்.14,2011. லிபியாவில் பொறுப்பேற்றிருக்கும் புரட்சிக் குழுவினரின் நல்ல எண்ணங்களை மதிக்கவேண்டும் என்றும், அவர்கள் சொல்லும் வார்த்தைகளுக்கு தவறான அர்த்தங்கள் கற்பிக்கக்கூடாதென்றும் Tripoliயின் அப்போஸ்தலிக்க நிர்வாகி ஆயர் ஜொவான்னி இன்னோசென்சோ மார்த்தினெல்லி கூறினார்.
இத்திங்கள் இரவு பல்லாயிரம் மக்களுக்கு முன்னிலையில் பேசிய லிபியாவின் இடைக்கால அரசுக் குழுவின் தலைவர் Mustafa Abdel Jalil, நாட்டில் அமைக்கப்படும் புதிய அரசு இஸ்லாமியக் கொள்கைகள் கொண்டதாக இருக்கும் என்றும், அதே நேரம் அடிப்படை வாதக் கொள்கைகளுக்கு இடம் தராது என்றும் வாக்களித்தார்.
புதியத் தலைவர் Jalil பற்றி தன் கருத்துக்களை வெளியிட்ட ஆயர் மார்த்தினெல்லி, Jalil நல் மனம் கொண்டவர் என்றும், நாட்டை முன்னேற்றப் பாதையில், புதியதோர் எதிர்காலம் நோக்கி நடத்திச் செல்லக் கூடியவர் என்றும் கூறினார்.
உடல்நலக் குறைவால் தற்போது இத்தாலியில் உள்ள ஆயர் மார்த்தினெல்லி, இவ்வியாழனன்று மீண்டும் Tripoliக்குத் திரும்புவதாகவும், அங்கு புதியத் தலைவர் Jalilஐச் சந்திக்கவிருப்பதாகவும் தெரிவித்தார்.


4. போர்க்கருவிகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் கண்காட்சியை எதிர்த்து இலண்டனில் அமைதிப் போராட்டம்

செப்.14,2011. இங்கிலாந்தில் Brentwood மறைமாவட்டத்தின் ஆயர் Thomas McMahon, மற்றும் Pax Christi அங்கத்தினர்கள் உட்பட, அமைதியையும், மனிதாபிமானத்தையும் விரும்பும் பல குழுக்களைச் சார்ந்த நூற்றுக்கணக்கானவர்கள் இச்செவ்வாயன்று இலண்டனில் ஓர் அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈராண்டுகளுக்கு ஒருமுறை உலகின் பல நாடுகளிலிருந்து தொழில்நுட்பம் நிறைந்த போர்க்கருவிகளை உற்பத்தி செய்யும் ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் கண்காட்சி ஒன்றை இலண்டன் மாநகரில் நடத்தி வருகின்றன.
இச்செவ்வாயன்று ஆரம்பமான இந்த மாபெரும் கண்காட்சியில் உலகின் 1300 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. DSEi 2011 என்று அழைக்கப்படும் இந்தக் கண்காட்சி வருகிற வெள்ளி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அழிவுக்கான ஆயுதங்களை பெருமையுடன் பறைசாற்றும் இந்தக் கண்காட்சியை எதிர்த்து, இச்செவ்வாயன்று அமைதியை விரும்பும் பல நிறுவனங்கள் இலண்டன் பாராளுமன்றத்திற்கு முன் அமைதிப் போராட்டம் ஒன்றில் ஈடுபட்டன.
நிலையற்ற அரசுகளைக் கொண்டுள்ள மத்தியக் கிழக்குப் பகுதிகள் போர்கருவிகள் செய்யும் பல நிறுவனங்களுக்கு மிக முக்கியமான பகுதியாக உள்ளது வேதைக்குரிய ஒரு விஷயம் என்பதை சுட்டிக்க்காட்டிப் பேசிய Pax Christi அமைப்பின் பொதுச் செயலர் Pat Gaffney, நிலையற்ற அப்பகுதியையும் இன்னும் உலகில் அமைதிக்காக எங்கும் பல நாடுகளையும் கட்டியெழுப்புவதற்குப் பதில், போர்கருவிகளை மேலும் மேலும் உற்பத்தி செய்வது கண்டனத்திற்குரிய ஒரு போக்கு என்று கூறினார்.
2001ம் ஆண்டு நியூயார்க் மற்றும் வாஷிங்டன் நகரங்கள் தாக்கப்பட்ட நாட்களிலும் இக்கண்காட்சி நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


5. ஒரிஸ்ஸாவைச் சூழ்ந்துள்ள வெள்ளம் குறித்து கட்டக்-புபனேஸ்வர் சமூகப்பணிக் குழுவின் இயக்குனர்

செப்.14,2011. ஒரிஸ்ஸாவைச் சூழ்ந்துள்ள வெள்ளம் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதென்றும், பொருளுதவி செய்யக்கூடிய அனைத்து நிறுவனங்களுக்கும் வேண்டுகோள்கள் அனுப்பியுள்ளோம் என்றும் கட்டக்-புபனேஸ்வர் உயர்மறைமாவட்டத்தின் சமூகப்பணிக் குழுவின் இயக்குனர் அருள்தந்தை குமார் நாயக் கூறினார்.
அம்மாநிலத்தின் 30 மாவட்டங்களில் 19 மாவட்டங்களுக்கும் மேல் வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன என்றும், மக்களின் மிக முக்கியத் தேவை நல்ல குடிநீர் என்றும் அருள்தந்தை நாயக் எடுத்துரைத்தார்.
மக்களுக்குத் தேவையான மருந்துகளை உடனடியாக அனுப்பி வைக்குமாறு ஒரிஸ்ஸாவின் கத்தோலிக்க இடர்துடைப்புச் சேவையின் ஒருங்கிணைப்பாளர் Amrut Prusty பல அரசு சாரா அமைப்புக்களுக்கு விண்ணப்பித்துள்ளதாகத் தெரிவித்தார்.                    
கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக பெய்த மழையால் ஒரிஸ்ஸாவின் பல நதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது என்றும், இந்த வெள்ளத்தில் 30க்கும் மேற்பட்ட மக்கள் இறந்துள்ளனர், மற்றும் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்துள்ளனர் என்றும் ஊடகங்கள் கூறுகின்றன.


6. பாகிஸ்தானில் சிறுபான்மையினர் சந்தித்து வரும் துன்பங்களைக் குறித்து ஆயர் பேரவையின் அறிக்கை

செப்.14,2011. பாகிஸ்தானில் சிறுபான்மையினர் சந்தித்து வரும் துன்பங்களைக் குறித்து அந்நாட்டு கத்தோலிக்க ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதிக் குழு இச்செவ்வாயன்று அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
மனித உரிமைகள் கண்காணிப்பு 2011என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த 146 பக்கங்களைக் கொண்ட அறிக்கையில், கிறிஸ்தவர்கள் மற்றும் பிற சிறுபான்மையினர்களுக்கு பாகிஸ்தானில் நேரும் பிரச்சனைகள் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன.
ஆள் கடத்தல், பாலியல் வன்முறை, சொத்துக்களை அபகரித்தல், கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் பாரபட்சம், கட்டாய மதமாற்றம் மற்றும் தேவநிந்தனைக் குற்றச் சாட்டுகள் என்று பல வழிகளிலும் கிறிஸ்தவர்களும் மற்ற சிறுபான்மையினரும் சந்தித்துவரும் கொடிய நிகழ்ச்சிகள் இந்த அறிக்கையில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன.
1986 முதல் அமலில் உள்ள தேவநிந்தனைச் சட்டத்திற்குக் கீழ் இதுவரை 1081 பேர் குற்றம் சுமத்தப்பட்டுள்ளனர் என்றும், இவர்களில் 138 பேர் கிறிஸ்தவர்கள் என்றும் இவ்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.


7. பாகிஸ்தானில் பெருகியுள்ள வெள்ள நிலை பெரும் ஆபத்தை உருவாக்கியுள்ளது - காரித்தாஸ் அமைப்பு

செப்.14,2011. (இதற்கிடையே) தெற்கு பாகிஸ்தானைச் சூழ்ந்துள்ள வெள்ள நிலை பெரும் ஆபத்தை உருவாக்கியுள்ளது என்று பாகிஸ்தான் காரித்தாஸ் அமைப்பு கூறியது.
பாகிஸ்தான் வெள்ளத்தால் இதுவரை 200க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர், மற்றும் 50 இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், செய்திகள் கூறுகின்றன.
கடந்த ஆண்டு அழிவுகளை ஏற்படுத்திய வெள்ளத்திலிருந்து முழுவதும் மீண்டு வரமுடியாமல் தத்தளிக்கும் எங்களுக்கு இந்த வெள்ளம் மற்றுமொரு பெரிய அவசர நிலையை உருவாக்கியுள்ளது என்று காரித்தாஸ் ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்ட Amjad Gulzar, FIDES செய்திக்கு அளித்த பேட்டியொன்றில் கூறினார்.
வெள்ளத்தால் அதிக பாதிப்புக்களுக்கு உள்ளாகி இருக்கும் சிந்து மாநிலத்தில் கிறிஸ்தவர்களும் இந்துக்களும் அதிகம் உள்ளனர் என்றும், அரசு வழங்கும் உதவிகள் மதச்சார்பற்ற முறையில் அனைவருக்கும் வழங்கப்படும் என்று தாங்கள் நம்புவதாகவும் பாகிஸ்தான் அமைதி மற்றும் நீதிக்குழுவின் இயக்குனரான பீட்டர் ஜேக்கப் கூறினார்.


8. வத்திகானின் பல சுற்றுப்பயணியர் தலங்கள் செப்டம்பர் மாத இறுதி ஞாயிறன்று இலவசமாகத் திறந்து விடப்படும்

செப்.14,2011. செப்டம்பர் மாத  இறுதி ஞாயிறன்று வத்திக்கான் அருங்காட்சியகமும், ஆதிகிறிஸ்தவர்கள் புதைக்கப்பட்ட கல்லறைகளும் மக்கள் பார்வைக்கு இலவசமாகத் திறந்துவிடப்படும் என்று இத்திங்களன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பாவில் உள்ள பல சுற்றுப்பயணியர் தலங்களைக் காண கட்டணங்கள் செலுத்த வேண்டும். ஒவ்வோர் ஆண்டும் ஐரோப்பிய பாரம்பரிய நாட்கள் என்று கொண்டாடப்படும் நாட்களில் இத்தலங்கள் மக்கள் பார்வைக்கு இலவசமாகத் திறந்து விடப்படும்.
ஐரோப்பிய பாரம்பரிய நாட்கள் என்ற இத்திட்டத்தில் பல ஆண்டுகளுக்குப் பின் வத்திக்கானும் இணைவதால், வத்திகானின் பல சுற்றுப்பயணியர் தலங்கள் செப்டம்பர் 25 ஞாயிறன்று இலவசமாகத் திறந்து விடப்படும் என்று திருப்பீடத்தின் புனித தொல்பொருள் அகழ்வாராய்ச்சி கழகமும், வத்திக்கான் அருங்காட்சியகக் கழகமும் அறிவித்துள்ளன.


9. 68 லட்சம் பேர் அரசு வேலைக்காக காத்திருக்கின்றனர்

செப்.14,2011. தமிழகத்தின் பல வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து, அரசு வேலைக்காகக் காத்திருப்போரின் எண்ணிக்கை 68 லட்சத்து 5 ஆயிரம் பேர் என்று வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளக்கக் குறிப்பில், வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தல், புதுப்பித்தல், பதிவு அடையாள அட்டை வழங்குதல், உள்ளிட்ட முக்கியப் பணிகள் அனைத்தும் கம்ப்யூட்டர் வாயிலாக மேற்கொள்ளப்படுகின்றன.
தமிழகத்திலுள்ள 37 வேலைவாய்ப்பு அலுவலகங்களும் கம்ப்யூட்டர் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. 2010ம் ஆண்டில் 11 லட்சத்து 54 ஆயிரத்து 121 பேர் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பெயர்களைப் பதிவு செய்துள்ளனர். நடப்பு ஆண்டு, மார்ச் நிலவரப்படி, வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 68,05,248.
நடப்பாண்டு பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளின் மூலமாகவே வேலைவாய்ப்பு பதிவினை ஆன்-லைன் வசதியைப் பயன்படுத்தி இணையதளத்தில் பதிந்து கொண்டனர்.
இத்தகைய முறையால் பிளஸ் 2 மாணவர்கள் 4,78,717 பேரும், 10ம் வகுப்பு மாணவர்கள் 7 லட்சத்து 2 ஆயிரத்து 962 பேரும் தங்களது பதிவினை ஆன்-லைன் மூலம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

No comments:

Post a Comment