செய்திகள் - 17.09.14
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. அருளாளர் ஜோசப் வாஸ் புனிதராக உயர்த்தப்பட திருத்தந்தை அங்கீகாரம்
2. திருத்தந்தை : அல்பேனியத் திருப்பயணத்துக்காகச் செபிக்க அழைப்பு
3. எங்களைக் காப்பாற்றுங்கள், ஐ.நா.வில் மத்திய கிழக்குக் கிறிஸ்தவத் தலைவர்கள்
4. அமைதிக்காக உழைக்கும் உலகம் உண்மையுள்ளது, திருப்பீடத் தூதர்
5. ஜம்மு-காஷ்மீரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்க்கு உதவிக்கு விண்ணப்பம்
6. மரணதண்டனை நிறைவேற்றுவதை நிறுத்துக, பாகிஸ்தான் திருஅவை
7. ஆப்ரிக்க தென்மண்டலப் பகுதியில், எய்ட்ஸ் நோயால் குடும்பங்கள் சிதைவு
8. ஓசோன் வாயுப்படலம் அடுத்த சில பத்தாண்டுகளில் சீராகும், ஐ.நா.
9. சர்க்கரையின் அளவைப் சரிபாதியாகக் குறைக்கப் பரிந்துரை
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. அருளாளர் ஜோசப் வாஸ் புனிதராக உயர்த்தப்பட திருத்தந்தை அங்கீகாரம்
செப்.17,2014. இலங்கைத்
திருஅவையின் தூணாக நோக்கப்படும் அருளாளர் ஜோசப் வாஸ் அவர்கள் புனிதராக
உயர்த்தப்படுவதற்கு ஆதரவாக கர்தினால்கள் மற்றும் ஆயர்கள் குழு வழங்கிய
வாக்கெடுப்பை அங்கீகரித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், அருளாளர்கள் ஜோசப் வாஸ், அமலமரியின்
மரிய கிறிஸ்தினா ஆகிய இருவரின் புனிதர்பட்டம் குறித்த கர்தினால்கள் அவையை
விரைவில் திருத்தந்தை கூட்டுவார் எனவும் இப்புதனன்று அறிவித்தது
திருப்பீடம்.
இன்னும், அருளாளர் அமலமரியின் மரிய கிறிஸ்தினா, இறையடியார்கள் ஆல்பெர்த்தோ தெல் கொரோனா, மரிய எலிசபெத் துர்ஜியோன் ஆகியோரின் பரிந்துரைகளால் நடந்த புதுமைகளையும் அங்கீகரித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்தியாவின் கோவா மாநிலத்தின் Benaulinல் 1651ம் ஆண்டு ஏப்ரல் 21ம் தேதி பிறந்த அருளாளர் ஜோசப் வாஸ், 1711ம்
ஆண்டு சனவரி 16ம் தேதி இலங்கையின் கண்டியில் காலமானார். புனித பிலிப்நேரி
மறையுரையாளர்கள் சபையைச் சார்ந்த அருளாளர் ஜோசப் வாஸ், கோவா நகரில் புனித திருச்சிலுவை மறையுரையாளர்கள் அமைப்பை உருவாக்கியவர்.
மேலும், டச்சுக்காரர்களின்
அடக்குமுறைகளுக்கு மத்தியிலும் இன்று இலங்கையில் கத்தோலிக்கத் திருஅவை
உயிர்த்துடிப்புடன் இருக்கின்றது என்றால் அதற்கு அருளாளர் ஜோசப் வாஸ்
அவர்களே காரணம் என்று, அண்மையில் கொழும்புப் பேராயர் கர்தினால் மால்கம் ரஞ்சித் அவர்கள் கூறினார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. திருத்தந்தை : அல்பேனியத் திருப்பயணத்துக்காகச் செபிக்க அழைப்பு
செப்.17,2014.
வருகிற ஞாயிறன்று தான் மேற்கொள்ளவுள்ள அல்பேனிய நாட்டுக்கானத்
திருப்பயணத்துக்காகச் செபிக்குமாறு இப்புதன் பொது மறையுரையின் இறுதியில்
அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் நடந்த பொது மறையுரையின் இறுதியில் இவ்வாறு அழைப்புவிடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வருகிற ஞாயிறன்று கடவுளின் உதவியால் நான் அல்பேனியவுக்குச் செல்கிறேன், கடுமையான கடவுள்நம்பிக்கையற்ற ஆட்சியால் இந்நாடு மிகவும் துன்புற்றுள்ளதால் இந்நாட்டுக்குச் செல்வதற்கு நான் தீர்மானித்தேன், இந்நாட்டில் தற்போது பல்வேறு மதத்தவர் அமைதியான நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருகின்றனர் எனத் தெரிவித்தார்.
இப்புதன் பொது மறையுரையில், இத்திருப்பயணம் மேற்கொள்ள வாய்ப்பளித்த அல்பேனிய மக்களுக்குத் தனது சிறப்பு வாழ்த்துக்களைத் தெரிவித்த திருத்தந்தை, இத்திருப்பயணத்தில் செபத்தால் தன்னோடு இணைந்திருந்து, நல்லாலோசனை அன்னையின் பரிந்துரையைக் கேட்குமாறும் கூறினார்.
வருகிற ஞாயிறன்று திருத்தந்தை மேற்கொள்ளும் அல்பேனியத் திருப்பயணம், இத்தாலிக்கு வெளியே அவர் மேற்கொள்ளும் முதல் ஐரோப்பியத் திருப்பயணமாகும்.
தென்கிழக்கு ஐரோப்பிய நாடான அல்பேனியாவில், 2011ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி 58.79 விழுக்காட்டினர் முஸ்லிம்கள். 16.99 விழுக்காட்டினர் கிறிஸ்தவர்கள்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. எங்களைக் காப்பாற்றுங்கள், ஐ.நா.வில் மத்திய கிழக்குக் கிறிஸ்தவத் தலைவர்கள்
செப்.17,2014.
ஈராக் மற்றும் சிரியாவில் ஐஸ்ஐஸ் இஸ்லாம் தீவிரவாதிகள் நடத்திவரும்
படுகொலைகள் மற்றும் வன்கொடுமை அட்டூழியங்களிலிருந்து சிறுபான்மை இனத்தவரைப்
பாதுகாக்குமாறு ஐக்கிய நாடுகள் நிறுவனத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்
மத்திய கிழக்குத் திருஅவைகளின் தலைவர்கள்.
மத்திய
கிழக்குப் பகுதியின் கீழை வழிபாட்டுமுறைத் திருஅவைகளின் முதுபெரும்
தந்தையர்கள் ஜெனீவாவில் ஐ.நா. கூட்டத்தில் இச்செவ்வாயன்று உரையாற்றியபோது
இவ்வாறு கேட்டுள்ளனர்.
ஐஸ்ஐஸ் அமைப்பினரின் நடவடிக்கைகள் கடுமையாய்க் கண்டனம் செய்யப்பட்டு அவர்கள் தடைசெய்யப்படாவிடில், ஐஸ் கருத்துக்கோட்பாடு மனித உரிமைகளின் முழு அமைப்பையுமே சேதப்படுத்தும், வலுவற்ற மக்களின் பாதுகாப்புக்கு அது ஆபத்தை முன்வைக்கும் என்று முதுபெரும் தந்தையர்கள் எச்சரித்துள்ளனர்.
இதற்கிடையே, ஐஸ்ஐஸ் அமைப்பின் கட்டுப்பாட்டிலுள்ள ஈராக்கின் Mosul நகரில் புதிய கல்வியாண்டு தொடங்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களைப் போன்று அந்நகர்ப் பள்ளிகளில் கலையோ இசையோ கிடையாது. வரலாறு, இலக்கியம், கிறிஸ்தவம் ஆகிய பாடங்கள் நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளன எனக் கூறப்படுகின்றது.
ISIS என்பது Islamic State of Iraq and Syria என்பதன் சுருக்கமாகும்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
4. அமைதிக்காக உழைக்கும் உலகம் உண்மையுள்ளது, திருப்பீடத் தூதர்
செப்.17,2014. அமைதியை ஒரேயடியாகப் பெற முடியாது, மாறாக, அது அன்றாட வாழ்வில் நீதிக்காக முயற்சிப்பது மற்றும் ஒருவர் ஒருவரை மதிப்பதன் பயனாகக் கிடைப்பதாகும் என, ஐ.நா.வுக்கான திருப்பீடத்தின் புதிய நிரந்தரப் பார்வையாளர் கூறினார்.
நியுயார்க்கில் தொடங்கியுள்ள 69வது ஐ.நா.பொது அவைக்காக இடம்பெற்ற பல்சமய செப வழிபாட்டில் இவ்வாறு உரைத்த பேராயர் Bernardito Auza அவர்கள், மத நம்பிக்கையாளர்களுக்கு, அமைதி, மனித முயற்சிகளால் மட்டும் ஏற்படுவதில்லை, ஆனால் அது இறைவனின் கொடையாகப் பெறப்படுவதாகும் என்று கூறினார்.
குருக்கள், அரசியல் தூதர்கள், ஐ.நா. பணியாளர்கள் எனப் பலர் கலந்துகொண்ட இச்செப வழிபாட்டில், ஐ.நா. நிறுவனம் உருவாக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேற அனைவரும் செயல்படுமாறு வலியுறுத்தினார் பேராயர் Auza.
மேலும், இச்செவ்வாயன்று தொடங்கியுள்ள 69வது ஐ.நா.பொது அவையில், மில்லென்ய வளர்ச்சித் திட்ட இலக்கின் அடுத்த கட்டம் விவாதிக்கப்பட்டு வருகிறது.
193
உறுப்பு நாடுகள் பங்கெடுக்கும் இந்த அவையில் இம்மாதம் 24ம் தேதியிலிருந்து
நாடுகளின் தலைவர்கள் உரையாற்றத் தொடங்குவார்கள் எனவும்
அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆதாரம் : CNS
5. ஜம்மு-காஷ்மீரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்க்கு உதவிக்கு விண்ணப்பம்
செப்.17,2014. கடந்த வாரத்தில் ஜம்மு-காஷ்மீரில் ஏற்பட்ட பெருவெள்ளம் வரலாற்றில் இதுவரை கண்டிராத வெள்ளம் என்றும், இது அனைத்தையும் அடித்துச்சென்றுள்ளது என்றும் ஜம்மு-ஸ்ரீநகர் ஆயர் பீட்டர் செலஸ்டின் கூறினார்.
இவ்வெள்ளம் மக்களின் வாழ்வையும், வாழ்வாதாரங்களையும் ஒன்றுமில்லாமல் ஆக்கியுள்ளது என்று ஆயர் செலஸ்டின் மேலும் கூறினார்.
அப்பகுதியில் பெய்த பருவமழையால் Jhelum நதியில்
வெள்ளம் பெருக்கெடுத்து காஷ்மீர் பள்ளத்தாக்கில் பெருவெள்ளத்தை
ஏற்படுத்தியது. இதனால் பள்ளத்தாக்கிலுள்ள ஏறக்குறைய 600 கிராமங்கள் நீரில்
மூழ்கியுள்ளன.
மேலும், 1,30,000 பேர் மீட்கப்பட்டுள்ளனர், மேலும் 3 இலட்சம் கிராமத்தினர் உதவிக்காகக் காத்திருக்கின்றனர் என்று நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள இயேசு சபை குருக்கள் கூறினர்.
ஆதாரம் : Fides
6. மரணதண்டனை நிறைவேற்றுவதை நிறுத்துக, பாகிஸ்தான் திருஅவை
செப்.17,2014. பாகிஸ்தானில், செப்டம்பர் 18, இவ்வியாழனன்று Shoaib Sarwar என்ற முஸ்லிமுக்கு நிறைவேற்றப்படவுள்ள மரணதண்டனையை நிறுத்துமாறு, அந்நாட்டு ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதி ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.
கொலைக் குற்றம் தொடர்பாக 1998ம் ஆண்டில் மரணதண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட Shoaib Sarwar
என்பவருக்கு அத்தண்டனையை நிறைவேற்றுவதன்மூலம் பாகிஸ்தானில் நிறுத்தி
வைக்கப்பட்டிருந்த இத்தண்டனை மீண்டும் செயல்படுத்துவதாக இருக்கும் என்று, அந்த ஆணைக்குழுவின் இயக்குனர் Cecil Shane Chaudhry கூறினார்.
இவ்வியாழனன்று இம்மரணதண்டனை நிறைவேற்றப்பட்டால், பாகிஸ்தானில் கடந்த ஆறு ஆண்டுகளில் முதல்முறையாக ஒரு குடிமகனுக்கு நிறைவேற்றப்படும் மரணதண்டனையாக இது இருக்கும்.
இம்மரணதண்டனையை எதிர்த்து, ஆம்னஸ்டி இன்டெர்நேஷனல் உட்பட பல்வேறு மனித உரிமை அமைப்புகள் குரல் எழுப்பி வருகின்றன.
பாகிஸ்தானில் தற்போது எட்டாயிரத்துக்கு அதிகமான மரணதண்டனை கைதிகள் உள்ளனர்.
ஆதாரம் : Fides
7. ஆப்ரிக்க தென்மண்டலப் பகுதியில், எய்ட்ஸ் நோயால் குடும்பங்கள் சிதைவு
செப்.17,2014. உலகில் எய்ட்ஸ் நோய் அதிகமாகப் பரவியுள்ள ஆப்ரிக்க தென்மண்டலப் பகுதியில், எய்ட்ஸ் நோயால் குடும்பங்கள் சிதறுண்டு துன்புறுகின்றன என்று அப்பகுதி ஆயர் ஒருவர் கூறினார்.
எய்ட்ஸ்
நோயால் பெற்றோரை இழந்துள்ள குடும்பங்களிலுள்ள பிள்ளைகளில் மூத்தவர்கள்
தங்களின் தம்பி தங்கைகளைப் பராமரிக்கும் நிலைக்கு உட்பட்டுள்ளனர் எனவும், சில குடும்பங்களில் பாட்டிமார் பேரக்குழந்தைகளைப் பராமரிக்கின்றனர் எனவும், ஆப்ரிக்க தென்மண்டல ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதி ஆணைக்குழுவின் உதவித்தலைவர் ஆயர் Kevin Dowling கூறினார்.
எய்ட்ஸ்
நோய்ப் பெற்றோரை இழந்துள்ள குடும்பங்களில் பெரும்பாலும் சிறுமிகளே தங்கள்
குடும்பத்தைக் கவனிக்க வேண்டிய நிலையில் உள்ளனர் என்றும் Rustenburg ஆயர் Kevin Dowling தெரிவித்தார்.
ஆப்ரிக்காவின்
சஹாராவையடுத்த பகுதியில் ஏறக்குறைய ஒரு கோடியே 51 இலட்சம் சிறார் தங்களின்
தாய்தந்தையரை அல்லது இருவரில் ஒருவரை இழந்துள்ளனர். ஜிம்பாபுவே
நாட்டிலுள்ள அநாதைச் சிறாரில் 74 விழுக்காட்டினரும், தென்னாப்ரிக்காவில் 63 விழுக்காட்டினரும் எய்ட்ஸ் நோய்ப் பெற்றோரைக் கொண்டிருந்தவர்கள் என ஐ.நா. கூறுகிறது.
தென்னாப்ரிக்காவிலுள்ள ஏறக்குறைய 5 கோடியே 10 இலட்சம் மக்களில் 64 இலட்சத்துக்கு அதிகமானோர் எய்ட்ஸ் நோய்க் கிருமிகளைக் கொண்டுள்ளனர்.
ஆதாரம் : CNS
8. ஓசோன் வாயுப்படலம் அடுத்த சில பத்தாண்டுகளில் சீராகும், ஐ.நா.
செப்.17,2014. ஓசோன் வாயுப்படலத்தில் ஏற்பட்டுள்ள சேதங்களைக் குறைப்பதில் காணப்படும் முன்னேற்றங்களைப் பாராட்டியுள்ள அதேவேளை, அடுத்த சில பத்தாண்டுகளில் ஓசோன் வாயுப்படலம் தனது நலமான நிலையை அடையும் என ஐ.நா. அதிகாரிகள் கூறியுள்ளனர்.
செப்டம்பர் 16, இச்செவ்வாயன்று, அனைத்துலக
ஓசோன் வாயுமண்டலப் பாதுகாப்பது தினம் கடைப்பிடிக்கப்பட்டதையொட்டி செய்தி
வெளியிட்ட ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் அவர்கள், ஓசோன் வாயுப்படலத்தில் ஏற்பட்டுள்ள சேதங்களைக் குறைப்பதற்கு கால் நூற்றாண்டுக்கு முன்னர் நாடுகள் தீவிர முயற்சியில் இறங்கின, அதன் பயனை இன்று காண முடிகின்றது என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே, ஓசோன் வாயுமண்டலப் பாதிப்பால் தீவுகள் கடலில் மூழ்கி வருகின்றன, என காந்திகிராமப் பல்கலைக்கழகத்தில் சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் நடந்த ஓசோன் தின கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.
சுற்றுச்சூழல்
மற்றும் பருவநிலை மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் மன்னார் வளைகுடாவில் உள்ள
21 தீவுகளும் கடலில் மூழ்கும் அபாயம் உருவாகியுள்ளதாக சுற்றுச்சூழல்
ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
ஆதாரம் : UN
9. சர்க்கரையின் அளவைப் சரிபாதியாகக் குறைக்கப் பரிந்துரை
செப்.17,2014. நம் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளும் சர்க்கரையின் அளவை ஒரு நாளைக்கு ஏறக்குறைய 15 கிராமாக குறைக்கவேண்டும் என்று பரிந்துரை செய்துள்ள மருத்துவர்கள், இதனை ஊக்குவிக்க அரசுகள் சர்க்கரை வரி என்கிற புதிய வரியை விதிக்கலாம் என்றும் ஆலோசனை கூறியுள்ளனர்.
உலக நலவாழ்வு நிறுவனமும், பிரிட்டனின்
நலவாழ்வு நிபுணர்களும் அண்மையில் அன்றாட உணவில் சேர்க்கப்படும்
சர்க்கரையின் அளவைச் சரிபாதியாக குறைக்கவேண்டும் என்று கோரிக்கை
விடுத்திருந்தார்கள்.
இன்றைய நிலையில் ஒருவரின் அன்றாட உணவில் இருந்து உடலுக்கு பெறப்படும் சக்தியின் அளவில் அதிகபட்சமாக 10 விழுக்காடுவரை உணவில் சேர்க்கப்படும் சர்க்கரையில் இருந்து கிடைக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
பற்களில் ஏற்படும் சிதைவுக்கு உணவில் சேர்க்கப்படும் சர்க்கரையே முக்கிய காரணியாக இருப்பதாக சுட்டிக்காட்டும் இலண்டன் ஆய்வாளர்கள், நம்
அன்றாட உணவில் சேர்க்கப்படும் சர்க்கரையின் அளவைக் குறைத்தால் மட்டுமே
பற்கள் மற்றும் ஈறுகளில் ஏற்படும் பலவகையான நோய்கள் குறையும் என்றும்
தெரிவித்துள்ளனர்.
ஆதாரம் : பிபிசி
No comments:
Post a Comment