Wednesday, 24 September 2014

செய்திகள் - 22.09.14

செய்திகள் - 22.09.14
------------------------------------------------------------------------------------------------------

1. மேரி மேஜர் பசிலிக்காவில் திருத்தந்தையின் நன்றி செபம் 

2. செப்.28, முதியோருடன் திருத்தந்தை திருப்பலி

3. புதிய நம்பிக்கைகளை விதைத்துள்ளது அல்பேனியத் திருப்பயணம்

4. நைஜீரியாவில் இஸ்லாமியத் தீவிரவாதிகளால் மனிதாபிமான நெருக்கடி

5. சீனாவில் இரு கத்தோலிக்கக் கோவில்கள் தகர்ப்பு

6. சுற்றுச்சூழலுக்கு ஆதரவாக உலகம் முழுவதும் பேரணிகள்

7. 2100ம் ஆண்டில் உலக மக்கள்தொகை 1100 கோடி

------------------------------------------------------------------------------------------------------

1. மேரி மேஜர் பசிலிக்காவில் திருத்தந்தையின் நன்றி செபம் 

செப்.22,2014.  செப்டம்பர் 21, ஞாயிறன்று தான் மேற்கொண்ட அல்பேனியத் திருப்பயணம் வெற்றிகரமாக நடைபெற்றதற்காக இத்திங்கள் காலையில் உரோம் மேரி மேஜர் பசிலிக்கா சென்று செபித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
புனித மேரி மேஜர் பசிலிக்காவில், உரோம் மக்களின் பாதுகாவலரான அன்னைமரியிடம் ஏறத்தாழ 10 நிமிடங்கள் அமைதியாகச் செபித்து, இறுதியில் அங்கு குழுமியிருந்த விசுவாசிகளோடு இணைந்து வாழ்க மரியே என்ற செபத்தையும் செபித்தார்.
அல்பேனியாவின் திரானா பெத்தானியா மாற்றுத்திறனாளிகளுக்கானச் சிறார் இல்லத்தில் தனக்கு வழங்கப்பட்ட மலர்க்கொத்தையும் அன்னை மரி திருவுருவத்தின் பாதங்களில் அர்ப்பணித்தார் திருத்தந்தை.
திருப்பயணங்களை மேற்கொள்வதற்கு முன்னரும், திருப்பயணங்களை முடித்துத் திரும்பும்போதும் புனித மேரி மேஜர் பசிலிக்காவில் செபிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. செப்.28, முதியோருடன் திருத்தந்தை திருப்பலி

செப்.22,2014.  இத்தாலி, இஸ்பெயின், அர்ஜெண்டீனா, அமெரிக்க ஐக்கிய நாடு உட்பட உலகின் 20க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து வரும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முதியோர்களுடன் வரும் ஞாயிறன்று வத்திக்கானில் திருப்பலி நிகழ்த்த உள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருப்பலி துவங்குவதற்கு முன்னர் காலை 8.30 மணி முதல் 9.30 மணி வரை விவிலிய உதாரணங்களுடன் முதியோர் பங்குகொள்ளும் சிறப்பு நிகழ்ச்சி ஒன்று இடம்பெற உள்ளது. பழைய ஏற்பாட்டின் சாரா, நகோமி, ரூத் உட்பட முக்கிய நபர்கள் குறித்தும், புதிய ஏற்பாட்டின் செக்கரியா, எலிசபெத், சிமியோன், அன்னா ஆகியோர் குறித்தும் கருத்துக்கள் பரிமாறப்பட்டு, விசுவாசத்தை இளைய தலைமுறையிடம் எடுத்துச் செல்ல வேண்டிய முதியோரின் கடமைகள் வலியுறுத்தப்படும்.
இந்த உலக முதியோர் சந்திப்பின்போது ஈராக்கிலிருந்து கலந்துகொள்ளும் வயது முதிர்ந்த ஒரு தம்பதி, ஈராக்கில் முதியோர் அனுபவிக்கும் துன்பங்களை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களிடம் நேரடியாக எடுத்துரைப்பர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் முதியோருடனான இஞ்ஞாயிறு திருப்பலி இத்தாலிய நேரம் 10.30 மணிக்குத் துவங்கும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. புதிய நம்பிக்கைகளை விதைத்துள்ளது அல்பேனியத் திருப்பயணம்

செப்.22,2014.  பல்வேறு மதநம்பிக்கையாளர்களைக் கொண்ட அல்பேனியாவில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் திருப்பயணம், அந்நாட்டு மக்களின் நம்பிக்கைகளுக்கு உரமூட்டுவதாக அமைந்தது என்றார் கத்தோலிக்க அதிகாரி ஒருவர்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கான அல்பேனிய முயற்சியில் கத்தோலிக்கர்களும், ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்களும், இஸ்லாமியரும் முழுமூச்சாக ஈடுபட்டுவரும் வேளையில் திருத்தந்தையின் திருப்பயணம் அதற்கு ஊக்கமளிப்பதாக இருந்தது என்றார் திரானா கத்தோலிக்க பல்கலைக்கழகத்தின் துணை அதிபர் Tritan Shehu.
1993ம் ஆண்டு இடம்பெற்ற திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்களின் அல்பேனியத் திருப்பயணத்திற்குப்பின், நாட்டில் பல்வேறு நல்ல மாற்றங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், அதே பாதையில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் திருப்பயணத்தின் நல்விளைவுகளுக்காக அல்பேனியாவின் அனைத்து மத மக்களும் நம்பிக்கையுடன் காத்திருப்பதாகவும் கூறினார் Shehu.

ஆதாரம் : CNA

4. நைஜீரியாவில் இஸ்லாமியத் தீவிரவாதிகளால் மனிதாபிமான நெருக்கடி

செப்.22,2014.  வடகிழக்கு நைஜீரியாவின் 25 நகர்களை  இஸ்லாமியத் தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளதாகவும், பெரும் மனிதாபிமான நெருக்கடிகளை மக்கள் சந்தித்து வருவதாகவும் கூறினார் அப்பகுதி ஆயர் Oliver Dashe Doeme.
ஈராக் மற்றும் சிரியாவில் ISIS இஸ்லாமியத் தீவிரவாதிகளின் கொலைச் செயல்களை ஒத்ததாக நைஜீரியாவில் Boko Haram நடத்தும் செயல்களும் உள்ளன என்றார் ஆயர்.
இஸ்லாம் தீவிரவாதிகளின் கொடுமைகளிலிருந்து தப்பித்துள்ள மக்கள் குகைகளிலும், குன்றுகளிலும், காடுகளிலும் வாழ்ந்துவருவதாகவும், கேம்ரூன்  நாட்டிற்கு தப்பிச்சென்ற மக்கள்கூட போதிய உணவு, தங்குமிடம் மற்றும் மருத்துவ உதவிகள் இன்றி துன்புறுவதாகவும் உரைத்தார் Maiduguri  ஆயர் Dashe Doeme.

ஆதாரம் : Fides

5. சீனாவில் இரு கத்தோலிக்கக் கோவில்கள் தகர்ப்பு

செப்.22,2014.  கடந்த வாரத்தில் சீனாவின் வெவ்வேறு மாகாணங்களில் அரசு அதிகாரிகளால் இரு கத்தோலிக்கக் கோவில்கள் இடிக்கப்பட்டும், ஒரு கோவிலில் சிலுவை வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டும் உள்ளதாக அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன.
சட்டவிரோதமாக, எவ்வித முன்னறிவிப்புமின்றி நடத்தப்பட்ட இச்செயலை எதிர்த்த அருள்பணியாளர் ஒருவர், காவல்துறையால் கைவிலங்கிடப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
கோவில் இருந்த நிலத்தில் வியாபாரக் கட்டிடங்களை உருவாக்க விரும்பிய அரசின் செயலால் இந்தக் கோவில்கள் இடிக்கப்பட்டுள்ளதாக சீனக் கத்தோலிக்கர்கள் தெரிவித்தனர்.
Human மாகாணத்திலுள்ள Jinxi கத்தோலிக்கக் கோவிலும் Jingdezhenலுள்ள நமதன்னை ஆலயமும் இடிக்கப்பட்டுள்ளதுடன், Zhejang மாகாணத்தின் Jington கோவிலுள்ள சிலுவை, அதிகாரிகளால் அகற்றப்பட்டுள்ளது.

ஆதாரம் : Asia News    

6. சுற்றுச்சூழலுக்கு ஆதரவாக உலகம் முழுவதும் பேரணிகள்

செப்.22,2014.  உலகில் சுற்றுச்சூழல் காக்கப்படுவதற்கு தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி பல இலட்சக்கணக்கான மக்கள் உலகின் 161 நாடுகளில் இஞ்ஞாயிறன்று 2700 நிகழ்வுகளை நடத்தினர்.
இவ்வாரம் செவ்வாய்க்கிழமையன்று அமெரிக்க ஐக்கிய நாட்டின் நியூயார்க்கில் 120 உலகத் தலைவர்கள் கலந்துகொள்ள உள்ள, வெப்பநிலை மாற்றம் குறித்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாநாட்டிற்கு முன்னோடியாக உலகம் முழுவதும் முக்கிய நகர்களில்  சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆதரவுப் பேரணிகள் இடம்பெற்றன.
இலண்டனில் 40 ஆயிரம் பேர் பேரணியில் கலந்துகொண்டனர். இது தொடர்புடைய நிகழ்வுகளில் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனும் கலந்துகொண்டார்.
நியூயார்க் நகரில் மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்டோரின் பங்கேற்புடன் இடம்பெற்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிகழ்வுகளில் ஐ.நா. பொதுச்செயலரும், பல நடிகர்களும், கிறிஸ்தவ அமைப்புகளும் கலந்து கொண்டன.

ஆதாரம் : ICN

7. 2100ம் ஆண்டில் உலக மக்கள்தொகை 1100 கோடி

செப்.22,2014.  உலகின் மக்கள்தொகை 2100ம் ஆண்டில் 1100 கோடியை எட்டும் என ஐ.நா.வால் அண்மையில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கை உரைக்கிறது.
ஏற்கனவே கணிக்கப்பட்டதைவிட 200 கோடி அதிகம் எனக்கூறும் ஐ.நா. அறிக்கை, இதற்கு ஆப்ரிக்கக் கண்டத்தின் மக்கள் தொகை பெருக்கத்தைக் காரணமாகக் காட்டுகிறது.
ஆப்ரிக்காவின் மக்கள்தொகை 100 கோடியிலிருந்து இந்நூற்றாண்டின் இறுதிக்குள் 400 கோடியாக உயரும் என அறிவிக்கும் இந்த ஆய்வறிக்கை, 440 கோடியாக இருக்கும் ஆசிய மக்கள் தொகை 2050ம் ஆண்டில் 500 கோடியை எட்டினாலும், அதற்கு பின்னான ஆண்டுகளில் வேகமாக குறைய ஆரம்பிக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

ஆதாரம் : Catholic Online
 

No comments:

Post a Comment