Saturday, 10 September 2011

Catholic News - hottest and latest - 07 September 2011

1. உலகின் பொருளாதார நெருக்கடிகளில் திருநற்கருணை சொல்லித்தரும் பாடம்

2. லூர்து அன்னைத் திருத்தலத்தில் அந்தியோக்கு Maronite முதுபெரும் தலைவர்

3. கேரளாவில் அன்னை வேளாங்கண்ணி கோவில் தாக்கப்பட்டுள்ளது

4. Irom Chanu Sharmilaவின் உண்ணாநோன்புப் போராட்டத்தை ஆதரிக்க இந்தியக் கிறிஸ்தவத் தலைவர்கள் முடிவு

5. இங்கிலாந்து ஆயர்: கருக்கலைப்பு பற்றியத் தெளிவான சிந்தனைகள் இல்லையெனில் இப்பிரச்சனை உலகை இன்னும் அதிக ஆழமாகப் பாதிக்கும்

6. உலக வர்த்தகக் கோபுரங்களின் நினைவுச் சதுக்கத்தில் சிலுவை வைக்கப்பட்டிருப்பதை எதிர்த்து வழக்கு

7. கிராமங்களில் புகைபிடிக்கும் பழக்கம் அதிகரிப்பு - மருத்துவப் பல்கலைக்கழக ஆய்வு

8. சுற்றுலாத் திட்டங்களுக்கு எதிராக கொழும்புவில் ஆர்ப்பாட்டம்

------------------------------------------------------------------------------------------------------

1. உலகின் பொருளாதார நெருக்கடிகளில் திருநற்கருணை சொல்லித்தரும் பாடம்

செப்.07,2011. உலகம் இன்னும் பொருளாதார நெருக்கடிகளில் சிக்குண்டிருக்கும் இவ்வேளையில், நாம் ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருந்தாலே இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண முடியும் என்பதை திருநற்கருணை நமக்குச் சொல்லித் தருகிறதென்று கர்தினால் Giovanni Battista கூறினார்.
இத்தாலியின் அன்கோனா நகரில் கடந்த ஞாயிறன்று ஆரம்பமான திருநற்கருணை மாநாட்டிற்கு திருத்தந்தையின் சார்பில் சென்றுள்ள கர்தினால் Giovanni Battista இத்திங்கள் திருப்பலியில் ஆற்றிய மறையுரையில் இயேசு அற்புதமாக அப்பத்தைப் பலுகச்செய்த புதுமையைக் குறித்து பேசுகையில் இவ்வாறு கூறினார்.
இயேசு பல்லாயிரம் மக்களுக்கு உணவு கொடுத்த இந்தப் புதுமை ஒரு சிறுவன்  அளித்த ரொட்டித் துண்டு, மற்றும் மீன் ஆகியவற்றிலிருந்து ஆரம்பமானது என்று சுட்டிக் காட்டிய கர்தினால் Giovanni Battista,  நமது பங்களிப்பு இல்லையெனில், உலகின் வறுமையும், பசிக் கொடுமையும் தீராது என்று கூறினார்.
இயேசுவைச் சுற்றிக் கூடியிருந்த மக்கள் பசியுடன் இருந்தனர் என்பதை நற்செய்தி கூறும்போது, இன்றைய உலகில் உண்மை, நீதி, சுதந்திரம், அன்பு ஆகிய வாழ்வின் அடிப்படைத் தேவைகளுக்குப் பசியோடு காத்திருக்கும் இவ்வுலக மக்களை நமக்கு நினைவுறுத்துகிறது என்று கர்தினால் தன் மறையுரையில் எடுத்துரைத்தார்.


2. லூர்து அன்னைத் திருத்தலத்தில் அந்தியோக்கு Maronite முதுபெரும் தலைவர்

செப்.07,2011. இவ்வியாழன் கொண்டாடப்படும் மரியன்னையின் பிறந்தநாள் திருவிழாவையொட்டி, அந்தியோக்கு மற்றும் கீழைப் பகுதி Maronite முதுபெரும் தலைவர் Bechara Boutros Rai லூர்து அன்னைத் திருத்தலத்திற்குச் செல்கிறார்.
வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய இரு நாட்கள் முதுபெரும் தலைவர் Bechara Boutros Rai லூர்து நகரில் உள்ள அரசியல் தலைவர்கள் மற்றும் அரசு அதிகாரிகளைச் சந்தித்து, மதங்களுக்கிடையே மேற்கொள்ளப்படும் உரையாடல்களைப் பற்றிப் பேசுகிறார்.
லூர்து அன்னையின் திருத்தலம் கீழை ரீதி கிறிஸ்தவர்களைக் கடந்த பல ஆண்டுகளாக ஈர்த்து வருகிறதென்று ZENIT கத்தோலிக்கச் செய்தி நிறுவனம் கூறுகிறது.
2006ம் ஆண்டு ஆர்மீனிய கத்தோலிக்க முதுபெரும் தலைவர் இத்திருத்தலத்திற்குச் சென்றார். இவ்வருடத்தின் முதல் நாள் பாக்தாத் நகரில் பேராலயம் தாக்கப்பட்டதில் காயமடைந்தவர்கள் இவ்வாண்டு பிப்ரவரி மாதம் இத்திருத்தலத்திற்கு திருப்பயணமாய்ச் சென்றனர் என்று இச்செய்திக் குறிப்பு மேலும் கூறுகிறது.


3. கேரளாவில் அன்னை வேளாங்கண்ணி கோவில் தாக்கப்பட்டுள்ளது

செப்.07,2011. கேரளாவின் கொல்லம் மறைமாவட்டத்தைச் சேர்ந்த அன்னை வேளாங்கண்ணி கோவில் அடையாளம் தெரியாத 20 பேர் கொண்ட ஒரு குழுவால் இஞ்ஞாயிறன்று தாக்கப்பட்டது.
இத்தாக்குதலைத் தொடர்ந்து, இக்கோவில் அமைந்துள்ள கொட்டன்குலங்கராவுக்கு இத்திங்களன்று சென்ற கொல்லம் ஆயர் Stanley Roman கிறிஸ்தவர்கள் இப்பிரச்சனையை அமைதியான முறையில் அணுக வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
அன்னை வேளாங்கண்ணியின் பெயரால் 25 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட இந்தச் சிற்றாலயத்திற்கு எவ்வித மத பாகுபாடின்றி வருகை தரும் மக்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருவதால், இக்கோவிலை விரிவுபடுத்தும் திட்டங்கள் உள்ளன என்றும், இக்கோவிலின் புகழை விரும்பாத இந்து அடிப்படைவாதக் குழுவினரால் இத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்றும் ஆயர் Roman கூறினார்.
இத்தாக்குதல்கள் குறித்து காவல் துறையிடம் அறிவிக்கப்பட்டுள்ளதென்று கூறிய ஆயர், காவல் துறையும், சட்டமும் இந்த வன்முறைக்குத் தகுந்த நடவடிக்கை மேற்கொள்வார்கள் என்று தான் நம்புவதாக மேலும் கூறினார்.
Pune, Secunderabad ஆகிய இரு இடங்களில் நடைபெற்ற தாக்குதல்களைத் தொடர்ந்து தற்போது கொல்லத்திலும் கத்தோலிக்கக் கோவில் தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பது மிகவும் கண்டனத்திற்கு உரிய ஓர் ஈனச்செயல் என்று அகில உலக இந்தியக் கிறிஸ்தவர்கள் அவையின் தலைவர் சஜன் K. ஜார்ஜ் கூறினார்.


4. Irom Chanu Sharmilaவின் உண்ணாநோன்புப் போராட்டத்தை ஆதரிக்க இந்தியக் கிறிஸ்தவத் தலைவர்கள் முடிவு

செப்.07,2011. கடந்த 11 ஆண்டுகளாக உண்ணாநோன்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள Irom Chanu Sharmilaவுடன் இணைந்து, அவரது கோரிக்கைகளை வலியுறுத்த இந்தியக் கிறிஸ்தவத் தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இராணுவத்தினர் பல ஆண்டுகளாக மேற்கொண்டுள்ள அளவுகடந்த அடக்கு முறைகள் நிறுத்தப்படவேண்டுமென்று 37 வயதான Sharmila கடந்த 11 ஆண்டுகளாக உண்ணா நோன்பு போராட்டம் மேற்கொண்டுள்ளார்.
அண்மையில் புதுடில்லியில் உண்ணா நோன்புப் போராட்டத்தை மேற்கொண்ட அன்னா ஹசாரே, மற்றும் ஷர்மிளா ஆகியோரின் நேர்மையான, வன்முறையற்ற முயற்சிகள் நாட்டின் மனசாட்சியைத் தட்டியெழுப்பியுள்ளதென்று குவஹாத்தி பேராயர் தாமஸ் மேனம்பரம்பில் கூறினார்.
ஷர்மிளா மேற்கொண்டுள்ள இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில், அக்டோபர் 2 முதல் டிசம்பர் 10 முடிய நாட்டின் பல்வேறு தலைநகரங்களில் மக்களின் கையெழுத்துக்கள் பெறப்படும். அகில உலக மனித உரிமைகள் நாளான டிசம்பர் 10ம் தேதி இந்தக் கையெழுத்துக்கள் இந்திய அரசுத் தலைவர் பிரதிபா பாட்டிலிடம் வழங்கப்படும். இதனைத் தொடர்ந்து, அன்று ஒரு சமாதான பேரணியும், உண்ணா நோன்பும் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


5. இங்கிலாந்து ஆயர்: கருக்கலைப்பு பற்றியத் தெளிவான சிந்தனைகள் இல்லையெனில் இப்பிரச்சனை உலகை இன்னும் அதிக ஆழமாகப் பாதிக்கும்

செப்.07,2011. கருக்கலைப்பு பற்றியத் தெளிவான சிந்தனைகள் இல்லையெனில் இப்பிரச்சனை உலகை இன்னும் அதிக ஆழமாகப் பாதிக்கும் என்று இங்கிலாந்து ஆயர் ஒருவர் கூறினார்.
கருக்கலைப்பு குறித்த சட்டங்களில் மாற்றங்கள் செய்யும் முயற்சியில் பிரித்தானியப் பாரளுமன்றம் இப்புதனன்று ஈடுபட்டிருக்கும் வேளையில், இது குறித்து பேசிய பேராயர் பீட்டர் ஸ்மித் இவ்வாறு கூறினார்.
கருகலைப்பு செய்துகொள்ள வரும் பெண்களுக்கு அதைச் செய்யும் மருத்துவர்களே ஆலோசனை வழங்கும் முறையே  பிரிட்டனில் தற்போது நடைமுறைச் சட்டமாய் உள்ளது. இதை மாற்றி, ஆலோசனைகள் வழங்குவோர் தனிப்பட்டதொரு குழுவினராய் இருந்து செயல்பட வேண்டும் என்ற மாற்றத்தைக் கொணரும் முயற்சிகள் தற்போது பிரித்தானிய பாராளுமன்றத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஆலோசனைகள் வழங்குவது என்பதே ஒரு சுதந்திரமான சூழலில் நடைபெறவேண்டும். எனவே, கருக்கலைப்பில் ஈடுபாடாதவர்கள் இந்த ஆலோசனைகளை வழங்குவதே சரியான முறை என்று ஆயர் ஸ்மித் வலியுறுத்திக் கூறினார்.


6. உலக வர்த்தகக் கோபுரங்களின் நினைவுச் சதுக்கத்தில் சிலுவை வைக்கப்பட்டிருப்பதை எதிர்த்து வழக்கு

செப்.07,2011. நியூயார்க் பெருநகரில் உலக வர்த்தகக் கோபுரங்கள் விமானத் தாக்குதல்களுக்கு உள்ளானதன் பத்தாம் ஆண்டு நிறைவு நெருங்கி வரும் வேளையில், அக்கோபுரங்கள் இருந்த பகுதியில் உருவாக்கப்பட்டுள்ள ஒரு கண்காட்சியில், சிலுவை ஒன்று வைக்கப்பட்டிருப்பதற்கு கடவுள் நம்பிக்கையற்ற அமெரிக்கர்களின் சார்பில் வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது.
உலக வர்த்தகக் கோபுரங்கள் இருந்த Ground Zero அதாவது, பூஜ்ய நிலம் என்று பரவலாக அழைக்கப்படும் இவ்விடத்தில் வருகிற ஞாயிறு, செப்டம்பர் 11ம் தேதி நினைவுச் சதுக்கம் ஒன்றும் கண்காட்சியும் மக்கள் பார்வைக்குத் திறந்து வைக்கப்படும்.
கோபுரங்களின் இடிபாடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட இரு இரும்பு சட்டங்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள 17 அடி உயரமுள்ள சிலுவை இச்சதுக்கத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இச்சதுக்கம் அனைத்து மதத்தினருக்கும் பொதுவான ஓரிடம் என்றும், இதில் சிலுவையை வைப்பது இதை ஒரு கிறிஸ்தவ இடமாக மாற்றும் முயற்சி என்றும் கடவுள் நம்பிக்கையற்ற அமெரிக்கர்களின் சார்பில் கூறப்பட்டுள்ளது.
இச்சம்பவம் நடைபெற்றபோது, நியூயார்க் மக்களுக்குத் தேவையான நம்பிக்கையையும், சுதந்திரத்தையும் சுட்டிக்காட்டிய ஓர் அடையாளமாய் சிலுவை இருந்ததால்,  இச்சிலுவை இச்சதுக்கத்தில் வைக்கப்பட்டுள்ளது பொருத்தமே என்று பாராளுமன்ற பிரதிநிதி Michael Grimm கூறினார்.
இந்தக் கண்காட்சியில் யூதர்களின் மத அடையாளமான விண்மீன் ஒன்றும், கோபுரங்களின் இடிபாடுகளில், உருகிப்போன இரும்புடன் இணைந்து கிடந்த விவிலியம் ஒன்றும் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன என்று Michael Grimm மேலும் கூறினார்.


7. கிராமங்களில் புகைபிடிக்கும் பழக்கம் அதிகரிப்பு - மருத்துவப் பல்கலைக்கழக ஆய்வு

செப்.07,2011. நகரப் பகுதிகளைக் காட்டிலும் கிராமப் பகுதிகளில்தான், அதிகமானோர் புகைபிடிக்கும் பழக்கத்திற்கு ஆளாகியுள்ளனர் என்று சென்னை, இராமச்சந்திரா மருத்துவப் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஓர் ஆய்வின் முடிவுகள் கூறுகின்றன.
இதய நோய் மற்றும் இரத்தநாள நோய் அதிகரித்து வருவது தொடர்பாக போரூர் இராமச்சந்திரா மருத்துவப் பல்கலைக் கழக இதயவியல் நிபுணர் பேராசிரியர் தணிகாசலம் தலைமையிலான நிபுணர் குழுவினர், கிராம, நகர, நகரை ஒட்டிய பகுதி மக்களின் நலம் குறித்தும், இரத்தநாள நோய் பாதிப்பு குறித்தும் ஆய்வு நடத்தினர். உலக சுகாதார நிறுவனத்தின் விதிமுறைப்படி நடத்தப்பட்ட இந்த ஆய்வு கடந்த 2008ம் ஆண்டு துவங்கப்பட்டு, தற்போது முடிக்கப்பட்டுள்ளது. ஆய்வு முடிவுகளை பேராசிரியர் தணிகாசலம் இச்செவ்வாயன்று வெளியிட்டார்.
ஆய்வின் மூலம் 10ல் இருவருக்கு சர்க்கரை நோய், இரத்த அழுத்த பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. மொத்த மக்கள் தொகையில் 70 விழுக்காட்டினர் அடுத்த சில ஆண்டுகளில் இரத்த கொதிப்பு நோயினாலும், 25 விழுக்காட்டினர் சர்க்கரை நோயினாலும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
தவறான உணவுப் பழக்கம், வேலைப்பளு, சுற்றுச்சூழல் மாசு, உடற்பயிற்சி செய்யாமை, புகைப்பிடித்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் இந்த அபாயத்திற்கு காரணிகளாக விளங்குகின்றன.
கிராமப் பகுதிகளில் 57.4 விழுக்காட்டினர் சத்தான உணவைச் சாப்பிடுவதில்லை. நகரப் பகுதிகளைக் காட்டிலும் கிராமப் பகுதிகளில் தான் அதிகமானோர் புகைபிடிக்கும் பழக்கத்திற்கு ஆளாகியுள்ளனர் ஆகிய பல்வேறு முடிவுகள் இந்த ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளன.


8. சுற்றுலாத் திட்டங்களுக்கு எதிராக கொழும்புவில் ஆர்ப்பாட்டம்

செப்.07,2011. இலங்கை அரசின் சுற்றுலா வளர்ச்சித் திட்டங்கள் காரணமாக தமது வாழ்வாதாரங்களை விட்டு வெளியேற நேர்வதாகக் கூறி அந்நாட்டின் மீனவக் குடும்பங்களும், விவசாயிகளும், தொழிற்சங்க பிரதிநிதிகளும் தலைநகர் கொழும்புவில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.
அரசுத்தலைவரின் பெயரில் 'மகிந்த சிந்தனை' என்றழைக்கப்படும்  இம்முன்னேற்றத் திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டமைப்பு பணிகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் விமர்சித்திருந்தனர்.
சுற்றுலா மேம்பாடு என்ற பெயரில் நிலங்களை அதன் உரிமையாளர்களிடம் இருந்து அரசு பறித்து வருவதாக அவர்கள் குற்றம்சாட்டினார்கள்.
இலங்கையின் மேற்குக் கரையை ஒட்டியுள்ள சிறு தீவுக்கூட்டம் ஒன்றை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அரசு குத்தகைக்கு விடுவதையும், அங்கு அந்நிறுவனங்கள் 17 சொகுசு விடுதிகளைக் கட்டவிருப்பதையும் தேசிய மீனவர் ஒற்றுமை இயக்கம் என்ற அமைப்பைச் சேர்ந்த ஹெர்மன் குமார சுட்டிக்காட்டினார்.
தாங்கள் காலம் காலமாக பயன்படுத்தி வந்த நிலங்களை மீனவர்களும் விவசாயிகளும் பயன்படுத்த முடியாத நிலை உருவாகியிருப்பதாக அவர் தெரிவித்தார்.
ஆனால் தனது சுற்றுலா வளர்ச்சிக் கொள்கை சரிதான் என அரசு வாதிடுகிறது. உள்நாட்டுப் போருக்கு பின் நாடு வகுத்துவரும் முன்னேற்றத் திட்டங்களில் சுற்றுலாத் துறை மிகவும் முக்கியமான இடம் வகிப்பதாக இலங்கை அரசு கூறுகிறது.
இலங்கைக்கு வருகின்ற சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை 2016ம் ஆண்டுக்குள் ஐந்து மடங்காக அதாவது இருபத்து ஐந்து லட்சமாக உயர்த்த அரசாங்கம் விரும்புகிறது.
 

No comments:

Post a Comment