Friday, 2 September 2011

Catholic News - hottest and latest - 01 September 2011

1. இந்தியாவின் ஐந்து பேராயர்களைத் கோடைவிடுமறை இல்லத்தில் திருத்தந்தை சந்தித்தார்

2. இரமதான் மாதம் முடிவடைந்துள்ள நிலையில் லிபிய மக்கள் சமாதானத்தையும் ஒப்புரவையும் நோக்கிச் செல்வது மனதுக்கு நிறைவளிக்கிறது - ஆயர் மார்த்திநெல்லி

3. கந்தமால் பகுதியில் மீள் குடியமர்த்தும் முயற்சிகள் குறித்த அறிக்கை கேட்டு இந்தியாவின் உச்ச நீதிமன்றம் ஆணை

4. கோவாவிலிருந்து பாகிஸ்தான் சென்று குடியேறிய கத்தோலிக்கர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படும்

5. பிலிப்பின்ஸ் நாட்டில் 1,000,000 செபமாலைகள் செபிக்கும் திட்டம்

6. கிறிஸ்தவர்கள் பிறரன்புப் பணிகளில் ஈடுபடுவதற்கு இன்னும் அதிகச் சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் - மலேசிய கிறிஸ்தவ அமைப்பு

7. குழந்தைகளின் இறப்பு வீதம் குறித்த ஆய்வு

8. தஞ்சம்கோருவோர்: ஆஸ்திரேலிய அரசுக்கு நீதிமன்றம் தடை

------------------------------------------------------------------------------------------------------

1. இந்தியாவின் ஐந்து பேராயர்களைத் கோடைவிடுமறை இல்லத்தில் திருத்தந்தை சந்தித்தார்

செப்.01,2011. ஐந்தாண்டிற்கு ஒருமுறை இடம்பெறும் 'அட் லிமினா' சந்திப்பையொட்டி இந்தியாவிலிருந்து உரோம் நகர் வந்துள்ள ஐந்து பேராயர்களை இவ்வியாழனன்று காலை திருத்தந்தையரின் கோடைவிடுமறை இல்லமான காஸ்தல் கந்தோல்போவில் சந்தித்து உரையாடினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இவ்வாண்டு மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை இந்திய ஆயர்களைச் சந்தித்து வந்த திருத்தந்தைஇருமாத இடைவெளிக்குப்பின், மீண்டும் 'அட் லிமினா' சந்திப்பைத் தொடரும் வண்ணமாக,  இவ்வியாழன் காலை ஐந்து பேராயர்களைத் தனித்தனியாகச் சந்தித்து, அவர்களுடன் அந்தந்த மறைமாவட்டங்கள் குறித்து உரையாடினார்.
மும்பைப் பேராயர் கர்தினால் ஆஸ்வல்ட் கிரேசியஸ், நாக்பூர் பேராயர் ஆபிரகாம் விருத்தகுலங்கரா, கோவா-தாமன் பேராயர் Filipe Neri António Sebastião do Rosário Ferrão,
கோவா-தாமன் முன்னாள் பேராயர் Raul Nicolau Gonsalves, காந்திநகர் பேராயர் இஸ்தனிஸ்லாஸ் பெர்னான்டஸ், பெங்களூரு பேராயர் பெர்நார்ட் பிலேசியுஸ் மொராஸ் ஆகியோர் இவ்வியாழன் காலை திருத்தந்தையைச் சந்தித்தனர்.


2. இரமதான் மாதம் முடிவடைந்துள்ள நிலையில் லிபிய மக்கள் சமாதானத்தையும் ஒப்புரவையும் நோக்கிச் செல்வது மனதுக்கு நிறைவளிக்கிறது - ஆயர் மார்த்திநெல்லி

செப்.01,2011. லிபியாவின் தலைநகர் Tripoliக்கும் துனிசியாவுக்கும் இடையே உள்ள சாலைத் தொடர்பு மீண்டும்  புதுப்பிக்கப்பட்டுள்ளது என்ற செய்தி நம்பிக்கையைத் தருகிறது என்று Tripoliயின் அப்போஸ்தலிக்க நிர்வாகி ஆயர் ஜொவான்னி இன்னோசென்சோ மார்த்திநெல்லி கூறினார்.
மருத்துவச் சிகிச்சைக்கென இத்தாலி வந்துள்ள ஆயர் மார்த்திநெல்லி, லிபியாவில் தொடர்ந்து நிகழ்ந்து வரும் மாற்றங்கள் குறித்து தன் குருக்களுடன் தொடர்பு கொண்டு வருவதாக FIDES செய்திக்கு அளித்த பேட்டியொன்றில் கூறியுள்ளார்.
இரமதான் மாதம் முடிவடைந்துள்ள நிலையில் அனைத்து லிபிய மக்களும் சமாதானத்தையும் ஒப்புரவையும் நோக்கிச் செல்வது மனதுக்கு நிறைவளிக்கும் ஒரு செய்தி என்று கூறிய ஆயர் மார்த்திநெல்லி, விரைவில் தான் லிபியா சென்று அம்மக்களிடையே இருப்பதையே எதிர்நோக்கியிருப்பதாகக் கூறினார்.


3. கந்தமால் பகுதியில் மீள் குடியமர்த்தும் முயற்சிகள் குறித்த அறிக்கை கேட்டு இந்தியாவின் உச்ச நீதிமன்றம் ஆணை

செப்.01,2011. ஒரிஸ்ஸாவின் கந்தமால் பகுதியில் மூன்று ஆண்டுகளுக்கு முன் கிறிஸ்தவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளால் இன்னும் அகதிகளைப் போல வீடுகளை இழந்து வாழ்வோரை மீண்டும் குடியமர்த்தும் முயற்சிகளில் ஒரிஸ்ஸா அரசு இதுவரை என்ன செய்துள்ளது என்ற அறிக்கையை மனித உரிமைகளுக்கான மேல்மட்ட இந்தியக் குழு இன்னும் ஆறு மாதங்களில் சமர்ப்பிக்கவேண்டும் என்று இந்தியாவின் உச்ச நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.
ஒரிஸ்ஸா தலத்திருச்சபை மீண்டும் மீண்டும் அரசிடம் பல முறையீடுகளையும், விண்ணப்பங்களையும் அளித்து வருவதன் எதிரொலியாக இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று FIDES செய்தி கூறுகிறது.
மறுவாழ்வை அமைத்துத் தரும் கடமைகளில் அரசு வெகுவாகத் தவறிவிட்டதென்று தலத்திருச்சபையின் சார்பில் கட்டக் புபனேஸ்வர் பேராயர் ஜான் பார்வா தான் சமர்ப்பித்த அறிக்கையொன்றில் கூறியுள்ளார்.
மறுவாழ்வு சீரமைப்புப் பணிகளில் தவறியதற்காகவும், வன்முறைகளால் பாதிக்கப்பட்டோருக்கு ஈட்டுத் தொகை வழங்கத் தவறியதற்காகவும் ஒரிஸ்ஸா மாநில அரசை இந்திய உச்ச நீதி மன்றம் வன்மையாகக் கண்டித்துள்ளது.
இந்த வன்முறைகளால் பாதிக்கப்பட்ட கிறிஸ்தவர்கள் நம்பிக்கையிழந்து நிற்கும் இவ்வேளையில் அரசும், நீதித் துறையும் உறுதியாகச் செயல்படுவது அவர்களுக்கு ஓரளவு நம்பிக்கையை வளர்க்கும் என்று கட்டக் புபனேஸ்வர் மறைமாவட்டத்தின் சார்பில் வழக்குகளைக் கையாண்டு வரும் அருள்தந்தை Dibakar Parichcha கூறினார்.


4. கோவாவிலிருந்து பாகிஸ்தான் சென்று குடியேறிய கத்தோலிக்கர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படும்

செப்.01,2011. கோவாவிலிருந்து பாகிஸ்தான் சென்று குடியேறிய கத்தோலிக்கர்களுக்கு அளிக்கப்படும் இந்தியக் கடவுச்சீட்டுக்காலம் நீட்டிக்கப்படும் என்றும், ஒரு சிலருக்கு இந்தியக் குடியுரிமையும் வழங்கப்படும் என்றும் இந்திய அரசு அறிவித்துள்ளது.
1510ம் ஆண்டு முதல் 1961ம் ஆண்டு வரை கோவா போர்த்துகல் நாட்டின் ஒரு காலனியாக இருந்தது. அந்த ஆண்டுகளில் கோவாவிலிருந்து பாகிஸ்தானுக்கு வேலைகள் தேடிச்சென்ற கத்தோலிக்கர்கள் மீண்டும் இந்தியாவுக்கு வருவதற்கு விதிக்கப்பட்டிருந்த சட்டங்கள் தற்போது தளர்த்தப்பட்டுள்ளதென்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது வரை கோவாவில் புனித பிரான்சிஸ் சவேரியாரின் உடல் மக்கள் பார்வைக்கு வைக்கப்படும்போது மட்டும்     பாகிஸ்தானில் குடியேறியுள்ள கோவா கத்தோலிக்கர்கள் இந்திய பயணத்தை மேற்கொள்ள அனுமதி அளித்து வந்த இந்திய அரசு, தற்போது விதித்துள்ள புதிய ஆணைகளை பாகிஸ்தானில் வாழும் கோவா கத்தோலிக்கர்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர்.
பாகிஸ்தானில் குடியேறிய இந்துக்கள், மற்றும் சீக்கியர்கள் அந்நாட்டில் சிறுபான்மையினர் என்ற அடிப்படையில் அவர்களுக்கு இந்திய நாட்டுக் குடியுரிமையை இதுவரை வழங்கிவந்த இந்திய அரசு, தற்போது கிறிஸ்தவர்கள் மற்றும் புத்த மதத்தினரையும் பாகிஸ்தானின் சிறுபான்மையினர் என்று அங்கீகரித்துள்ளதால் இந்த மாற்றங்கள் உருவாகியுள்ளன என்று UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
இந்தச் சட்ட மாற்றம் ஆகஸ்ட் 11 அன்று இந்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டிருந்தபோதிலும், ஊடகங்களுக்கு இந்த சட்ட மாற்றம் இப்புதனன்று வெளியிடப்பட்டது.


5. பிலிப்பின்ஸ் நாட்டில் 1,000,000 செபமாலைகள் செபிக்கும் திட்டம்

செப்.01,2011. செபங்கள் இல்லாமல் உலக அமைதியைப் பெறுவது மிகக் கடினம் என்று பிலிப்பின்ஸ் நாட்டு பேராயர் Socrates Villegas கூறினார்.
பிலிப்பின்ஸ் நாட்டில் குடும்ப செபமாலை அணி என்ற கத்தோலிக்க அமைப்பு வருகிற அக்டோபர் மாதம் முதல் 200 நாட்கள் பத்து இலட்சம் செபமாலைகள் செபிக்கும் ஒரு திட்டத்தை அறிவித்துள்ளது.
அக்டோபர் மாதம் 7ம் தேதி, செபமாலை அன்னையின் திருநாளன்று ஆரம்பமாகும் இந்த முயற்சி அடுத்த 200 நாட்கள் தொடர்ந்து, 2012ம் ஆண்டு மே மாதம் 31ம் தேதி, அனைத்து நாடுகளின் தாயான கன்னி மரியின் திருநாளன்று முடிவடையும் என்று இத்திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் செபமாலை முயற்சிகளில் பத்து லட்சம் பிலிப்பின்ஸ் நாட்டினர் கலந்து கொண்டு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நாட்டிற்காக செபிக்கும்படி அழைப்பு விடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் ஓர் உச்சகட்டமாக 11.11.11, அதாவது 2011ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதி காலை 11 மணிக்கு பிலிப்பின்ஸில் உள்ள அனைத்து கத்தோலிக்கப் பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவற்றில் பயிலும் மாணவ, மாணவியர் இணைந்து 1,000,100 செபமாலைகள் செபிக்கும் ஒரு முயற்சி மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிலிப்பின்ஸ் ஆயர் பேரவையின் தலைவர் ஆயர் Nereo Odchimar இந்த முயற்சியைப் பெரிதும் பாராட்டி, செபங்கள் மூலம் இவ்வுலகிற்கு அமைதியை கொணர முடியும் என்று வலியுறுத்தினார்.


6. கிறிஸ்தவர்கள் பிறரன்புப் பணிகளில் ஈடுபடுவதற்கு இன்னும் அதிகச் சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் - மலேசிய கிறிஸ்தவ அமைப்பு

செப்.01,2011. மலேசியாவில் கிறிஸ்தவர்கள் பிறரன்புப் பணிகளில் ஈடுபடுவதற்கு இன்னும் அதிகச் சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் என்றும், அந்நாட்டின் தேர்தல் முறைகளில் இன்னும் நீதியான வழிகள் கடைபிக்கப்பட வேண்டும் என்றும் மலேசிய கிறிஸ்தவ அமைப்பு செய்தியொன்றை வெளியிட்டுள்ளது.
இப்புதன், ஆகஸ்ட் 31ம் தேதி மலேசிய சுதந்திர நாள் கொண்டாடப்பட்டதையொட்டி இவ்வறிக்கையை வெளியிட்ட இவ்வமைப்பினர், இந்த ஆண்டில் நடைபெறவுள்ள தேர்தல்கள் அனைவருக்கும் சம வாய்ப்புக்கள் வழங்கும் என்ற நம்பிக்கையில் இவ்வறிக்கையை வெளியிட்டுள்ளதாகக் கூறியது.
மலேசியாவில் கிறிஸ்தவர்கள் மேற்கொள்ளும் பிறரன்புப் பணிகள் ஏழைகளுக்கு மிகவும் பயனளிக்கிறது என்று கூறிய மலேசிய கிறிஸ்தவ அமைப்பின் தலைவரான ஆங்கலிக்கன் ஆயர் Ng Moon Hing, இப்பணிகளுக்கு அரசின் ஆதரவு இருந்தால் இன்னும் சிறப்பான முறையில் பணியாற்ற முடியும் என்று கூறினார்.
கிறிஸ்தவர்கள் ஆற்றும் பிறரன்புப் பணிகளை மதமாற்றும் பணிகள் என்று ஊடகங்கள் தவறாகக் கூறிவருவதைச் சுட்டிக்காட்டிய ஆங்கலிக்கன் ஆயர், மதம் குலம் ஆகிய பிரிவுகள் ஏதுமின்றி அனைத்து ஏழைகளும் இப்பணிகளால் பயனடைகின்றனர் என்று கூறினார்.


7. குழந்தைகளின் இறப்பு வீதம் குறித்த ஆய்வு

செப்.01,2011. உலக அளவில், பிறந்த 4 வாரத்தில் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்திருந்தாலும், குழந்தைகள் இறப்பு விகிதத்தில் அதன் பங்களிப்பு அதிகமாகவே இருப்பதாக ஆய்வு முடிவு தெரிவி்க்கிறது.
உலக நலவாழ்வு நிறுவனம், மற்றும் சேவ் த சில்ரன் (Save the Children) உள்ளிட்ட அமைப்புக்கள் இணைந்து, 193 நாடுகளில், கடந்த 20 ஆண்டுகளாக மேற்கொண்ட ஆய்வின் மூலம் இந்த முடிவு வெளியாகியுள்ளது.
பிறந்து 4 வாரத்தில் இறந்த குழந்தைகள் எண்ணிக்கை கடந்த 1990ல், 46 லட்சமாக இருந்தது. 2009ல் அது 33 லட்சமாகக் குறைந்துள்ளது. குறிப்பாக, 2000மாவது ஆண்டுக்குப் பிறகு, அந்த இறப்பு விகிதம் கணிசமாகக் குறைந்திருக்கிறது.
பிறந்த குழந்தைகள் இறப்பதில் 99 விழுக்காடு, வளரும் நாடுகளில்தான் ஏற்படுகிறது. இந்தியா, நைஜீரியா, பாகிஸ்தான், சீனா மற்றும் காங்கோ ஆகிய நாடுகளில்தான் அது அதிகமாக உள்ளது.
இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு 9 லட்சம் குழந்தைகள் இறப்பதாகவும், அது உலக விழுக்காட்டில் 28 சதமாக உள்ளதாகவும் ஆய்வு கூறுகிறது.
ஆப்ரிக்க நாடுகளைப் பொறுத்தவரை, இறப்பு விகிதம் குறைப்பு ஆண்டுக்கு ஒரு சதவீதம் என்ற அடிப்படையில், மிகவும் மந்தமான வளர்ச்சியையே காண்பதாக உள்ளது. ஆயிரம் குழந்தைகளுக்கு 39 குழந்தைகள் இறப்பதாகக் கண்டறியப்பட்டுள்ள 15 நாடுகளில், 12 நாடுகள் ஆப்ரிக்கக் கண்டத்தைச் சேர்ந்தவை.
பிரசவத்தின் போது ஏற்படும் கோளாறுகள், நிமோனியா உள்ளிட்ட தோற்றுநோய்கள் போன்ற காரணங்களால் இந்த இறப்புக்கள் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.
இந்த இறப்புக்களைத் தடுக்க, குறைந்த செலவிலான மருத்துவத் தீர்வுகள் இருந்தாலும், அதில் போதிய கவனம் செலுத்தப்படுவதில்லை என்று உலக நலவாழ்வு நிறுவனத்தின் உதவி இயக்குநர் ஃப்ளாவியா பஸ்டெரோ தெரிவித்துள்ளார்.


8. தஞ்சம்கோருவோர்: ஆஸ்திரேலிய அரசுக்கு நீதிமன்றம் தடை

செப்.01,2011. ஆஸ்திரேலியா மலேசியாவுடன் செய்துகொள்ளத் திட்டமிட்ட அகதிகள் பரிமாற்றத்துக்கு ஆஸ்திரேலிய உயர்நீமன்றம் தடை விதித்துள்ளது.
மலேசியாவுக்கு அனுப்பப்படுகின்ற அகதிகளின் மனித உரிமைகளுக்கு ஆஸ்திரேலியாவால் உத்தரவாதம் வழங்க முடியாது என்ற காரணத்தால் இத்திட்டத்துக்கு தடை விதிப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நீதிமன்றத்தின் இந்த முடிவு பெரும் ஏமாற்றம் தருவதாக இருக்கிறது என்றும், சட்டவிரோதக் குடியேற்றத்தை ஒடுக்க ஆஸ்திரேலியா எடுத்த முயற்சிகளுக்கு கிடைத்துள்ள பெரிய அடி இது என்றும் ஆஸ்திரேலிய அரசு கூறியுள்ளது.
ஆஸ்திரேலிய நீதிமன்றத்தின் இந்தத் தடை உத்தரவை ஆஸ்திரேலியத் தமிழர் பேரவை வரவேற்றுள்ளது.
ஆஸ்திரேலியாவில் இருந்து தஞ்சம் கோருவோர் எண்ணூறு பேர் மலேசியா அனுப்பபடுவார்கள் என்ற ஒப்பந்தம் தமக்கு கவலை அளிப்பதாகவே இருந்தது என்றும், அந்த நடவடிக்கைக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது சிறப்பான ஒரு தீர்ப்பு ஆகும் என்றும் ஆஸ்திரேலிய தமிழர் பேரவையில் அகதிகள் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் பால விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
சர்வதேச அகதிகள் அமைப்பான ஐ.ஓ.எம்.இனால் பரிசீலிக்கப்பட்டு அகதிகளாக அங்கீகரிக்கப்பட்டவர்கள் நான்காயிரம் பேருக்கு ஆஸ்திரேலியா தஞ்சம் வழங்குவதாக இந்த ஒப்பந்தத்தில் தெரிவித்திருப்பது வரவேற்கத் தகுந்த ஒரு நடவடிக்கை என்றும் அவர் குறிப்பிட்டார்.
 

No comments:

Post a Comment