Monday 29 September 2014

செய்திகள் - 29.09.14

செய்திகள் - 29.09.14
------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை : வானதூதர்கள் நம்மைப் பாதுகாப்பவர்கள்

2. திருத்தந்தை பிரான்சிஸ், மால்ட்டா அரசுத்தலைவர்  சந்திப்பு

3. திருத்தந்தை : விவிலியத்தை அறிவது கிறிஸ்துவை அறிவதாகும்

4. 2015ம் ஆண்டின் சமூகத்தொடர்பு நாளுக்குரிய தலைப்பு

5. திருத்ததை: தலைமுறைகளின் சந்திப்புகள் வருங்காலத்திற்கு உறுதி

6. அனைவரும் ஒன்றிணைந்து துடுப்பு வலித்து திருஅவைப் படகைச் செலுத்தவேண்டும்

7. இரஷ்ய ஆக்ரமிப்பால் உக்ரேய்ன் கத்தோலிக்கருக்கு ஆபத்து, திருப்பீடத் தூதர்

8. குழந்தைகளுக்கு எதிரான குற்றம்: கேரளா முதலிடம்
------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை : வானதூதர்கள் நம்மைப் பாதுகாப்பவர்கள்

செப்.29,2014. நல்லவைகள் போல் திட்டங்கள் பலவற்றை முன்வைத்து நம்மை அழிவுக்குள்ளாக்கும் முயற்சிகளில் ஈடுபடும் தீயோனின் செயல்களிலிருந்து நம்மைக் காப்பவர்கள் வானதூதர்களே என இத்திங்கள் காலை மறையுரையில் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்.
தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் இத்திங்கள் காலை திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்திங்கள் திருஅவையில் சிறப்பிக்கப்பட்ட அதிதூதர்கள் மிக்கேல், இரஃபேல் மற்றும் கபிரியேலின் திருவிழாவை மையமாக வைத்து தன் கருத்துக்களை எடுத்துரைத்தார்.
வார்த்தை மனுவானார் என்ற இறைவனின் உன்னத மறையுண்மையைப் போற்றி பாதுகாக்கும் வானதூதர்களே நம்மையும் சாத்தானின் இடர்களிலிருந்து காப்பவர்கள் என தன் மறையுரையில் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தீயோனுடன் ஆன போராட்டம் நம் வாழ்வில் தினமும் இடம்பெறும் ஓர் உண்மை நிலை, தீயோனை எதிர்த்து நாம் போரிடவில்லையெனில் நாம் தோற்கடிக்கப்படுவோம் என்பதை உணர்ந்தே, போராடி வெற்றிபெறும் பணியை நம் சார்பாக வானதூதர்களிடம் இறைவன் ஒப்படைத்துள்ளார் என்றார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. திருத்தந்தை பிரான்சிஸ், மால்ட்டா அரசுத்தலைவர்  சந்திப்பு

செப்.29,2014. மால்ட்டா அரசுத்தலைவர் Marie-Louise Coleiro Preca அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை இத்திங்கள் காலையில் வத்திக்கானில் சந்தித்து உரையாடினார்.
இச்சந்திப்புக்குப் பின்னர் திருப்பீட நாடுகளுக்கு இடையேயான உறவுகளின் செயலர் பேராயர் தோமினிக் மம்பெர்த்தி அவர்களையும் சந்தித்தார் மால்ட்டா அரசுத்தலைவர் Coleiro Preca.
திருப்பீடத்துக்கும், மால்ட்டாவுக்கும் இடையே நிலவும் நல்லுறவுகள், கல்விக்கும், நலவாழ்வுக்கும், குறிப்பாக ஏழைகளுக்கு ஆதரவாக மால்ட்டா திருஅவை ஆற்றிவரும் நற்பணிகள் போன்ற விவகாரங்கள் இச்சந்திப்புக்களில் இடம்பெற்றன என்று திருப்பீட பத்திரிகை அலுவலகம் அறிவித்தது.
மேலும், மால்ட்டா சமூகத்தைக் கட்டியெழுப்புவதில் கிறிஸ்தவ விழுமியங்கள் வலியுறுத்தப்படுவதன் அவசியம், குடும்ப அமைப்பை உறுதிப்படுத்துதல் உட்பட இருதரப்பினரும் ஆர்வம் கொண்டுள்ள பொதுவான விவகாரங்களும் இச்சந்திப்புக்களில் பேசப்பட்டதாக, அவ்வலுவலகம் கூறியது.
ஐரோப்பிய சமுதாய அவையில் மால்ட்டாவின் பங்கு, மத்திய கிழக்குப் பகுதியில் இடம்பெறும் மோதல்களுக்கு உரையாடல் மூலம் தீர்வு காண்பது, ஐரோப்பா எதிர்கொள்ளும் குடியேற்றதாரர் விவகாரம் ஆகியவைகளும் இச்சந்திப்புக்களில் இடம்பெற்றன என்று அப்பத்திரிகை அலுவலகம் மேலும் அறிவித்தது.
மால்ட்டா, தெற்கு ஐரோப்பாவில் மத்தியதரைக் கடலில் அமைந்துள்ள ஒரு சிறிய தீவு நாடாகும். இந்நாட்டில் மொத்தம் ஏழு தீவுகள் உள்ளன. சிசிலிக்குத் தெற்காகவும், துனீசியாவுக்கு கிழக்கேயும், லிபியாவுக்கு வடக்கேயும் இந்நாடு அமைந்துள்ளது. இங்கு பெரும்பான்மையினோர் கத்தோலிக்கர்.

ஆதாரம் வத்திக்கான் வானொலி

3. திருத்தந்தை : விவிலியத்தை அறிவது கிறிஸ்துவை அறிவதாகும்

செப்.29,2014. விவிலியத்தின் புதிய பொதுமொழிபெயர்ப்பில் ஈடுபடும் கிறிஸ்தவ சபைகளின் ஒன்றிணைந்த முயற்சி குறித்து தன் பாராட்டுக்களை வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஒருவர் ஒருவரிடையேயான நம்பிக்கையின்மைகளை வெற்றிகொண்டு, அவர்களுடன் ஒன்றிணைந்து நடைபோட்டு கடந்த பல ஆண்டுகளாக பொதுமொழிபெயர்ப்பில் ஈடுபட்ட பல்வேறு கிறிஸ்தவ சபைகளையும் பாராட்டுவதாகத் தெரிவித்த திருத்தந்தை, பொறுமை, அக்கறை, சகோதரத்துவம், திறமை, விசுவாசம் ஆகியவைகளின் பலனாக இந்த புதிய மொழிபெயர்ப்பு கிடைத்துள்ளது எனவும் தன்னை சந்தித்த விவிலியக் கழகங்களின் கூட்டமைப்பின் அங்கத்தினர்களிடம் இத்திங்கள் காலை எடுத்துரைத்தார். விவிலியத்தைப் பற்றிய அறியாமையைக் கொண்டிருப்பது என்பது கிறிஸ்துவைக் குறித்த அறியாமையைக் கொண்டிருப்பதாகும் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அனைத்துக் கிறிஸ்தவர்களும் விவிலியத்தை வாசிப்பதை உறுதிசெய்யவேண்டிய கடமையையும் வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. 2015ம் ஆண்டின் சமூகத்தொடர்பு நாளுக்குரிய தலைப்பு

செப்.29,2014. 'குடும்பத்திற்கு உணர்த்துதல் : அன்பின் கொடையை எதிர்கொளவதற்கான சிறப்புரிமையின் இடம் அதுஎன்பதை அடுத்த ஆண்டின் சமூகத்தொடர்பு நாளுக்கானத் தலைப்பாக அறிவித்துள்ளது திருப்பீடம்.
இவ்வாண்டு சிறப்பிக்கப்பட்ட சமூகத்தொடர்பு நாள் தலைப்பின் தொடர்ச்சியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இத்தலைப்பு, குடும்பங்கள் குறித்து வரவிருக்கும் இரு உலக ஆயர்கள் மாமன்றங்களுடன் தொடர்புடையதாக உள்ளது.
பெந்தக்கோஸ்து திருவிழாவிற்கு முந்தைய ஞாயிறன்று திருஅவையில் சிறப்பிக்கப்படும் சமூகத்தொடர்பு நாள், வரும் ஆண்டு, அதாவது 2015ம் ஆண்டில் மே 17ம் தேதி சிறப்பிக்கப்படுகின்றது.
பாரம்பரியமாக, இந்நாளுக்கான சிறப்புச் செய்தி திருத்தந்தையால் ஜனவரி 24ம் தேதி, அதாவது, எழுத்தாளர்களின் பாதுகாவலரான புனித பிரான்சிஸ் டி சேல்ஸ் விழாவன்று வெளியிடப்படும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. திருத்ததை: தலைமுறைகளின் சந்திப்புகள் வருங்காலத்திற்கு உறுதி

செப்.29,2014. தலைமுறைகளுக்கு இடையே பலன் தரும் சந்திப்புகள் இல்லையெனில் அங்கு மனிதகுலத்திற்கான வருங்காலம் இருக்கமுடியாது என உரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
முதிய தலைமுறைக்கும் இளைய தலைமுறைக்கும் இடையேயான பேச்சுவார்த்தைகள் இடம்பெறாச் சூழல்களிலும், தங்கள் பெற்றோரைவிட்டு விலகிச் செல்ல இளையோர் ஆழமான ஓர் உணர்வைக்கொள்ளும்போதும் வருங்காலம் குறித்த அச்சம் எழுகின்றது என இஞ்ஞாயிறன்று முதியோர்களுடன் நிறைவேற்றியத் திருப்பலியில் எடுத்துரைத்தார் திருத்தந்தை.
நீடிய ஆயுளுக்கான ஆசீர் என்ற தலைப்பில் இஞ்ஞாயிறன்று தூய பேதுரு வளாகத்தில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுடன் உலகின் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட திருப்பலியில் மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ், முதியோர்கள் மக்களால் கைவிடப்படும் நிலை ஒருபோதும் இடம்பெறக்கூடாது என்றுரைத்தார்.
வேலைவாய்ப்பின்மைகளால் இளையதலைமுறை துன்புறுவதையும், பணத்திற்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தால் முதியோர் கைவிடப்படுவதையும் குறித்து தன் மறையுரையில் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முதியோர் இல்லங்களைச் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறும் மக்கள் குறித்து தன்  நன்றியையும் பாராட்டையும் வெளியிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

6. அனைவரும் ஒன்றிணைந்து துடுப்பு வலித்து திருஅவைப் படகைச் செலுத்தவேண்டும்

செப்.29,2014. இருளின் சக்திகள் நெருங்கிவரும் வேளைகளில் திருஅவையின் அங்கத்தினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து துடுப்பு வலித்து படகைச் செலுத்தவேண்டும் என இயேசு சபையினரை நோக்கி அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இடையில் தடைச்செய்யப்பட்ட இயேசு சபை மீண்டும் இயங்கத் துவங்கியதன் 200ம் ஆண்டையொட்டி உரோம் நகரின் இயேசு கோவிலில் நன்றித் திருவழிபாட்டில் கலந்துகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தங்களைக் காப்பற்றிக்கொள்ள முயலாமல் இறைவிருப்பத்தை அப்படியே ஏற்றுக்கொண்ட இயேசு சபையினரின் நேர்மறைப் போக்கையும்,  சபையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான விருப்பத்தையும் பாராட்டுவதாகத் தெரிவித்தார்.
ஒருவர் தன் பாவங்களை அறிக்கையிட்டு தன்னை பாவி என ஏற்றுக்கொள்வதே, சரியானப் பாதையில் நடைபோடுவதற்கும், ஆறுதல் பெறுவதற்குமான சிறந்த வழி எனவும் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பிறரன்பு, ஒன்றிப்பு, பணிவு, பொறுமை, நற்செய்தி காட்டும் எளிமை, இறைவனுடன் உண்மை நட்புறவு ஆகிய உணர்வுகளுடன் செயல்படுவதைத் தவிர மற்ற அனைத்தும் உலகு சார்ந்தவையே எனவும் இயேசுசபை அங்கத்தினர்களிடம் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

7. இரஷ்ய ஆக்ரமிப்பால் உக்ரேய்ன் கத்தோலிக்கருக்கு ஆபத்து, திருப்பீடத் தூதர்

செப்.29,2014. உக்ரேய்ன் நாட்டில் இரஷ்யா நிகழ்த்தியுள்ள ஆக்ரமிப்புகளால், அந்நாட்டில் பெரிய அளவிலான நிலையற்றதன்மைகளும், அரசியல் சித்ரவதைகள் மீண்டும் இடம்பெறுவதற்கான அச்சுறுத்தல்களும் ஏற்படும் ஆபத்து உள்ளதாக உக்ரேய்னுக்கான திருப்பீடத் தூதர் கவலையை வெளியிட்டார்.
இரஷ்ய அரசின் உறுதிமொழிகள் பல இருக்கின்றபோதிலும், உக்ரேய்னின் கிரேக்க கத்தோலிக்கத் திருஅவைக்கு எதிரான இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபையின் சகிப்பற்றத் தன்மைகளும் பகைமைச் செயல்களும் புதிய நம்பிக்கைகளைத் தரவில்லை என்றார் திருப்பீடத்தூதர் பேராயர் Thomas Gullickson
1946ம் ஆண்டில் உக்ரேய்ன் கிரேக்க கத்தோலிக்கத் திருஅவை அடக்கி ஒடுக்கப்பட்டதைப்போல் மீண்டும் இடம்பெறும் அச்சம் மக்களிடையே நிலவி வருகிறது என மேலும் கூறினார் அவர்.
இரஷ்யாவால் கைப்பற்றப்பட்ட உக்ரைன் பகுதிகளில் வாழும் கத்தோலிக்கக் குருக்கள் ஏற்கனவே அச்சுறுத்தல்களை எதிர்நோக்கி வருவதாக பேராயர் Gullickson மேலும் கூறினார்.

ஆதாரம் : CNA

8. குழந்தைகளுக்கு எதிரான குற்றம்: கேரளா முதலிடம்

செப்.29,2014. இந்தியாவிலேயே  கேரளாவில்தான்குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநில குற்றவியல் பதிவேட்டின்படி, இந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்களில், கேரளாவில், குழந்தைகளுக்கு எதிராக, 1,336 குற்றங்கள் நடந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது. இதில், 427 பாலியல் வன்செயல்களும் அடங்கும்.
கடந்த ஆண்டு, குழந்தைகளுக்கு எதிராக, 1,877 குற்றங்களும், பெண்களுக்கு எதிராக, 8,674 குற்றங்களும் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : தினமலர்
 

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...