செய்திகள் - 26.09.14
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை : Focolari இயக்கம் நற்செய்தி அறிவிப்பின் புதிய பாதையைப் பின்பற்ற அழைக்கப்படுகிறது
2. திருத்தந்தை : சிலுவையின்றி கிறிஸ்துவைப் புரிந்துகொள்ள இயலாது
3. திருத்தந்தையின் அக்டோபர் நிகழ்வுகள்
4. சிறார் உரிமைகள் குறித்த திருப்பீட பிரதிநிதிகள் குழுவின் அதிகாரப்பூர்வ அறிக்கை
5. வன்முறையை நியாயப்படுத்த மதத்தைத் தவறாகப் பயன்படுத்துவதற்கு எதிராகப் பல்சமயக் குழு
6. அரபுக் கிறிஸ்தவர்கள், மத்திய கிழக்குப் பகுதியின் ஒருங்கிணைந்த அங்கங்கள், ஜோர்டன் அரசர்
7. மரணதண்டனைக்கு 21ம் நூற்றாண்டில் இடமில்லை, ஐ.நா.
8. உலகின் பசியைப் போக்குவதற்கு பெருங்டல்கள் பேணப்பட வேண்டும், ஐ.நா.
9. எபோலா ஒழிப்புக்கு இந்தியா ஒரு கோடி டாலர் நிதியுதவி
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை : Focolari இயக்கம் நற்செய்தி அறிவிப்பின் புதிய பாதையைப் பின்பற்ற அழைக்கப்படுகிறது
செப்.26,2014. நற்செய்தி அறிவிப்பின் புதிய பாதையைப் பின்பற்றி, உலகினர் அனைவருக்கும், குறிப்பாக, ஏழைகள் மற்றும் ஓரங்கட்டப்பட்டோருக்குக் கடவுளின் அன்புக்குச் சாட்சிகளாகத் திகழ்வதற்கு Focolari இயக்கம் அழைக்கப்பட்டுள்ளது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
காஸ்தெல்கந்தோல்ஃபோவில் இம்மாதம் 1 முதல் 28 வரை பொது அவையை நடத்திவரும் Focolari பக்த இயக்கத்தின் 500 பிரதிநிதிகளை இவ்வெள்ளியன்று வத்திக்கானில் சந்தித்து உரையாற்றியபோது இவ்வாறு திருத்தந்தை கூறினார்.
திருஅவையில் ஒரு சிறு விதையாகப் பிறந்த இந்த இயக்கம், தற்போது மரமாக வளர்ந்து, எல்லா வகையான கிறிஸ்தவக் குடும்பங்கள் மற்றும் பல்வேறு மதங்கள் வழியாக கிளைகளாகப் பரவியுள்ளது என்றும் பாராட்டினார் திருத்தந்தை.
‘மரியாளின் வேலை’ என்று அறியப்படும் இந்த Focolari இயக்கம், தூய ஆவியாரிடமிருந்து பொழியப்பட்ட ஒன்றிப்பு என்ற சிறப்புத் தனிவரத்தால் இயங்கி வருகிறது, இந்த இயக்கத்தை ஆரம்பித்த Chiara Lubich இந்த அசாதாரணக் கொடைக்குச் சான்றாக உள்ளார் என்றும் புகழ்ந்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்திலிருந்து ஏறக்குறைய அரை நூற்றாண்டளவாக Focolari உறுப்பினர்கள், அகிலத் திருஅவையுடன் இணைந்து இறையன்புக்குச் சாட்சிகளாக இருப்பதற்கு அழைக்கப்பட்டுள்ளதையும் திருத்தந்தை குறிப்பிட்டார்.
இன்றைய நற்செய்திப் பணிக்குத் தேவைப்படும் தியானம், உரையாடல், தன்னையே வழங்குதல் ஆகியவற்றில் வளருமாறும் ஊக்கப்படுத்தினார் திருத்தந்தை.
மேலும், WEF என்ற உலக பொருளாதார கழகத்தை நிறுவியவரும் அதன் செயல்திட்ட தலைவருமான பேராசிரியர் Klaus Schwab, OIF என்ற ப்ரெஞ்ச் மொழிபேசும் அனைத்துலக அமைப்பின் பொதுச்செயலர் Abdou Diouf , அர்ஜென்டீனா தேசிய சமூகப் பாதுகாப்பு நிர்வாக இயக்குனர் Diego Bossio, ஜப்பான் திருப்பீடத் தூதர் பேராயர் Joseph Chennoth ஆகியோரையும் இவ்வெள்ளியன்று வத்திக்கானில் சந்தித்தார் திருத்தந்தை.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. திருத்தந்தை : சிலுவையின்றி கிறிஸ்துவைப் புரிந்துகொள்ள இயலாது
செப்.26,2014. ஒரு கிறிஸ்தவர், மீட்பராம் கிறிஸ்துவை சிலுவையின்றி புரிந்துகொள்ள இயலாது, மேலும்,
இயேசுவோடு சிலுவையைச் சுமப்பதற்குத் தயாராக இல்லாமல் கிறிஸ்தவராக
இருக்கவும் முடியாது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வெள்ளியன்று
கூறினார்.
வத்திக்கான் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் இவ்வெள்ளி காலை திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கிய திருத்தந்தை, கிறிஸ்தவராக இருப்பது என்பது, சிரேன் ஊர் சீமோன் போன்று சிலுவை சுமப்பதற்கு இயேசுவுக்கு உதவி செய்யத் தயாராக இருப்பதாகும் என்று விளக்கினார்.
தன்னை
யார் என்று மக்கள் சொல்கிறார்கள் என்று இயேசு தம் சீடர்களிடம் கேட்ட
இந்நாளைய நற்செய்தியை மையமாக வைத்து மறையுரையாற்றிய திருத்தந்தை, தமது
உண்மையான தனித்துவத்தைச் சீடர்களும் மக்களும் புரிந்துகொள்வதற்கு
அவர்களின் இதயங்களைத் தயார் செய்வதற்கு இயேசு இந்தப் போதனையைப்
பயன்படுத்தினார் என்று கூறினார்.
இயேசுவோடு அவரது சிலுவையின் சுமையைத் தாங்கினால்தான் கிறிஸ்தவர் இயேசுவுக்கு உரியவர், மற்றபடி அக்கிறிஸ்தவர் பின்செல்லும் பாதை நல்லதாகத் தெரியும், ஆனால் அது உண்மையானதல்ல என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பாவம் அசிங்கமானது, ஆனால் கடவுளின் அன்பு பெரியது, இவ்வன்புப் பாதையில் அவர் நம்மை மீட்கிறார் என்றும், சிலுவையை
சுமப்பதற்குத் தமக்கு உதவுவதற்கு சிரேன்களாக இருப்பதற்கு நம்மைத்
தயாரிக்கிறார் என்றும் இவ்வெள்ளி காலை திருப்பலி மறையுரையில் கூறினார்
திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. திருத்தந்தையின் அக்டோபர் நிகழ்வுகள்
செப்.26,2014. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வருகிற அக்டோபரில் நிகழ்த்தவுள்ள திருவழிபாடுகளை வெளியிட்டுள்ளது திருத்தந்தையின் திருவழிபாட்டு அலுவலகம்.
அக்.4, சனிக்கிழமை மாலை 6 மணிக்கு வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில், குடும்பம் பற்றிய உலக ஆயர்கள் சிறப்பு மாமன்றத்திற்காக வழிபாடு,
அக்.5,
ஞாயிறு காலை 10 மணிக்கு வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில்
குடும்பம் பற்றிய உலக ஆயர்கள் சிறப்பு மாமன்ற ஆரம்பத் திருப்பலி,
அக்.12, ஞாயிறு காலை 10 மணிக்கு வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் இரு கானடா நாட்டு அருளாளருக்குப் புனிதர் பட்டத் திருப்பலி,
அக்.19,
ஞாயிறு காலை 10.30 மணிக்கு வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில்
குடும்பம் பற்றிய உலக ஆயர்கள் சிறப்பு மாமன்ற நிறைவுத் திருப்பலி, இறையடியார் திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள் அருளாளர் நிலைக்கு உயர்த்தப்படல்,
அக்.20 திங்கள் அப்போஸ்தலிக்க மாளிகையில் கன்சிஸ்டரி அறையில் சிலருக்குப் புனிதர் பட்டம் குறித்த கூட்டம்
ஆகியவை திருத்தந்தையின் அக்டோபர் திருவழிபாட்டு நிகழ்வுகள் என அறிவித்துள்ளது திருவழிபாட்டு அலுவலகம்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
4. சிறார் உரிமைகள் குறித்த திருப்பீட பிரதிநிதிகள் குழுவின் அதிகாரப்பூர்வ அறிக்கை
செப்.26,2014.
சிறார் உரிமைகள் குறித்த ஐ.நா. குழுவுக்குத் திருப்பீட பிரதிநிதிகள் குழு
கடந்த பிப்ரவரியில் சமர்ப்பித்த கருத்துக்களின் அதிகாரப்பூர்வ அறிக்கையை
திருப்பீட பத்திரிகை அலுவலகம் இவ்வெள்ளியன்று வெளியிட்டுள்ளது.
திருப்பீடம், வத்திக்கான் நாட்டுக்குள் முழு நிலப்பகுதி சார்ந்த தன்னாட்சியை மட்டுமே செயல்படுத்துகின்றது என்றும், பிற நாடுகளில் இருக்கின்ற தல கத்தோலிக்கத் திருஅவைகள் மற்றும் நிறுவனங்கள்மீது மேற்கூறப்பட்ட கொள்கைகளைத் திணிப்பதற்கு, சட்டப்படியான கடமையையோ, திறனையோ திருப்பீடம் கொண்டிருக்கவில்லை என்றும் அத்திருப்பீடக் குழு, ஐ.நா. குழுவுக்கு நினைவுபடுத்தியுள்ளது.
இந்த ஐ.நா. குழுவின் சில பரிந்துரைகள், சிறார் உரிமைகள் குறித்த அனைத்துலக கோட்பாடுகளைப் புறக்கணிக்கின்றன எனவும், சிறார்
உரிமைகள் குறித்த உடன்பாட்டில் இல்லாத புதிய முரண்பாடான வெளிப்பாடுகள்
குறித்து திருப்பீடம் கவலையடைவதாகவும் அவ்வறிக்கை கூறுகிறது.
சிறார் உரிமைகள் குறித்த அனைத்துலக உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ள திருப்பீடம், அனைத்துலக சட்டத்துக்கு கட்டுப்பட்டது என்ற உணர்வில், அனைத்துலக நீதித்துறை அமைப்புக்குள் தனது நிலைமை பற்றி நன்கு அறிந்திருக்கின்றது என்றும் அவ்வறிக்கை கூறுகிறது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
5. வன்முறையை நியாயப்படுத்த மதத்தைத் தவறாகப் பயன்படுத்துவதற்கு எதிராகப் பல்சமயக் குழு
செப்.26,2014. வட ஈராக்கிலும், சிரியாவிலும், உலகின்
பிற பாகங்களிலும் இடம்பெறும் மனதை வருத்தும் வன்முறைகள் மற்றும்
மனிதாபிமான நெருக்கடிகள் அகற்றப்படுவதற்கு ஒன்றிணைந்த முயற்சிக்கு அழைப்பு
விடுத்துள்ளது பல நாடுகளின் பல்சமயத் தலைவர்கள் குழு ஒன்று.
ஆஸ்ட்ரியா, சவுதி அரேபியா, இஸ்பெயின் ஆகிய நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் கையெழுத்திட்டு இவ்வெள்ளியன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இப்பகுதிகளில் நிலையான அமைதி மற்றும் சமூக நல்லிணக்கத்தைக் கொண்டுவருவதற்கு உரையாடலே ஒரே பாதை எனக் குறிப்பிட்டுள்ளனர்.
உலகில் பல்வேறு மதங்கள் மற்றும் கலாச்சாரங்கள் மத்தியில் உரையாடலை ஊக்குவித்து மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, KAICIID என்ற அரசர் Abdullah Bin Abdulaziz அனைத்துலக மையத்தின் உறுப்பினர்கள் வெளியிட்டுள்ள இவ்வறிக்கையில், வன்முறைகளும், மனிதாபிமான நெருக்கடிகளும் இடம்பெறும் பகுதிகளில் அமைதியை நிலைநாட்டுவதற்கு அனைத்துலக ஒத்துழைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
KAICIID மையத்தில், திருப்பீடத்தின் சார்பில் பார்வையாளராக இருக்கும் அருள்பணி Miguel Ángel Ayuso Guixot அவர்களும் இவ்வறிக்கையில் கையெழுத்திட்டுள்ளார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
6. அரபுக் கிறிஸ்தவர்கள், மத்திய கிழக்குப் பகுதியின் ஒருங்கிணைந்த அங்கங்கள், ஜோர்டன் அரசர்
செப்.26,2014. அரபுக் கிறிஸ்தவர்கள், மத்திய கிழக்குப் பகுதியின் கடந்தகால, நிகழ்கால மற்றும் வருங்காலத்தின் ஒருங்கிணைந்த அங்கங்கள் என்று ஐ.நா.வின் 69வது பொது அமர்வில் கூறினார் ஜோர்டன் அரசர் 2ம் அப்துல்லா.
மத்திய கிழக்கு வரலாற்றில் கிறிஸ்தவச் சமூகங்கள் முக்கியமான அங்கம் என்றும், கிறிஸ்தவம்
முதலில் வளர்ந்த நிலப்பகுதிகளில் இவர்கள் விருந்தாளிகளாகவோ
வெளிநாட்டவர்களாகவோ எந்தவகையிலும் கருதப்படக் கூடாது என்றும் ஜோர்டன் அரசர்
கூறினார்.
உண்மையான இஸ்லாமின் போதனைகள் தெளிவாக உள்ளன, பாகுபாட்டுக் கலவரங்களும் சண்டைகளும் கடுமையாய்க் கண்டனம் செய்யப்பட வேண்டும்,
ஒவ்வொரு நாட்டிலும் இருக்கின்ற கிறிஸ்தவர்கள் மற்றும் பிற சமூகங்களுக்கு
எதிரான வன்முறையை இஸ்லாம் தடைசெய்கின்றது என்றும் ஜோர்டன் அரசர் கூறினார்.
தவறான மற்றும் பிரிவினைவாத நடவடிக்கைகளுக்கு எதிராக உழைப்பதற்கு முஸ்லிம்களையும், பிற தலைவர்களையும் கேட்டுக்கொண்டார் அரசர் 2ம் அப்துல்லா.
ஆதாரம் : Fides
7. மரணதண்டனைக்கு 21ம் நூற்றாண்டில் இடமில்லை, ஐ.நா.
செப்.26,2014. மரணதண்டனையைத் தொடர்ந்து நிறைவேற்றும் பழக்கம் நாகரீகமற்ற காலத்துக்குரியது என்று சொல்லி, 21ம் நூற்றாண்டில் இப்பழக்கத்திற்கு இடமில்லை என்று அறிவித்துள்ளனர் ஐ.நா. அதிகாரிகள்.
“மரணதண்டனையிலிருந்து விலகியிருத்தல் : தேசிய அளவிலான தலைமைத்துவம்” என்ற தலைப்பில் ஐ.நா பொது அவையில் விவாதத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய, ஐ.நா. உதவிப் பொதுச் செயலர் யான் எலியாசன் இவ்வாறு கேட்டுக்கொண்டார்.
மரணதண்டனை
நிறைவேற்றும் பழக்கத்தை முழுவதுமாக அகற்றுவதற்கு நாடுகளின் தலைவர்கள்
நீதித்துறை சார்ந்த நடவடிக்கைகளை எடுக்குமாறு ஊக்கப்படுத்திய அவர், மரணதண்டனையை அகற்றும் முயற்சியில் உலக அளவில் முன்னேற்றம் காணப்படுகின்றது என்றும் கூறினார்.
ஏற்கனவே மரணதண்டனையைத் தடைசெய்துள்ள 160க்கும் மேற்பட்ட நாடுகளுடன், எல் சால்வதோர், காபோன், போலந்து ஆகிய நாடுகளும் இணைவதற்கு கடந்த ஏப்ரலில் முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார் எலியாசன்.
ஆதாரம் : UN
8. உலகின் பசியைப் போக்குவதற்கு பெருங்டல்கள் பேணப்பட வேண்டும், ஐ.நா.
செப்.26,2014. உலகின் வருங்கால உணவுப் பாதுகாப்பு,
பெருங்கடல்கள் மற்றும் மீனவத் தொழில்களை நல்லமுறையில் நிர்வாகம் செய்வது
மற்றும் அவற்றை உறுதியுடன் முன்னேற்றுவதைப் பொறுத்திருக்கின்றது என்று
ஐ.நா. அதிகாரி ஒருவர் கூறினார்.
நியுயார்க்கில் நடந்த ஐ.நா.பொது அவையில் உரையாற்றிய ஐ.நா.வின் உணவு மற்றும் பாதுகாப்பு நிறுவன இயக்குனர் ஹோசே கிரசியானா த சில்வா, உலகின் பெருங்கடல்கள் பொருளாதாரத்தைப் பாதுகாப்பதற்கு, உறுதியான நடவடிக்கைகளை அமல்படுத்துவதில் தீவிரம் காட்டுமாறு கேட்டுக்கொண்டார்.
கடல்பகுதி சுற்றுச்சூழல், இப்பூமியின்
நலத்துக்கும் அதைச் சார்ந்துள்ள மக்களின் நலவாழ்வுக்கும் எவ்வளவு
முக்கியமானது என்பதையும் குறிப்பிட்டுப் பேசிய த சில்வானோ, உலக மக்களில் 12 விழுக்காட்டினர் மீனவத் தொழிலைச் சார்ந்துள்ளதைச் சுட்டிக்காட்டினார்.
17 விழுக்காடு புரோட்டின் சத்து, மீனவத் தொழிலகங்களையும், நீர்க் கலாச்சாரத்தையும் சார்ந்துள்ளது, அடுத்த இருபது ஆண்டுகளில் இதன் தேவை இருமடங்காகும், ஆனால், பெருங்கடல் மீன்களில் ஏறக்குறைய 28 விழுக்காடு, ஏற்கனவே அதிகமாகப் பிடிக்கப்பட்டுள்ளது எனவும் ஐ.நா.வில் கூறினார் த சில்வா.
ஆதாரம் : UN
9. எபோலா ஒழிப்புக்கு இந்தியா ஒரு கோடி டாலர் நிதியுதவி
செப்.26,2014.
அமைதிக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக எழும்பியுள்ள எபோலா நோய்ப்
பரவலைத் தடுப்பதற்கு உலகத் தலைவர்களால் இயலும் மற்றும் உலகத் தலைவர்கள்
அதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார் ஐ.நா. பொதுச்செயலர்
பான் கி மூன்.
எபோலா நோய் குறித்து ஐ.நா.வில் இடம்பெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் இவ்வாறு பேசிய பான் கி மூன், இந்நோயால் கடுமையாய்ப் பாதிக்கப்பட்டுள்ள கினி, சியெரா லியோன், லைபீரிய ஆகிய நாடுகளுடன் ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவிக்கவும் இக்கூட்டம் நடப்பதாகவும் கூறினார்.
மேலும், எபோலா நோயைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளுக்கு, தனது பங்களிப்பாக, ஒரு கோடி டாலரை ஐ.நா.வில் வழங்கவுள்ளது இந்தியா.
எபோலா பரவுவதைத் தடுப்பதற்கு உதவும் சாதனங்கள் வாங்குவதற்கென மேலும் 20 இலட்சம் டாலரை இந்தியா வழங்கவுள்ளது.
இம்மாதம் 12ம் தேதி, உலக நலவாழ்வு நிறுவனத்திடம் 5 இலட்சம் டாலரை இந்தியா வழங்கியுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment