செய்திகள் - 25.09.14
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. தற்பெருமைக்குள் உங்களை இழந்துவிடாதீர்கள், திருத்தந்தை
2. நம் பலவீனங்களையும், பாவங்களையும் புரிந்துகொள்பவர் இயேசு, திருத்தந்தை
3. பாகிஸ்தானில் அருள்பணியாளர் Bhatti சிறைக்குள்ளேயே சுட்டுக் கொலை
4. மத்திய கிழக்கு நாடுகளில் அமைதிக்கான வாய்ப்புகள் இன்னும் தெரிகின்றன, அமெரிக்க ஆயர்கள்
5. Boko Haram குழுக்களின் வன்செயல்களைத் தடுக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க ஆயர்கள் அழைப்பு
6. ஹிக்கடுவையில் கிறிஸ்தவ ஆலயம் மீது கழிவு எண்ணெய்த் தாக்குதல்
7. இலங்கையில் தொடரும் சித்ரவதைகள் குறித்து ஐ.நாவுக்கு அறிக்கை
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை : தற்பெருமைக்குள் உங்களை இழந்துவிடாதீர்கள்
செப்.25,2014. மக்கள்
உங்களைப் புகழவேண்டும் என்பதற்காக வாழ்ந்து தற்பெருமைக்குள் உங்களை
இழந்துவிடாதீர்கள் என்ற அறிவுரையை உள்ளடக்கியதாக திருத்தந்தை பிரான்சிஸ்
அவர்கள், இவ்வியாழன் காலை திருப்பலியில் வழங்கிய மறையுரை இருந்தது.
தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கிய திருத்தந்தை, நீங்கள் நோன்பிருக்கும்போதுகூட வாடிய முகத்துடன் இல்லாமல் மகிழ்வுடன் செயல்படுமாறு இயேசு கேட்டுள்ளதற்கான காரணம், ஆன்மீக விடயங்களிலும் பிறரன்பு நடவடிக்கைகளிலும் நாம் தற்பெருமை அடையக் கூடாது என்பதற்கே என்றார்.
பல கிறிஸ்தவர்கள் வெளிப்பார்வைக்காக வாழும்போது அவர்களின் அந்தத் தோற்றம் சவக்கார நுரைக்குமுளிபோல் ஒருநொடியில் மறைந்துவிடுகிறது, சில கல்லறைகள்கூட வெறும் ஆடம்பரம் நிறைந்ததாக, தற்பெருமையின் சின்னங்களாக இருப்பதைக் காணமுடிகிறது எனவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தற்பெருமை என்பது ஒருவர் தன்னையே ஏமாற்றிக்கொள்வதாகும், ஏனெனில் அது பொய்யானது, ஆனால் கடவுள் நம்பிக்கையே நிலையானது எனவும் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தற்பெருமை என்பது ஒரு சோதனை, அதிலிருந்து உண்மையே நம்மை விடுவிக்கிறது எனவும் கூறினார்.
நாம் தற்பெருமையின் பிடிக்குள் விழாமல், என்றும் உண்மையுள்ளவர்களாக இருக்கும்வண்ணம் இறையருளை நாடுவோம் எனவும் விசுவாசிகளை நோக்கி அழைப்பு விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. திருத்தந்தை : நம் பலவீனங்களையும், பாவங்களையும் புரிந்துகொள்பவர் இயேசு
செப்.25,2014. 'நம் பலவீனங்களையும், பாவங்களையும் புரிந்துகொள்ளும் இயேசு, நாம் நம்மை மன்னிக்க அனுமதிக்கும்போது, நம்மை மன்னித்து ஏற்கிறார்' என தன் டுவிட்டர் பக்கத்தில் இவ்வியாழனன்று எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், இவ்வியாழன்று திருப்பீடத்திற்கான பானமாவின் புதிய தூதுவர் Miroslava Rosas Vargasடமிருந்து நம்பிக்கைச் சான்றிதழைப் பெற்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இதேநாள் காலையில் திருப்பீடத்தில் இத்தாலியின் மிலான் பேராயர் கர்தினால் Angelo Scola, தென்கொரிய கர்தினால் Andrew Yeom Soo-jung, பெல்ஜியம், பெலோருஷ்யா, கொலம்பியா ஆகிய நாடுகளுக்கான திருப்பீடத் தூதர்களையும் சந்தித்தபின், அர்ஜென்டீனா நாட்டின் பிரபல எழுத்தாளர் Marcos Aguinis அவர்களையும் தனியாகச் சந்தித்து உரையாடினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. பாகிஸ்தான் :கிறிஸ்தவப் போதகர் சிறைக்குள்ளேயே சுட்டுக் கொலை
செப்.25,2014. பாகிஸ்தானின் தேவநிந்தனைச் சட்டத்தின்கீழ் பொய்யானக் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டிருந்த கிறிஸ்தவப் போதகர் Zafar Bhatti சிறைக்குள்ளேயே சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
ஏற்கனவே சிறைக்காவலர்களாலும் உடன் கைதிகளாலும், தான் மிரட்டலுக்கு உள்ளாகி வருவதாகவும், தன் உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும் இவர் குறிப்பிட்டிருந்தார்.
ராவல்பிண்டியின் Adyala சிறையில் குண்டுக் துழைத்த காயங்களுடன் இவர் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதைப் பற்றிக் கூறும் ஆசியா நியூஸ் செய்தி நிறுவனம், பாகிஸ்தானில் சட்ட விரோத மரணதண்டனைகள் நிறைவேற்றப்படுவதன் மேலும் ஓர் உதாரணம் என, இதனைச் சுட்டிக்காட்டியுள்ளது.
2012ம் ஆண்டு ஜூலை மாதம் தேவ நிந்தனைக்குற்றம் சுமத்தப்பட்டுச் சிறைவைக்கப்பட்ட 45 வயதான Zafar Bhatti மீதான குற்றச்சாட்டிற்கு இதுவரை எந்த ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்படவில்லை.
இதற்கிடையே,
மதநிந்தனைக் குற்றம் சுமத்தப்பட்டு பாகிஸ்தானிய சிறை ஒன்றில்
வைக்கப்பட்டிருந்த முஹம்மத் அஸ்கர் என்னும் 70 வயதான கைதி ஒருவர்
காவல்துறையைச் சார்ந்த ஒருவரால் சுடப்பட்டு, கடுமையாக காயமடைந்துள்ளார்.
ஆதாரம் : AsiaNews
4. மத்திய கிழக்கு நாடுகளில் அமைதிக்கான வாய்ப்புகள் இன்னும் தெரிகின்றன, அமெரிக்க ஆயர்கள்
செப்.25,2014. மத்திய
கிழக்கு நாடுகளில் அமைதிக்கான வாய்ப்புகள் இன்னும் காணப்படுவதாக அண்மையில்
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டு திரும்பிய
அமெரிக்க நாட்டு ஆயர்கள் குழு அறிவித்தது.
இந்த மத்திய கிழக்குப் பகுதியில் வாழும் இரு இனங்களுக்கும், மூன்று மதங்களுக்கும் இடையே தொன்மைகாலம்தொட்டே இந்நிலத்துடன் நெருங்கிய பிணைப்பு உள்ளது என்பதை எடுத்துரைத்த ஆயர்கள், அமைதியின் அடையாளமாக இருக்க வேண்டிய யெருசலேம் தற்போது முரண்பாடுகளின் அடையாளமாக இருப்பது குறித்த கவலையையும் வெளியிட்டனர்.
மத்திய கிழக்குப் பகுதியில் வேதனைகள் மற்றும் கவலைகளின் இரேகைகள் தெரிகின்றபோதிலும், நம்பிக்கைகளின் வெளிச்சக் கோடுகளும் நிரம்பிக் கிடக்கின்றன என உரைத்த அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள், ஒருவர் மற்றவரின் தேவைகள் குறித்த அக்கறைக்குச் செவிசாய்க்கும் நிலை இப்பகுதியில் உருவாவதற்கு,
உண்மையான மனமாற்றம் ஒவ்வொருவரிலும் தேவைப்படுகின்றது எனவும் கூறினர்.
மத்திய கிழக்குப் பகுதிக்கான தங்கள் ஆய்வுப் பயணத்தின்போது, அமெரிக்க ஆயர்கள், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் யூத, இஸ்லாம், மற்றும் கிறிஸ்தவத் தலைவர்களையும், அரசியல் தலைவர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தைகள் நடத்தியுள்ளனர்.
ஆதாரம் : EWTN
5. Boko Haram குழுக்களின் வன்செயல்களைத் தடுக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க ஆயர்கள் அழைப்பு
செப்.25,2014. நைஜீரியாவின் குடிமக்கள் பெருமளவில் Boko Haram இஸ்லாம்
தீவிரவாதக் குழுக்களால் தொடர்ந்து கொல்லப்படுவதைத் தடுக்க அரசு உடனடியாக
நடவடிக்கை எடுக்க வேண்டும் என நைஜீரிய ஆயர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
பல கிராமங்கள் முற்றிலுமாக தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டும் ஆயர்கள், கோவில்களும், பங்குத்தளங்களும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன எனவும் தெரிவித்தனர்.
அப்பாவி
மக்கள் தீவிரவாதக் கும்பல்களால் கொல்லப்படுவதைத் தடை செய்யப் போதுமான
நடவடிக்கைகளை நைஜீரிய அரசு மேற்கொள்ளவில்லை எனக் குற்றம்சாட்டும் அந்நாட்டு
ஆயர்கள், நாட்டையும் மக்களையும் காப்பாற்ற, மேலும் தீவிர நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன எனவும் தெரிவிக்கின்றனர்.
ஆதாரம் : CWN
6. ஹிக்கடுவையில் கிறிஸ்தவ ஆலயம் மீது கழிவு எண்ணெய்த் தாக்குதல்
செப்.25,2014.
இலங்கையின் ஹிக்கடுவையிலுள்ள கிறிஸ்தவக் கல்வாரி ஆலயம் ஒன்றின் மீது
இவ்வியாழன் காலை கழிவு எண்ணெய் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக கடந்த 2012ம்
ஆண்டு இந்த ஆலயத்துக்கு எதிராக பொதுபல சேனாவினர் ஆர்ப்பாட்டமொன்றை
நடத்தியிருந்தனர். அப்போது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் காரணமாக அவ்வாலயம்
கடும் சேதமடைந்திருந்தது.
இது
தொடர்பான வழக்கு புதனன்று காலி நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்
கொள்ளப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே மீண்டும்
அவ்வாலயம் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று இவ்வாலயத்தின்
பங்குத் தந்தை குறி்ப்பிட்டுள்ளார்.
ஆதாரம் : தமிழ்வின்
7. இலங்கையில் தொடரும் சித்ரவதைகள் குறித்து ஐ.நாவுக்கு அறிக்கை
செப்.25,2014.
இலங்கையில் போர் முடிவடைந்த பின்னரும் தொடர்ச்சியாக சித்ரவதைகள்
நடைபெறுவதாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான மருத்துவர்கள் சங்கத்தின் அறிக்கை
தெரிவிக்கின்றது.
போர் முடிவடைந்த காலக்கட்டத்தில் நடைபெற்ற 40 கடுமையான சித்ரவதைச் சம்பவங்கள் தொடர்பாக இந்த அமைப்பு ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் பார்வைக்கு அனுப்பியுள்ள அறிக்கையில், கடந்த நான்கு வருடங்களில் இடம்பெற்ற ஏறத்தாழ 160 சித்திரவதைச் சம்பவங்கள் தொடர்பான விபரங்களையும் சமர்ப்பித்துள்ளது.
விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் அல்லது அவ்வாறு சந்தேகிக்கப்படுவோர்மீது கடுமையான சித்ரவதைகள் கட்டவிழ்த்துவிடப்படுவதாகவும், அவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள் என்றும், இந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
சித்ரவதைகளில்
இருந்து விடுபட்ட சுதந்திரமான சமூகமொன்றைக் கட்டியெழுப்பும் நோக்கில்
பாதிக்கப்பட்டவர்களுக்கான பன்னாட்டு மருத்துவர்களின் கழகம் பிரிட்டனைத்
தலைமையகமாகக் கொண்டு செயல்படுகிறது.
No comments:
Post a Comment