Sunday 21 September 2014

'இறைவனின் கொடை'யாக விளங்கிய திருத்தூதர்

'இறைவனின் கொடை'யாக விளங்கிய திருத்தூதர்

சுங்கச் சாவடியில் அமர்ந்திருந்த ஒருவரை இயேசு அழைத்தார் என்ற நிகழ்வை, மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய மூன்று நற்செய்தியாளர்களும் குறிப்பிடுகின்றனர். வரி என்ற பெயரில், மக்களை ஏமாற்றிக்கொண்டு, அவர்களின் வெறுப்பைச் சம்பாதித்துக் கொண்டு இருந்தவரை, அவர் பணியாற்றிவந்த சுங்கச் சாவடிக்குள்ளேயே சென்று இயேசு அழைத்தார். அவரும், அந்த அழைப்பினால் ஈர்க்கப்பெற்று, தான் சேர்த்துவைத்திருந்த செல்வத்தை அந்த இடத்திலேயே விட்டுவிட்டு, இயேசுவைப் பின்தொடர்ந்தார். மாற்கு, லூக்கா இருவரும், அவருக்கு 'லேவி' என்ற பெயரை வழங்கியுள்ளனர். நற்செய்தியாளர் மத்தேயு, அவரை 'மத்தேயு' என்று பெயரிட்டு, தன்னையே அறிமுகப்படுத்தியுள்ளார். 'மத்தேயு' அல்லது 'மத்தியாஸ்' என்ற பெயருக்கு, 'இறைவனின் கொடை' என்று பொருள்.
இஸ்ரயேல் மக்களால் மிகவும் வெறுத்து ஒதுக்கப்பட்ட வரிதண்டுபவர்கள் கூட்டத்தில் ஒருவரான மத்தேயுவை இயேசு அழைத்தார். அதுமட்டுமல்ல, அவரை, பன்னிரு திருத்தூதர்களில் ஒருவராகவும் இயேசு தேர்ந்தார். மத்தேயு ஒரு நற்செய்தியாளர்  என்றாலும், அவரைப்பற்றி மிகக் குறைவான தகவல்களே நற்செய்திகளில் சொல்லப்பட்டுள்ளன. இயேசு அவரை அழைத்ததையும், அவர் இயேசுவுக்கு தன் வீட்டில் விருந்தளித்ததையும் மட்டுமே நாம் நற்செய்தியில் வாசிக்கிறோம்.
மீன் பிடிப்பவர்களாக வாழ்ந்த சீமோன், யாக்கோபு, யோவான் போன்ற சீடர்கள், மக்களைப் பிடிப்பவர்களாக மாறியதுபோல, உரோமைய அரசுக்கு வரிதிரட்டி வாழ்ந்த மத்தேயு, இறையரசுக்கு மக்களைத் திரட்டுபவராக மாறினார். இயேசுவின் உயிர்ப்பிற்குப் பின், இவர், பாரசீகம், சிரியா, கிரேக்கம் ஆகிய நாடுகளில் நற்செய்தியைப் பறைசாற்றி, இறுதியில் எத்தியோப்பியா சென்றார் என்று சொல்லப்படுகிறது. இவரது மரணம் குறித்தும் சரியானத் தகவல்கள் இல்லை.
பன்னிரு திருத்தூதர்களில் ஒருவராகவும், நான்கு நற்செய்தியாளர்களில் ஒருவராகவும் விளங்கிய மத்தேயு அவர்களின் திருநாள், செப்டம்பர் 21ம் தேதி சிறப்பிக்கப்படுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...