செய்திகள் - 19.09.14
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை, அர்மேனிய அரசுத்தலைவர் சந்திப்பு
2. திருத்தந்தை : கிறிஸ்தவத் தனித்துவம் உயிர்ப்பில் முழுமையடைகின்றது
3. மேரி மேஜர் பசிலிக்காவில் திருத்தந்தை செபம்
4. பொருளாதாரம் மனிதருக்குப் பணிபுரிய திருத்தந்தை அழைப்பு
5. அருளாளர் ஜோசப் வாஸ் புனிதராக அறிவிக்கப்படுவது குறித்து அக்களிப்பு
6. உக்ரேய்னில் இரத்தம் ஓடுகிறது, அமெரிக்கா அது குறித்துப் பேச வேண்டும்
7. ஸ்காட்லாந்து பொது வாக்கெடுப்பின் முடிவுகளுக்கு ஆயர்கள் ஆதரவு
8. வெப்பநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வுப் பேரணிகள்
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை, அர்மேனிய அரசுத்தலைவர் சந்திப்பு
செப்.19,2014. அர்மேனிய நாட்டு அரசுத்தலைவர் Serzh Sargsyan அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை இவ்வெள்ளிக்கிழமையன்று வத்திக்கானில் தனியேயும், தனது குழுவினருடனும் சந்தித்தார்.
இச்சந்திப்புக்குப் பின்னர் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின், திருப்பீட நாடுகளுக்கு இடையேயான உறவுகளின் செயலர் பேராயர் தோமினிக் மம்பெர்த்தி ஆகியோரையும் சந்தித்தார் அர்மேனிய அரசுத்தலைவர் Sargsyan.
அர்மேனிய சமுதாயத்தின் வரலாற்றிலும் வாழ்விலும் கிறிஸ்தவத்தின் சிறப்புப் பங்கு குறித்தும், குறிப்பிட்டு, அந்நாட்டுக்கும், திருப்பீடத்துக்கும் இடையே நிலவும் உறவுகள் தொடர்ந்து உறுதியடைந்து வருவது குறித்தும் இச்சந்திப்புக்களில் பேசப்பட்டதாக, திருப்பீட பத்திரிகை அலுவலகம் அறிவித்தது.
அர்மேனியப் பகுதியின் அரசியல் சூழல் குறித்தும் இச்சந்திப்புக்களில் இடம்பெற்றதாகத் தெரிவித்த அவ்வலுவலகம், குழப்பமும், தீர்வும் காணப்படாத விவகாரங்கள், பேச்சுவார்த்தைகள்மூலம் தீர்வு காணப்பட வேண்டுமெனப் பரிந்துரைக்கப்பட்டதாக கூறியது.
மத்திய கிழக்குப் பகுதி விவகாரம், அப்பகுதியில் கிறிஸ்தவர்களும் பிற சிறுபான்மை மதத்தவரும் எதிர்கொள்ளும் மனிதாபிமான நெருக்கடிகள் போன்ற விவகாரங்களுக்கு இச்சந்திப்புக்களில் சிறப்பு கவனம் கொடுக்கப்பட்டன எனவும் திருப்பீட பத்திரிகை அலுவலகம் கூறியது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. திருத்தந்தை : கிறிஸ்தவத் தனித்துவம் உயிர்ப்பில் முழுமையடைகின்றது
செப்.19,2014. கிறிஸ்தவத் தனித்துவத்தின் சாரமே, நாம் உடலோடும் ஆன்மாவோடும் ஆண்டவரோடு இருப்பது, நம் உடல்களின் உயிர்ப்போடு கிறிஸ்தவத் தனித்துவத்தும் முழுமையடைகின்றது என்று, இவ்வெள்ளி காலை சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
புனித பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் மடலில்(15,12-20) கிறிஸ்தவர்களின் உயிர்ப்புப் பற்றி விளக்கும் இந்நாளைய முதல் வாசகத்தை மையமாக வைத்து, மறையுரையாற்றிய திருத்தந்தை, கிறிஸ்தவத் தனித்துவம் ஒரு பயணம், அது ஒரு பாதை, அதில் எம்மாவுஸ் சீடர் போன்று நாமும் ஆண்டவரோடு இருக்கிறோம் என்று கூறினார்.
நம் வாழ்வு முழுவதும் ஆண்டவரோடு இருப்பதற்கு அழைக்கப்பட்டுள்ளது என்றும் உரைத்த திருத்தந்தை, கொரிந்தியர்கள் உயிர்ப்பைப் பற்றிக் கொண்டிருந்த எண்ணங்களையும் எடுத்துச் சொன்னார்.
உடலின் உயிர்ப்பைப் பற்றிய கிறிஸ்தவப் போதனை ஏத்தென்ஸ் கிரேக்கர்களுக்கும் ஞானமுள்ள மெய்யிலாளர்களுக்கும் துர்மாதிரிகையாய் இருந்தது, கிறிஸ்து உயிர்த்தெழுந்தார் எனில், உங்கள் மத்தியில் இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தவர்கள் இல்லை என எப்படிச் சொல்ல முடியும்? என புனித பவுல் கேள்வி எழுப்பியதையும் குறிப்பிட்டுப் பேசினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கிறிஸ்து உயிர்த்தெழுந்தார் எனில், இறந்தவர்களும் உயிர்த்தெழுவார்கள், உயிர்ப்பில் நாம் மாற்றம் அடைகிறோம், இம்மாற்றம் நம் கிறிஸ்தவப் பயணத்தின் இறுதியாக இருக்கும் என்றும் திருத்தந்தை தனது மறையுரையில் கூறினார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. மேரி மேஜர் பசிலிக்காவில் திருத்தந்தை செபம்
செப்.19,2014. செப்டம்பர் 21, வருகிற
ஞாயிறன்று தான் மேற்கொள்ளவிருக்கும் அல்பேனியத் திருப்பயணம் வெற்றிகரமாக
நடைபெறுவதற்காக இவ்வியாழன் மாலையில் உரோம் மேரி மேஜர் பசிலிக்கா சென்று
செபித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
புனித மேரி மேஜர் பசிலிக்காவில், உரோம் மக்களின் பாதுகாவலரான அன்னைமரியிடம் அரைமணி நேரம் செபித்து, இறுதியில் மலர்க்கொத்தையும் அர்ப்பணித்தார் திருத்தந்தை.
திருப்பயணங்களை மேற்கொள்வதற்கு முன்னரும், திருப்பயணங்களை
முடித்துத் திரும்பும்போதும் புனித மேரி மேஜர் பசிலிக்காவில் செபிப்பதை
வழக்கமாகக் கொண்டிருக்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அருளாளர் அன்னை தெரேசா பிறந்த அல்பேனியா, 1967ல்
தன்னை நாத்திக நாடாக அறிவித்தது. உலகில் முதல் நாத்திக நாடாக
அறிவிக்கப்பட்ட அல்பேனியாவில் 1944 முதல் 1991 வரை ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகள்
கம்யூனிச ஆட்சி நடந்தது. கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக அந்நாட்டில் சமய
சுதந்திரம் இருந்து வருகின்றது.
மேலும், ரோஷ் ஹன்னா யூத புத்தாண்டு தினத்தையொட்டி, நாற்பது யூதமதத் தலைவர்கள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, இப்புதனன்று சாந்தா மார்த்தா இல்லத்தில் சந்தித்தனர்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
4. பொருளாதாரம் மனிதருக்குப் பணிபுரிய திருத்தந்தை அழைப்பு
செப்.19,2014.
ஐரோப்பாவை அழுத்துகின்ற விவகாரங்களுக்கு நற்செய்தியின் ஒளியில் பயனுள்ள
வகையில் தீர்வுகாணும் வழிகளைக் காணவேண்டிய சவாலை ஐரோப்பியத் திருஅவை
கொண்டுள்ளது எனக் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இஸ்பெயின் தலைநகர் மத்ரித்தில் நடைபெற்றுவரும், 2வது ஐரோப்பிய கத்தோலிக்க சமூக நாள்கள் என்ற கூட்டத்திற்கு அனுப்பியுள்ள செய்தியில், ஐரோப்பா
எதிர்கொள்ளும் இளையோர் வேலைவாய்ப்பின்மை மற்றும் இக்கண்டத்தில் புகலிடம்
தேடும் மக்களின் பிரச்சனைகளைச் சுட்டிக் காட்டியுள்ளார் திருத்தந்தை.
பொருளாதாரமும், சமூக ஒழுங்குமுறைகளும் மனிதருக்குப் பணிபுரிவதாய் இருக்க வேண்டும் என்றும், மக்கள்
தங்களின் இறுதி நிறைவை இறைவனிலே காண முடியும் என்பதை உணர்த்தும்
மனமாற்றமும் தனிசெபமும் அவசியம் என்றும் அச்செய்தி வலியுறுத்துகிறது.
திருப்பீடச் செயலர் கர்தினால் பரோலின் அவர்கள், திருத்தந்தையின் பெயரில் இச்செய்தியை மத்ரித் கூட்டத்துக்கு அனுப்பியுள்ளார்.
செப்டம்பர் 21, வருகிற ஞாயிறன்று நிறைவடையும் இக்கூட்டத்தில் 200க்கும் அதிகமான பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
5. அருளாளர் ஜோசப் வாஸ் புனிதராக அறிவிக்கப்படுவது குறித்து அக்களிப்பு
செப்.19,2014. அமைதி மற்றும் இலங்கையின் திருத்தூதராக நோக்கப்படும் அருளாளர் ஜோசப் வாஸ் அவர்கள் புனிதராக அறிவிக்கப்படுவது குறித்து இலங்கை ஆயர்கள் தங்களின் பெருமகிழ்வை வெளியிட்டுள்ளனர்.
அருளாளர் ஜோசப் வாஸ் அவர்கள் புனிதராக அறிவிக்கப்படுவதற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஒப்புதல் அளித்துள்ளது குறித்து ஃபீதெஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய கண்டி ஆயர் வியான்னி பெர்னான்டோ அவர்கள், முன்னூறு ஆண்டுகளுக்குப் பின்னர் ஓர் ஆவல் நிறைவேறியிருக்கும்போது அது பற்றி என்ன சொல்வது என்று, தனது மகிழ்வைத் தெரிவித்துள்ளார்.
திருப்பீடம் வெளியிட்டுள்ள இச்செய்தி, இலங்கையின் கத்தோலிக்க சமுதாயத்துக்கு அளவிட முடியாத மகிழ்வைத் தந்துள்ளது எனவும், இந்நிகழ்வு
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இலங்கைத் திருப்பயணத்தின்போது நடைபெற
வேண்டும் என்று தாங்கள் நம்பிக்கையோடு செபிப்பதாகவும் கூறியுள்ளார் ஆயர்
வியான்னி.
இலங்கையின் திருத்தூதராகிய அருளாளர் ஜோசப் வாஸ் அவர்கள், இந்தியாவின் கோவா மாநிலத்தின் பெனவ்லினில் 1651ம் ஆண்டு பிறந்தார். பிலிப் நேரி சபையில் சேர்ந்து இலங்கைக்கு மறைப்பணியாளராக வந்தார். அச்சமயம், இலங்கையில்
கால்வனிச கிறிஸ்தவப் பிரிவைச் சேர்ந்த டச்சுக்காரர்களின் வன்முறை
அடக்குமுறைகளுக்கு கத்தோலிக்கர் பலியாகிக் கொண்டிருந்தனர். மறைந்து வாழ்ந்த
இக்கத்தோலிக்கருக்கு மறைப்பணியாற்றிய அருளாளர் ஜோசப் வாஸ் அவர்கள், 15க்கும் மேற்பட்ட ஆலயங்களையும், 400 சிற்றாலயங்களையும் கட்டினார். இவர் 1711ம் ஆண்டு கண்டியில் காலமானார். இவர் சிங்களம், தமிழ் ஆகிய இருமொழிகளிலும் திருவிவிலியத்தை மொழிபெயர்த்துள்ளார்.
ஆதாரம் : Fides
6. உக்ரேய்னில் இரத்தம் ஓடுகிறது, அமெரிக்கா அது குறித்துப் பேச வேண்டும்
செப்.19,2014.
இரஷ்யாவின் இராணுவ நடவடிக்கைகளால் உக்ரேய்னில் இரத்தம்
ஓடிக்கொண்டிருக்கின்றது என்று கூறும் உக்ரேய்ன் கிரேக்க-கத்தோலிக்க
ஆயர்களின் நெஞ்சை உருக்கும் வேண்டுகோளுக்கு அமெரிக்க ஐக்கிய நாட்டுக்
கத்தோலிக்கர் செவிமடுக்குமாறு கேட்டுள்ளார் நியுயார்க் கர்தினால் திமோத்தி
டோலன்.
பனிப்போரின்போது போலந்து, உக்ரேய்ன், குரோவேஷியா, லித்துவேனியா, ஹங்கேரி
மற்றும் முன்னாள் சோவியத் யூனியனின் கீழிருந்த மற்ற நாடுகளில்
நசுக்கப்பட்ட கிறிஸ்தவர்களுடன் அமெரிக்க ஐக்கிய நாட்டுக் கத்தோலிக்கர்
ஒருமைப்பாட்டுணர்வு கொண்டிருந்ததையும் நினைவுபடுத்தினார் கர்தினால் டோலன்.
பனிப்போரின்போது நசுக்கப்பட்ட கிறிஸ்தவர்களுக்காக நாம் பேசியதற்கு அமெரிக்க அரசு செவிசாய்த்தது, உக்ரேய்னில் நிலைமைகள் மாறுபடும் என நம்பினோம் என்றுரைத்துள்ள கர்தினால் டோலன், சிலகாலமே இந்நாடு சுதந்திரமாக, ஒளிமயமாக இருந்தது என்றும் கூறியுள்ளார்.
தனது அண்டை நாட்டுத் தலையீட்டால் அந்நாட்டில் மத சுதந்திரம் பிரச்சனையாகி இருக்கின்றது என்றும், அந்நாட்டுக்கு உதவ வேண்டுமென்ற ஆயர்களின் வேண்டுகோளுக்குச் செவிசாய்ப்போம் என்றும் கூறியுள்ளார் கர்தினால் டோலன்.
ஆதாரம் : CNA
7. ஸ்காட்லாந்து பொது வாக்கெடுப்பின் முடிவுகளுக்கு ஆயர்கள் ஆதரவு
செப்.19,2014. ஸ்காட்லாந்து, பிரிட்டனோடு இணைந்தே இருப்பதற்குத் தீர்மானித்துள்ள பொது மக்கள் கருத்து வாக்கெடுப்பின் முடிவுகளைத் தாங்கள் அங்கீகரித்து மதிப்பதாக, ஸ்காட்லாந்து ஆயர் பேரவை அறிவித்துள்ளது.
பொதுவான விவாதங்களிலும், தீர்மானங்கள் எடுப்பதிலும் கத்தோலிக்க சமுதாயம் தொடர்ந்து ஈடுபடுமாறும், இவ்வாறு செய்வதன்மூலம் கிறிஸ்தவ செய்தியின் பொருளையும் முக்கியத்துவத்தையும் நிலைநிறுத்த முடியும் என்றும் ஸ்காட்லாந்து ஆயர்கள் கூறியுள்ளனர்.
ஸ்காட்லாந்து,
பிரிட்டனிலிருந்து பிரிந்து தனி நாடாவது குறித்து இவ்வியாழக்கிழமை
நடைபெற்ற பொது மக்கள் கருத்து வாக்கெடுப்பில் 55 விழுக்காட்டு வாக்குகள், ஸ்காட்லாந்து, பிரிட்டனிலிருந்து பிரிந்து செயல்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தன.
கடந்த 307 ஆண்டுகளாக பிரிட்டனின் ஓர் அங்கமாக இருந்துவரும் ஸ்காட்லாந்து, தனி
நாடாகப் பிரிந்து செல்ல விரும்பி பொது மக்கள் கருத்து வாக்கெடுப்பு
நடத்தப்பட்டது. ஆனால் இதற்கு ஆதரவுக்குத் தேவையான வாக்குகள் பதிவாகவில்லை.
ஆதாரம் : ICN
8. வெப்பநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வுப் பேரணிகள்
செப்.19,2014. வெப்பநிலை மாற்றம் குறித்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாநாட்டில், வருகிற செவ்வாயன்று, நியுயார்க்கில் 120 உலகத் தலைவர்கள் கலந்துகொள்ளவுள்ளவேளை, இம்மாநாட்டில் உறுதியான தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி பல நகரங்களில் பேரணிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
வருகிற ஞாயிறன்று நியூயார்க், இலண்டன் உட்பட பல இடங்களில் இப்பேரணிகள் நடைபெறவுள்ளன. மேலும், உலக அளவில் தொள்ளாயிரத்துக்கும் மேற்பட்ட நிகழ்வுகள் இப்பேரணிகளுக்கு ஆதரவாக இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நியூயார்க்கில் நடக்கும் பேரணியில் கலந்துகொள்ளவுள்ள ஐ.நா.பொதுச்செயலர் பான் கி மூன், உலக
வெப்பநிலையை 2 டிகிரி செல்சியுசுக்குள் வைத்துக்கொள்வதற்கு ஒவ்வொரு நாடும்
தெளிவான திட்டங்களை வகுக்கும் என்ற நம்பிக்கையை வெளியிட்டுள்ளார்.
இதற்கிடையே, அனைத்துலக எரிசக்தி நிறுவனத்தின் கணிப்புப்படி, 2050ம்
ஆண்டுக்குள் உலக வெப்பநிலையை 2 டிகிரி செல்சியுசுக்குக் கொண்டுவருவதற்கு
ஆண்டுக்கு நூறாயிரம் கோடி டாலரை உலகு முதலீடு செய்ய வேண்டும்.
ஆதாரம் : ICN
No comments:
Post a Comment