Wednesday 24 September 2014

செய்திகள் - 23.09.14

செய்திகள் - 23.09.14
------------------------------------------------------------------------------------------------------

1. எபோலா நோய்ப் பிரச்சனை முடிவுக்குவர திருத்தந்தை செபம்

2. திருத்தந்தை : குடியேற்றதாரரிடம் வெறும் சகிப்புத்தன்மையைக் காட்டினால் மட்டும் போதாது

3. இத்தாலியப் பங்குத்தளங்களில் 4,000 குடியேற்றதாரர்

4. திருத்தந்தை பிரான்சிஸ் : கிறிஸ்தவ வாழ்வு எளிமையானது 

5. நீதியையும் அமைதியையும் உலகில் ஊக்குவிக்க யூதர்களுக்கு அழைப்பு, திருத்தந்தை

6. மதங்களின் தலைவர்கள் ஒன்றிணைந்து நாட்டின் வளர்ச்சிக்குப் பணிசெய்யுமாறு வலியுறுத்தல், கர்தினால் கிரேசியஸ்

7. பிலிப்பைன்ஸ் திருப்பயணம் : “கருணையும் பரிவன்பும்

8. உலக வெப்பநிலைப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கு உலகினர் அனைவருக்கும் பொறுப்புள்ளது
------------------------------------------------------------------------------------------------------

1. எபோலா நோய்ப் பிரச்சனை முடிவுக்குவர திருத்தந்தை செபம்

செப்.23,2014. ஆப்ரிக்காவைப் பாதித்துள்ள எபோலா நோய்ப் பிரச்சனை முடிவுக்கு வருவதற்குத் தான் செபிப்பதாகவும், இந்நோயாளிகள் மத்தியில் பணிசெய்யும் அனைவரையும் தான் பாராட்டி ஊக்குவிப்பதாகவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆயர்கள் திருத்தந்தையைச் சந்திக்கும் அட் லிமினாவையொட்டி ஆப்ரிக்காவின் கானா நாட்டு ஆயர்களை இச்செவ்வாயன்று வத்திக்கானில் சந்தித்த திருத்தந்தை, கானா நாட்டில் மட்டுமல்லாமல், மேற்கு ஆப்ரிக்காவில் எபோலா நோயால் பாதிக்கப்பட்டுள்ள பிற நாடுகளிலும் திருஅவையின் நலவாழ்வுப் பணிகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதாகத் தெரிவித்தார்.
இந்நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்தபோது அதனால் தாக்கப்பட்டு இறந்த குருக்கள், துறவிகள் உட்பட இந்நோயால் இறந்த அனைவரையும் நினைத்துச் செபிப்பதாகவும், இந்நோய் மேலும் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படுவதற்கு நலவாழ்வுப் பணியாளர்களைத் ஊக்குவிப்பதாகவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.   
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கானா ஆயர்களுக்குக் கூற விரும்பிய கருத்துக்கள் உரை வடிவில் அவர்களிடம் கொடுக்கப்பட்டன.
மேற்கு ஆப்ரிக்க நாடாகிய கானாவில் வாழும் 2 கோடியே 70 இலட்சம் மக்களில் ஏறக்குறைய 15 விழுக்காட்டினர் கத்தோலிக்கர். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. திருத்தந்தை : குடியேற்றதாரரிடம் வெறும் சகிப்புத்தன்மையைக் காட்டினால் மட்டும் போதாது

செப்.23,2014. ஓர் உலகளாவியக் கூறாக மாறியிருக்கின்ற மக்களின் குடியேற்றம் முன்வைக்கும் சவால்களை, பரந்த பிறரன்புச் செயல்கள்மூலம் எதிர்கொள்ள வேண்டுமென்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கேட்டுள்ளார்.
2015ம் ஆண்டு சனவரி 18ம் தேதியன்று கடைப்பிடிக்கப்படும், உலக குடியேற்றதாரர் மற்றும் புலம்பெயர்ந்தோர் நாளுக்கென வெளியிட்டுள்ள செய்தியில், குடியேற்றதாரர் விவகாரத்தை இன்னும் உறுதியான மற்றும் தெளிவான திட்டங்கள் மூலம் கையாளுமாறு வேண்டுகோள்விடுத்துள்ளார் திருத்தந்தை.
இவ்வாறு செயல்படுவதன்மூலம், வெட்கமானதும் குற்றச்செயலுமான மனித வியாபாரம், அடிப்படை உரிமைகள் மீறப்படல், அனைத்துவிதமான வன்முறை, அடக்குமுறை மற்றும் அடிமைத்தனம் ஆகியவற்றுக்கு எதிரான நடவடிக்கைகளில் மேலும் சாரமுள்ள வகையில் ஈடுபடுவதற்கு உதவும் என்றும் திருத்தந்தையின் செய்தி கூறுகிறது.
குடியேற்றதாரர்மீது சகிப்புத்தன்மையைக் காட்டினால் மட்டும் போதாது, அவர்கள் வரவேற்கப்பட்டு, அவர்கள்மீது ஒருமைப்பாட்டுணர்வு காட்டப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை.
ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் ஒருமைப்பாட்டுக் கலாச்சாரத்தை, திருஅவை உலகெங்கும் பரப்புகிறது, திருஅவையின் இப்பணியில் யாருமே பயனற்றவர்களாக, ஒதுக்கப்பட்டவர்களாக அல்லது அந்நியராகப் பார்க்கப்படுவதில்லை என்றும் திருத்தந்தை தனது செய்தியில் கூறியுள்ளார்.
எனினும், குடியேற்றதார மக்கள் எதிர்கொண்ட அடக்குமுறை மற்றும் வறுமை வாழ்வை அறிவதற்கு முன்னரே, அவர்கள்மீது அடிக்கடி சந்தேகமும், வெறுப்பும் காட்டப்படுகின்றது, இதனை திருஅவை சமூகங்களில்கூட காண முடிகின்றது என்று எழுதியுள்ள திருத்தந்தை, இயேசு குடியேற்றதாரரையும், புலம்பெயர்ந்தோரையும் ஏற்பதற்கு எப்பொழுதும் காத்திருந்தார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு இடையே உயிர்த்துடிப்பான ஒத்துழைப்பு நிலவினால் மட்டுமே குடியேற்றதாரர் பிரச்சனைக்குத் தீர்வு காண இயலும் என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.
"எல்லைகளற்ற திருஅவை, அனைவருக்கும் தாய்" என்ற தலைப்பிலான திருத்தந்தையின் இச்செய்தியை, திருப்பீட குடியேற்றதாரர் மற்றும் புலம்பெயர்ந்தோர் அவையின் தலைவர் கர்தினால் Antonio Maria Vegliò, தன் செயலர் ஆயர் Joseph Kalathiparambil ஆகிய இருவரும் இச்செவ்வாயன்று பத்திரிகையாளர் கூட்டத்தில் வெளியிட்டனர். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. இத்தாலியப் பங்குத்தளங்களில் 4,000 குடியேற்றதாரர்

செப்.23,2014. பங்குத்தளங்கள் மற்றும் துறவு நிறுவனங்கள் தங்களின் இடங்களை குடியேற்றதாரருக்கும், புலம்பெயர்ந்தோருக்கும் திறக்கவேண்டுமென, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஓராண்டுக்குமுன் விடுத்த அழைப்பை ஏற்று, இத்தாலியிலுள்ள பங்குத்தளங்களும், துறவு நிறுவனங்களும் 4,000 குடியேற்றதாரர்க்குப் புகலிடம் அளித்துள்ளன என்று இத்தாலிய ஆயர் பேரவை அறிவித்தது.
2015ம் ஆண்டில் கடைப்பிடிக்கப்படும், உலக குடியேற்றதாரர் மற்றும் புலம்பெயர்ந்தோர் நாளுக்கான திருத்தந்தையின் செய்தி இச்செவ்வாயன்று வெளியிடப்பட்டபோது இதனை அறிவித்தார் இத்தாலிய ஆயர் பேரவையின் குடியேற்றதாரர் ஆணைக்குழுத் தலைவர் ஆயர் ஜான்கார்லோ பெரெகோ.
2013ம் ஆண்டில் உலகில் 23 கோடியே 20 இலட்சம் குடியேற்றதாரர் இருந்தனர். இவ்வெண்ணிக்கை, 1990க்கும் 2013ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் ஏறக்குறைய 50 விழுக்காடு அதிகரித்தது எனக் கூறப்படுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. திருத்தந்தை பிரான்சிஸ் : கிறிஸ்தவ வாழ்வு எளிமையானது 

செப்.23,2014. கிறிஸ்தவ வாழ்வு என்பது இறைவார்த்தைக்குச் செவிசாய்த்து அதை வாழ்வில் நடைமுறைப்படுத்தும் எளிய வாழ்வாகும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இச்செவ்வாயன்று கூறினார்.
வத்திக்கான் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் இச்செவ்வாய் காலை  நிகழ்த்திய திருப்பலியில், இந்நாளைய நற்செய்தி வாசகத்தை(லூக்.8:19-21) மையமாக வைத்து ஆற்றிய மறையுரையில், யாரும் புரிந்துகொள்ள முடியாத வகையில், நாம் பல காரியங்களுக்கு, மிகப் பல விளக்கங்களை அளித்து அவற்றைக் கடினமாக்குகின்றோம், ஆனால், இறைவார்த்தைக்குச் செவிசாய்த்து அதை நடைமுறைப்படுத்துவதே  கிறிஸ்தவ வாழ்வு என்று கூறினார் திருத்தந்தை .
இயேசுவின் தாயும் சகோதரர்களும் அவரைக் காணச் சென்றார்கள். ஆனால் மக்கள் திரளாக இருந்த காரணத்தால் அவரை அவர்களால் அணுகமுடியவில்லை. கிறிஸ்து மக்கள்திரளிடம் அதிகாரத்தோடு பேசியது அவர்களுக்குப் புதியதாக இருந்தது, இதனாலே அவரை மக்கள் பெருந்திரளாகப் பின்சென்றார்கள் என்றும் கூறினார் திருத்தந்தை.
தங்கள் இதயத்தில் அவ்வளவாகத் தூய்மையின்றி, தங்களது வசதிக்காகப் இயேசுவைப் பின்சென்றவர்களும் இருந்தனர், கொஞ்சம் நல்லவர்களாக வாழலாம் என்ற ஆவலில் ஒருவேளை இவர்கள் பின்சென்றிருக்கலாம், கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் சிறிதளவே மாற்றம் இடம்பெற்றுள்ளது என்று விளக்கினார் திருத்தந்தை.
தங்களுக்குக் கிடைத்த புதிய நலவாழ்வில் மகிழ்ந்த அந்த ஒன்பது தொழுநோயாளர் போல இன்றும் பலர் இயேசுவின் வார்த்தையைக் கேட்டுவிட்டு பின்னர் மறந்துவிடுகின்றனர் என்றும் திருத்தந்தை கூறினார்.
ஒவ்வொரு தடவையும் நற்செய்தியைத் திறந்து ஒரு பகுதியை நாம் வாசிக்கும்போது இப்பகுதி எனக்கு என்ன சொல்கின்றது என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும், அதில் இயேசு எதுவும் கூறினால் அவர் கூறுவது என்ன என அறிய வேண்டும், இவ்வாறு இறைவார்த்தையை நம் காதுகளிலும் இதயங்களிலும் கேட்க வேண்டும் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இயேசுவின் இறைவார்த்தையைக் கேட்டு, பின்னர் அவரை மறுதலிப்பவர்களையும் அவர் வரவேற்கிறார், ஆண்டவரே உமது கட்டளைகளின் பாதையில் எம்மை வழிநடத்தும் எனச் செபிப்போம் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. நீதியையும் அமைதியையும் உலகில் ஊக்குவிக்க யூதர்களுக்கு அழைப்பு, திருத்தந்தை

செப்.23,2014. நீதியும் அமைதியும் அதிகமாகத் தேவைப்படும் ஓர் உலகில் அவற்றை ஊக்குவிப்பதில் யூதர்களும், கத்தோலிக்கரும் ஒன்றுசேர்ந்து உழைக்குமாறு கேட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வருகின்ற நாள்களில் யூதர்கள் சிறப்பிக்கும் புத்தாண்டு மற்றும் பிற விழாக்களை முன்னிட்டு உரோம் யூதமத ரபி ரிக்கார்தோ தெ செஞ்ஞி அவர்களுக்குச் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ள திருத்தந்தை இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
உலகில் நீதி மற்றும் அமைதியை ஊக்குவிப்பதில் யூதர்களும், கத்தோலிக்கரும் ஒன்றுசேர்ந்து உழைப்பதற்கு இறைவன் வரம் அருள்வாராக என்று கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், யூதர்கள் அனைவருக்கும் தனது நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
Rosh Hashana  என்ற யூதர்களின் புத்தாண்டுதினக் கொண்டாட்டங்கள் செப்டம்பர் 25,26 தேதிகளிலும், பிராயச்சித்த நாள் அக்டோபர் 4ம் தேதியும், கூடாரத் திருவிழா அக்டோபர் 9,10 தேதிகளிலும் சிறப்பிக்கப்படுகின்றன. 
மேலும், சமுதாயம் கடவுளை இழக்கும்போது, பொருளாதார வளமைகூட கடும் ஆன்மீக வறுமையால் இணைக்கப்படும் என்ற வார்த்தைகளை, இச்செவ்வாயன்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

6. மதங்களின் தலைவர்கள் ஒன்றிணைந்து நாட்டின் வளர்ச்சிக்குப் பணிசெய்யுமாறு வலியுறுத்தல், கர்தினால் கிரேசியஸ்

செப்.23,2014. இந்தியாவில், மதங்களின் தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து மனித சமுதாயத்துக்கும் நாட்டின் வளர்ச்சிக்கும் பணிசெய்யுமாறு வலியுறுத்தியுள்ளார் மும்பை பேராயர் கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ்.
இந்தியாவில் பல்வேறு ஆன்மீக மரபுகள் என்ற தலைப்பில் திபெத் புத்தமதத் தலைவர் தலாய் லாமா அவர்கள் புதுடெல்லியில் ஏற்பாடு செய்த கூட்டத்தில் உரையாற்றிய கர்தினால் கிரேசியஸ், மதங்களின் தலைவர்கள் தங்களுக்கிடையேயான வேற்றுமைகளை மறந்து, நாட்டின் வளர்ச்சிக்காகப் பணிசெய்யுமாறு கேட்டுக் கொண்டார்.
வன்முறையும், போரும், வறுமையும், மனித மாண்புக்குத் தேவையான பொருளாதார நீதியும், மனித ஒருமைப்பாட்டுணர்வும், சுற்றுச்சூழலும், வெப்பநிலை மாற்றமும் ஆகிய முக்கிய விவகாரங்கள் குறித்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தாலியின் ரெதிபுல்யா இராணுவக் கல்லறையில் பேசியதையும் குறிப்பிட்டார் கர்தினால் கிரேசியஸ்.
இந்தக் கூட்டத்தில், இந்து, கிறிஸ்தவம், புத்தம், இஸ்லாம், யூதம், சொராஸ்ட்ரியனிசம், சீக்கியம், ஜைனம் போன்ற மதங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். 

ஆதாரம் : AsiaNews                 

7. பிலிப்பைன்ஸ் திருப்பயணம் : “கருணையும் பரிவன்பும்

செப்.23,2014. கருணையும் பரிவன்பும் என்பது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பிலிப்பைன்ஸ் நாட்டுத் திருப்பயணத்தின் தலைப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வருகிற சனவரி 15 முதல் 19 வரை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொள்ளும் பிலிப்பைன்ஸ் நாட்டுத் திருப்பயணத்தின் கருப்பொருளாக இத்தலைப்பைத் தேர்ந்தெடுத்துள்ளதோடு, புதிய இணையதளம்(www.papalvisit.ph) ஒன்றையும் திறந்துள்ளதாக, பிலிப்பைன்ஸ் ஆயர் பேரவை அறிவித்துள்ளது.
இத்தலைப்பு பற்றிப் பேசிய பிலிப்பைன்ஸ் ஆயர் பேரவையின் ஊடகத்துறைத் தலைவர் ஆயர் Mylo Vergara அவர்கள், திருத்தந்தையின் பிரசன்னத்தால், இறைவனின் கருணையும் பரிவன்பும் பிலிப்பைன்ஸ் மக்களுக்கு அருளப்படும் எனக் கூறினார். 
மேலும், 2015ம் ஆண்டு சனவரி  13 முதல் 15 வரை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொள்ளும் இலங்கைத் திருப்பயணத்தின் கருப்பொருள், என் அன்பில் நிலைத்திருங்கள் என்பதாகும்.

ஆதாரம் : CWN

8. உலக வெப்பநிலைப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கு உலகினர் அனைவருக்கும் பொறுப்புள்ளது

செப்.23,2014. உலக வெப்பநிலைப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பது, அரசுகள், வணிக அமைப்புகள், தொழில் நிறுவனங்கள், நிதியமைப்புகள், குடிமக்கள் சமுதாயம் என, அனைத்துத் தரப்புகளையும் சார்ந்துள்ளது என்று ஐ.நா.பொதுச்செயலர் பான் கி மூன் அவர்கள் கூறினார்.
நியுயார்க் நகரில் வெப்பநிலை வாரம் கடைப்பிடிக்கப்படுவதையொட்டி மூன்று இலட்சம் பேர் கலந்து கொண்ட பேரணிக்குப் பின்னர் உரையாற்றிய பான் கி மூன் அவர்கள்,  இச்செவ்வாயன்று நியுயார்க் நகரில் தொடங்கப்பட்டுள்ள வெப்பநிலை மாற்றம் குறித்த உலக மாநாட்டில் திட்டவட்டமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்ற தனது நம்பிக்கையையும் தெரிவித்தார்.
120 அரசுகள் மற்றும் நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் இம்மாநாட்டில், 2015ம் ஆண்டில் வெப்பநிலையை மட்டுப்படுத்துவது குறித்து ஒரு தெளிவான மற்றும் திட்டவட்டமான கண்ணோட்டங்களுடன் தீர்மானங்கள் எடுக்கப்படும் என்ற தனது எதிர்பார்ப்பையும் தெரிவித்தார் பான் கி மூன்.

ஆதாரம் : UN

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...