Thursday, 25 September 2014

செய்திகள் - 24.09.14

செய்திகள் - 24.09.14
------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை : எபோலாவால் பாதிக்கப்பட்டவருக்கு அனைத்துலக உதவிக்கு விண்ணப்பம் 

2. வெப்பநிலை மாற்றங்களைத் தடுப்பதற்கு கலாச்சார மாற்றம் அவசியம், திருப்பீடம்

3. வெப்பநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த நாடுகள் உறுதி

4. குண்டுகளை வீசுவோர் மக்களை விடுவிப்பவர்கள் அல்ல, அலெப்போ பேராயர்

5. செவ்வாயின் சுற்றுவட்டப் பாதையில் இணைந்தது மங்கள்யான்

6. இலங்கை நிலை குறித்து மனித உரிமை ஆணையர் கவலை

7. சித்ரவதைக் கருவிகளைத் தயாரிக்கும் சீன நிறுவனங்கள்

8. ஹெய்ட்டியில் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற கழிப்பிடங்கள்

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை : எபோலாவால் பாதிக்கப்பட்டவருக்கு அனைத்துலக உதவிக்கு விண்ணப்பம் 

செப்.24,2014. மேற்கு ஆப்ரிக்காவில் எபோலா நோய்க் கிருமிகளின் பாதிப்பால் பெருந்துன்பங்களை அனுபவித்துவரும் மக்களுக்கு ஆற்றப்படும் உதவிகள் மேலும் அதிகரிக்கப்படுமாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இப்புதனன்று விண்ணப்பித்தார்.
இப்புதன் பொது மறையுரைக்குப் பின்னர், ஆப்ரிக்காவில் எபோலா நோயால் கடும் துன்பங்களை எதிர்கொள்ளும் மக்களை நினைவுகூர்ந்ததுடன், இந்நோயால் இறந்துள்ள மக்களுக்காகச் செபிக்குமாறும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.
மேலும், எபோலா நோய்த் தாக்கம் கடுமையாய் உள்ள கினி, சியெரா லியோன், லைபீரியா, நைஜீரியா ஆகிய மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் இந்நோயால் துன்புறும் மக்களை கடந்த 24 மணி நேரத்துக்குள் இரண்டு தடவைகள் நினைவுகூர்ந்துள்ளார் திருத்தந்தை.
இச்செவ்வாயன்று வத்திக்கானில் மேற்கு ஆப்ரிக்க நாடாகிய கானா ஆயர்களைச் சந்தித்தபோது இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை நினைவுகூர்ந்தார் திருத்தந்தை.
இதற்கிடையே, எபோலா நோய்க் கிருமித் தாக்குதலைக் கட்டுப்படுத்தாவிட்டால், இன்னும் இரண்டு மாதங்களில், இந்நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இருபதாயிரமாக உயர்ந்து விடும்; இந்நோயைக் கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த முயற்சிகள் அவசியம் என, உலக நலவாழ்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நோய்க்கு, இதுவரை 2,800 பேர் பலியாகியுள்ளனர்.
எபோலா நோய்க் கிருமித் தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு, தொடர்ந்து காய்ச்சல், தலைவலி, வயிற்றுப்போக்கு, குமட்டல், உடலின் உள்உறுப்புகள் மற்றும் வெளி உறுப்புகளில் இரத்தக்கசிவு போன்ற அறிகுறிகள் இருக்கும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. வெப்பநிலை மாற்றங்களைத் தடுப்பதற்கு கலாச்சார மாற்றம் அவசியம், திருப்பீடம்

செப்.24,2014. உலகில் மனிதரின் நடவடிக்கைகளால் ஏற்பட்டுள்ள வெப்பநிலை மாற்றங்களைத் தடுப்பதற்கு ஓர் உண்மையான கலாச்சார மாற்றம் அவசியம் என்று திருப்பீடம் ஐ.நா. உச்ச மாநாட்டில் கூறியது.
நியுயார்க் ஐ.நா. தலைமையகத்தில் இச்செவ்வாயன்று வெப்பநிலை மாற்றம் குறித்து நடந்த ஒருநாள் உலக மாநாட்டில் உரையாற்றிய திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் இவ்வாறு கூறினார்.
உலகில் வெப்பநிலை மாற்றங்களைக் கட்டுப்படுத்துவதற்கு, அரசியல் தளங்களில் மட்டும் ஒருங்கிணைந்த முயற்சிகள் எடுத்தால் போதாது, மாறாக, ஓர் ஆழமான கலாச்சார மாற்றமும், முழு மனிதக் குடும்பத்திற்கு நல்லதோர் எதிர்காலம் அமைவதற்கு அவசியமான அடிப்படை விழுமியங்கள் மீண்டும் கண்டுணரப்படுவதும் தேவைப்படுகின்றது என்று கர்தினால் பரோலின் அவர்கள் மேலும் கூறினார்.
வெப்பநிலை மாற்றங்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் நன்னெறிக் கூறுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்றும் கூறிய கர்தினால், அனைத்துப் பொருளாதாரக் கொள்கைகளை வடிவமைக்கும்போது ஒவ்வொரு மனிதரின் மாண்புக்கும், பொதுநலனுக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்ற அறிவில் அவை இடம்பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. வெப்பநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த நாடுகள் உறுதி

செப்.24,2014. நியுயார்க்கில் இச்செவ்வாயன்று நடந்த வெப்பநிலை மாற்றம் குறித்த ஒருநாள் உலக மாநாட்டில், உணவு உற்பத்தியை மேம்படுத்தல், 2020ம் ஆண்டுக்குள் காடுகள் அழிவைக் குறைத்தல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியைப் பயன்படுத்தல் போன்றவைகளில் உடன்பாடுகள் எட்டப்பட்டன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவைவிடப் பெரிய அளவைக்கொண்ட, அதாவது 35 கோடிக்கு மேற்பட்ட ஹெக்டேர் காடுகளையும், பயிர்நிலங்களையும் பாதுகாப்பதற்கு ஏற்பட்டுள்ள இந்த உடன்பாடு சரியாகச் செயல்படுத்தப்பட்டால், 450 கோடி முதல் 880 கோடி டன்கள் வரையிலான கார்பன்டை ஆக்ஸைடு, 2030ம் ஆண்டுக்குள், ஆண்டுதோறும் குறைக்கப்படும்  என ஐ.நா. அதிகாரிகள் கூறினர்.
இன்னும், உலகின் உணவு தேவை 2050ம் ஆண்டுக்குள் 60 விழுக்காடு அதிகரிக்கவேண்டிய தேவை ஏற்பட்டுள்ள நிலையில், வேளாண்துறையை மேம்படுத்தவும், அதேவேளை கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்கவும் தலைவர்கள் இசைவு தெரிவித்துள்ளனர்.
இவ்வுலக மாநாட்டில், 120 நாடுகளுக்கு மேற்பட்ட அரசுகள் மற்றும் நாடுகளின் தலைவர்கள், தொழிலதிபர்கள், நிதித்துறையினர், பொதுமக்கள் பிரதிநிதிகள் என, பலர் கலந்துகொண்டனர்.
உலக வெப்பநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கு, 2020ம் ஆண்டுக்குள் 45 கோடி டன்கள் கார்பன்டை ஆக்ஸைடு ஆண்டுதோறும் வெளியேற்றப்பட வேண்டும். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. குண்டுகளை வீசுவோர் மக்களை விடுவிப்பவர்கள் அல்ல, அலெப்போ பேராயர்

செப்.24,2014. சிரியாவில் ஐஎஸ் இஸ்லாமிய நாட்டின்மீது, சில அரபு நாடுகளின் உதவியுடன் அமெரிக்க ஐக்கிய நாடு மேற்கொண்டுள்ள வான்தாக்குதல்கள், சிரியாவின் அலெப்போ மக்களுக்கு எந்தவிதமான நல்ல பலன்களையும் அளிக்கும் என எதிர்பார்க்க முடியாது என்று அலெப்போ கிறிஸ்தவத் தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.
இம்மாதிரியான வெளிநாடுகளின் தலையீடுகள் நிலைமையை மோசமாக்கும் என்று  பீதெஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய, அலெப்போ அர்மேனிய கத்தோலிக்கப் பேராயர் Boutros Marayati அவர்கள், இங்கு என்ன நடக்கின்றது என்பது குறித்த தெளிவான கண்ணோட்டம் இங்குள்ள மக்களுக்குக் கிடையாது என்று கூறினார்.
குண்டுகளை வீசி கொடுஞ்செயல்புரிவோர் மக்களை விடுவிப்பவர்கள் என்று கூற முடியாது என்றுரைத்த பேராயர் Marayati அவர்கள், வான்வழி குண்டுவீச்சுத் தாக்குதல்கள் பிரச்சனைகளைத் தீர்க்காது, மாறாக, பிரச்சனைகளை அதிகரிக்கும் என்று எச்சரித்துள்ளார்.
நிச்சயமற்ற நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களின் நிலை மேலும் மோசமடையும் என்றும், ஒரு நாளைக்கு இரண்டு மணிநேரம் மட்டுமே தண்ணீர் கிடைக்கின்றது, உணவு இல்லை, பலர் வீடுகளைவிட்டு வெளியேறுகின்றனர் என்றும் கூறினார் பேராயர் Marayati.

ஆதாரம் : Fides

5. செவ்வாயின் சுற்றுவட்டப் பாதையில் இணைந்தது மங்கள்யான்

செப்.24,2014. செவ்வாய்க் கிரகத்திற்கு இந்தியா அனுப்பிய மங்கள்யான் விண்கலம் வெற்றிகரமாக செவ்வாயின் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டிருப்பதற்கு இந்தியக் குடியரசுத் தலைவர், பிரதமர் உட்பட நாட்டின் பல தலைவர்கள் இஸ்ரோ அறிவியலாளர்களுக்குப் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
மங்கள்யான் விண்கலம், செவ்வாய்க் கிரகத்தின் சுற்று வட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டிருப்பது, இந்திய அணி, கிரிக்கெட்டில் பெறும் வெற்றியை விட ஆயிரம் மடங்கு உயர்ந்தது என்று பிரதமர் மோடி உணர்ச்சி பொங்க நேரில் வாழ்த்தியுள்ளார்.
இந்தியர்கள் அனைவருமே கொண்டாட வேண்டிய தருணம் இது. வரலாறு படைக்கப்பட்டுள்ளது. கற்பனையிலும் நினைக்க முடியாத சில விடயங்களை நமது அறிவியலாளர்கள் உண்மையில் செய்து நமது திறமையை நிரூபித்துள்ளனர். உலகத்துக்கே சவால் விடும் வகையில் நமது அறிவியலாளர்கள் செயல்பட்டுள்ளனர் என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.
செவ்வாய்க் கோளின் சுற்றுவட்டப் பாதையில் மங்கள்யான் இணைந்தது இந்திய நேரப்படி இப்புதன் காலை 7.59 மணிக்கு உறுதிப்படுத்தப்பட்டது.
ஆசியக் கண்டத்திலிருந்து இதனை நிகழ்த்தியிருக்கும் முதல் நாடு இந்தியா மட்டுமே.
இந்த மங்கள்யான் விண்கலம் 2013ம் ஆண்டு நவம்பர் 5ம் தேதி ஸ்ரீ ஹரிகோட்டா தளத்திலிருந்து ஏவப்பட்டது. ஏறக்குறைய 450 கோடி ரூபாய் செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. உலகில் வேறு கிரகங்களுக்கு விண்கலங்களை அனுப்பும் முயற்சியில், மிகக் குறைந்த செலவில் மேற்கொள்ளப்பட்ட திட்டம் இதுவேயாகும்.

ஆதாரம் : ஊடகங்கள்

6. இலங்கை நிலை குறித்து மனித உரிமை ஆணையர் கவலை

செப்.24,2014. இலங்கையில் பொதுமக்கள் அமைப்புகள், மனித உரிமை ஆர்வலர்கள், பாதிக்கப்பட்டோருக்கான அமைப்புக்கள், அனைத்துலக நீதிவிசாரணையை வலியுறுத்துவோர் உள்ளிட்ட பல பிரிவினர்மீது அரசு மற்றும் அரசு-சாரா அமைப்புக்களால் விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள் கண்டு தான் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஐ.நா. மனித உரிமை ஆணையர் தெரிவித்துள்ளார்.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் இளவரசர் Zeid Ra’ad Al Hussein அவர்கள், இலங்கை நிலவரம் தொடர்பாக, சமர்ப்பித்துள்ள வாய்மொழி அறிக்கை ஒன்றில் இலங்கையின் மனித உரிமை சூழல் குறித்து விரிவாக அலசப்பட்டுள்ளது.
உண்மை நிலையை ஆய்வதற்காக இலங்கை வர விரும்பிய ஒன்பது ஐ.நா. சிறப்புத் தூதர்களுக்கு இதுவரை அனுமதி அளிக்கப்படவில்லை என்றும் இந்த அறிக்கை கூறுகிறது.
மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கத்தை வலியுறுத்தும் நடவடிக்கையாளர்கள் மீது அச்சு, தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக தொடர்த் தாக்குதல்கள் தொடுக்கப்படுவதாக அதில் கூறப்பட்டுள்ளது.
அதேநேரம் இறுதிப்போரின் போது கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளை விடுவிப்பதில் அரசு பெரும் முன்னேற்றங்களைக் கண்டுள்ளதாகவும் அவ்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. ஆகஸ்ட் மாத நிலவரத்தின்படி முன்னாள் தமிழ்ப் போராளிகள் 114 பேர் மட்டுமே மறுவாழ்வு மையங்களில் இருப்பதாகவும், 84 பேர் சட்ட விசாரணைகளை எதிர்கொண்டு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஆதாரம் : BBC/Agencis

7. சித்ரவதைக் கருவிகளைத் தயாரிக்கும் சீன நிறுவனங்கள்

செப்.24,2014. சீனா, உலக நாடுகள் பலவற்றுக்கும் சித்ரவதை ஆயுதங்களையும், கருவிகளையும் விநியோகம் செய்து, கோடிக்கணக்கில் இலாபம் சம்பாதித்து வருகிறது என 'ஆம்னஸ்டி இன்டர்நேஷனல்' எனப்படும், பன்னாட்டு மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள இப்பன்னாட்டு அமைப்பு, உலக நாடுகள் பலவற்றின் காவல்துறை, பயங்கரவாதிகள் போன்றோருக்கு, சித்ரவதை ஆயுதங்களை விநியோகம் செய்வது சீன நிறுவனங்கள்தான் என்று கூறியுள்ளது.
கடந்த 2003ம் ஆண்டில், 18 நிறுவனங்களாக இருந்த சித்ரவதைக்கருவி தயாரிப்புச் சீன நிறுவனங்கள்,  தற்போது, 130 ஆகப் பெருகியுள்ளன. இந்த நிறுவனங்கள் தயாரிக்கும், கடும் விளைவுகளை ஏற்படுத்தும் கருவிகள்தான் உலகம் முழுவதும் பயங்கரவாதிகள் மற்றும் கொடுமையான செயல்களில் ஈடுபடும் காவல்துறையிடம் உள்ளன எனவும் அவ்வறிக்கை கூறுகிறது.
மின்அதிர்ச்சிக் கருவிகள், அதிக எடையுடன்கூடிய கால் விலங்குகள், கை பெருவிரல்களில் பொருத்தக்கூடிய விலங்குகள், மின்அதிர்ச்சி இருக்கைகள், முள்கம்பு, ஆணி பொருத்திய தடிகள் போன்ற ஏராளமான சித்ரவதைக் கருவிகளை, சீனா பெருமளவில் தயாரித்து வருகிறது.
இத்தகைய பொருட்களின் உற்பத்திக்கும், ஏற்றுமதிக்கும் தடை விதிக்க வேண்டும் என, பிரிட்டனைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் வலியுறுத்தியுள்ளது.

ஆதாரம் : BBC/Dinamalar

8. ஹெய்ட்டியில் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற கழிப்பிடங்கள்

செப்.24,2014. 4 ஆண்டுகளுக்கு முன்னர் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான மக்கள் காலரா போன்ற தொற்றுநோய்களுக்குப் பலியான ஹெய்ட்டி நாட்டில் சுற்றுச்சூழலுக்கு உகந்த கழிப்பிடங்கள் அமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹெய்ட்டியில் காலராத் தொற்றுநோய்க்கு 9 ஆயிரம் பேர்வரை பலியானவேளை, இந்நோய் பரவுவதற்கு அழுக்கடைந்த நீரும் மாசடைந்த சுற்றுச்சூழலுமே முக்கிய காரணம் என்று கூறப்பட்டது. இங்கு வாழும் ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் நலவாழ்வை மேம்படுத்தும் நோக்கத்தில் சுற்றுச்சூழலுக்குச் சாதகமான கழிப்பிடங்களை, தொண்டு நிறுவனம் ஒன்று அமைத்து வருகின்றது.
ஒவ்வொரு தடவை பயன்படுத்திய பின்னரும், கரும்புச் சக்கையை மேலே போட்டுவிடுவதன் மூலம் கிருமித்தொற்று அபாயத்தைக் குறைப்பதுதான் இந்தக் கழிப்பறையில் உள்ள வித்தியாசம்.
அதன்பின்னர், மலக்கழிவுகள் ஓரிடத்துக்கு கொண்டுசெல்லப்பட்டு, கடுமையான வெப்பத்தின் மூலம் ஆபத்தான நுண்கிருமிகள் அழிக்கப்பட்டுவிடும். இந்தக் கழிவுகள் இயற்கை உரமாக மாற்றப்பட்டு தோட்டங்களில் பயன்படுத்தப்படுகின்றன.

ஆதாரம் : பிபிசி

No comments:

Post a Comment