செய்திகள் - 15.09.14
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை பிரான்சிஸ் : நமக்கு இரு அன்னையர்கள் உள்ளனர்
2. திருத்தந்தை பிரான்சிஸ் : நம்மை மனிதர்களாக உருவாக்குவதில் முதலிடத்தில் இருப்பது குடும்பங்களே
3. திருத்தந்தை : திருச்சிலுவையை விசுவசிப்பது என்பது இயேசுவைப் பின்பற்றுவதாகும்
4. திருத்தந்தையின் அல்பேனியத் திருப்பயணத்தின் பாதுகாப்பு குறித்து எவ்வித அச்சமும் இல்லை, திருப்பீடச் செய்தித் தொடர்பாளர்
5. ஆயர் பொன்னையா : ஈராக்கில் வாழும் கிறிஸ்தவர்களுக்காக நாம் அனைவரும் செபிக்கவேண்டும்
6. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அனைத்து மதத்தினரும் ஒன்றிணைந்து வரவேண்டும், CAFOD அழைப்பு
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை பிரான்சிஸ் : நமக்கு இரு அன்னையர்கள் உள்ளனர்
செப்.15,2014. நாம் ஒருபோதும் அநாதைகள் அல்ல, ஏனெனில் நமக்கு இரு அன்னையர்கள் உள்ளனர், ஒருவர் அன்னைமரி, மற்றொருவர் நம் தாயாம் திருஅவை என்று இத்திங்கள் காலை திருப்பலி மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இத்திங்களன்று
திருஅவையில் சிறப்பிக்கப்பட்ட வியாகுல அன்னை திருவிழாவையொட்டி தான்
தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி
நிறைவேற்றி மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவையும், பணிவு, துன்புறுதல் மற்றும் கற்றுக்கொள்ளல் பாதையிலேயே நடைபோட்டு, தாயாய் நின்று நம்மை வழிநடத்துகிறது என்று கூறினார்.
இவ்விரு அன்னையரும் கிறிஸ்துவை நமக்குத் தருகிறார்கள், அன்னையாம் திருஅவை இன்றி நம்மால் முன்னோக்கி நடைபோட முடியாது எனவும் தனது மறையுரையில் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்னைமரியும், திருஅவையும் கிறிஸ்துவாம் நம்பிக்கையைச் சுமந்து செல்கிறார்கள் என்றும் கூறினார்.
திருத்தந்தையின் இந்நாளைய மறையுரை, பணிவு, துன்புறுதல், அதிலிருந்து கற்றுக்கொள்ளுதல் என்பவைகளை மையம் கொண்டதாக அமைந்திருந்தது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. திருத்தந்தை பிரான்சிஸ் : நம்மை மனிதர்களாக உருவாக்குவதில் முதலிடத்தில் இருப்பது குடும்பங்களே
செப்.15,2014. நம்மை மனிதர்களாக உருவாக்கும் முதலிடமான குடும்பங்களே, சமுதாயத்தை உருவாக்கும் செங்கற்கள் என, இஞ்ஞாயிறு திருப்பலி மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உரோம்
நகரின் ஆயர் என்ற முறையில் அம்மறைமாவட்டத்தின் இருபது தம்பதியருக்குத்
திருமணம் எனும் அருளடையாளத்தை நிறைவேற்றி மறையுரையாற்றிய திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்கள், இன்றைய நவீன உலகெனும் பாலைவனத்தைக் கடந்துசெல்லும் திருஅவையில் பெரும்பங்கு வகிப்பன குடும்பங்களே என்று கூறினார்.
குடும்பத்தின்வழி நாம் ஒவ்வொருவரும் பல்வேறு உதவிகளைப் பெறுகிறோம், கல்வி, உறவு மேம்பாடு, மகிழ்வின் மற்றும் துன்பங்களின் பகிர்வு போன்றவைகளைப் பெறுகின்றோம் என்றுரைத்த திருத்தந்தை, பலவேளைகளில் நாம் திருமண வாழ்வில் துன்பங்களையும், சோதனைகளையும் எதிர்கொள்கிறோம், ஆனால் இறைவன் நம் அருகேயிருந்து நம்மை வழிநடத்துவதை உணர வேண்டும் என்றும் கூறினார்.
நம் சோதனைகள் நஞ்சுள்ளவைகளாக இருந்தாலும், இறைவன் வழங்கும் மருந்தோ அதைவிட சக்தி வாய்ந்தது, அம்மருந்து நமக்குத் தண்டனை தீர்ப்பளிப்பதில்லை, மாறாக, மன்னித்து ஏற்கிறது என்றார் திருத்தந்தை.
பிணக்குகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை, ஆனால், நாள்
முடிவடைவதற்குள் அந்தப் பிணக்குகளைச் சரிசெய்து சமாதானமாகப் பழகுங்கள்
எனவும் தம்பதியரிடம் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. திருத்தந்தை : திருச்சிலுவையை விசுவசிப்பது என்பது இயேசுவைப் பின்பற்றுவதாகும்
செப்.15,2014. மனிதகுலத்திற்கான இறையன்பை சிறப்பானவிதத்தில் வெளிப்படுத்திய திருச்சிலுவையையே நாம் உயர்த்திப் பிடிக்கிறோம், அச்சிலுவையை விசுவசிப்பது என்பது, இயேசுவைப் பின்பற்றுவதாகும் என இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நம் மீட்பின் ஆதாரமாக இருக்கும் திருச்சிலுவை, நமக்கான இறையன்பின் அடையாளமாகவும் உள்ளது என உரைத்த திருத்தந்தை, தீமையையும் மரணத்தையும் வெற்றிகண்டு, நமக்கு வாழ்வையும் நம்பிக்கையையும் திருச்சிலுவைக் கொணர்ந்துள்ளது என்றார்.
சிலுவை என்பது ஒரு மாயாஜாலமல்ல, மாறாக அது கடவுளுக்கும் அயலாருக்குமான அன்பிற்காக இயேசுவின் தியாகத்திலும், பாடுகளிலும், மரணத்திலும் பங்கேற்று, அவரின் மீட்பில் ஒத்துழைப்பதாகும் எனவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மத்திய
ஆப்ரிக்கக் குடியரசில் இடம்பெறும் மோதல்களால் துன்புறும் மக்களுக்கு
பிறரன்புப் பணிகளை ஆற்றச் செல்லும் ஐ.நா. அமைதிகாப்புப் படைக்கு தன் ஊக்க
வார்த்தைகளையும் வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், சனிக்கிழமையன்று
இத்தாலியிலுள்ள ஆஸ்திரிய-ஹங்கேரியக் கல்லறையை தரிசிக்கச் சென்றது
குறித்தும் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முதலாம் உலகப்போரில் பலியானவர்களை அடக்கம் செய்துள்ள இத்தகைய கல்லறைகள், போரின் மடத்தனம் குறித்து நமக்குக் கற்பிக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
4. திருத்தந்தையின் அல்பேனியத் திருப்பயணத்தின் பாதுகாப்பு குறித்து எவ்வித அச்சமும் இல்லை, திருப்பீடச் செய்தித் தொடர்பாளர்
செப்.15,2014. செப்டம்பர் 21, வருகிற
ஞாயிறன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொள்ளும் அல்பேனிய
நாட்டுக்கானத் திருப்பயணம் குறித்து இத்திங்களன்று பத்திரிகையாளர்களிடம்
விளக்கினார் திருப்பீடச் செய்தித் தொடர்பாளர் இயேசு சபை அருள்பணி பெதரிக்கோ
லொம்பார்தி.
இத்திருப்பயணம் குறித்து பத்திரிகையாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு விளக்கம் அளித்த அருள்பணி லொம்பார்தி அவர்கள், முஸ்லிம்கள்
பெரும்பான்மையாக வாழும் அல்பேனியாவில் திருத்தந்தையின் பாதுகாப்புக்கு
சிறப்புப் பாதுகாப்பு நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லையெனத்
தெரிவித்தார்.
மத்திய
கிழக்குப் பகுதியில் ஐஎஸ்ஐஎஸ் இஸ்லாமிய தீவிரவாதிகளின் கடும் நடவடிக்கைகள்
குறித்து செய்திகள் வெளியாகும் இவ்வேளையில் இவ்வாறு தெரிவித்தார் அருள்பணி
லொம்பார்தி, வத்திக்கான்
தூய பேதுரு வளாகத்தில் பெருமளவான மக்களை வாழ்த்துவதற்கு திருத்தந்தை
பயன்படுத்தும் திறந்த வாகனமே அல்பேனியாவிலும் பயன்படுத்தப்படும் என்றும்
கூறினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அல்பேனியாவுக்கு ஒருநாள் திருப்பயணத்தை மேற்கொள்கிறார் என்றும், திருத்தந்தை நீண்ட திருப்பயணங்களை விரும்பவில்லை என்பது இதிலிருந்து தெரிகின்றது என்றும் திருப்பீடச் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
வருகிற
ஞாயிறு காலை 7.30 மணிக்கு உரோமிலிருந்து அல்பேனியாவுக்குப் புறப்படுகிறார்
திருத்தந்தை. அந்நாட்டில் 14 மணி நேரங்கள் திருப்பயணத் திட்டங்களை
நிறைவேற்றுவார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
5. ஆயர் பொன்னையா : ஈராக்கில் வாழும் கிறிஸ்தவர்களுக்காக நாம் அனைவரும் செபிக்கவேண்டும்
செப்.15,2014. உலகெங்கும் ஒவ்வொரு நாளும் துன்புறுத்தப்பட்டுவரும் கிறிஸ்தவர்களுக்காக, குறிப்பாக
ஈராக் நாட்டிலே ஐ.எஸ்.ஐ.எஸ் என்ற தீவிரவாதிகளினால்
துன்புறுத்தப்பட்டுவரும் மக்களுக்காகச் செபிக்க அழைப்புவிடுத்தார்
மட்டக்களப்பு ஆயர் ஜோசப் பொன்னையா.
இயேசுவை
அறைந்த திருச்சிலுவையின் ஒரு சிறிய பகுதி போற்றிப்
பாதுகாக்கப்பட்டுவரும் சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தில்
திருச்சிலுவையின் திருவிழாவினை முன்னிட்டு ஞாயிறு திருப்பலி நிறைவேற்றி
மறையுரை வழங்கிய ஆயர் பொன்னையா, ஈராக்
நாட்டில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளினால் கிறிஸ்தவர்கள் மதம் மாற
வற்புறுத்தப்படுகின்றனர் மற்றும் அச்சுறுத்துகின்றனர் என்ற கவலையை
வெளியிட்டார்.
ஈராக்
மற்றும் சிரியாவில் துன்புறும் கிறிஸ்தவர்களுக்காக செபிக்கவேண்டும் என
தொடர்ந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விண்ணப்பித்து வருவதையும்
நினைவுறுத்தினார் ஆயர் பொன்னையா.
ஆதாரம் : தமிழ்வின்
6. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அனைத்து மதத்தினரும் ஒன்றிணைந்து வரவேண்டும், CAFOD அழைப்பு
செப்.15,2014.
இன்றைய காலநிலை மாற்றங்களால் அதிக அளவில் பாதிக்கப்படுவது அப்பாவி பொது
மக்களே என்பதை மனதில்கொண்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அனைத்து
மதத்தினரும் ஒன்றிணைந்து வரவேண்டும் என அழைப்புவிடுத்துள்ளது CAFOD என்ற கத்தோலிக்க பிறரன்பு அமைப்பு.
இன்றைய உலகில் இடம்பெறும் வறட்சியும், பெருமழையும்,
சுற்றுச்சூழலையும் கடந்த காலத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து
நாம் பெற்றுள்ள முன்னேற்றங்களையும் பெருமளவில் பாதிப்பவைகளாக உள்ளன எனவும்
எடுத்துரைத்த CAFOD பிறரன்பு அமைப்பு, ஆபத்தான
வாயுக்களை வெளியிடும் தொழில்முறையை கைவிட்டுவிட்டு இயற்கைக்கு ஆபத்து
விளைவிக்காத தொழில்நுட்பங்கள் கையாளப்பட வேண்டும் எனவும்
விண்ணப்பித்துள்ளது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளும், ஏழ்மை
ஒழிப்புத் திட்டங்களும் ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்துள்ளன என்பதையும்
அனைத்து மதத்தினரும் நினைவில்கொண்டு அதற்கியைந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள
வேண்டும் எனவும் அழைப்புவிடுத்துள்ளது CAFOD என்ற கத்தோலிக்க பிறரன்பு அமைப்பு.
No comments:
Post a Comment